இன்று காலையிலிருந்து மாலை வரை சோகம் அப்பிக்கிடக்கும் தமிழகம் அமைதிப் பூங்காவாகவே இருக்கிறது. பெருந்தலைவர்களின் மரணமென்றால் ரௌடிகளின் கல்வீச்சும் பகுதிநேரக் கொள்ளையர்களின் கடை சூறையாடல்களும் வாடிக்கையாகிப்போன இக்கலியில் இறந்தும் தன் தொண்டர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதிசயம்தான். நாற்பத்தெட்டு மணிநேரங்களுக்கு மேலாக ஓய்வின்றித் தொடர்ந்து இயங்கும் காவலர்களுக்கு இத்தருணத்தில் மனமார நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
”கொண்ட கொள்கையில் விடாமுயற்சியும் பிடிப்பும் உள்ளவர்” என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிக அழகாகப் புகழாரம் சூட்டினார். வைரமுத்துவின் இரங்கல் செய்தியில் “திராவிட இயக்கத்தின் கிளை மீது” வரியில் ஒரு சின்ன உள்குத்து இருந்தாலும் அவரது புகழ்மாலை மணமாக இருக்கிறது. வாட்சப்பில் வந்த உடன்பிறப்பு ஒருவரின் கவிதையொன்றில் ”உன்னை ஆளக்கூடாது என்றுதானே சொன்னோம் வாழக்கூடாது என்று சொன்னோமா?” என்ற வரிகளைப் படிக்கையில் கண்களில் நீர்க்கசிந்தது. கட்சி மீறிய அவரது கம்பீரம் தெரிகிறது.
அவரை அரசியலில் சுயம்பு என்கிறார்கள். சுயம்புவானாலும் அரசியலில் ஆழமாகப் பணியாற்றிக் கரைகண்டார். மக்களுக்காக நான் மக்களுக்காவே நான் என்று அரசியலுக்கு வாழ்வை அர்பணித்தவர். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத வாழ்வின் விளிம்புநிலை மனிதர்களின் “அம்மா..அம்மா...” கதறல்களில் அவர்களின் கட்டுக்கடங்காத அன்பு வெளிப்படுகிறது. மீசையும் தாடியுமாக இருந்த ஆம்பிளைகள் கேவிக் கேவி அழுதபோது “என்ன ஒரு பாசப்பிணைப்பு!!” என்று வாய்பிளக்க வைத்தது. ராஜாஜி ஹாலைச் சூழ்ந்த மனிதவெள்ளத்தில் அம்மாவின் அன்பு அலை அடித்தது. மாநிலத்தையே உலுக்கிய ஒரு துக்கத்துக்கு வர்ணனையே தேவையில்லை. தத்துப்பித்துவென்று பேசுவதற்கு, கமெண்ட்டரி இல்லாத நேரலையே போதுமென்றாகிவிட்டது.
"Death of Tamil Nadu’s Leader Leaves Power Vacuum in Southern India" என்று ந்யூ யார்க் டைம்ஸ் எழுதுகிறது. தேசத்திலிருக்கும் பெருந்தலைவர்கள் அரசியல் மற்றும் கொள்கை பேதம் பார்க்காமல் அஞ்சலி செலுத்துகிறார்கள். அடாவடித்தனம் எதுவும் செய்யாமல் கடைகள் அடைக்கப்படுகின்றன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்கள் தாமாகவே வீடுகளில் முடங்கி சானல்களின் ஒளிபரப்பில் இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள். பெண்களின் உறுதிக்கும் தைரியத்திற்கும் செயல்வேகத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவரின் இழப்பு அந்த இனத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
சந்தனப்பேழையில் வைத்து ஏதோ ஒரு சம்பிரதாயத்தில் சந்தனக் கட்டை போட்டு பாலூற்றி பத்து ரூபாய்த் தாள்கள் எறிந்து அடக்கம் செய்துவிட்டார்கள். எம்ஜியார் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் காத்து வளர்த்த இந்த அம்மாவின் சாம்ராஜ்யத்தை இனி யார் ஆளப்போகிறார்கள்? எப்படி வளர்ப்பார்கள்? அதிமுகவின் எதிர்காலம் என்ன? இனி தமிழக அரசியல் காணப்போகும் மாற்றங்கள் மீடியாக்களுக்கு விருந்தாகும். மக்கள் நலனை முன்னிறுத்துபவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
தமிழக அரசியல் சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்த உங்களின் வாழ்வு ஒரு சகாப்தம். சென்று வாருங்கள்!!
0 comments:
Post a Comment