Thursday, December 15, 2016

கணபதி முனி - பாகம் 47 : குலுவி அற்புதங்கள்

அட்வகேட் பி.வி. நரசிம்ம ஸ்வாமி பகவான் ஸ்ரீரமண சரிதம் எழுதுவதற்கு விரும்பினார். பிரதான சிஷ்யரான நாயனாவிடம் விபரங்கள் சேகரிக்க அமர்ந்தார். நாயனா ரமணரின் வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்துக்கொண்டார் நரசிம்ம ஸ்வாமி. பின்னர் பி.வி ஸ்வாமி அவரது வாழ்க்கைப் பற்றியும் அனுபவங்களையும் பற்றிக் கேட்ட போது மகரிஷியும் பதிலுரைத்தார்.

இந்தத் தகவல்களைக் கொண்டு பி.வி நரசிம்மஸ்வாமி ஆங்கிலத்தில் எழுதினார். இதை மூலமாகக் கொண்டு ஸ்ரீகபாலி சாஸ்திரி “வசிஷ்ட வைபவம்” என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதினார். இந்த மூலத்தைக் கட்டிக் காத்தவர் விஸ்வநாதர். ரமணரின் வாழ்க்கைச் சரிதத்தை “Self Realisation" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நரசிம்மஸ்வாமி எழுதியதை ஆஸ்ரம நிர்வாகம் அச்சிட்டது.
ரமணர் தனது வழிகாட்டுதல்களை அவ்வப்போது வெண்பாவாக எழுதினார். அதை முருகனாரிடம் கொடுத்திருந்தார். அது மொத்தம் நாற்பது சேர்ந்த போது “உள்ளது நாற்பது” என்ற தலைப்பில் தமிழில் வெளியிட்டார்கள். கணபதி முனி அந்த நாற்பதையும் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்து “சத்தர்ஸனம்” என்ற தலைப்பில் புத்தகமாக்கினார்.
**
அக்னி மலையான திருவண்ணாமலையின் கொளுத்தும் வெய்யில் நாயனாவை மிகவும் படுத்தியது. குகையில் தங்கியிருந்தாலும் அவருக்கு குளிர்ந்த காற்று தேவைப்பட்டது. எதிர்வந்த மார்ச் மாதம் கோகர்னத்திலிருந்து இரு சிஷ்யர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்கள். நாயனா படும் கஷ்டத்தைப் பார்த்து
“ஸ்வாமி தாங்கள் எங்களுடன் கோகர்ணத்தில் வந்து தங்கலாமே! அங்கும் வெப்ப சீதோஷ்ணமிருந்தால் நீங்கள் சிரிசியில் ஓய்வெடுக்கலாம்.” என்று பணித்தார்கள்.
நாயனாவுக்கு தேவவிரதனைப் பார்க்கும் ஆவல் வந்தது. கோகர்ணத்தில் நிச்சயம் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து வந்த கணபதி முனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேவவிரதன் தபஸுக்காக வெளியூர் சென்றிருந்தார். தேவவிரதனின் மனைவி ஷ்ரத்தாதேவி நாயனாவிற்கு பணிவிடைகள் செய்து பார்த்துக்கொண்டார். தபஸில் இருக்கும் தேவவிரதனைப் பாதியில் கூப்பிடவும் முனிக்கு மனசு இல்லை. வழக்கத்தில்லாமல் கோகர்ணமும் கொதித்தது.
தேவவிரதனின் தம்பி சீதாராம பாரதி சிரிசிக்கு அருகேயிருக்கும் குலுவியில் இருந்தார். அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். நாயனாவின் கண்களும் ரத்தமும் உஷ்ணத்தில் உறைந்திருந்தது. தனது மருத்துவத்தினால் அதை சொஸ்தப்படுத்தினார். தோப்பும் நிலமுமாக ஜமீந்தார் போல குலுவேயில் வாழ்ந்தார் சீதாராம பாரதி. தேவவிரதனின் வழிகாட்டுதலின்படி நாயனாவைக் குளுகுளு குலுவியிற்கு அழைத்துச்சென்றார் சீதாராம பாரதி.
குலுவே செல்லும் வழியில் ஷாமலி நதி தீரத்தின் கரையிலிருக்கும் சங்கரமடத்தில் ஓய்வெடுத்தார். இந்தப் புராதன பீடத்தின் பெயர் “லக்ஷ்மி நரசிம்ம சந்தரமௌளீஸ்வர பாதபீடம்”. இது விஸ்வானந்தா சரஸ்வதி ஸ்வாமி என்கிற மகாத்மாவினால் ஸ்தாபிக்கப்பட்டது. சொண்டஸ்வரனவல்லி என்ற இடத்தின் ஜமீந்தார் இந்தப் பீடத்தின் போஷகராக இருந்தார். இந்தப் பீடத்தின் தற்போதைய மடாதிபதி சர்வயஞ்யேந்திர சரஸ்வதி கணபதிமுனியை பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்றார். இருவரும் நிறைய சத்விஷயங்களைப் பேசினார்கள். பேச்சோடு பேச்சாக சர்வயஞ்யேந்திர சரஸ்வதி பீடம் மிகவும் மோசமான நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது என்று கூறினார்.
“சரஸ்வதிகள் குடியிருக்கும் இடத்தில் தரித்ரமா? ஏன்?” என்று வினவினார் கணபதி முனி.
“இந்த மடத்தைப் போற்றிப் பாதுகாத்துப் பொருளுதவிகள் அளித்து ரக்ஷித்து வந்த ஜமீந்தார் குடும்பத்தில் சொத்துத் தகராறு. ஒருவரும் தர்மம் செய்ய முன் வரவில்லை.” என்று வருத்தமுற்றார் மடாதிபதி.
அந்தப் பீடத்தின் பிரதானக் கடவுளை மையமாக வைத்து ஒரு ஸ்லோகம் எழுதி அவர்கள் கையில் கொடுத்துப் பாராயணம் செய்யச் சொன்னார். ஸ்வாமி ஸ்ரீ சர்வயஞ்யேந்திர சரஸ்வதிக்கு கொஞ்ச நாட்களிலேயே ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு திசைகளிலிருந்தும் சடசடவென்று உதவிகள் குவிய ஆரம்பித்து குறுகிய நாட்களில் மடம் நிமிர்ந்தது.
அங்கிருந்து கிளம்பி குலுவேவை அடைந்தார்கள். ஊர் எல்லையில் ஐம்பது பண்டிதர்கள் பூரணகும்பத்தோடு சாமகானம் ஓதி வரவேற்றார்கள். ஊர்வலமாக அவரைப் பின் தொடர்ந்து சீதாராமன் வீடு வரை வந்தார்கள். அனைவருக்கும் கணபதி முனியின் ஆன்மிக தேர்ச்சியும் அறிவின் முதிர்ச்சியும் தெரியும். அவரை எதிர்கொண்டு அழைக்க வந்தவர்களில் ஒருவர் சிரிசி தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்திரர்.
கும்தா பாடசாலையில் பயின்ற போது கணபதி முனி ஆற்றிய உரையில் ஈர்க்கப்பட்டவர் விஸ்வாமித்திரர். அவர் சீதாராமனுடன் கோகர்ணத்தில் கணபதி முனிக்கு அறிமுகமானவர்.
குலுவியின் தட்பவெட்பம் தியானத்திற்கு ஏற்றது. அமைதியும் குளுமையும் அம்மண்ணுக்கு இதம் சேர்த்தது. எப்பவாவது சிலர் ஆசிவாங்கவும் தீக்ஷைக்காகவும் வந்தார்கள். மற்றபடி துளிக்கூட இம்சையில்லாத சூழ்நிலை.
ஒருநாள் கணேச பட் என்பவர் நாயனாவின் அருள் வேண்டி ஒரு விசித்திரமான வழக்கோடு வந்தார். பட்டின் மனைவி பெயர் அகல்யா. மிகவும் நல்ல பெண். அடக்கமானவர். பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும் நிரம்பியவர். திருமணமாகி ஆறுமாதங்களுக்கு பிரச்சனை எதுவுமில்லை. வாழ்க்கை சிறப்பாக ஓடியது.
”ஸ்வாமி... மந்திரங்களிலும் மருந்துகளிலும் குணப்படுத்த முடியாத ஒரு விசித்திரமான நோயில் இப்போது அகல்யா கஷ்டப்படுகிறாள். பேசிக்கொண்டிருக்கும் போதே அடிக்கடி ஆழ் மௌனத்தில் மூழ்கி விடுவாள். அப்புறம் எதையோ பறிகொடுத்தார்ப்போல மோட்டுவளையை வெறித்துப்பார்ப்பாள். இதையெல்லாம் விட கொடுமையான விஷயம் என்னவென்றால் தனது ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு ஒளிந்து கொள்ள இடம் தேடுகிறாள்....” அவரது குரல் கம்ம கணபதி முனியிடம் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
வீட்டுக்கு வெளியே இருக்கும் புல் தரையில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பட்டின் மனைவி இல்லத்தின் முன் அறையில் இருந்தார். நாயனா எழுந்து விடுவிடுவென்று சென்று அந்த அறைவாசலில் நின்று கொண்டார். கதவைத் தட்டி....
“அகல்யா... ஆடையுடன் வெளியில் வாம்மா...” என்று அழைத்தார். அந்த நேரத்திலிருந்து அகல்யாவுக்கு நல்ல நேரம். அவரைப் பிடித்திருந்த மாய வியாதி நீங்கி நலமுடன் நடமாட ஆரம்பித்தார். பின்னர் அவரது கணவர் பட்டிற்கு டைஃபாய்ட் ஜுரம் வந்தது. அகல்யா முனியிடம் உதவிக்கு ஓடினார்.
“இந்தாம்மா.. இது இந்திராணி சப்தசதி... இதை மனப்பூர்வமான நம்பிக்கையோடு ஜெபியுங்கள்... எல்லாம் குணமாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்தார்.
கணவர் முன் அமர்ந்து அகல்யா இதைப் பாடினார். கணேச பட்டின் ஜுரம் உடனே வந்த சுவடு தெரியாமல் விலகியது. நாயனாவின் வாக்பலிதம். அவரின் அருகாமை தந்த சிகிச்சை.
மற்றொரு நாள் ஒரு வைக்கோல் வேய்ந்த குடிசை வீட்டில் சிலர் கணபதி முனியின் உபன்யாசம் கேட்க குழுமினார்கள். உள்ளே நடந்துகொண்டிருக்கும் போது ஒரு வைக்கோல் பிரி தீப்பிடித்துக்கொண்டது. பின்னர் வீசி அடித்தக் காற்றில் எல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தது. அனைவரும் திகுதிகுவென்று பற்றிக்கொண்ட தீயின் பிடியில் இருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் பீதியில் அனைவரும் உறைந்திருக்க... கணபதி முனி.....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails