ஆறு மணிக்கு அந்த மலை கிராமத்தை அடைந்திருந்தோம். பச்சைத்தோல் போர்த்திய மலை. எங்கும் கண்ணுக்குக் குளிர்ச்சி. பரமபத பாம்பு போல ரோடு வளைந்து நெளிந்து ஓடுகிறது. நெட்டையும் குட்டையுமான மரங்கள் சாலையில் செல்லும் மானுடர்களை வேடிக்கை பார்க்கிறது. சில மரங்களை பூத்திருக்கும் சில கொடிகள் குடும்பமாகக் கட்டிப்போட்டிருக்கிறது. திடீரென்று நம்மை அசத்தும் விதமாக ரோடு மறிக்கும் ஆரஞ்சு நிற குல்மோஹர் மரம். ஒவ்வொரு வீடும் கல்லெறி தூரத்தில் இருக்கிறது. நடமாட்டம் கண்டு ரிஸார்ட் முகவரி கேட்க காரின் கண்ணாடிக் கதவை திற்ந்தால், மேலுக்கு துண்டு போர்த்திய அரைக்கிழவர்கள் "எந்தூருங்க?" என்று ஆவலாய் விஜாரிக்கிறார்கள். டீக்கடையும் பேக்கரியும் ஜெனரல் ஸ்டோர்ஸுமாக கடைத்தெருவைக் கடந்து உள்ளே சென்றோம்.
நிர்ஜனமான சிங்கிள் பெட் ரோடு. மரங்கள் அசையும் ஓசை மட்டும் கேட்கிறது. அனைவரும் இறங்கி ரிசார்ட் உள்ளே சென்றதும் மொட்டை மாடிக்கு ஓடினேன். இயற்கையெனும் இளைய கன்னியின் கவர்ச்சிகரமான தோற்றம் ஆளைக் கிறங்கடித்தது. வெள்ளையும் கறுப்புமாக பத்து ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. க்ளிக்கினேன். இதுவரை சுபம்.
ஆடுகளைத் தாண்டி வானில் ஆரஞ்சு சூரியனைப் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஆடுகளின் கதறல். சட்டென்று பார்வையை இறக்கிய போது சிறுத்தை ஒன்று வெள்ளாட்டின் கழுத்தைக் கவ்வித் தூக்கியிருந்தது. தூக்கிவாரிப்போட்டது. மொபலை எடுத்து கிளிக்கக் கூட கை வரவில்லை. கண நேரத்தில் மலைப் புதருக்குள் மறைந்து போனது. கொஞ்சம் படபடப்பு அடங்கியவுடந்தான் பேச முடிந்தது. கீழே வேனில் பெட்டியிறக்கிக்கொண்டிருந்தவரிடம்.....
"சிறுத்தை வீகேயெஸ்..."
"என்னது?" சின்ன அதிர்ச்சி.
"ஒரு சிறுத்தை ஆட்டை அடிச்சுக் கொண்டு போயிடுத்து..."
"யோவ்.. என்ன சொல்றீங்க?"
இரண்டு இளைஞர்கள் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்களிடம்
"சிறுத்தை ஆட்டை அடிச்சுட்டுப் போச்சுங்க... இங்க அடிக்கடி வருமாங்க..."
"இல்ல... ஆனா எப்பவாச்சும் வரும்.. நீங்க பார்த்தீங்களா?"
"ஆமா..."
குழுவுக்கு சப்தநாடியும் அடங்கிவிட்டது.
"கரன்ட் போயிடுச்சுன்னா.. மெழுகுவர்த்தி கூட இல்லை. தண்ணி கேன், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி இதெல்லாம் வாங்க்கிக்கலாம்..."
நான், வீகேயெஸ் ரிசார்ட் பாதுகாவலர் மூவரும் கடைத்தெருவிற்குக் கிளம்பினோம்.
ஒற்றை விளக்கில் சுறுசுறுப்பாக இயங்கும் தர்ஷன் ஸ்டோர்ஸில் தீப்பெட்டியிலிருந்து ஜில்லெட் மாக் 3 வரை கிடைகிறது. கிராம மக்களின் சூப்பர்மார்க்கெட். வேண்டுமென்பதை வேண்டினோம். "பிங்கோ வாங்கிக்கொடுப்பா..." என்று பாவாடைச் சிறுமி அப்பாவின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கேட்டாள். அச்சிறுமியைத் தாண்டி நின்ற மீசைக்காரரிடம் என் அச்சத்தை நீக்கிக்கொள்ளும் விதமாகக் கேட்டேன்.
"இங்க சிறுத்தை வருமாங்க?"
மீசையின் கண்கள் அகல விரிந்தது.
"நீங்க பார்த்தீங்களா?"
"ம்.. பார்த்தேன். ஒரு ஆட்டை கவ்வி இழுத்துக்கிட்டுப் போயிடிச்சுங்க..."
"இவ்ளோ நாளா இங்க இருக்கோம்.. நாங்க பார்க்க முடியலீங்க... மேலே போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வந்து உலாத்திட்டுப் போயிருக்குங்க... வாசல் காமிராவில ரிகார்ட் ஆகியிருந்திச்சு...மறு நாளுதான் பார்த்தோம்..."
"எங்க கண்ணுல பட்டதேயில்லை சார்..." கடைக்காரரும் சேர்ந்து கொண்டார்.
"சார்... நீங்க மட்டும் ஒரு ஃபோட்டோ எடுத்திருந்தீங்க்கன்னா... ஃபேஸ்புக்ல லைக் பிச்சுக்கிட்டுப் போயிருக்கும்... நீங்க ஃபேமஸாயிருப்பீங்க..." என்று சொன்ன அந்த மீசைக்காரரை இன்னமும் நினைத்துக்கொண்டு சிறுத்தை வருமா என்று ரிசார்ட் வாசலில் காத்திருக்கிறேன். வந்ததா இல்லையா என்று காலையில் சொல்கிறேன்.
இரவு வணக்கம்.
பட உபயம்: வீகேயெஸ் Vk Srinivasan
0 comments:
Post a Comment