Tuesday, June 6, 2017

பீபத்ஸ ரசம்

இம்முறை வலமும் விஜயபாரதமும் தாமதமாக இன்றுதான் கைக்குக் கிடைத்தது. தபாலாபீஸ் கோளாறு. இதழுக்கு இதழ் வலத்துக்காரர்கள் ஜமாய்க்கிறார்கள். அரைமணி நேரத்தில் ஆறு ஐட்டங்கள் படித்தேன். சிறுகுறிப்போடு கீழே பட்டியலிட்டு விடுகிறேன்.
1. கலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் - வல்லபா ஸ்ரீநிவாசன்:
ஒன்பது பக்கங்களில் சில்ப சாஸ்திரத்தின் சிலவற்றைத் தொட்டு கலிங்கத்திலிருந்து மேற்கோள்காட்டியிருக்கிறார். கல்லிலே தான் கண்ட கலைவண்ணங்களில் சாலபஞ்சிகா என்ற கொடியழகிகளை பற்றியும் கீர்த்திமுகா என்ற சிங்கமுகச் சிற்பங்களைப் பற்றிய வர்ணனைகள் அந்தச் சிற்பங்களை நேரில் கண்டு களித்த உணர்வு ஊட்டுகிறது. கட்டுரைக்கான படங்கள் திருவாளர். ஸ்ரீநிவாசன் போல் தெரிகிறது. படங்கள் என்று கோலன் வைத்து வீகேயெஸ் பெயர் போட்டிருக்கலாமோ?

2. டி.கே. மூர்த்தி - ஈரோடு நாகராஜ்:
கட்டுரை படிக்கும்போதே ம்ருதங்க ஓசை காதில் கேட்கிறது. மூர்த்தி சாரின் நகைச்சுவையாக மழையில் ஆட்டோ வண்டிச்சத்தம் கூட கேட்க, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு “மழை விட்டவுடன்ன எடுப்பா” சொன்ன மூர்த்தி சாரின் ஹாஸ்யம் அவரது ம்ருதங்க வாத்யம் போலவே “தரிகிட கிடதக தாத் தொம்” என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்து காதில் விர்ர்ர்ர்ர்ரென்று கேட்பது போல்.

3. கார்ட்டூன் பக்கத்தில் ஆர்.ஜி என்று இனிஷியல் ஆக்கிக்கொண்ட பெயருடன் கோபிநாத் ரவியின் படங்கள். எம்.ஜி.ஆர் குல்லாயுடன் ஜெவின் திலகத்துடன் தீபா பேரவை படம். முன்னால் ஒரு சிறுவனும் சிறுமியும் அமர்ந்திருக்கிறார்கள். நல்ல கருத்துப் படம்! :-)
4. கொனார்க் மகாலஷ்மி - ராமசந்திரன் உஷா. 
சூரியக் கோவில் சிற்பங்களில் மகாலஷ்மியை அடையாளம் கண்டுபிடித்த கதை. ரயிலில் தொடங்கும் கதை அதே ஹௌரா எக்ஸ்பிரஸ் வேகத்துடன் செல்கிறது. “வெளி மண்டபச் சிற்பங்கள் ரெண்டு கால்.. ரெண்டு கை.. மனித உருவங்கள்.. இங்க பாருங்க நாலு கை.. சுவாமி சிலைன்னா இப்படிதான் இருக்கும்...”. நானும் கொனார்க் போயிருக்கேன். வெளிமண்டபமும் உள்ளேயும் நிதானமாக பார்த்திருக்கிறேன். ஒரே சிரிப்பு.

5. புலாலும் ஆரியமும் - பத்மன்: 
தரமான தரவுகளுடன் அற்புதமான கட்டுரை. ஆர்ய என்பது இனம் அல்ல. அது சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்று மகாகவி பாரதியின் “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்”. என்ற வரிகளை மேற்கோள் காட்டியது கட்டுரையின் மையக்கருத்தை தூக்கி நிறுத்தியது. எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி. எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி என்று முடிக்கிறார்.

6. ஆதிகவியின் முதல் கவிதை - பெங்களூரு ஸ்ரீகாந்த்
ஆதியோகி பரவலாகப் போணியாகிக்கொண்டிருக்கும் வேளையில் ஆதிகவியின் இராமாயண காவியத்தின் பூர்வாங்கமான ”மா நிஷாத” பற்றி ஒரு வ்யாசம். அனுஷ்டுப் சந்தஸாக இருந்த இலக்கணம் அனுஷ்டுப் ஸ்லோகமாக மாறியது வால்மீகியிடம் என்ற செய்தியும் இடம்பெறும் அபாரமான பத்தி. பல உரைகளில் படித்ததை அதியற்புதமாகத் தொகுத்து மா நிஷாதவின் பொருள் வடித்திருக்கிறார். பீபத்ஸ ரசம் என்றால் இணையை இழந்து கதறும் பறவையின் ஓலமாம்.

வலம் நாளுக்கு நாள் மென்மேலும் மெருகேறி நலமாக வருகிறது. வாழ்த்துகள்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails