Sunday, October 22, 2017

இருபத்தைந்து இன்ஸ்டன்ட் இன்பங்கள்

1. பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட பாக்குத் துகளை நாவால் புரட்டி அரை மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு எடுத்த போது கிட்டும் பேரின்பம்.

2. மனைவியின் "இந்தப் புடவை எப்ப வாங்கினது.. சொல்லுங்கோ"விற்கு குலதெய்வத்தின் மேல் பாரத்தைப் போட்டுக் குன்ஸாக "போன வருஷத்துக்கும் மொதோ வருஷ தீபாவளி.. ரைட்டா?" என்ற கேள்வி தொக்கி நிற்கும் பதில் தெய்வாதீனமாகச் சரியான தருணத்தில்..
3. நெருக்கியடிக்கும் பஸ்ஸில் பக்கத்து அக்குள் நாற்றத்தில் திணறிக்கொண்டிருக்கும் போது மூச்சு வாங்கக் கிடைக்கும் ஜன்னலோர சீட்.
4. முன் வரிசை பின் வரிசை காத்தாடும் சினிமா தியேட்டரில்... சுவரில் முடியும் பக்கத்துச் சீட்டில் வாசனையுடன் வந்தமரும் பருவச் சிட்டு.
5. யுகாந்திரமாய்த் தவம் கிடக்கும் ட்ராஃபிக் ஜாமில்... பத்து செகன்ட் விடும் சிக்னலின் கடைசி வண்டியாய் தப்பிக்கும் தருணம்.
6. பொதுவெளியில் அவசரமாகப் பெருநீர் முட்டிக்கொண்டு வரும்போது க்யூ இல்லாத சுலப் இன்டர்நேஷனல் வாசல்.
7. அரை பாகம் புஸ்ஸென்று நுரையடிக்காமல் க்ளாஸ் ததும்பக் கிடைக்கும் நாயர் கடை சாயா.
8. அதிக நேர காத்திருப்பில்லாமல் கிடைக்கும் டாக்டர்/சாமி தரிசனம்.
9. கோடைகாலத்தில் மின்சாரம் தடைபட்டக் கசகச இரவில் மெதுவாய்க் கதவு தள்ளும் இதமான காற்று.
10. தலைக்கு நூறு ரூபாய் கட்டி, 320 Knock out ரம்மியின் போது 319 பாயின்டில் மூழ்கிக்கொண்டிருக்கும் போது ஓப்பன் ரம்மி அடித்து மொத்த பேரையும் மண்ணைக் கவ்வ வைப்பது.
11. குடும்பத்தினர்களை டி நகரில் இறக்கிவிட்டு பனகல் பார்க்கை அங்காடி நாயாகச் சுற்றிக் கார் பார்க்கிங்கிற்கு அலையும் போது கிடைக்கும் திடீர் வெற்றிடம்.
12. கல்யாணப் பந்தியில் ஏங்கிப் பார்த்துக் கேட்காமலேயே கிடைக்கும் உடையாத அப்பளமும் பக்கத்து இலைக்கு விட்டதால் நமக்கும் உபரியாய்க் கிடைக்கும் ஒரு கரண்டி பால் பாயஸமும்.
13. சேற்றை வாரியடித்த மாநகரப் பேருந்துவிடமிருந்துக் கையிலிருந்த குடையைக் கேடயமாக்கி உடை காத்துக்கொண்ட வேளை.
14. பள்ளி டெஸ்ட்டுக்குப் படித்துக்கொண்டு போகாதபோது அபூர்வ ஜுரத்தினால் அவசரமாக ஒரு வாரம் லீவு போடும் மேத்ஸ் சார்.
15. ஞாயிற்றுக்கிழமை டிவியின் கர்ண கொடூரமான மதிய சினிமாவின் போது பட்டென்று நின்று போகும் மின்சாரம்.
16. காலில் அறுந்துப் போய் தெருவில் தையத்தக்காவென்று பாண்டி ஆடும் போது முக்கில் தென்படும் செருப்பு தைக்கும் தொழிலாளி.
17.”ப்ளீஸ்க்கா..” என்று கெஞ்சி பக்கத்து வீட்டில் வாங்கிய இரவல் நகையில் பங்காளியின் பொண்டாட்டியை விட நாமே அதிகமாக ஜொலிக்கும் சொந்தக்கார மேரேஜ் ரிசப்ஷன்.
18. கை காட்டி இன்டிக்கேட்டர் போட்டு சகல போக்குவரத்து ஒழுங்கையும் சத்தியம் போலக் கடைபிடித்து ஒழுக்கமாகத் திரும்பும் சென்னை ஆட்டோ.
19. இருசக்கர வாகனத்தில் தொடரும் போது குப்பை நம் மீது சரியாமல் இருக்க நெட் அடித்து பத்திரமாகச் சுமந்து செல்லும் மாநகர குப்பை லாரி.
20.சாலைகளில் சடன் ப்ரேக் அடித்து நம்மை குளிப்பாட்டாமல் செல்லும் மெட்ரோ வாட்டர் டேங்கர்.
21. தெருவில் நம்மைக் கடக்கும் போது நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.. நமக்கே அடையாளம் தெரியாத... நம் ஏரியா கவுன்சிலர்.
22. “அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடுவேன்...” என்று முகம் சுளிக்காமல் நமக்காக சீட்/பர்த் மாற்றிக்கொள்ளும் ரயில் பயணி.
23. விமானப் பயணத்தில் ஸ்கூட்டர் ஓட்டுவது போல குறைட்டை விடாத பக்கத்து சீட் பரமசிவம்.
24. இரண்டு கிலோ ரேஷன் சர்க்கரை.. இரண்டு கிலோவாகவே கிடைக்கும் அதிர்ஷடம்.
25. "ஃபார்மாலிட்டி என்ன உண்டோ அதைப் பண்ணிடுங்க... " கேட்காமல் சீல் போட்டுத் தரும் கவர்மென்ட் ஆஃபீஸ்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails