மாநாடு பண்டிதர்களால் நிரம்பியிருந்தது. வசிஷ்ட கணபதி முனியையும் மாளவியாவையும் பார்த்த பண்டிதர்களுக்கு ஆச்சரியம். இக்கொள்கைக்கு எதிரான இருவரும் இந்த மா நாட்டுப் பந்தலில் அமர்ந்திருப்பது குழப்பமாக இருந்தது. ஆனால் இருவரையும் வெளியேறச் சொல்லவும் எவர்க்கும் தைரியம் இல்லை. இவர்களை எப்படி சுமூகமாக அனுப்பவது என்று ஏற்பாட்டாளர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் வேளையில் இருவரும் நெடு நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் சந்தோஷமாக அளவளாவிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களின் தவிப்பைப் புரிந்துகொண்ட இருவரும் மாநாட்டிலிருந்து அமைதியாக வெளியே வந்தார்கள்.
பின்னர் மாளவியா ஹிந்து ஹை ஸ்கூலில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார். முக்கியஸ்தர்கள் சிலரையும் அந்த வர்ணாஷ்ரம பண்டிதர்களையும் மேற்படி கூட்டத்திற்கு அழைத்தார். மாளவியாதான் தலைமை தாங்கினார். கணபதி முனி தீண்டாமை விரும்பத்தாக ஒன்று என்பதைப் பற்றி விஸ்தாரமாக பேசினார். நன்றாக நடந்தது.
ஆனால் கணபதி முனி வர்ணாஸ்ரம பண்டிதர்கள் திருந்த மாட்டார்கள் என்றும் இது கால விரயமே என்றும் நொந்துகொண்டார். இவர்களை சீர்திருத்த நினைப்பது வெட்டிச் செயல். காலமே இவர்களது காரணமற்ற போக்கை மாற்ற வேண்டும் என்று முடித்துக்கொண்டார்.
இந்திராணி சப்தஸதி என்று தானெழுதிய நூலை திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பகவான் ஸ்ரீரமணர் உபதேச சாரம் என்ற தனது நூலை சம்ஸ்க்ருதத்தில் மொழிமாற்றம் செய்த பிரதியொன்றை கணபதி முனிக்கு அனுப்பி வைத்தார். சுருக்நறுக்கென்று கச்சிதமாகவும், எளிமையாகவும், எளிதில் புரியும்படியாவும் கவித்துவமான அந்த ஆக்கத்தைப் பார்த்து ஸ்ரீரமணரின் ஸ்லோகங்களில் பூரித்துப்போனார்.
நாயனா அன்று மாலையே உபதேச சாரத்திற்கு உரையெழுதி ஸ்ரீரமணரின் காலடியில் சமர்ப்பித்தார்.
சுதான்வா தனது வக்கீல் தொழிலை விட்டு பாண்டிச்சேரியில் குடியேறியிருந்தார். ஸ்ரீ அரவிந்தர் நாயனாவைப் பார்க்க விரும்புவதாக செய்தி அனுப்பினார். 1928ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் புதுச்சேரிக்கு விஜயம் செய்வதாக கணபதி பதில் எழுதினார்.
**
புதுச்சேரியில் சுதான்வா இல்லத்தில் நாயனா தங்கியிருந்தார். ஆகஸ்ட்டு பதினைந்து ஸ்ரீ அரவிந்த ஜெயந்தி. பல்வேறு இடங்களிலிருந்து அதில் பங்குகொள்வதற்காக அவரது சீடர்களும் பக்தர்களும் புதுச்சேரியில் குவிந்த வண்ணம் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்னர் நாயனாவுக்கு ஸ்ரீ அரவிந்தர் நடத்தி வந்த ”ஆர்யா” என்கிற சஞ்சிகையைப் படிக்கும்படி நேர்ந்தது. அதைப் படித்ததிலிருந்து அவர்மீது ஒரு தோழமை உணர்வு மேலோங்கியது. அவரைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.
எதிரெதிரே இருவரும் வெறுமனே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். பேச்சுவார்த்தை எதுவுமில்லை. மௌனம். அமைதி ததும்பும் இருவருடைய முகத்திலும் ஞானதீபம் சுடர்விட்டது. எதுவும் பேசாமலேயே எழுந்த நாயனா ஸ்ரீஅன்னையையும் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்கு மூலகாரணம் ஒன்று இருந்தது. சில காலங்களுக்கு முன்னர் ஸ்ரீஅரவிந்தரைத் தரிசித்து ஆசி பெற்ற சுதான்வா நாயனாவின் உமா சகஸ்ரத்தின் கையெழுத்துப் பிரதியை பரிசளித்திருந்தார். அதைப் படித்துப் பார்த்த ஸ்ரீஅரவிந்தர் “சுதான்வா! இதை எழுதியவரை நான் பார்க்கவேண்டுமே!!” என்று தனது ஆவலைத் தெரிவித்திருந்தார். இதுவே இந்த சந்திப்பின் அடிநாதம்.
கணபதி முனி ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீஅன்னையையும் சந்தித்து மரியாதை செலுத்தினார். சுதான்வாவும் கணபதிமுனியும் ஸ்ரீஅன்னை எதிரில் அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீஅன்னை புன்னகையுடன் சுதான்வாவை நோக்கினார்.
“சுதான்வா... கணபதியின் வருகையினால் அனைத்து தீய சக்திகளும் ஓடிவிட்டது” இந்த வார்த்தைகளைக் கேட்ட சுதான்வாவுக்கு பேராச்சரியம். ஸ்ரீஅரவிந்தரைச் சுற்றியிருக்கும் ஞானஒளி பற்றி கணபதி முனி கூறியதையைப் போலவே ஸ்ரீஅன்னையும் நாயனாவைச் சுற்றியிருக்கும் ஞானச்சுடர் பற்றிக் குறிப்பிட்டார்.
அடுத்த நாள் ஸ்ரீஅன்னை கணபதி முனியைக் கூட்டு தியானத்திற்கு அழைத்தார். ஸ்ரீஅரவிந்தரை தரிசிக்கும் போது ஸ்ரீஅன்னையிடம் நேரம் செலவிடமுடியாததால் உடனே ஒத்துக்கொண்டார். ஸ்ரீஅன்னையின் பக்தர் ஒருவர் கணபதி முனியை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு இருக்கைகள் எதிரெதிராக இருந்தன. ஒன்று ஸ்ரீஅன்னைக்கு எதிரில் இன்னொன்று நாயனாவுக்கு. இருவரும் நாற்பத்தைந்து நிமிடங்கள் தியானத்திலிருந்தனர்.
ஸ்ரீஅன்னை கண்களை மூடி கையிரண்டையும் அகல விரித்து தியானித்தார். ஆனால் கணபதி முனி கண்களைத் திறந்து கொண்டே அசையாது அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். ஸ்ரீஅன்னைக்கு அளவில்லாத ஆச்சரியம்.
“இவரே சத்தியமான யோகி. தியானிக்க ஆரம்பித்த சில கணங்களிலேயே விழி திறந்து அகத்தில் நுழைந்துவிட்டார். இதுவரையில் இதுபோன்ற ஆன்மிக வித்தையில் ஈடுபடும் ஒருவரை நான் பார்த்ததில்லை. நாற்பத்தைந்து நிமிடங்களை இலகுவாக தியானத்தில் மூழ்கிக் கடந்தார்.”
என்ற ஸ்ரீஅன்னையின் பாராட்டுதல்களோடு ஒரு மாதம் புதுச்சேரியில் தங்கியிருந்தார். அவருடன் சுதான்வா, அதாம், கபாலி மற்றும் கோதண்டராமன் ஆகியோரும் அவருடன் இருந்தார்கள். கோதண்டராமனின் வேண்டுதலுக்கு இணங்க ஸ்ரீஅரவிந்தரைப் போற்றி நூற்றியெட்டு சூத்திரங்கள் அடங்கிய “தத்வனுசாஸனம்” எழுதினார்.
திருவண்ணாமலைக்கு நாயனா கிளம்பிய தினத்தன்று ஸ்ரீஅன்னை “ஸ்ரீஅரவிந்தரைச் சந்திப்பதற்கு தங்களுக்கு எதுவும் அனுமதி தேவையில்லை. தங்கள் விருப்பப்படி இங்கே வரலாம்” என்று அன்புக் கட்டளையிட்டார்.
**
சிஷ்யர்களுக்கு சிரமமாக இருந்ததினால் மாமரக் குகையிலிருப்பதை தவிர்த்தார் கணபதி முனி. ரிக் வேதத்திலிருந்து இந்திரனின் சகஸ்ரநாமாக்களைத் தேர்ந்தெடுத்து நூற்றியெட்டு ஸ்லோகங்களில் பொதிந்து தந்தருளினார். அடைமொழிகளில்லாமல் எழுதப்பட்ட இந்த ஸ்லோகங்களில் கணபதி முனியின் சம்ஸ்க்ருத இலக்கண அறிவும் இலக்கிய செழிப்பும் காணப்பட்டது. இது “இந்திர” எறு ஆரம்பித்து “ஸ்வாராட்” என்று பூர்த்தியாயிற்று.
பகவான் ஸ்ரீரமணர் இதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார். “அசக்ரய ஸ்வதயா வர்த்தமானா, ஆநீலா ஸுபர்னா, கிஜாஹ்...” போன்ற நாமங்களுக்க்கு அவருடைய சிஷ்யர்கள் அளித்த விளக்கங்களில் மகிழ்ந்தார்.
இவ்வேளையில் அதாமிற்கு ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் பிறந்தது. நாயனாவிடம் பரிந்துரைச் சீட்டு கேட்டார். ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில் நிரந்தரமாகச் சேர்வது எளிதல்ல. ஆனால் கணபதியின் பரிந்துரைச் சீட்டிற்கு மதிப்பு அதிகம் இருந்தது. அதாம் ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
சேலத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் பி.வி நரசிம்ம சாஸ்திரி திருவண்ணாமலைக்கு ஸ்ரீரமணரின் வாழ்க்கைச் சரித்திரம் எழுதும் நோக்கத்தோடு வந்திறங்கினார். ஸ்ரீரமணரின் வாழ்க்கைச் சம்பவங்களை யாரிடம் கேட்பது? பிரதான சீடர்களில் ஒருவர் கணபதி முனி. அவரிடம்.....
தொடரும்....
1 comments:
தொடர்கிறேன் அண்ணா...
Post a Comment