”நீங்கள் ஹாயாக சயனித்து பாற்கடலில் தெப்பம் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.. பூலோகத்தில்... பரதக் கண்டத்தில்.... பூராப் பயலும் நாறிக்கொண்டிருக்கிறான்... கரன்ஸியை கலர் ஜெராக்ஸ் எடுத்து மார்க்கெட்டில் விடுகிறான்கள்... ” என்று புலம்பி தம்பூராவின் பிரம்பு அறுந்து போகும்படி மீட்டிக்கொண்டே வைகுண்டத்திற்குள் நுழைந்தார் நாரதர்.
”ஏனப்பா? என்னவாயிற்று?” கண்களில் கவலை மிதக்கக் கேட்டார் நாராயணன். அவருக்குப் படுக்கையான ஆதிசேஷன் இருமுறை நாக்கைத் துருத்தி நாரதரை வினோதமாகப் பார்த்தான்.
“சந்தெங்கிலும் ஏடியெம் வாசலில்... போலீஸ் காவல் காக்கும் வங்கிகளின் வாயிற்படி இடுக்குகளில்... என்று கிடந்து திண்டாடுகிறான்...சாவுறான்கள்..”
“வசவசவென்று நீட்டிமுழக்காமல் விஷயத்தைச் சொல்....”
“எல்லாம் கறுப்புப் பண விவகாரம் ஸ்வாமி.. “
”அதென்ன கறுப்புப் பணம் நாரதா? விளங்கவில்லையே... நீதான் திரிலோக சஞ்சாரியாயிற்றே... சரியாகச் சொல் பார்க்கலாம்..”
”உங்கள் காலடியில் ஒரு தேவி அமர்ந்து கால் அமுக்கி விடுகிறார்கள் அல்லவா? அவர்களிடமே கேளுங்களேன்.. அவர்கள் தானே சர்வசெல்வங்களுக்கும் அதிபதி....வெள்ளைக்கும் கார்மேக வண்ணனாகிய உம்மைப்போன்ற கறுப்புக்கும் வித்யாசம் தெரியும்”
”என் செல்ல ஸ்ரீ... அதென்ன கறுப்புப் பணம் டார்லிங்...”
“கணக்கில் காட்டாத பணம் கறுப்புப் பணம்” என்று ஷார்ட்டாக முடித்துக்கொண்டார் திருமகள். அறிதுயில் ஆளுக்குச் சொல்ல விருப்பமில்லை.
ஊஹும். திருமாலுக்குத் திருப்தியில்லை.
“கணக்கில் என்றால்? யார் கணக்கில்? குபேரனுடைய கணக்கிலா.. உன் கணக்கிலா?.. என் கணக்கிலா?... இல்லை காந்தி கணக்கிலா?” என்று சரமாரியாய்க் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
”இதோ இந்த நாரதனுக்கு மாசம் ஆயிரம் பொன் சம்பளமாகத் தருகிறீர்கள்... அதில் இருநூறு பொன்னை எடுத்து அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு, எண்ணூறுதான் பெற்றுக்கொண்டேன்..... என்று தேவலோக கஜானாக்காரர்களுக்கு கணக்குக் கொடுத்தால்.. அந்த இருநூறு கள்ளப்பணம்.. கறுப்புப் பணம்.”
“யார் கணக்குக் கொடுத்தால்.. கொடுக்கும் நானா... வாங்கும் அவனா”
“இரண்டு பேருமே... யார் செய்தாலும்... ஆயிரம் தருகிறேன் என்று கணக்கெழுதிவிட்டு.. எண்ணூறு கொடுத்துவிட்டு உம் மடியில் இருநூறை நீர் முடிந்து கொண்டாலும்.... அல்லது எண்ணூறுதான் பெருமாள் கொடுத்தார் என்று நாரதன் இருநூறை அழுத்தினாலும்...”
“ஓஹோ... கலகம் செய்வதோடு.. இப்போதெல்லாம் கறுப்புப் பணமும் செய்கிறானா நாரதன்?”
“ப்ரபோ.அபச்சாரம்.. அபச்சாரம்... உங்களுக்குப் புரியவைக்க தேவி கொடுத்த எக்ஸாம்பிள் அது... அஷ்டாக்ஷ்ரத்தை விட பெருஞ்செல்வம் எனக்கேது? ஓம் நமோ நாராயணா.. ” தசாவதார அந்தரத் தொங்கு கமலாக ராகம் இழுத்தார் நாரத்.
“நாரதா.. சீன் போடாதே... நிறுத்து...” நாரதனுக்கு ஏக கடுப்பு. "அடப்போய்யா... கிடக்கு..." என்பது போல தம்பூராவில் ஒரு ஸ்ட்ரம்மிங் கொடுத்தார்.
”தேவி.. கறுப்புப்பணம் என்ற ஒன்று எதற்கு?”
“பொருளீட்டும் அனைவரும் ஒரு பங்கை வரியாக ராஜாங்கம் செய்யும் சர்க்காருக்கு செலுத்த வேண்டும். அதைக்கொண்டு பொதுக்காரியங்கள், சர்வஜன க்ஷேமத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவார்கள்... அந்த வரியைக் கட்டாமல் தங்களது அதீத சுயதேவைக்காக ஏய்த்துக் கறுப்புப் பணம் சேர்க்கிறார்கள்”
”ஏன் வரி கட்ட மறுக்கவேண்டும்? நல்ல காரியங்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டியதுதானே? உரிய நேரத்தில் கணக்கு தீர்த்து அவர்களை நாம் பரமபதம் அழைக்கும்போது கையில் ஒன்றுமில்லாமல்தானே இங்கே வரவேண்டும்?”
இப்போது நாரதன் இடை மறித்தான்.
”ஆம் ஸ்வாமி. இருந்தாலும் பூலோகத்தில் ஜீவித்திருப்பதற்கு எதற்கெடுத்தால் மால் வெட்ட வேண்டும்.. அந்தச் செலவுக்கு தாராளமாக காசு வேண்டுமே... ”
“என்னதுதிது? என்னை வெட்டவேண்டுமா?” திடுமென உருவிவிட்டது போல எழுந்து உட்கார்ந்துகொண்டார் திருமால்.
“ஓஹோ.. தவறாகப் புரிந்து கொண்டீர்கள்... மால் வெட்டுதல் என்றால்.. டப்பு கொடுக்கவேண்டும்.. கில்மா தள்ளவேண்டும்.... என்றும் சொல்வார்கள்...”
நாரதர் "ஹெஹ்" என்று கனைப்பது போலச் சிரித்தார். வைகுண்டபதியின் திருக்கூட்டமும் அந்தச் சிரிப்பில் கலந்து ஐக்கியமானது. திருமால் சிரிமால் ஆனார்.
“டேய் நாரதா!! என்னை வைத்துக் காமடி பண்ணுகிறாயா? ஒரு வார்த்தை தெரியாதென்றால் ஒன்பது வார்த்தைகள் தெரியாதபடிக்கு பேசுகிறாய்...”
“பொருத்தருள வேண்டும் ப்ரபோ... உங்களது வக்காபுலரி ரொம்பவும் வீக்... சரி.. சொல்கிறேன்... கையூட்டு தரவேண்டும்.. அதாவது... எதாவது அரசாங்க அலுவலகம் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்..”
“எதற்கு?”
“உங்களுடன் ஒரே லொள்ளாகப் போச்சு...”
“குரைக்கிறேன் என்கிறாயா?”
“அடச்சே... இக்கால மொழிபுரியாமல்... ஃப்ரீயாகப் பேசக்கூட முடியாத இடமாக வைகுண்டம் ஆயிற்றே...”
“சரி சரி... முணுமுணுக்காதே.. மேலே சொல்.. நான் ஏன் அரசாங்க அலுவலகம் செல்ல வேண்டும்?”
“ட்ரைவிங் லைசன்ஸ்... வீடு ரிஜிஸ்ட்ரேஷன்.. பட்டா வாங்குதல்... திருமணம் பதிவு செய்தல்... ரேஷன் கார்டு புதுப்பித்தல்.... மெட்ரோ வாட்டர் கனெக்ஷன்... கழிவுநீர் இணைப்பு... மின்சார இணைப்பு... கட்டிட ப்ளான்...... ஜாதிச் சான்றிதழ்... வங்கிக் கடன்... அரசுப்பணி... அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பணி... சாலை போடும் காண்ட்ராக்ட்... சாக்கடை வெட்டும் காண்ட்ராக்ட்.. சாக்கடை வெட்டியதை மூடும் காண்ட்ராக்ட்.. ஸ்பீட் ப்ரேக்கருக்கு வரி வரியாக வெள்ளையடிக்கும் ஒப்பந்தம். மேம்பாலம் கட்டுதல்... ”
“ஸ்ப்பா... நிறுத்தப்பா.. கண்ணைக்கட்டுதே... போதும்... தேவி.. நாரதனுக்குக் குடிக்க தீர்த்தம் கொடு... ம்.. மெதுவாக.. மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலே சொல்லப்பா... எனக்கே கிறுகிறுவென்றிருக்கிறது... ”
நிமிட நேர நிசப்தம்.
“இப்படியாக நீங்கள் செல்லும் எல்லாவிடத்திலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டத் தொகையை விட எக்ஸ்ட்ராவாக ஒரு தொகை செலுத்த வேண்டும். அந்த தொகை செலுத்தினால்தான் காரியம் ஆகும்.. அதை அவர்கள் கணக்கில் காட்டாமல் “ஈ..ஈ...” என்று இளித்துக்கொண்டே பரிசாக ஏற்றுக்கொள்வார்கள்... ”
“இது அரசாங்க அலுவலகத்த்ல் மட்டுமா?”
“இல்லையில்லை.. எங்குமே... உங்களுக்கு தொழில் இலகுவில் முடியவேண்டுமென்றால்... பைசா தள்ள வேண்டும்... அதைக் கணக்கில் காட்டாமல் மறைத்துக்கொள்பவர்கள்.. அந்தப் பணத்தை உள்ளூர் வங்கியில் போட்டால் மாட்டிக்கொள்வார்கள்.. ஆகையால் படுக்கைக்குக் கீழே கரன்ஸியாகவேப் போட்டுக்கொண்டு தூக்கமில்லாமல் பிராணாவஸ்தைப்படுவார்கள்.......”
“கையூட்டைத் தடுத்தால் கறுப்புப்பணத்தை ஒழித்து விடலாமா?”
“அதெப்படி? வெளிநாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் தங்கம்...உள்நாட்டிலேயே அக்ஷய திருதியை போன்ற நாட்களில் நுகரப்படும் தங்கள்... கஞ்சா போன்ற லாஹிரி வஸ்துகள். இத்யாதி.. இத்யாதி...என்று கள்ளப்பணம் பண்ணுவதற்கு பல உபாயங்கள் உண்டு...”
“சரி... உள்ளூர் வங்கியில் போடாமல் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?”
“வங்கியில் சேமித்தால் கணக்குக் காட்ட வேண்டும்... கையில் வைத்துக்கொண்டால்.. அன்றாடச் செலவுகளாகத் தீர்த்து விடலாம்... அதுவே மூட்டை மூட்டையாக வைத்திருந்தால்.. ஹவாலாவில்... வெளிநாட்டுக்குக் கடத்தி.... ஸ்விஸ் வங்கியில் வரவு வைத்துவிடுவார்கள்...”
“ஓ... அதானா சங்கதி!! குபேரனுக்குக் கூட ஒரு தடவை கணக்கு அதிகமாக வந்ததாம்.. யாராவது ஸ்விஸ் வங்கிக்கு வழி தெரியாமல் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்களா?”
ஹா..ஹா.. என்று வைகுண்டமே சிரித்தது.
“இதிலென்ன சிரிப்பு.. குபரேனிடம் கணக்குவழக்குகளைச் சரிபார்க்கச் சொல்... அந்தக் கறுப்புப்பணம் இங்கே வேண்டாம்..”
“பயப்படாதீர்கள் ஸ்வாமி... ஐந்நூறு ஆயிரம் என்று இரண்டு வகையறாக்களை ஒழித்திருக்கிறார்கள்...கையிருப்பில் அந்த நோட்டுகள் இருந்தால் இரண்டரை லட்சம் வரை வங்கிக் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.. வரியெல்லாம் கிடையாது என்று சலுகைக் காட்டி தூண்டில் போடுகிறார்கள்...”
"லட்சியவாதிகள்.. சுத்தமானவர்கள்... யோக்கியதாம்சம் பொருந்தியவர்களுக்குக் கவலையில்லை.. இல்லையா?”
“அடப்போங்க நாராயணா... இரண்டரை லட்சம் என்பது இப்போது ஒரு ஜூஜூபி....”
“ஜூஜூபியா? அப்படியென்றால்... ”
“வேண்டாம் ட்ராக் மாறாதீர்கள். இது உங்களுக்கு ஸ்பெஷல் வேர்ட்ஸ் சொல்லிக்கொடுக்கும் வகுப்பல்ல... இந்த இரண்டரை லட்ச வரம்பை மீறாமல் தன்னிடமிருக்கும் கறுப்புப்பணத்தை எப்படியெல்லாம் வங்கியில் சேர்க்கிறார்கள் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டேன்...”
“எப்படியாம்?”
“தமக்கு நம்பகமானவர்களைத் தேர்ந்தெடுத்து... அவர்களிடம் தலா இரண்டரை லட்ச ரூபாய்களை வழக்கொழிக்கப்பட்ட ஐந்நூறு ஆயிரம் நோட்டுக்களைக் கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் போட்டுக்கொள்ளச் சொல்வார்கள்...”
“ம்.. பின்னர்..”
“அவர்களுடைய இந்த உதவிக்கு பரிசாக ஐம்பதினாயிரம் ரூபாய் வைத்துக்கொள்ளலாமாம்.. “
“சரி...”
“மீதமிருக்கும் இரண்டு லட்ச ரூபாயை செக்காகவோ... இணைய வழி மாற்றாகவோ... கொடுத்தவருக்கே அனுப்பி விடுவார்கள்... இப்படியாக கறுப்பெல்லாம் வெளுப்பாக்கலாமாம்...”
“அடப்பாவமே.. வேறு எதாவது வழி இருக்கிறதா?”
“ஏன் ப்ரபோ?”
“என்னிடம் ஒரு கட்டு ஐந்நூறு.. இரண்டு கட்டுகள் ஆயிரமும் இருக்கிறது.. நேற்றுதான் திருப்பதி உண்டியலில் இருந்து கைச்செலவுக்காக எடுத்துக்கொண்டேன்... உனக்கு பூலோகத்தில் அக்கௌண்ட் இருக்கிறதா நாரதா?”
”ஐயகோ... இதை யாதெனச் சொல்வேன்.....” என்று பாரதியின் வரிகளை உரக்கச் சொல்லி தலைதெறிக்க ஓடிப்போனான் நாரதன்.
0 comments:
Post a Comment