Saturday, December 17, 2016

கணபதி முனி - பாகம் 48 : சக்தி மந்திரங்களும் ரிக் வேத ஆராய்ச்சியும்

...குடிசை பற்றிக்கொண்டு எரிய.... நாற்புறமும் தீ சூழ்ந்திருக்க.. கணபதி முனியின் உபன்யாசம் கேட்க வந்தவர்கள் பீதியோடு புகை நடுவில்..கலவரமாக இருந்தார்கள். ஆனால் மத்தியில் ரவையளவும் சலனமின்றி அமர்ந்திருந்தார் கணபதி முனி. “வனேம பூர்விரர்யோ மனீஷ அக்னி: சுஸோகோ விஸ்வானிஸ்யா” என்கிற ரிக் வேத அக்னி மந்திரத்தை ராகமாக சில முறைகள் பாடினார். 

அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் அப்போது திடீரென்று ஒரு சுழற் காற்று அடித்தது. கூரைமேல் பற்றிக்கொண்டு எரிந்த அந்த வைக்கோல் பிரிகளை அலேக்காகத் தூக்கி வெகுதூரத்திற்கு விசிறி எறிந்தது. ஒரு பெரும் விபத்து அங்கே தவிர்க்கப்பட்டது. கணபதி முனியின் மந்திர சக்தியைக் கண்டு அனைவருக்கும் வியப்பாக இருந்தது. இதுபோன்ற அற்புத பலனளிக்கும் சக்திமிகு மந்திரங்களை அவரிடம் கற்றுக்கொள்ள பலர் ப்ரியப்பட்டார்கள்.

வருஷம் 1930. நாயனாவின் தம்பி சிவராம சாஸ்திரி பிப்ரவரி ஆறாம் தேதி குலுவிக்கு வந்தார். நாயனா கடுகடுவென்று "யாத்திரையை முடித்துக் கொள்ள இங்கே வந்தாயா?" என்று கேட்டார். வீடு வாசல் துறந்து தன்னைப் போல தன் தம்பியும் இப்படி க்ஷேத்திராடனம் வந்தது பற்றி அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம். மறுநாள் நெஞ்சு வலி என்று மாரைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தவர் மேலோகம் சென்று விட்டார். தபஸ்வியான கணபதி முனி கேட்ட கேள்வியின் உள்ளர்த்தம் சுற்றி நின்றவர்களுக்கு அப்போது புரிந்தது. 

நாயனாவும் அவரது மகன் மஹாதேவனும் இன்னும் சிலரோடு காரில் சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு திடீர்த் திருப்பத்தில் கார் கட்டுப்பாடிழந்து பல்டி அடித்தது. மஹாதேவனைத் தவிர்த்து யாருக்கும் ஒன்றுமில்லை. மஹாதேவனுக்கு கை முறிந்தது. மருத்துவமனையில் சேர்க்கும்படி டாக்டர்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால் நாயனா ”அஸ்தி சந்தான மந்த்ரா”வை உச்சாடனம் செய்தார். அதன் பலன் உடனே தெரிந்தது. மருத்துவர்கள் அதிசயிக்கும்விதமாக குணமடைவதில் முன்னேற்றம் தெரிந்தது.

மஹாதேவனுக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனியே வீடு திரும்புவதற்கு மனமில்லை. நாயனாவும் கலுவராயிக்குப் புறப்பட்டுச் சென்றார். இம்முறை நாயனா திருவண்ணாமலை சென்று தனது குரு ரமணரைச் சந்தித்தார். கணபதி முனியின் இடையறாத தபங்களைக் கேள்விப்பட்டு ஸ்ரீரமணர் அவரை ஆசீர்வதித்துப் பாராட்டினார்.

குலுவி திரும்பிய கணபதி முனி இடைவெளியில்லாமல் தவமியற்றினார். பக்தி சிரத்தையாக சீதாராமன் அவருக்குப் பணிவிடைகள் செய்தார்.  நாயனா கணபதியின் அவதாரம் என்றே வணங்கினார்.

**

1931 ஃபிப்ரவரி. தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்ரா என்பவர் நாயனாவையும் அவரது நண்பர்களில் கற்றுக் கரைகண்டோரையும் சிரிஸிக்கு அழைத்தார். அனைவருடனும் உரையாடி மகிழ வேண்டும் என்பது அவரது விருப்பம். ஸ்நேகிதர்களுள் வக்கீல் புண்டரீகராயரும் உண்டு. அவர் உலகம் சுற்றியவர். ரோமன் கத்தோலிக்கர்களின் குருமாரான போப்பைச் சந்தித்து உரையாடியவர். அவரது மகன் சுந்தர பண்டிட். அவரும் வக்கீல். அவரும் விஸ்வாமித்ராவும் பள்ளித் தோழர்கள். நாயனாவைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னரே அறிந்துகொண்டவர். நற்ண்புகளை உடையவர். அவரது தம்பி மாதவா பண்டிட்டும் இந்த கூட்டத்தில் உடனிருந்தார்.

புண்டரீகராயர் சிரிஸியின் புறநகர்ப் பகுதியில் ஒரு கட்டிடம் அமைத்திருந்தார். (ஆனந்த ஆஷ்ரமம்). தனது வயோதிகக் காலத்தில் அமைதியாகவும் பூஜை புனஸ்காரம் என்று அங்கு கழிக்க எண்ணினார். ஆனாலும் உடம்பு ஒத்துழைக்காத காரணத்தால் வீட்டிலேயே இருந்தார்.

"நீங்கள் ஆனந்த ஆஷ்ரமத்தில் தங்குவதாக இருந்தால் அதுதான் உண்மையான பேரனாந்தமாக இருக்கும்.." என்று நாயனாவிடம் வேண்டினார் ராயர். 

" நீங்கள் அங்கு தங்கினால் அது எங்கள் பாக்யம்" என்று விஸ்வாமித்ராவும் ராயரின் வேண்டுதலுக்கு வழிமொழிந்தார். 

சீதாராமா பட்தி கேட்டுக்கொள்ள அனைவரும் முயற்சியினாலும் நாயனா ஆனந்த ஆஷ்ரமத்தில் தங்கினார். பலருக்கு மந்திர உபதேசம் செய்தார். ஆஷ்ரமத்திற்கு விஜயம் செய்வோருக்கு ரமணரின் உபதேசங்களையும் நற்செய்திகளையும் எளிய முறையில் விளக்கினார். கணபதி முனியின் முன்னால் உட்கார்ந்து ஜபதபங்கள் செய்வதையும் தியானமியற்றுவதையும் பெரும்பேறாகக் கருதினர்.  ஆனந்த ஆஷ்ரம் கடவுள் வாழும் ஆஷ்ரமாக பொலிந்தது.

கண்பதிமுனியின் பெரும்பாலன நேரங்கள் தவத்தில் கழிந்தது. ஆனந்த ஆஷ்ரமவாசிகளுக்கு இது அதிசய பல அனுபங்களைத் தந்தது. "கபால பேதனா சித்தி" என்னும் சித்து வேலையால் தியானமியற்றும் போது உடம்பு மட்டும் தன்னிச்சையாக மிதப்பதைக் கண்டு வாய் பிளந்தனர். 

ராமச்சந்திர பட் ஆனந்த ஆஷ்ரமத்திற்கு அடிக்கடி வரும் பக்தர். சம்ஸ்க்ருதம் தெரியாது. இருந்தாலும் நாயனாவின் குரலை மட்டும் கேட்பதற்காக அனுதினமும் ஆஷ்ரமம் வந்தார். யாவரும் அதிசயத்தக்க வகையில் சில நாட்களில் அவர் சம்ஸ்க்ருதம் பேசி எழுத ஆரம்பித்துவிட்டார். 

இன்னும் சிறிது நாட்கள் கழித்து திருவண்ணாமலையிலிருந்து விஸ்வனாதன் வந்து கணபதிமுனியின் காலடியில் வந்து சேர்ந்தார். பகவான் ரமணரின் "உள்ளது நாற்பது" வின் சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பை நாயனா திருத்துவதற்காகக் கொண்டு வந்தார். புதிதாக மொழிபெயர்க்க வேண்டும் நினைத்துக்கொண்டிருந்த போது புதுச்சேரியிலிருந்து கபாலியும் அவரது மனைவியும் ஆனந்த ஆஷ்ரமத்திற்கு வந்தனர். அடுத்தது மஹாதேவர். பின்னர் சீதாராம பட்தியின் பெண் நாகவேனியும் கணபதி முனிக்கு சேவை செய்வதில் சேர்ந்துகொண்டார். குலுவியிலிருந்து சீதாராமனும் அவரது மனைவியும் அடிக்கடி ஆஷ்ரமத்திற்கு வந்து சென்றனர். இந்த கோஷ்டி கணபதி முனிக்கு மிகவும் சந்தோஷம் அளித்தது.

பகவான் ஸ்ரீ ரமணரின் "உள்ளது நாற்பது" (இருத்தலின் நாற்பது) படைப்பை சம்ஸ்க்ருத ஸ்லோகங்களாக்கும் பணியில் இறங்கினார். அதன் சாராம்ஸத்தை விஸ்வனாதனுக்கும் கபாலிக்கும் அருளிச்செய்தார். மார்ச் பதினான்காம் தேதி மொழிபெயர்ப்பு பூர்த்தியாகி அதற்கு "சத் தர்ஸனம்" என்று பெயரிட்டார். மஹாதேவா அதன் தெலுங்கு மொழிபெயர்ப்போடு திருவண்ணாமலைக்கு திரும்பினார். 

மொழிபெயர்ப்புக்குப் பின்னர் நாயனா பல விஷயங்களில் தெளிவடைந்தார். உலகத்தில் உலவும் பல வேற்றுமைகளில் இருக்கும் ஒரே உண்மையை உணர்ந்தார். இத்தருணத்தில் பகவான் ஸ்ரீ ரமணரின் அருள் வேண்டி வாரம் ஒரு லிகிதம் அவருக்கு எழுதத் தலைப்பட்டார்.

ஜூன் மாதத்தில் கபாலி சத் தரிசனத்தின் சம்ஸ்க்ருத பொழிப்புரையை பூர்த்தி செய்தார். இதற்கிடையில் நாயனா "ப்ரசண்ட சண்டி திரிசதி" என்னும் முன்னூறு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை ப்ரசன்ட சண்டியைப் போற்றி எழுதி முடித்திருந்தார்.

தேவவிரதனின் மகன் ஸோமாவின் உபனயனம் கோகர்ணத்தில் நடைபெறுவதாக அழைப்பு வந்து அங்கு சென்று ஆசீர்வாதம் செய்து விட்டு வந்தார். ஜூலை ஒன்றாம் தேதி சத் தர்ஸனத்தில் சம்ஸ்க்ருத பொழிப்புரையை விஸ்வனாதன் மற்றும் ரெங்கா ராவ் மூலமாக பகவான் ஸ்ரீ ரமணருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் கபாலி ஸ்ரீ அரவிந்த ஆஷ்ரமத்திற்கு சென்றார். சீதாராம பட்தி சகர்சாரிபா என்ற அருவிக்கு நாயனாவை அழைத்துச்சென்றார். கணபதி முனி எப்போதும் தனது சிஷ்யர்கள் ஸ்வயமாக சிந்திக்க அனுமதித்தார். தன்னுடைய அன்பினாலும் அரவணைப்பினாலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் குருபீடத்தில் இருந்தார். இதனால் தவறு செய்யும் சிஷ்யர்கள் கூட தாமாகவே தங்களைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை அளித்தார்.


**

பகவான் ரமணருக்கு நாயனா எழுதிய கடிதங்களில் அவரது ஆன்மிக புரிதல்களின் பல நிலைகளை எடுத்துக்காட்டியது. ரமணர் அதை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து பொக்கிஷமென மதித்தார். அனைத்துக் கடிதங்களும் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டவை.

1931ம் வருடம் சீதாராம பட்தியின் வேண்டுகோளுக்கு இணங்க குலுவிக்கு திரும்ப சம்மதித்தார். ரிக் வேதத்தை திரும்பவும் படித்து அதில் மஹாபாரதம் வரும் இடங்களை குறித்துக்கொள்ள விரும்பினார். 1933ல் மஹாபாரதத்தில் இடம்பெற்ற நாயகர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை தொகுத்திருந்தார். அதற்கு "பாரத சரித்ர பரீக்ஷா" என்று பெயரிட்டார். அவரது சிஷ்யர்கள் அதை மஹாபாரத சங்ரஹா (அ) விமர்ஸா (அ) மீமாம்ஸா என்றழைத்தார்கள்.

இதில் மஹாபாரதத்தின் நாயகர்களை, கிருஷ்ணன் உட்பட, மந்திர உபாசகர்களாக, மந்திரங்களின் முனிவர்களாக ( மந்த்ர த்ருஷ்டா) உருவாக்கி, தவங்களின் மூலம் பலமடைந்து, நாட்டின் நலனுக்காக கௌரவர்களை எதிர்த்து போரிட்டதாக காட்சிப்படுத்தியிருந்தார். 

தொடரும்..

#கணபதி_முனி
#காவ்ய_கண்ட_கணபதி_முனி_48

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails