நகரேஷு காஞ்சி. கைலாசநாதர் கோவிலில் இன்று சிவராத்திரியுடன் சேர்ந்து வந்த பிரதோஷ அபிஷேக ஆராதனையை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். தட்டு தட்டாய் பழங்கள் பஞ்சாமிர்தமாக்கப்பட, கேன் கேனாய் பால், கெட்டித் தயிர், பாணம் மேல் தூவிய விபூதி, அரைத்த குளிர் சந்தனம், பாட்டில் பன்னீர், பூசுற்றிய நூற்றியெட்டு சங்காபிஷேகம் என்று நான் சிவானந்தத்தில் திளைத்தேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்த அபிஷேகத்தில் மனசு கூத்தாடியது.
நெற்றியில் பட்டையாய் ஏறிய விபூதி மணத்தில் மனசில் பக்தி ஊற்றாய்ப் பொங்கியது. சிவமே... சிவமே.. சிவமே.. என்று உள்ளுக்குள் கதற முடிந்தது. பட்டைலிங்கத்தில் சுடர் விட்ட தீபாராதனையில் உலகம் துறந்து லயித்த இன்பம் பிராணன் இருக்கும்வரை மறக்காது. அபிஷேகப் பிரியனை ஆனந்த தாண்டவமாட வைத்த திருப்தி.
கைலாச்நாதர் தரிசனத்துக்குப் பின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்தியாகக் கிடைத்த பிரதோஷ நாயகர் புறப்பாடு. நாகஸ்வர வித்வான்கள் மல்லாரி வாசிக்க இடதும் வலதுமாய் ரிஷபத்தின் மீதமர்ந்து ஒய்யாரமாக ஆடிவரும் அம்மையப்பனைக் காணக் கண்ணிரண்டுதான் போதுமோ? கண்ணாயிரம் வேண்டாமோ? ஆஹா.. ஒரு க்ஷணத்தில் பட்டென்று மனசு விட்டுப்போயிற்று. சிற்றின்பங்களை விட்டு இந்த பேரின்ப ஜோதி எப்போதும் வாய்க்காதா என்று அந்த கணம் பிரமாதமாக எண்ணினாலும் பட்டினத்தடிகள் சொன்னது போல அங்காடி நாயாக அடிபடத் திரும்புகிறது பாழ் மனம்.
காமாக்ஷி தரிசனத்தில் மெய் மறந்தோம். அலங்காரமாகப் போடப்பட்ட விளக்கொளியில் கோபுரம் தங்கத்தில் தகதகவென்று ஜொலிக்கிறது. புருஷனுக்குப் போட்டியாக பிறைச்சந்திரனை சிரசில் ஏந்தி கருணைப் பார்வையில் அருட் காட்சியளித்தாள் அம்பிகை. அவள் முன் எத்தனை நேரம் அமர்ந்தாலும் நொடியெனக் கரையும் மாயமென்ன? சக்தியின் சொரூபம். எவரையும் கட்டிப்போடும் காருண்யம். அம்பிகையே... உன் பாதம் சரண் நாங்களே!
நெஞ்சு நிறைந்த இரவு! சிவோஹம்!
0 comments:
Post a Comment