Wednesday, March 8, 2017

தேசபக்தர் பன்னாராம்

பஸ்ஸும் லாரியும் போகும் பிஸியானக் கடைத்தெரு. உருளையில் சிகப்பும் மஞ்சளுமாக தொங்கும் வயர் ரோல்களும் கட்டுக்கட்டாக பிவிஸி பைப்புகளும் அலங்கரிக்கும் தோரணவாயிலோடு வரவேற்கும் விஸ்தாரமான எலக்ட்ரிகல்ஸ் ஷாப். சின்னவளும் நானும் உள்ளே நுழைந்தபோது கஸ்டமர் யாருமில்லை. கல்லாவில் ஓனர் பன்னாராம்ஜீயும் கடையிருட்டுக்குள்ளே பணியாள் ஒருவரும் மட்டும் பிஸினஸுக்காக வாசல் பார்த்து காத்திருந்தார்கள்.
“சௌக்கியமா? எப்படியிருக்கீங்க?” படியேறிக்கொண்டே கேட்டேன்.
“நல்லாயிருக்கேன் ஜீ.. என்ன வேணும்?”
”ஒரு tube light .. அப்புறம் ஃபாரின் பின் டு இண்டியன் கன்வர்ட்டர் பவர் சாக்கட் ரெண்டு வேணும்...”
அவர் சாமான் எடுக்க கடையுள்ளே இருளில் மறைந்தார்.
“அப்பா... “ என்று சுரண்டினாள். புரிந்துகொண்டேன்.
"ஜி.. ஐநூறு ஆயிரம் இல்லாம எப்படி காலந்தள்றீங்க?"
"போயிட்டிருக்கு ஜி..." கை பணம் எண்ண வாய் பதில் சொன்னது.
"பிஸினஸ் டல்லாயிடிச்சுல்ல..."
"ஆமா ஜி.. கொஞ்சம் டல்லுதான்... வெயிட் பண்ணுவோம் ஜி.." நிமிர்ந்து சிரித்தார்.
"ஹா.ஹா... மோடி ஜி.. உங்க ஆளு.. சப்போர்ட்டுக்காக எவ்ளோ நாள் வேணுமின்னாலும் வெயிட் பண்ணுவீங்கல்ல?" கொஞ்சம் தெனாவட்டாகத்தான் கேட்டேன்.
"அதெல்லாமில்ல ஜி... நோ பாலிடிக்ஸ்... ஆப்ரேஸன் பண்ணும்போது டாக்டர்ட்டே கட் பண்ணக்கூடாது.... வலிக்கக்கூடாதுன்னு சொல்லுவோமா? நம்ம நல்லத்துக்காகதானே ஆப்ரேஸன்... அதுமாதிரிதான இதுவும்... வெயிட் பண்ணுவோம் ஜி..."
"இதுனால எல்லா ப்ளாக் மணியும் ஒழிச்சிட்டோமா?”
“இல்லீங்க... ஆனா... காலேலேர்ந்து ராத்திரி வரைக்கும் உங்களமாதிரியும் என்னை மாதிரியும்... உளைக்கிறவங்க கிட்டே இல்லாத பைசா.....பதுக்கி வச்சவங்ககிட்டே இருந்திச்சில்ல.....அதெல்லாம் வெளிய வருதில்ல ஜி...”
“சர்தான்... கைல ரெண்டாயிரமா இருக்கு.. மீதி சில்ற தருவீங்களா?”
“நிறையா இருக்கு ஜீ... குடுங்க....”
பர்ஸ் கொள்ளா சில்றையோடுயும் வாய்கொள்ளா புன்னகையுடனும் வழியனுப்பி வைத்த பன்னாராமின் நம்பிக்கைதான் நம்முடையதும். மண் பயனுற காத்திருப்போம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails