Thursday, June 1, 2017

ஞாயிறு


”1978ம் வருஷம் இருக்கும். சென்ட்ரல்லேர்ந்து நாயர் அப்டீன்னு ஒரு பஸ் போகும். க்ரோம்பேட்டை அடியார்கள் சங்கத்து தோத்தாத்ரிதான் ஃபர்ஸ்ட் டைம் என்னை அங்கே அழைச்சுண்டு போனார். குக்கிராமம். கோயிலைச் சுத்திலும் ஒரே கொடியும் செடியுமாப் புதரா மண்டிக் கிடந்தது. சின்னோண்டு கோயில். அந்தக் காலத்துலேர்ந்தே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்கிற கோவில்.”
பொங்கலன்று சனிக்கிழமை. அன்று ஞாயிறுக்கு சென்றோம். பஞ்சபாஸ்கர க்ஷேத்திரத்தில் ஒன்று. திரும்பி வரும் வழியில் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார் சொன்ன கதையின் ஆரம்பம்தான் முதல் பாரா. மேலே அவர் சொல்வதைக் கேட்போம்.
“நாங்க அஞ்சாறு பேரா உழவாரப்பணிக்குப் போனோம். ஹெச்சாரென்ஸில சொல்லிட்டுதான் போனோம். அவங்க யாரும் வரலை. கிடுகிடுன்னு புல்லெல்லாம் செத்தி எடுத்தோம். சுறுசுறுப்பா வெளில கொண்டு போய் போட்டோம். உழவாரப் பணி முடியும் போது ஜீப்ல வந்து இறங்கினாங்க. எல்லாத்தையும் உள்ள எடுத்துப் போடுங்கன்னு விரட்டினாங்க.."
“ஏன் சார்?”
“அதுக்குள்ள எதாவது செல இருக்குமாம். கூட உழவாரப்பணியில இருந்தவாள்ல ஒருத்தர் ஹை கோர்ட் வக்கீல், சீனியர் லாயர்... இன்னொருத்தர் டாக்டர். ரெண்டு பேரும் எடுத்துச் சொன்னா. அப்புறம் அந்த ஈஓ சரின்னுட்டு போய்ட்டார். அந்த அறநிலையத் துறையில அர்ச்சனை சீட்டு அபிஷேகச் சீட்டெல்லாம் அப்பவே அடிச்சிருந்தாங்க.. அதுல ”புஷ்பரதேஸ்வரர் ஆலயம், நாயர்” அப்டீன்னு அச்சடிச்சிருந்தது. எனக்கு ஒரே சந்தேகம். நாயர்னு டீக்கடை இருக்கும் ஊர் பெயர் இருக்குமான்னு. சுந்தரரை திருவொற்றியூர் மகிழமரத்துக்குக் கீழ கல்யாணம் பண்ணிண்ட சங்கிலி நாச்சியார் அவதாரத் தலம். சூரியபகவானுக்கு சாப விமோசனம் கிடைச்ச தலம். ஊருக்கு வந்த மொத காரியமா என்ன பண்ணினேன்னு தெரியுமா?”
“என்ன பண்ணினீங்க?”
“லைப்பரரிக்குப் போய் பெரியபுராண புக்ஸெல்லாம் எடுத்து மேஜைல போட்டுண்டேன். அதுல ’வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார்’ன்னு சங்கிலி நாச்சியார் புராணத்துல ஞாயிறு பற்றிய குறிப்பு வருது. அந்தக் குறிப்பெல்லாம் எடுத்து ஹெச்சாரன்ஸிக்கு அனுப்பி அந்தச் சீட்டுல ஞாயிறுன்னு இருக்கணும். நாயர் தப்புன்னு லெட்டர் எழுதினேன்.”
“சார்.. நீங்க எதோ இந்தக் கோயில் இருக்கிற இடம் தெரியும். கூட வர்றீங்கன்னு நெனைச்சேன். அங்க இவ்ளோ காரியம் பண்ணியிருக்கீங்களா? அப்புறம் என்னாச்சு?”
சேப்பாயிக்கு வெளியே சூரியன் இறங்கிய தொடுவானம் எங்கும் தகதகக்கும் தங்கமயமாக இருந்தது. ஒரு சிறு புன்னகைக்குப் பின்னர் வெங்கட்ராமன் தொடர்ந்தார்.
”ரெண்டு மாசத்துக்கப்புறம் செண்ட்ரலுக்கு ஒரு வேலையா போயிருந்தேன். பல்லவன் பஸ்ஸுல ஒரு போர்டு. “ஞாயிறு. வழி: செங்குன்றம்” அப்டீன்னு. அப்புறம் அர்ச்சனைச் சீட்டுலேர்ந்து எல்லாத்துலயும் ஞாயிறுன்னு மாத்திட்டாங்க.”
”சூப்பர். பெரிய சிவத்தொண்டு சார்.”
“அதெல்லாம் கிடக்கு. இன்னொரு விசேஷம் தெரியுமோ?”
“என்ன?”
“ஆதிசங்கரர்தான் அந்த கோயில் அம்மன் சொர்ணாம்பிகையை பிரதிஷ்டை பண்ணினது”
அம்மன் சன்னிதியில் நின்றபோது அந்த அதிர்வை உணர முடிந்தது இப்போது புரிந்தது. சின்னக் கோயில்தான். அம்மன் சன்னிதி ஓரத்தில் பிரதோஷ நாயகர் வெள்ளி விடையில் இருந்தார். அந்த நந்தியின் வேலைப்பாடுகள் பார்ப்பதற்கு கொள்ளை அழகு. அம்மன் சன்னிதி சுவற்றில் பன்னிருதிருமறை கோயில் என்று ஷெல்ஃப் அடித்து அதில் பன்னிருதிருமறை புத்தகங்களை அடுக்கியிருந்தது வணங்கத்தக்க செயல். ஒரு தடவை சன்னிதிக்குள் இருந்த அந்தக் கோயிலையும் கை கூப்பித் தொழுதேன்.
“கண்வ மகரிஷி முக்தியடைஞ்ச இடம். சாயாதேவியை ஒரு சாபத்துனால பிரிஞ்ச சூரியன் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தான். அப்போ சூரியனுக்கே டார்ச் அடிக்கிறா மாதிரி ஜோதிஸ்வரூபம் ஒண்ணு அவன் முன்னாடி போச்சு. இவனும் பின்னாடியே போனான். அது கடைசில இங்க ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் மேலே வந்து விழுந்தது. சூரியன் வணங்கி சாயாதேவிகூட சேர்ந்துட்டான். கணவன் - மனைவி பிரச்சனை இருக்கிறவா வந்து வழிபட்டா ஒண்ணு சேர்ந்துடுவா. அதனாலதான் சூரியன் சன்னிதி புஷ்பரதேஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரே இருக்கும்.”
”கோயில் ரொம்பப் புராதனமானதுன்னு நினைக்கிறேன்...”
“ஆமாமா... சோழ மன்னன் ஒருத்தன் நெல்லூர் வரைக்கும் போய் ஜெயிச்சுட்டு இந்தப் பக்கமா வரான். அப்போ இந்தக் காட்டுல ஒரு செந்தாமரை மலர்ந்து இருக்கு. அவனுக்கு அதைப் பார்த்ததும் ஆசையாப் போயி அதப் பறிக்க போறான். அது நகர்ந்து நீஞ்சிப் போகறது. துரத்தறான். புடிக்கமுடியலை. கடைசியில கையில இருக்கிற வாளை எடுத்து வீசறான் அந்த தாமரை அதனடியில பாதுகாப்பா மறைச்சிருந்த சிவலிங்கத்திலேர்ந்து ரத்தம் பீறிட்டு வழியறது. இப்பவும் இந்த லிங்கத்துல பார்த்தா உச்சில வெட்டுத்தழும்பு இருக்கும்.”
“அச்சச்சோ.. அப்புறம் அவனே கோயில் கட்டினானா?”
“ஆமாம். ரத்தம் வழிஞ்சு குளம் பூரா இரத்தக்குளமாயிடுத்து. லிங்கத்து மேலே வெட்டுப்பட்டதுல படார்னு சத்தமும் கண்ணைப் பறிக்கிற மின்னல் வெளிச்சமும் வந்தது. மன்னனுக்கு கண் பார்வைப் போய்டுத்து...”
“இதென்ன ஆண்டி க்ளைமாக்ஸ்?”
“ஹா..ஹா. அதெல்லாமில்லை. அப்புறம் சிவபெருமான் தோன்றி அவனுக்குக் கண் பார்வை கொடுத்து இந்த இடத்தில கோயில் கட்ட கட்டளையிட்டாராம்...”
"இன்னிக்கி ஒரே கூட்டம். லேட்டாயிடுத்து. சங்கிலி நாச்சியார் மனையைப் பார்த்துட்டு வந்துருக்கலாம்...”
“ம்.. போலாமே... இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹிஸ்டரி ப்ரொஃபஸர் மூலமா கோயில்லேர்ந்து இத்தனையாவது மனைன்னு தேடிக் கண்டுபிடிச்சோம்.. அப்போ அங்கே யாரோ குடிவந்துட்டாங்க... அவங்களுக்கு எடுத்துச் சொல்லி.. இது சங்கிலி நாச்சியார் இல்லம்ன்னு போர்டு நட்டோம்”
“இது பஞ்ச பாஸ்கர க்ஷேத்ரத்துல ஒண்ணுன்னு போட்ருந்தது. திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம் (பருத்தியப்பர் கோயில்), தலைஞாயிறு போன்ற திருத்தலங்களெல்லாம் நான் முன்னாடியே தரிசனம் பண்ணிட்டேன். அஞ்சாவது இதுதான். இதையும் இன்னிக்கு உங்க புண்யத்துல தரிசனம் பண்ணியாச்சு... பொதுவாவே ஸ்வயம்பு லிங்கக் கோயிலெல்லாம் சட்னு பார்த்துடமுடியாது...”
கோயிலுக்குப் போகும் போது திருமுடிவாக்கம் பக்கமாகச் செங்குன்றம் சென்றோம். சென்னைக்கு இருபது கி.மீ அருகில் இருக்கும் கிராமப்பட்டினங்களில் பெஞ்சு போட்ட டீக்கடையில் பன்னும் சேவும் வாங்கித் தின்று வசிப்பவர்கள் மன்னையையும் தொட்டடுத்த கிராமங்களையும் கண் முன்னே கொண்டு வந்தார்கள். புதிதாகப் போடப்பட்ட நெமிலிச்சேரி பைபாஸில் ஆளரவம் இல்லை. பாதியில் யானைப் பள்ளம் வெட்டியிருக்கிறார்கள். உங்கள் காரோடு நீங்களும் மாட்டலாம். இரவு நேரப் பயணத்திற்கு உகந்ததல்ல என்று மாதவரம் பக்கமாக ரெட்டேரி ஆவடி நுழைந்து கோயம்பேடு வழியாக வந்தோம்.
சனிக்கிழமை ஞாயிறுக்கு சென்று வீட்டிற்குள் நுழையும் போது விண்ணில் திங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சிவமயம்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails