ஈகா தியேட்டரைப் பார்த்துக்கொண்டே சேத்துப்பட்டு மேம்பாலம் இறங்கி வலதுபுறம் திரும்பினால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை. சூரியன் பொசுக்கிய காலை பத்தரை மணி. புதிதாகக் கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையம் நேராக மருத்துவமனை ஓபிடி ப்ளாக்குக்குள் வந்து விழுகிறது. எவரும் எப்படி வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாக சென்று வரும்படி விசாலமாகத் திறந்த வெளி வாசல்.
நைட்டியுடன் காலை இழுத்துக்கொண்டே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த மத்திம வயசுப் பெண்ணைத் தாண்டி சேப்பாயி உள்ளே நுழைந்தது. ”இங்கியே எறங்கு.. .ஹக்காங்...” என்ற ஆட்டோக்குள் பின் சீட்டில் மார்ல சேலை நிற்காத கவலையில்லாமல் “ஹா...” என்று வெறித்துப்பார்த்துக்கொண்டு வெண்பரட்டைத் தலையுடன் வந்திறங்கிய ஆயா. “சிஸ்டர்... எக்ஸ்ரே எடுக்கணும்.. எங்க போவணும்?” என்று சீட்டுக் காட்டிக் கேட்ட சஃபாரி பெரியவர். சுவரோரத்தில் கட்டிப் போட்டிருந்த நான்கு நாற்காலிகளில் முதலில் உட்கார்ந்து நான்கில் உட்கார்ந்திருந்த கணவன் கையில் மாக்கட்டுக் காலால் உதைத்துக்கொண்டு “இப்டியே போனா திரும்பவும் கட்டுப்போடுவாரா?” கேட்ட கு.பெண். தலையிலும் புஜத்திலும் இரத்தக்கட்டோடு சட்டையில்லாமல் கைலியில் இருந்தவரைப் பார்த்துக்கொண்டே பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மாவிடம் ”உம்மவன் என்ன பண்ணினான்?’ என்று பேடில் சொருகிய பேப்பரில் எழுதிக்கொண்டிருந்த போலீஸ்காரர் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
காலையிலேயே கையோடு கைகோர்த்து ஈஷிக்கொண்டு ரோடுக்கு அந்தப் பக்கம் நடந்து சென்றுகொண்டிருந்த வாலிப ஜோடிக்கு இந்தப் பக்கம் இப்படி துயரங்கள் நிரம்பிய வாழ்க்கையைப் பற்றி அப்போது அக்கறையில்லை.
“முந்தாநேத்திக்கு வலிச்சுது. நேத்திக்கு வாக்கிங் போகலை. அம்ருதாஞ்சன் ஸ்ப்ரே பண்ணிண்டேன். வலியில்லை. ஆனா இன்னிக்கி காலையில வாக்கிங் போயிட்டு வந்தேன். மரண வலி” என்று காரில் போகும்போது சத்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
“வா... கீழ்ப்பாக்கம் போய்டலாம். வைஃபுக்கு மார்னிங் டூட்டி.. rheumatologyல தேன்மொழி மேடம் இருப்பாங்க... பார்த்துடலாம்..” என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வண்டியைவிடச் சொன்னார்.
சத்யா வைஃப் OTயில் இருந்தார்கள். தேன்மொழி மேடம் இருக்கும் திசையறிந்துகொண்டு நழுவினோம்.
“ஏன் சார் இன்னிக்கி வாக்கிங் போனீங்க? உங்களுக்கு பின் பக்கம் ரிப்ல அடிபட்டிருக்கு. இதுவே ரொம்ப அதிர்ஷ்டம். இன்னும் கொஞ்சம் தள்ளி பேக்போன்ல பட்டிருந்தா.... வலி குறைஞ்சா நடந்துடுவீங்களா?”
டாக்டர் பேசும்போது வாயைத் திறக்கப்படாது. முன்பெல்லாம் அதுக்காகவே தெர்மாமீட்டரைச் சொருகிவிடுவார்கள். இப்போது எல்லாம் டிஜிட்டல். கைமேலே வைத்து கடிகாரம் போல சூடு பார்த்துக்கொள்கிறார்கள்.
“அன்னன்னிக்கு வலியை அன்னன்னிக்கு தீர்த்துடணும். இன்னொரு நாளுக்கு கேரி ஓவர் பண்ணக்கூடாது.”
அன்னன்னிக்கு பண்ற பாவத்தை அன்னன்னிக்கு தீர்க்கிற வழியிருக்கா பார்க்கணும்னு மனசுக்குள்ள இருந்த “நியாயஸ்தன்” சம்பந்தமே இல்லாம விலுக்குன்னு முழுச்சிக்கிட்டான்.
“ஐஸ் ஒத்தடம் குடுங்க. மயோஸ்பாஸும் பான் ஃபார்ட்டியும் காலையிலையும் ராத்திரியும் ஒண்ணொன்னு போட்டுக்கோங்க. ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. அப்படியில்லைன்னா மூச்சுவிடும்போது கூட வலியெடுத்து ரொம்ப காம்ப்ளிகேட் ஆயிடும். பயந்துடுவீங்க.... ஓகேவா?”
”சரி டாக்டர். தேங்க்ஸ்” கனிவாகப் பேசிய தேன்மொழி டாக்டருக்கு நன்றி சொல்லி கிளம்பி வரும்போது....
மீண்டும் ஆட்டோவில் யாரோ ஒரு பாட்டி தன் துணைப்பாட்டியோடு இறங்கிக்கொண்டிருந்தார்கள். தலை சாய்ந்த ஒரு அம்மாவை இருவர் கைத்தாங்கலாக நடத்தி அழைத்துவந்து கொண்டிருந்தார்கள். கண்களிரண்டும் சோகத்தில் நனைய மார்ச்சுவரி பக்கத்திலிருந்து வந்த முதியவர் ஒருவர். பசியில் கிறுகிறுத்துப்போய் காகித டம்பளர் டீயை ஆட்டியாட்டி உறிஞ்சிய மூதாட்டி.. யாருக்காகவோ வேதனையை அனுபவித்து மரத்தடியில் சிறுவனின் கரம் பற்றி அமர்ந்திருக்கும் முண்டாசு கட்டிய ஆந்திரா பெரியவர்.. என்று தொடர் சோகங்களைப் பார்த்துக்கொண்டே ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் “உள்ள நுழையும் போது பார்த்த அந்த ஜோடி இப்போது எங்கேயிருக்கும்...” என்று தாவிய குரங்கு மனத்தோடு வாழ்தல் மிக மிக அரிது!
0 comments:
Post a Comment