அன்னம் தண்ணியில்லாமல் அப்பா ஒரு வாரமாக வாட்டமாகயிருக்கிறார். "என்னாச்சுப்பா?" என்று பாசத்துடன் நெருங்கும் மகனிடம் "ஒன்றுமில்லை..." என்று சொல்லி சோகமுகம் திரும்பிக்கொள்கிறார். கால் பிடித்துவிட்டு வற்புறுத்திக் கேட்டதும் "உன்ன நினைச்சா கவலையா இருக்கு" என்றதும்... "ஏன்? என்னாச்சு? என்னப் பத்தி என்ன கவலை?" என்று மகன் விசாரிக்க... "இல்லப்பா.. இப்படி சண்டைக்கெல்லாம் போய்ட்டு வர்றியே... எதாவது ஆச்சுன்னா.. அதான் கவலையா இருக்கு..." என்று வருத்தம் தோய்ந்த குரலில் அப்பா சொன்னதும் மகன் "நம்ம குலவழக்கப்படி இதெல்லாம் சகஜம்தானே..." என்று முறுவலித்து இது காரணம் இல்லை என்று புரிந்து கொண்டு வெளியே வருகிறான்.
வெளியே அப்பாவின் வாகன ஓட்டியிடம் "டேய்.. அப்பா எங்கயாவது சமீபத்துல போனாரா? எதாவது விவகாரமா?" என்று சில நிமிடங்கள் துருவியதும்... "ஆமா .. அப்பா ஒருத்தங்களை சந்திச்சாரு.. புடிச்சுப்போச்சு.. கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டாரு.. அவங்க ஏதோ சொல்லிட்டாங்க.. மௌனமா திரும்பி வந்துட்டாரு... "
(அடடே... இது மகாபாரதமாச்சேன்னு புரிஞ்சவங்களுக்கும்...பரதகுல ராஜாவிடம் பொண்ணு கேட்டு ஏமாந்து திரும்பினவன் சந்தனு மஹாராஜான்னு மூளைக்குள்ளே பல்ப் எரிஞ்சவங்களுக்கும்... இந்தப் பதிவின் கடைசியில் பரிசு காத்திருக்கிறது..)
அந்த பரதவகுலராஜனைச் சந்தித்து.... தன்னுடைய சின்னமாவாக சத்தியவதியைத் தானே தேர்ந்தெடுத்து.. தனக்கும் ராஜ்ஜியம் வேண்டாம் தன் மூலமாக சந்ததி உண்டானால் பின்னால் யாரும் ஆட்சிக்கட்டில் அமரத் துடிப்பார்கள் என்பதற்காக ஊர்த்துவரேதஸ் என்னும் அதிபயங்கரமான சபதம் செய்து... இனி சாகும் வரை.. (அதுகூட இச்சா ம்ருத்யூ... அதாவது சுயவிருப்பத்தின் படி மரணம்...) நைஷ்டிக பிரம்மச்சாரியாக காலம் தள்ளுவேன்... என்ற தேவவிரதனுக்கு விண்ணிலிருந்து பூமாரிப் பொழிய "பீஷ்ம..பீஷ்ம..பீஷ்ம.." பட்டம் கட்டினார்கள்.
புத்தாண்டு நெருங்குகிறது. இனி சிகரெட்டே பிடிக்கமாட்டேன். புட்டியைக் கையால் தொடமாட்டேன். அரிச்சந்திரனுக்கு அண்ணனாக இருக்கப்போகிறேன்... நேரந்தவற மாட்டேன்.. போன்ற சபதங்கள் சரளமாக செய்யும் நேரம் வந்துவிட்டது. இப்படி நீங்கள் செய்யப்போகும் சபதம் எதுவுமே பீஷ்மரின் பிரதிக்ஞை போல கடினமானது இல்லை என்றும்.. அதைக் கடைசிவரை பின்பற்றவும் என்றும் வேண்டிக்கொண்டு... சரி.. சரி... அட்வைஸ் இல்லை.. நானும் அதுபோல இருக்க முயற்சி செய்கிறேன்...
ஹாப்பி ந்யூ இயர்.. (செங்கல் எறியாதீர்கள். இதுதான் பரிசு)