Monday, October 23, 2017

முருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்

நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை. தென்றல் வீசும் இளம் மாலைப் பொழுது.

பரத்தையர்களின் காமவாசம் தொலைத்து பரம்பொருளான முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் விஸ்ராந்தியாக மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
திருப்புகழ் மனதில் ஊற கண்களில் ஞானச்சுடர் ஒளிர இருப்பவரை நோக்கி கல்யாண சீர் எடுத்துச் செல்வது போன்று விதம்விதமான தட்டுக்களில் பழங்களும் பல வகையான இனிப்புகளும் பொற்காசுகளும் பட்டாடைகளுமாக தோள்களில் தூக்கிக்கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கூட்டமாகச் சிலர் வந்தார்கள்.
அருணகிரிநாதர் “எங்கு வந்தீர்கள்?” என்று இதழ்களில் புன்னகை ததும்ப வினவினார்.
ஊர்வலத்தை தலைமையேற்று வந்திருந்த தலைவர் தோரணையில் இருப்பவர் “ஐயா, நாங்கள் உங்களை நமஸ்கரிக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த கந்தன் கருணையையும் அவனின் திருவருளையும் நீங்கள் எங்களுக்கும் அருள வேண்டும். பணிந்து நிற்கிறோம்” என்றார் கைகூப்பியபடி.
“இதெல்லாம் என்ன?” என்று தன் முன்னால் பரப்பி வைக்கப்பட்ட தட்டுக்களைப் பார்த்துக் கேட்டார்.
“திருவருளைப் பெற குரு தட்சிணையாகக் கொண்டு வந்தோம்” என்று மரத்தடியில் நின்றவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்.
விண்ணைத் தொட்ட அருணாசலேஸ்வரரின் கோபுரத்தை அங்கிருந்தே நிமிர்ந்து பார்த்தார். முருகப்பெருமானை சிறிது நேரம் மனதில் நிறுத்தினார். அவர்களைக் கூர்ந்து நோக்கினார்.
“இவற்றையெல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். பின்னர் வாருங்கள், முருகன் அருள் பெரும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.
வள்ளிமணாளனின் அருள் கிடைக்கப்போகும் அவாவில் ஓடிப்போய் எல்லாவற்றையும் வீட்டில் வைத்துவிட்டு மீண்டும் உடனே மலையடிவாரத்திற்குத் திரும்பினார்கள். அடிவானம் தங்கமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. அருணகிரி திருவாய் திறந்தார். உன்னத அனுபவத்திற்கு அங்கிருந்தவர்கள் தயாரானார்கள்.
“முதல் மந்திரம் சொல்கிறேன். தடுங்கோள் மனத்தை...”
புரிந்தவர் சிலர். புரியாதவர்கள் பலர். அலைபாயும் மனத்தை தடுக்கவேண்டும். பட்டினத்தடிகள் ”அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே” என்று அங்காடி நாயாக மனதை உருவகப்படுத்தி பாடினார். பலவகையான பொருட்கள் விற்கப்படும் அங்காடிகள் இருக்கும் வீதியில் செல்லும் நாய் எப்படி கடை கடையாய் ஏறி இறங்குமோ அதுபோன்றது மனம் என்பார் பட்டினத்தார்.
ஒரு வாரம் சென்றது.
“ஐயனே! எங்களால் முடியவில்லை. வேறு எதாவது சுலபமான வழி...” என்று இழுத்தார்கள்.
“விடுங்கோள் வெகுளியை.....”.
அனைவரும் கலைந்தனர்.
ஆசாபாசங்களை வென்ற ரிஷிகளே தோற்றுப்போகும் கோபத்தை அவ்வளவு எளிதில் வெல்லமுடியுமா? சட்டென்று விடமுடியுமா? முயற்சி செய்து பார்த்தார்கள். ஊஹும். ஒரு வாரத்தில் திரும்பவும் வந்தார்கள். அவர்களது முகங்களைப் பார்த்தே அருணகிரியார் அறிந்துகொண்டார். இவர்களால் இதையும் செய்யமுடியவில்லை.
“சரி.. மூன்றாவதாக ஒரு உபாயம் சொல்கிறேன். தானம் என்றும் இடுங்கோள்..”
பிறர்க்கு தர்மம் செய்வது சுலபமா? ஒரு வீடு இருப்பவர்கள் இரண்டாக்கவும் நூறு சவரன் இருப்பவர்கள் இருநூறு சவரனாக விருத்தி செய்யவும் விரும்பும் உலகில் தனது பொருளீட்டலில் இருபது சதம் தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியுமா? செய்வதற்கு மனசு வருமா?
“சம்பாதித்ததை தர்மமாக செலவழிப்பதற்கு மனது இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது ஐயனே! என் செய்வோம். எங்களால் இதுவும் இயலவில்லையே... முருகன் அருள் கிடைக்க மிகச் சுலபமான உபாயம் சொல்லுங்களேன்.” என்று பணிந்தார்கள்.
தொங்கு தாடியும் மீசையுமாக அமர்ந்திருந்த அருணகிரியார் வெடிச்சிரிப்பு சிரித்தார். சிறிது மௌனம் காத்தார்.
“இருந்தபடி இருங்கோள்...” என்று சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென்று கிரிவலப்பாதையில் கிளம்பிவிட்டார். ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள். அவர் கூறிய மூன்றையும் அனுசரிக்க முடியாததால் இப்படியே இருந்தபடி இருக்கோள் என்று கோபத்துடன் அருணகிரியார் செல்கிறார் என்று பின்னால் செல்லப் பயந்து புரியாமல் விழித்தார்கள். சாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று துரத்திச் சென்று கேட்டார்கள்.
”எதுவும் உபயோகமில்லாமல் பேசாமல் மௌனமாக இருந்தபடி இருப்பது யோக நிலை. அப்படி இருங்கோள். முருகன் அருள் வீடு தேடி வரும்”
முன்பு சொன்னதையெல்லாம் தொகுத்து ஒரு பாடலாகப் பாடினார். திரும்பிப்பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.
முருகப்பெருமானின் அருள் பெற...அவனுக்கு அர்ச்சனை செய் அபிஷேகம் பண்ணு.. காவடி எடு என்றெல்லாம் அருணகிரிநாதர் சொல்லவில்லை. மனசைத் தடு... கோபத்தை விடு.. தானம் செய்.. அமைதியாய் இரு.. என்று மானுடம் வளர்க்கும் பண்புகளை பின்வரும் கந்தரலங்காரப் பாடலில் பகர்ந்தார்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் துளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.


பின்குறிப்பு: பேராசிரியர் திரு. இரா. செல்வகணபதி அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவில் கேட்டதை எனது பாணியில் ஜோடித்து எழுதினேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails