எங்கள் தெருவில் அடிதடி. ஒரு பக்கத்தில் ஆறு பேர். எதிர் பக்கத்தில் ஐந்து பேர். கொஞ்ச நேரம் பேச்சு பேச்சாக இருந்து வந்தது. நேரம் செல்லச் செல்ல சப்தம் அதிகமாகியது. ஆறு பேர் தரப்பிலிருந்து இருவர் கபடி ஆடுவது போல ஐந்து பேர் அணியை துள்ளி நெருங்கினர்.
ஐந்து பேரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு படித்திருப்பார்கள் போலத் தெரிகிறது. சேர்ந்து கத்தி விரட்டினார்கள். கூச்சல் அதிகமாகியது. இப்போது அந்த வீதியில் வசிப்பவர்கள் வீட்டினுள் இருக்க முடியவில்லை. மணி பத்தரைக்கு மேல் ஆகிறது.
இந்த இரைச்சலில் இம்சிக்கப்பட்டவர்கள் பால்கனியில் வந்து எட்டிப்பார்க்கிறார்கள். ஒரு சிலர் அதட்டுகிறார்கள். உஹும். சண்டைக் கும்பல் கலைந்தபாடில்லை. சப்தம் ஓய்ந்தபாடில்லை. கடைசியில் ஒரு கல்லை எடுத்து பால்கனியில் இருந்து டெக்னிக் தெரிந்த முண்டா பனியன் அன்பர் வீசினார்.
பதினோறு நாயும் கலைந்து அவரவர் டீமோடு திசைக்கு ஒரு அணியாக பிரிந்து ஓடியது. சிலதுகள் “லொள்...” என்று “ள்”ளை ஸ்வர்ம் கம்மியாக கத்திக்கொண்டு ஓடியது.
இப்போரை நேரடியாக கால் மணிநேரம் கவனித்ததில் தெருநாய்ச் சண்டை என்றால் என்ன என்பது விளங்கியது.
இனிமேல் யாராவது “தெருநாய் போல சண்டை போட்டுக்கிறாங்கப்பா” என்றால் எனக்குப் புரியும். உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
0 comments:
Post a Comment