Thursday, December 15, 2016

ஐஸே அருமருந்து!

"இங்க வலிக்குதா?”
“இல்லை...”
“இங்க?...”
“இல்லை..”
“இப்ப.. இங்க?...”
“இல்ல சார்..”
அடிமுதுகிலிருந்து குண்டலினி எழுந்து கபாலத்துக்கு ஓடும் முதுகுத்தண்டுவடப் பாதையெங்கும் இரு விரல்களால் அழுத்திக்கேட்டார் டாக்டர் சரத்பாபு. பியெஸ்ஸென்னல் கஸ்டமர் கேர் ஆபீஸிலிருந்து இறங்கும் பொழுது ஏற்பட்ட கஷ்டம். வாழைப்பழத் தோலில் கால் வைத்தது போல சரலேன்று வழுக்கிவிட்டது. “கேட்டா இன்னா சொல்லுவே..” என்று மகாநதியில் கேட்கும் வில்லனிடம் “வழுக்கி விழுந்துட்டேன்னு சொல்லணும்..” கமலாக நினைத்துக்கொண்டேன்.
தாஜ்மகாலைப் போல சலவைக்கல்லால் மாடிப் படிகளை இழைத்து கஸ்டமர்களைக் கவர்ந்திருந்தார்கள். ஆபீஸ் பெருக்கி அறுபது நாளிருக்கும். படியின் ஓரக்கூர்மையை மழுக்கி மொழுக்காக்கியிருந்தார்கள். ஹவாய் செருப்பின் வழவழ சோலுக்கு பிடிமானமில்லை. ”எப்பப்பார்த்தாலும் இப்படி அவசராவசரமா நடக்கறேளே” என்று சங்கீதாகூட அடிக்கடி அடித்துக் கேட்பாள்.. சே.. தோளில் தட்டிக் கேட்பாள். ”திருவிக்ரமபெருமாள் மாதிரி ஒரு காலுக்கு இன்னொரு கால் ஆகாசத்துக்கு வைப்பன் தம்பி” என்று சாரதா பாட்டி “கெக்கே” எனச் சிரிப்பாள்.
விழப்போகிறோம் என்ற அந்த கணத்தில் கையை ஊன்றவோ தலையைத் தூக்கவோ நம்முடைய மொத்த அலர்ட் சிஸ்டமும் எழுப்பிவிடுகிறது. தலை கீழே தரையில் மோதியிருந்தால் சதுர்த்தேங்காவாகி.... இந்த ஸ்டேட்டஸை எழுதிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஈஸ்வரோ ரக்ஷிது.
க்ளினிக்கில் டாக்டர் சரத்பாபு அழுத்திக்கொண்டிருக்கிறார்... இங்கே பார்ப்போம்..
“எக்ஸ்ரே எதுவும் எடுக்கணுமா டாக்டர்?”
“இல்லை மேடம். வேண்டாம். விலா எலும்புல அடிப்பட்டிருக்கு.. அப்படிதான் இருக்கும்.. பெயின் கில்லர் தரேன்.. “
“தொட்டா வலிக்குது டாக்டர்... “
"ஆமா.. அடிபட்ட வேகம்.."
“ஆம்னிஜெல் கூட தடவிவிட்டேன்...”
“ம்... பரவாயில்லை... மேடம்... அதைவிட ஐஸ் வக்கிறதுதான் பெஸ்ட் மருந்து...”
“ஆமா டாக்டர்.. அதைத்தான் நானும் சொல்றேன்.. அடிபட்டத்துக்கு மட்டுமில்லை.. எங்கயுமே எப்போதுமே யாருக்குமே எதுக்குமே ஐஸ் வக்கறதுதான் பெஸ்ட் மெடிசன்.... பொழச்சுக்கலாம்..."
டாக்டர் “ஹெஹ்ஹே” என்று சிரித்தார். சங்கீதாவை “மனுஷன் இந்த வலியிலும் ஜோக் அடிக்கிறாரு....” என்பது போல பார்த்தார்.
"ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க... சரியாயிடும்.."
சின்ன அடிதான். இப்போது பரவாயில்லை. ஐஸ் வைத்துக்கொள்கிறேன். சுபமஸ்து.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails