Thursday, June 1, 2017

தங்கமெடல் பெறும் தங்கல்

”சபாஸ்”

ஆமீர்கான் வாழ்த்துகளுடன் தனது இரு மல்யுத்தப் பெண்களையும் ஆரத்தழுவுவதோடு ”தங்கல்”லுக்கு சுபம் போடுகிறார்கள். தனது தங்க மெடல் கனவை தன் பெண்களை வைத்து நினைவாக்குகிறார். ஒரு இடத்தில் கூட தொங்கல் இல்லாத திரைக்கதை. மல்யுத்தப் போட்டி நடக்கும் காட்சிகளில் நம்மையும் ஸ்டேடியத்தில் ஒரு ரசிகராக உட்காரவைக்கும் சாகசமான இயக்கம். குறிஞ்சி மலர் போல... அத்தி பூத்தாற்போல... தங்கல் போன்ற அதிசயங்கள் இந்திய சினிமாவில் நிகழ்கிறது.
பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தைப் பெற்றுப்போடும் இயந்திரங்களாகப் பார்க்கப்படும் ஒரு வட இந்திய கிராமப் பெண்களை மல்யுத்த வீராங்கனையாக வளர்த்த மஹாவீர் ஆமீர்.. அடடா.. அபார நடிப்பின் சிகரம். அது எப்படிய்யா உன் கண்ணே பக்கம் பக்கமாக பேசவேண்டிய வசனம் பேசுது? இளம் பிராயத்தில் ஐந்து மணிக்கு எழுப்பி ரன்னிங் போகத் துரத்தி எக்ஸர்சைஸ் செய்ய வைக்கும் வில்லத்தனமான அப்பா....கிராமப்புறங்களில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகளிலும் தேசிய அளவில் கோப்பை கெலித்து வெற்றிக்கனியைச் சுவைக்கும் போது அந்தப் பெண்களுக்கு ஹீரோவாகிறார்.
தங்க மெடல் தவிர எது வாங்கினாலும் அது வெறும் மெடல்தான். தங்கம் வெல்வதுதான் பெண்கள் சமுதாயத்திற்கே ஒரு இலக்கணமாகத் திகழும் என்று உத்வேகப்படுத்தும் அப்பா ஆமீர் போன்ற திறம்பட வழிநடத்தும் ஒருவரின் எந்தக் கட்டளைக்கும் அடிபணிந்து நடப்பது நிச்சயமாக புகழின் உச்சிக்கு இழுத்துச் செல்லும் என்று காட்டியிருக்கிறார்கள். தன்னம்பிக்கை டானிக்கை கரண்டி கரண்டியாக ஊட்டியிருக்கிறார்கள்.
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுத்திருக்கிறார்களாம். ஃப்ரேம் ஃப்ரேமாக காவியம் தீட்டியிருக்கிறார்கள். ஆமிர்கானின் தியாகங்களும் "தேஸ் கா கோல்ட்" வாங்க தயாராகும் பெண்களின் நடிப்பும் அது சினிமாதான் என்பதையும் மீறி அப்பா-பெண் பாசப்பிணைப்பை உணர்ச்சிப்பூர்வமாக சித்தரித்த படம். தவறாமல் குடும்பத்தோடு சென்று ரசிக்கவேண்டிய படம்!
2016 முடிந்து பதினேழு ஆரம்பம். பதினாறில் நான் பார்த்த அற்புதமான திரைப்படம் தங்கல். மனசில் நிரந்தரமாக தங்கிய படம். இதுபோன்ற தரமான திரைப்படங்கள் தமிழிலும் வந்து நமது கோலிவுட்டும் தழைக்கவேண்டும் என்பது ஆசை.
வெல்கம் 2017! ஹாப்பி ந்யூ இயர்!! :-)

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails