Sunday, January 5, 2020

கர்மயோகி சாரதா

"தல ஒரேடியா வலிக்கறதுடா..." என்றாள் பவானி சித்தி .
டாக்டர் க்ளினிக்கில் அடியெடுத்து வைத்ததும் கண்களைச் சாய்த்து "இப்போ பரவால்லே போல்ருக்கு...." என்றாள்.
"முன்னாடி அவர் கொடுத்த மாத்திரையெல்லாம் சாப்டியோ"
"ம்.... இப்ப சரியாயிடுத்து.. இனிமே மாத்திரை வேண்டாம்..."
"குணத்துலே அப்படியே பாட்டியை உரிச்சு வச்சுருக்கே...." என்ற எனக்கு என்னுடைய அரைடிராயர் மன்னார்குடி நாட்களும் சாரதா பாட்டியும் கண்ணுக்குள் காட்சிகளாக ஓட ஆரம்பித்தார்கள். பவானி சித்தியை டாக்டர் பரிசோதிப்பதற்குள் எம்பளதுகளின் மன்னையை எட்டிப் பார்ப்போம் வாருங்கள்! 
******* இப்போது sepia modeல் மன்னை **********
"சாயரக்ஷை ஆறரைக்கெல்லாம் வெங்கடாஜலம் வண்டிக்குச் சொல்லுடா.." என்று கோபாலன் திருவிழா இல்லாத காலத்தில் சாரதா பாட்டி என்னிடம் சொன்னால் ஒரு வாரமாகத் தேகத்தோடு மல்லுக்கட்டி பின்னர் இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்று அர்த்தம். "சந்திரசேகர் டாக்டராத்துக்குப் போயிட்டு வருவோம்". காலையிலேயே இந்த முடிவு எடுக்கப்படும்.
"வெங்கடாஜலம் ராங்கி பண்ணிக்கிறானே... வேற வண்டி எதாவது வச்சுக்கலாமே" என்று ஒரு முறை பவானி சித்தி சொன்னாள்.
"ச்சே...ச்சே...அவன் அப்பாவிடி...... புள்ளைக்குட்டி கூட கிடையாது... போனாப் போறான்.." என்பாள் பாட்டி இரக்கசுபாவத்தோடு...
ஹரித்ராநதி மேல்கரையின் பின்னால் உள்ள சந்தில் வெங்கடாஜலம் வீடு. நாலாபுறமும் முள்வேலிக்குள் ஒரு அழகான குடிசை வீடு. வாசலில் கறுப்பு நிறத்தில் வயிற்றில் வெள்ளைக் கலரில் திட்டுத் திட்டாய்த் தீவு படங்களோடு காளை புல் மேய்ந்துகொண்டிருக்க பச்சைக் கூண்டு வண்டியின் நுகத்தடி புல்தரையை முத்தமிட்டபடி முன்னால் சாய்ந்திருக்கும்.
"வெங்கடாஜலம்... வெங்கடாஜலம்..." என்று ஒன்றிரண்டு முறைக் கூப்பிட்டால் தலையில் முண்டாசுடன் சுருங்கிய மார்போடு குடிசையிலிருந்து எட்டிப்பார்ப்பார். வாமன ரூபம். அரையில் வேஷ்டிக்கு மேலே குண்டான பச்சை பெல்ட். வெற்றிலைக் குதப்பும் வாய். வலது கண்ணில் பூ விழுந்திருக்கும். உதட்டில் இருவிரல்களைப் பிரித்து வைத்து வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு..
"ம்... எங்க போவணூம்?"
"டாக்டராத்துக்கு... சாயங்காலம் ஆறரைக்கு..."
"ம்... சரி வரேன்..."
வண்டிக்கார வெங்கடாஜலம் வார்த்தைகளை அளந்து மணிரத்ன சுருக்கமாகப் பேசுவார்.
"என்னமோ வரவர உடம்பு சொன்னத்தைக் கேக்கமாட்டேங்கறதுக்கா... டாக்டராத்துக்குப் போயிட்டு வரேன்..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியிடம் சொல்லிக்கொண்டு ஆறரைக்கு வண்டி ஏறுவாள். சாரதா பாட்டிக்கு ஆம்பிளைத் துணையாக நானும் பிடித்துக்கொள்ள பவானி சித்தியும் அந்த பியெம்டபிள்யு கணக்காக வந்து நிற்கும் வெங்கடாஜலம் ஒத்தை மாட்டுவண்டியில் ஏறுவோம்.
வெங்கடாஜலம் வண்டியோட்டும் அழகே தனி. வண்டிக்கு ஆக்ஸிலேட்டர் கொடுக்க வேண்டும் என்றால் கையிலிருக்கும் சாட்டையால் நுகத்தடியை இணைக்கும் ஏர்க்காலில் "சொளீர்...சொளீர்" என்று இரண்டு முறை சுழற்றி அடிப்பார். காளை வேகமெடுத்து ஜல்ஜல்லென்று தேரடி தாண்டும். வண்டிக்குள் வைக்கோல் போடப்பட்டு அதன் மேலே உரசாக்கில் தைத்த ஒரு மெத்தை போட்டிருக்கும். அதையெல்லாம் மீறி டிராயருக்குக் கீழே பரப்பியிருக்கும் வைக்கோல் சுருக் என்று தொடையில் குத்துவது அக்குபஞ்சரில் எந்த வியாதிக்கு என்று விவரிக்க இயலாத அனுபவம்.
"வெங்கடாஜலம்... மாட்டு வண்டி குதிர வண்டியாப் போறதே... மொள்ளமாவே போவேமே... டாக்டர் அங்கேயேதான் இருப்பார்...."
பாட்டியின் இந்த வார்த்தைக்கு வெங்கடாஜலத்தின் கட்டளைக்கு முன்னரே மாடு கட்டுப்படும். "ஹோ..ஹோ...ஹோய்..." என்று வெங்கடாஜலம் ராகமிழுத்து கயிற்றை இழுக்கும்போது மூன்றாம் தெருவில் சோமேஸ்வரய்யா வைத்தியசாலை என்ற பேருந்து நிறுத்தம் எதிரிலிருக்கும் சந்திரசேகர் டாக்டராத்துக்கு வந்திருப்போம். சோமேஸ்வரய்யா, டாக்டரின் அப்பா. மிகவும் பிரசித்தமான மருத்துவர்.
சீனு மாமாதான் கம்பௌன்டர். நெற்றியில் ஸ்ரீசூர்ணமும் அரைக்கை சட்டை வேஷ்டி. வெந்நீர் உலைகொதிப்பது போல தளபுளக்கும் பாத்திரத்தில் இஞ்செக்ஷன் சிரிஞ்சிகளை சுத்தப்படுத்த போட்டிருந்து உள்ளேயிருந்து "ட்ட்ரிரிரிங்க்" என்ற பஸ்ஸருக்கு ஒரு சிரிஞ்சை கிடுக்கியில் எடுத்துக்கொண்டு டாக்டர் அறைக்குள் செல்லும் சீனு மாமாவிடம்....
"சீனு.... நாங்க எப்போ?" என்று கேட்பாள் சாரதா பாட்டி. பக்கத்தில் கூத்தாநல்லூரிலிருந்து புர்க்கா அணிந்தவர்கள் சென்ட் வாசனைத் தூக்க அமர்ந்திருப்பார்கள்.
"பாட்டீ.... இப்போதானே வந்தேள்... உங்களை நாங்கெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சே.... பேசிண்டிருப்போமே..." என்பார்.
கதவு திறந்து மூடும் போது டாக்டர் பாட்டியைப் பார்த்துவிட்டால் பாட்டியின் தள்ளாத வயதினால் சீனு மாமாவிடம் பாட்டியை உடனே உள்ளே அனுப்பும்படி சொல்லிவிடுவார்.
"வாங்கோ... எப்படியிருக்கேள்?"
"உடம்பு சொன்ன பேச்ச கேட்கமாட்டேங்கிறது.. அதான் உங்களாண்ட காமிச்சுட்டுப்போகலாம்னு வந்தேன்"
"ஜுரம் இருந்தா குளிக்காதீங்கோம்பேன்.... நீங்க போய் ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணுவேள்.... ரசம் சாதமா சாப்பிடுங்கோம்பேன்... நீங்க மோரூத்தி சாப்பிடுவேள்"
பாட்டியின் சொல்பேச்சுக் கேளாமையை வரிசையாக டாக்டர் அடுக்குவார். டாக்டரின் பெரிய பையன் பாலாஜியும் நானும் வகுப்புத் தோழர்கள். சின்னவன் ராம்ஜி எங்களுக்கு ஒரு க்ளாஸ் குறைச்சல்.
"டாக்டர், ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணலைன்னா எனக்கென்னமோ பண்றது... அதுக்கு ஜுரம் பரவாயில்லை போல்ருக்கே"
"நீங்க நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேள். இருந்தாலும் இப்படி வந்து என்னைப் பார்த்துட்டுப் போறேள்" என்று நமுட்டாகச் சிரிப்பார் டாக்டர். சந்திரசேகர்.
"வைத்தியனுக்குன்னு இவ்ளோ கொடுக்கணும். அப்போதான் உடம்பு சரியாகும்...." என்பாள் பாட்டி பதிலுக்கு.
அரைமணியில் வெளியே வந்தால் மாட்டைக் கட்டிப்போட்டுவிட்டு வெங்கடாஜலம் பக்கத்தில் நாலாம் தெரு போகும் முனையில் உட்கார்ந்திருப்பார். பெரியாஸ்பத்திரி பக்கத்தில் சீனிவாசா மெடிக்கலில்தான் சீட்டுக்கு மருந்து வாங்குவோம்.
"தம்பீ! டாக்டர் ரெண்டு எழுதினா ஒண்ணு வாங்கு... ஒண்ணு எழுதினா அரை வாங்கு..."
"டாக்டர் கேட்கறது சரிதான்.. அப்புறம் ஏன் டாக்டராத்துக்கு வரே" என்பாள் பவானி சித்தி.
"நாளைக்கு ஒரு சொம்புப் பாலை ஹரித்ராநதி தாயாருக்கு வுட்டுட்டு ஸ்நானம் பண்ணிட்டேன்னா.... எல்லாம் சரியாயியிடும்... விருந்தும் மருந்தும் மூணு நாள்டா"
ஓடிப்போய் மருந்துவாங்கிக்கொண்டு வண்டியில் தாவி ஏறிக்கொள்வேன். சவாரி முடியும் வேளை வந்துவிட்டதால் மாடு துள்ளியோடும். அன்னவாசல் தெரு தாண்டி கற்பகம் ஸ்டோர்ஸ் தாண்டி கிழக்குத் தெரு மூலையில் மாட்டுவண்டி நுழையும் போதே பாட்டி.....
"பவானீ.... வண்டிச்சத்தம் கொடுத்துடுடீ..." என்பாள்.
எட்டு எட்டரைக்கே ஊர் அடங்கிவிடும். ஹரித்ராநதியும் சலனமேயில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும். சோழன் போக்குவரத்துக்கழக பஸ் அரசு பஸ் என்பதின் அனைத்து இலக்கணங்களையும் ஒத்து டகடகடக என்று மொத்த பாடியும் கழன்று விழும் அபாயத்தில் கடகடக்க... அழுது வடியும் விளக்குகள் உள்ளே எரிய ஒன்றிரண்டு பயணிகள் ஜன்னலில் தலைசாய்த்து தூங்கியபடி பஸ்ஸ்டாண்ட் செல்வார்கள்.
வெங்கடாஜலம் வண்டியிலிருந்து இறங்கியவுடன் எதிரே தெரியும் ஹரித்ராநதிக்கு இருகைக்கூப்பி வணக்கம் சொல்வாள்.
"வெங்கடாஜலம்... பார்த்துப் போப்பா..." என்று அவருக்கு அவள் பாணியில் ஒரு பை சொல்லிவிட்டு கூன் விழுந்த முதுகோடு படியேறி கைகால் அலம்பிவிட்டு வழக்கமான பாய் போட்டுக்கொள்ளாமல் காலையில் துவைக்க வைத்திருக்கும் எதாவது விழுப்பு புடைவையை கீழே போட்டுத் தரையில் படுத்துக்கொள்வாள்.
டாக்டர் சொன்னது போல காலையில் எழுந்து ஹரித்ராநதியை பிரதக்ஷிணம் செய்துவிட்டு கீழ்கரை மங்கம்மா படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு ஈரப்புடவையை சுற்றிக்கொண்டு ராத்திரி தரையில் போட்டுப் படுத்த புடவையை துவைத்துத் தோளில் போட்டுக்கொண்டுக் கரையேறிக்கொண்டிருப்பாள்.
"பிரதக்ஷிணம் வர்றச்சே மேல்கரையில பார்த்துட்டு... திரும்ப எப்போ பாட்டீ போகலாம்ன்னு வெங்கடாஜலம் கேட்கறாண்டா...." என்று பொக்கை வாய் தெரிய சிரிக்கும் சாரதா பாட்டியை நான் கர்மயோகியாகத்தான் பார்த்திருக்கிறேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails