Friday, August 19, 2016

வாக்காளர் குரல்

இலவசமெல்லாம் வாணாம் சார். ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...”னு வாய் வார்த்தையா பேசாம... இன்னன்ன தேதியில இன்னன்ன திட்டத்தைச் செய்து முடிப்போம்.. இல்லைனா பதவியை ராஜினாமா பண்ணிடுவோம்னு... தேர்தல் அறிக்கையை எக்ஸெல்ல செயல்திட்டமாப் போட்டு கையில கலர் பிரிண்ட் அவுட்டோ... ஜிமெயில் இன்பாக்ஸுக்கோ அனுப்புற கட்சிக்குதான் ஓட்டு.
இது எப்படி இருக்கு?
**
இது சரியா வருமா பாருங்க சார்... உங்க கட்சி வேட்பாளரை எங்க தொகுதியின் பிரதிநிதியா எம்மெல்லேன்னு தேர்ந்தெடுக்கிறோம்னு வச்சுக்கோங்க.... அவருக்கு உங்க கட்சி சார்பிலேயோ அரசு சார்பிலேயோ ஒரு ஆஃபீஸ் போட்டுக்கொடுங்க.... ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆஃபீஸ்.... தொகுதி பெயர்.... சட்டப்பேரவை உறுப்பினர் பெயர்.... வேலை நேரமெல்லாம் வச்ச போர்டோட... மறக்காம அவருக்கு உதவி செய்ய ஒரு செக்ரட்ரியும் குடுங்க... (இப்பவே எம்மெல்லேக்கு அலுவலகமும்... தனி உதவியாளரும் உண்டுன்னு நினைக்கிறேன்)
முக்கியமா அந்த ஆஃபீஸ்ல பயோமெட்ரிக் அட்டென்டென்ஸ் வைங்க... காலை பத்துலேர்ந்து சாயந்திரம் ஆறு மணி வரை வேலை நேரம்... சாமானியர் யாரும் வந்து உட்கார்ந்து குறைகளைச் சொல்லலாம்.. அந்த காரியதரிசி ரெஜிஸ்டர்/கம்ப்யூட்டரில் தேதிவாரியா குறைகளைப் பதிவு செய்யணும். மக்கள் பிரதிநிதி அவைகளை நிவர்த்தி பண்ணின தேதியையும் அந்த காரியதரிசி குறிச்சுக்கணும்... ம்.. ஐயாவுக்கு எதாவது ஃபீல்ட் ஒர்க்கு... பக்கத்து கிராமத்துல... கால்வாய் சீரமைக்கும் பணி நடக்குது.. நேர்ல ஆய்வுக்குப் போறாரு.. தாராளமாச் சுத்தட்டும்... ஆனா.. பயோமெட்ரிக்ல in-out பன்ச் பண்ணச் சொல்லுங்க... அவங்க வீட்டுல ஒரு காதுகுத்து கல்யாணம்னா அவருக்கு லீவும் உண்டு... பிரச்சனையில்ல...
மார்ச் மாசம் ரெண்டாயிரம் குறைகள் வந்தது.. ஆயிரத்து ஐநூறு சுமுகமா நிவர்த்தி செஞ்சாச்சு... ஐநூறு இன்னன்ன காரணத்துனால நிலுவையில் இருக்குன்னு ஒரு ரிப்போர்ட்டை தகவல் அறிக்கை போர்டுல pin பண்ணி தொங்கவிடுங்க... தொகுதிவாரியா பிரதி மாசம் ஐந்தாம் தேதி அந்த ரெஜிஸ்டர் காப்பி கோட்டைக்கு வரணும்...
எம்மெல்லேயோட பெர்ஃபார்மன்ஸ் பாருங்க.. சதவிகிதம் ஜாஸ்தி வருதுன்னா... இலாகா ஒதுக்கி... மந்திரி பதவி கொடுங்க.. இதுதான் அவங்களுக்கு அளிக்கப்படும் சன்மானம்.. ஊக்கம்.... கௌரவம்.. ரொம்ப முக்கியமான ஒண்ணு.... மாசம் மூன்று லட்சம்... நாலு லட்சம்னு அவங்களுக்கு தாராளமா சம்பளம் கொடுத்துடுங்க...(இப்போ அம்பத்தஞ்சாயிரம் சம்பளம்னு கவர்ன்மென்ட் வெப் சைட்ல போட்ருக்கு).. கை நீட்டக்கூடாதுன்னு உத்தரவு போட்டுடுங்க... நீட்டினா ஆள் அம்பேல்... அவ்ளோதான்.. இது போதுமே... உங்க கட்சி ஆட்கள் சமுதாய சேவை செய்து ஜமாய்ச்சுடமாட்டாங்க....
இது உங்க கொள்கைன்னு தேர்தல் அறிக்கையில இருந்தா... கவலையே வேண்டாம்...உங்களுக்கு தான் எங்களுடைய ஓட்டு....
**
அப்புறம் இன்னொன்னு சார்... எம்மெல்லே ஆனதுக்கப்புறம் கெத்து காமிக்கிறீங்க பாருங்க... அதெல்லாம் வாணாம்.... நீங்களும் நானும் ஒண்ணு. எங்களுக்கான தேவைகளை அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்றத்துக்கான பிரதிநிதிதான் நீங்க... அதுக்காகத்தான் தேர்ந்தெடுத்திருக்கோம்... நாம சாதாரணமா ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுவோமே... என்ன கெட்டுப்போயிடப் போவுது?
பாதாள சாக்கடை அடைச்சுக்கிச்சு... ஏரியாவுக்குத் தண்ணி லாரி வரலை....இரண்டு மூணு மணி நேரமா கரண்ட் இல்லை..... நடு ரோட்ல பெரிய பள்ளம்.... அதானல டூவீலர்ல போறவங்க கீழே உழுந்து அடிபடறாங்க... தெருவிளக்கு எரியலை.... முக்குக்கு முக்கு குப்பையாக் கிடக்குது.... இப்படி அன்றாடப் பிரச்சனைகளுக்கு தொகுதிவாரியா ஒரு மொபைல் நம்பர்.. வாட்ஸப்.. ஃபேஸ்புக்குன்னு சகல வசதியோடயும் கொடுத்துடுங்க... அவதிப்படறவங்க அதுல அனுப்புற ஆதாரப்பூர்வமான சிக்கல்களை அப்பப்போ தீர்த்து வச்சுட்டீங்கன்னா... உங்களை இந்த ஜனம் மறக்கவே மறக்காது.... தேர்தலுக்கு தேர்தல் நீங்க தான் எங்க பேட்டைக்கு ராஜா.. எந்தக் கட்சியா இருந்தா என்ன? உங்களுக்குதான் எங்க ஓட்டு...
**
சார்.... இங்க பாருங்களேன்... இது உங்கள மாதிரி எம்மெல்லேக்கு இல்லை.. நீங்க சார்ந்திருக்கிற கட்சிக்கு...
ரேஷன் கடைப் பக்கம் போயிருக்கீங்களா? கத்திரியோ கடுமழையோ... ரேஷனுக்கு வர்றதில முக்கால்வாசிப் பேர் வயசானவங்கதான்.. வீட்ல எல்லோரும் வேலைக்குப் போனவுடனே... மஞ்சப் பையும் கையுமாக அரைமணி ஒருமணி க்யூல கால் கடுக்க நின்னு சாமான் வாங்கிட்டுப்போறாங்க... அளவு சரியில்லை.. கலப்படம்... வெளி மார்க்கெட்டுக்கு வித்துடறாங்கன்னு... நிறையா புகார் வேறே....
நாம என்ன பண்ணலாம்னா... நீல்கிரீஸ், ஹெரிடேஜ், மோர் மாதிரி குளுகுளுன்னு செல்ஃப் சர்வீஸ் சூப்பர்மார்க்கெட் ஒண்ணு தொறந்துடலாம். அரசு மதுபானக் கடை தொறக்கிறோம்... “அமுதம்” மாதிரி இதையும் எங்க பார்த்தாலும் தொறக்கமாட்டோமா? ரேஷன் கார்டு ஆசாமிகளுக்கு கையில ஒரு ப்ளாஸ்டிக் கார்டு.... கிரெடிட் கார்டு மாதிரி.. ஸ்வைப் பண்ணி... காசு கொடுத்து வாங்கிக்கலாம். எப்போ வாங்கினாங்க... இன்னும் எவ்ளோ வாங்கலாம்னு எல்லா டீட்டெயிலும் அரசு டேட்டாபேஸ்ல ஏத்திடலாம்... அவங்களோட கோட்டா முடிஞ்சுபோச்சுன்னா.. கார்டு Decline ஆயிடும்.... திரும்ப அடுத்த மாசம்தான்...
அரைக் கிலோ ஒரு கிலோன்னு எல்லா ஐட்டத்தையும் சுத்தமாக பாக்கெட் போட்டுடலாம். அளவு பிரச்சனையில்லை. இப்போது கிடைக்கும் ரேஷன் பொருட்களைத் தவிர்த்து வேறு நிறைய பொருட்களையும் அங்க விற்கலாம். சுயதொழில் தொடங்க அரசு மானியம் வழங்குது. அந்த மானியத்துல தயாரிக்கிற பல பொருட்களை இந்த அங்காடிகள்ல விற்கலாம். தரக்கட்டுப்பாடு பிரிவு ஒண்ணையும் இந்த அங்காடிகளோட சேர்த்துடுங்க... அவங்க தரத்தையும் கள்ள மார்க்கெட் மூவ்மெண்ட்டையும் பார்த்துப்பாங்க.. அரசு மானியத்துல தொழில் பண்றவங்களுக்கும் ஊக்கமாக இருக்கும், அரசுக்கும் கூடுதல் வருமானமா இருக்கும்....
‪#‎இது_பயனளிக்குமான்னு_கொஞ்சம்_பாருங்களேன்‬!!

**
சார்... கொஞ்சம் முக்கியமான மேட்டர். கோயில் சர்ச் மசூதி எல்லாமே பொதுஜனம் மன நிம்மதிக்காக தஞ்சமடையுமிடம். நொந்துபோனவர்கள் உந்துசக்தி பெறுமிடம். இலகுவாக நம்பிக்கை கிடைக்குமிடம். மதபேதமற்ற ஒரு அறநிலையத்துறையை எல்லா சமூகத்துக்கும் பொதுவாக ஆரம்பியுங்கள். தொழுமிடங்களில் சேவை புரிபவர்களுக்கு மாதாமாதம் வங்கியில் சம்பளப் பட்டுவாடா செய்யுங்கள். இக்காலச் சூழலில் குடும்பபாரம் இழுக்குமளவிற்கு ஊதியமும் கையில் ஏடியெம் கார்டையும் கொடுங்கள். கரன்ஸி கொடுத்து வாங்க இயலாத நிம்மதியை/சந்தோஷத்தை சமூகத்திற்கு வழங்குபவர்களின் வாழ்வு நலம்பெற வேண்டாமா? இது ஈஸிதானே. ட்ரை பண்ணுங்களேன். ப்ளீஸ்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails