ட்ரைவர் புகழ்பாடி ஒத்தாசை செய்யும் ஓட்டுனராழ்வர்களின் மகாத்மியங்களைப் பற்றிச் சென்ற திடீர்க்_கதையில் பார்த்தோம். இப்போது நடத்துன நாயன்மார்ப் புராணம் கேட்போம். இந்த இரு ஜாதியினரையும் ஓட்டுன-நடத்துன வழித்துணைகள் என்று சென்ற முறை வகைப்படுத்திக் குறிப்பிட்டிருந்தேன்.
"படியில நிக்காத.. உள்ற ஏறு..." என்று முன்னாலிலிருந்து குரலும் "போலாம் ரை..." என்று பின்னால் வேறொறு குரலும் கேட்டால் உங்களுடைய பேருந்தில் ஒரு நடத்துன நாயன்மார் வந்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஜாக்கிரதையாசெய்ய வேண்டிய பயணம் அது.
"உசுரு போய்டுன்னும் சொன்னாலும் மசுருக்கு மதிக்கிறானா பாரு..." என்று பொசுக்கும் வார்த்தைகள் கொட்டியதும் கோயிந்து பேந்தப் பேந்த முழித்தான்.
"யார்ணா அது?" பக்கத்தில் இவ்வுலகத்தில் ஏன் வாழ்கிறோம் என்ற கொடிய சிந்தனையில் உதடு பிதுக்கி வந்துகொண்டிருந்தவரை சிலுப்பிவிட்டான்.
"ஆங்.... இந்த பஸ்ஸோட ஓனரு"
"கவர்மென்ட்டு பஸ்ஸுக்கு இவரு ஓனரா?" பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டான் கோயிந்து.
"உன்னிய மாதிரிதானே நானும் வரேன்.. யாருன்னு கேட்டாக்க இன்னா சொல்லுவேன்.. " என்று கோயிந்துவை ஏறினார்.
"இன்னா சொல்"தானே பேசுறே என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டான் கோயிந்து. குரல் வந்த திக்கில் பார்வையை செலுத்தினான்.
முழு பலாப்பழத்தை முள்தோலோடு விழுங்கி தொண்டையில் சிக்கிக்கொண்டது போல விழியிரண்டும் பிதுங்கி இரண்டாம் வரிசை தாண்டி நின்றிருந்தார் அவர். பஸ்ஸில் செல்வதற்கென்றே இப்பிறவி அடைந்தது போல மிடுக்கோடு நின்று கண்டக்டர் போலவே பஸ் கூரையைத் தட்டி பெயிண்டைப் பெயர்த்துக்கொண்டிருந்தார். கழுத்துக்குக் கொடுத்திருந்த கர்சீப் வெளியே துருத்திக்கொண்டிருந்தது. பாண்டுக்கு அடியில் மடித்துவிட்டிருக்கவேண்டும். மெதுவாக எக்கிப் பார்த்தாலும் கண்ணில் தென்படவில்லை.
அடுத்த ஸ்டாப் வந்தது. "முன்னாடி ஏறாதீங்க... கண்டக்டர் பின்னால இருக்காரு.. பின்னால ஏறு.. பின்னால ஏறுன்னு எத்தன தடவ சொன்னாலும் புத்தியில்லை.." என்று சமூகப்பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டி கூரைத் தட்டினார். இம்முறைத் தட்டியதில் ட்ரைவரே உலுக்கப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.
படிக்கருகில் நின்றிருந்த கோயிந்து மெல்ல நகர்ந்து அந்த நாயன்மாரிடம் வந்தான். இன்னமும் வானொலியில் பொறிபடும் பப்படம் போல படபடப்போடு இருந்தார். வீட்டில் பெண்டாட்டி பிள்ளைக் குட்டிகள் இவரோடு எப்படிப் பேசுவார்கள்? என்ற வீணான கவலை வேறு அவனைப் பிடித்து பஸ்ஸோடு சேர்ந்து ஆட்டியது. வெடுக்வெடுக்கென்று முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே வந்தார். யார் மேலேயோ அவருக்கு வெறுப்பு. இயலாமை. விரக்தி.
பயணத்தில் விஷமம் செய்பவர்களைக் கண்டித்து கண்டக்டரிடம் செல்லப்பிள்ளை பெயரெடுத்து பாராட்டுப் பெறவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கக்கூடும் என்று கோயிந்து யூகித்தான்.
"ஒரு ஆசர்கானா" என்று நூறு ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தது ஒரு கல்லூரிப் பெண். "பின்னால ஏறு" என்ற இவரது அறிவுரையை மதிக்காமல் முன்னால் ஏறியது மட்டுமல்லாமல் இரண்டாவது ஸ்டாப் இறங்குவதற்கு நூறு ரூபாய் சலவைத் தாளை நீட்டிவிட்டது. மனுஷன் துர்வாசராகிவிட்டார்.
"ஏம்மா நீயெல்லாம் படிச்ச ஆளுதானே?" என்று ராங்கு காமிக்க ஆரம்பித்தார். ஏறிய பெண் கராத்தே ஜுடோவிலெல்லாம் பெல்ட் வாங்கி மாட்டியது போல இடுப்பில் கட்டியிருந்தது. பார்வையில் "நானொரு பத்ரகாளி" போர்டு தொங்கியது. கிட்டத்திலிருந்து பார்த்த கோயிந்துவுக்குச் சப்த நாடியும் அடங்கிவிட்டது.
ஒன்றுமே பேசாமல் அவரைத் துளைத்துப் பார்வையைச் சூலமாக வீசியது.
"நூறு ரூவாயக் குடுக்கிறியே... உன்னைய என்னத்த சொல்ல.. வீட்லேர்ந்து சில்லறை எடுத்துட்டு வரமாட்டே?"
கோயிந்து இருவருக்கும் நடுவில் இருந்தான். எந்த நேரமும் போர் மூண்டுவிடும் அபாயகரமான யுத்தகளத்தில் வந்து மாடிக்கொண்டோமே என்று நகரப் பார்த்தான். இல்லை. நழுவப் பார்த்தான்.
"ஏன் சார்... நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க.." என்று நகர்ந்தவனின் தோளைப் பிடித்தார். வாண்டடாக வம்பிக்கிழுத்து வர்ச்சுவலாக ஒரு பஞ்சாயத்து சொம்பைக் கையில் கொடுத்து தீர்ப்பு கேட்டார்.
சம்சாரம் தக்காளி வாங்கியாரச் சொல்லி மறந்து வீட்டுக்குள் நுழையும் போது சாம்பலாக்கிவிடுவது போல முறைக்குமே... அது மாதிரி பார்த்தாள் அந்தப் பெண்மணி. கோயிந்து வெலவெல. நிச்சயம் சண்டைதான் என்று முதல் மணியடிக்கக் காத்திருந்தான்.
"அந்தக் காசைக் கொடுங்க..." அவர் கையில் இருந்து பிடிங்கினாள் அந்தப் பெண். இவருக்கு இன்னும் பிபி ஏறியது.
"பஸ்ஸில ஏறும்போது சில்லறை கொண்டுவரத் தெரியாது?" ஆரம்பித்து அங்கேயே பஸ் பிரயாணத்தில் டிக்கெட்டுக்கு சில்லறை கொடுப்பது எப்படி என்று இலவச வகுப்பெடுக்க ஆரம்பித்தார். சுற்றிலும் நோக்கினான் கோயிந்து. யாருமே அவரைச் சட்டை செய்யவில்லை.
அடுத்த நிறுத்தத்தில் அவருக்கு வேண்டாத சத்ருக்கள் பலர் முன்படிக்கட்டில் ஏறினார்கள். இந்த சமூகமே அவருக்கு எதிராக செயல்படுகிறது என்று வெறியானார். இதற்கு பாடம் புகட்டாமல் பிரயாணம் செய்வது இழுக்கு என்று ஸ்திரமாக எண்ணினார்.
"ஏம்மா.. எல்லோரும் படிச்சவங்கதானே... கண்டக்டர் பின்னாடி இருக்காரு.... அங்க ஏறினா டிக்கெட் வாங்க ஈஸிதானே... இந்தக் கூட்டத்தை பிளந்துகிட்டு எப்படி வந்து சீட்டு குடுப்பாரு..."
"யோவ்... பொம்பளைங்க பக்கத்துல உட்கார்றியே..." என்று அநீதி கண்டு பொங்க ஆரம்பித்தவர், உட்கார்ந்தவரின் அரைக்கைச் சட்டை வழியாகத் தெரிந்த புஜபலத்தில் அடங்கிவிட்டார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த பொம்பளையும் இணக்கமாகத்தான் உட்கார்ந்திருந்தாள்.
அவரது கோபக் கூப்பாடுகளுக்கு இடையில் பூனை போல நகர்ந்து நகர்ந்து பின்னால் வந்துவிட்டான் கோயிந்து. நாம் யாரையாவது தண்டிக்கவேண்டும் என்றால் இந்தாள் கூட பயணம் செய்ய ஏற்றிவிட வேண்டும்.. மவனே.. தீர்ந்தாண்டா... என்று தீர்மானித்துக்கொண்டான்.
"அடுத்தது மவுண்ட்டு. இறங்கிற ஆள்லாம் நவுந்து முன்னாடி வா...." என்று அழைக்க ஆரம்பித்தார். இப்போது கோயிந்து கண்டக்டர் விசிலடித்தால் காது "க்ஞொய்..." என்று கேட்கும் தூரத்தில் பின்னால் நின்றிருந்தான்.
கண்டக்டர் யாருக்கோ பையை உலுக்கி சில்லறை தேடி எடுத்துக்கொடுத்து டிக்கெட் கிழித்துக்கொடுத்தார். ரொம்பவும் பொறுமை சோதிக்கப்பட்டுவிட்டது என்ற சமயத்தில் காதலியிடம் ரகசியம் பேசுவது போல கண்டக்டர் காதில்...
"யார் சார் அது?"
"யாரு?"
"முன்னாடி நின்னு எல்லாருக்கு அட்வைஸ் மழை பொழியறாரே... அவரு"
எதுவும் சொல்லாமல் மர்மமாகச் சிரித்தார் கண்டக்டர். கோயிந்துக்கு மனசு ஆறவேயில்லை. அவர் இன்னமும் அதே கூடுதல் சக்தியோடு பேருந்தினுள் ஒழுங்குபடுத்துதலில் ஈடுபட்டிருந்தார்.
பஸ் அடுத்த நிறுத்தத்தில் நின்றதும் அந்த நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட பெண் இறங்கி பின்படிக்கு ஓடி வந்தார். ஹிம்சை பொறுக்க முடியாமல் நம்முடன் பயண செய்ய வருகிறாள் என்று கிடைத்த இரண்டு செகண்டில் "சென்னையில செந்தேன் மழையே.. தமிழ்மகளின் பொன்னே சிலையே..." என்று இரண்டு வரி குறுடூயட் பாடிக்கொண்டான் கோயிந்து.
ஏறிய பெண் "சார்.. மவுன்ட் ஒண்ணு குடுங்க...."
"இதுதான் மவுன்ட்.."
"தெரியும்ங்க.. டிக்கெட் எடுக்க நூறு ரூபாயைக் குடுத்தேன். பின்னால பாஸ் ஆவல.. அதான் எடுக்கறேன்.."
கோயிந்துக்கு அந்தப் பெண்ணை பார்த்தால் பாவமாக இருந்தது. அதற்கு சமாதானமாக எதாவது சொல்லி அவள் மனக்கிலேசத்தைப் போக்க எண்ணினான்.
"ஆமா.. அந்த லூஸு பின்னால் பாஸ் பண்ணியிருக்கலாம்..."
இப்போது அந்தப் பெண் " நீயும் லூஸா.. நீ வாங்கி பாஸ் பண்ணியிருக்கலாம்ல..." என்று முறைத்துப் பார்த்தாள். கேட்கவில்லை. கோயிந்துக்கு அவளிடம் பல்ப் வாங்கிவிட்டோமோ என்று தோன்றியது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல்....
"இந்தாம்மா.." என்று கண்டக்டரிடம் டிக்கெட்டை வாங்கி அவள் மருதாணிப் போட்ட உள்ளங்கையில் திணித்துவிட்டு... "இனிமே இந்த லூஸு இருக்கும் பஸ்ஸுல ஏறிடாதே" என்று ஹீரோ கணக்காகப் பேசினான் கோயிந்து.
"எப்படியும் வீட்ல ஒண்ணாதானே இருக்கணும்..." என்றாள் அவள்.
தீபாவளிப் பட்டாசாக அவன் உள்ளம் படாரென்று வெடித்து "இந்த வயசான ஆளு உம் புருசனா?" என்று இதயம் கிழிந்து... விழிபிதுங்கி கேட்டான்.
"போடா லூஸு... அது என்னோட அப்பா.. கண்டக்டராக இருந்து போன மாசம்தான் ரிட்டயரட் ஆகியிருக்காரு.."
1 comments:
கடைசி ட்விஸ்ட்... செம....
Post a Comment