***
''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார்.
****
2012ல் விகடனில் வெளிவந்த அவரது பேட்டியில் இதைப் படித்தேன். இதைப் படித்த பின்னர் “இப்படியொருத்தர் பேச முடியுமா?” என்று என் மனைவியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனேன். வாழ்க்கையின் நிலையாமை என்பது நிதர்சனம். இலக்கிய உலகை உலுக்கும் ஒரு மரணம். ஆஃபீஸிலிருந்து வந்து வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் பாஸ் ரவி அலைபேசி விஷயம் சொன்னார்.
நான் தூரத்திலிருந்து அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருந்த எழுத்தாளர் அசோகமித்திரன். ஸ்நேகிதர்கள் யாராவது அவரை இந்த விழாவில் பார்த்தேன் அந்த விழாவில் பார்த்தேன் என்றால் ”அடடா... போயிருந்தால் ஆசீர்வாதம் பெற்றிருக்கலாமே” என்று பாழும் மனசு அடித்துக்கொண்டது.
அண்மைக் காலங்களில் எனது ஃபேஸ்புக் பதிவுகளுக்கு ஒன்றிரண்டு கமெண்டுகள் இரத்தினச் சுருக்கமாக வழங்கியிருந்தார்.. தியாகராஜன் ஜெகதீசன் Thyagarajan Jagadisanஎன்ற அவரது இயற்பெயரில் ஃபேஸ்புக் கணக்கு வழக்கில் இருந்தது. முதன் முறையாக கமெண்ட் பார்த்தபோது அது யார்? என்ற சந்தேகம் இருந்தது. அப்புறம் அது எழுத்தாளர் அசோகமித்திரன் என்று ஊர்ஜிதமாகி இந்த மரமண்டைக்கு உரைத்ததும் ரத்தத்துக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தோடி ஜிவ்வென்று இருந்தது. இலக்கிய விருதுகள் அனைத்தையும் வாங்கி மடியில் கட்டிக்கொண்டது போல போதையாகித் தரையிலிருந்து அரை இன்ச் மேலே மிதந்தேன்.
”ஒரு தடவை அழைச்சுண்டு போங்கோ. எனக்கு பேசெல்லாம் வேண்டாம். கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்....” என்று வல்லபாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தேன். செய்தி கேள்விப்பட்டு சாட்டில் வந்து “ப்ச்... அடுத்த வாரம் அழைச்சுண்டு போலாம் என்றிருந்தேன்..” என்று கமெண்டுகிறார். வருத்தமாக இருக்கிறது.
பதினைந்தோ எண்பத்தைந்தோ காலனின் கணக்கு யாரறிவார்?
0 comments:
Post a Comment