Friday, August 19, 2016

மதராசப்பட்டினம்

நேற்று அடையாறில் அலுவல் நிமித்தம் ஒரு அவசர சந்திப்பு. அது நேரத்தோடு முடிந்தால் ஆறே முக்காலுக்கு கோபுவின் “மதராசப்பட்டினம்” நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என்பது நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்ட பேரவா. பெரும்பாலும் கோபுவின் சொற்பொழிவுகளை தவறமால் கேட்கவேண்டுமென்று சங்கல்பம் செய்துகொண்டிருக்கிறேன்.
மாலை ஆறுமணிக்கு மேல் அடையாறிலிருந்து தி நகர்.... கூகிள் மேப்பில் பார்த்தால் ”இந்தா...” என்று மானஸா பாதி கடித்துவிட்டு நீட்டும் பிட்டு காராசேவு மாதிரி சின்ன கொக்கியாய்த் தெரியும். ஆனால், நிஜம் அலற வைக்கும். அது காராசேவு துண்டல்ல... இடியாப்ப பாதை. வெளக்கு வச்ச நேரத்தில் ஒட்டு மொத்த சென்னையும் வீடு துறந்து, ஓரணியாய்த் திரண்டு சர்தார்பட்டேல் ரோட்டில் குடியிருக்கிறதோ என்றஞ்சும்படியான பம்பர்-டு-பம்பர் நெரிசல். ”நெருங்கி வா.. முத்தமிடாதே...” என்று யாரோவொரு யுகக்கலைஞன் டாட்டா 407 முதுகில் எழுதிக் கண்டித்த செக்ஸியான திருவாசகம் ஞாபகம் வந்தது. முன்னால் ஹோண்டா சிட்டியின் சீட்டிலிருந்து ”எதிரே ரோடு இருக்கிறதா?” என்ற தீவிர சந்தேகத்தோடு எக்கி எக்கிப் பார்த்து தவித்தபடி ஓட்டும் லேடியை, ”ஏழு கடல்... ஏழு மலை...” தாண்டும் லாவகத்தோடு முந்தி விட்டால் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் சென்றுவிடலாம் என்பது எனக்கான சவால். ஊஹும். இடதும் வலதுமாக சீறும் கடலலையில் மாட்டிய அப்பாவித் தோணியாய் ஆடியது அந்த ஹோண்டா சிட்டி. “பிதாவே இவரை மன்னியும்... சாலையில் திரியும் (அப்)பாவிகளை காப்பாற்றும்...”.
கோபுவே அங்கு இல்லையென்றாலும் “ஆறே முக்கால்னா.. ஆறே முக்கால்தான்...” என்று துப்பாக்கிநேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பித்துவிடுவார்கள். நேரந்தவறாமை காந்தியின் கொள்கையன்றோ! 
”ஐஐடிக்கு கீழே போய்...கான்சர் இன்ஸ்ட்டிட்டியூட் ரைட்ல போய் கோட்டூர்புரம் பிரிட்ஜ் ஏறி அப்படியே ஜி.கே.மூப்பனார் பாலத்துல ஏறிடுங்கோ.. லெஃப்ட் திரும்பி நேரே நந்தனம் சிக்னல்.. ரைட்ல தக்கர் பாபா.. இதுதான் ஈஸி ரூட்.. வேறெங்கியாவது இந்த டயத்ல போனா நிச்சயமா மாட்டிப்பேள்..” என்று மொபைல் வழி திசை காட்டியிருளினார் வீகேயெஸ். 6:43க்கு தக்கர் பாபாவுக்குள் சேப்பாயி சேஃபாக நுழைந்தது.
டிடிகே சாலையிலிருந்து அண்ணாசாலையில் கலக்கும் பெருவாரியான சந்துபொந்துகளில் நுழைந்து சூறாவளியாய் ஹரிகிச்சுவுடன் நுழைந்தார் வல்லபாவும். உள்ளே சென்று ஆற அமர வந்தமர்ந்த ”எல்டர் ப்ரதர்” ஆர்வியின் அமைதியான நடையில் அவரது அடுத்தவீட்டுக்கார கமலகாசத்தனம் தெரிந்தது. ராஜாராம் அருகில் அமர்ந்தவுடன் உத்யோகத்தில் எனக்குக் கிடைத்த பதவி உயர்வுக்கு ”கங்க்ராட்ஸ்” சொல்லி கைகுலுக்கினார். விபூதி மணக்கும் மஹாதேவன் அனன்யாவுடன் ரிஷபாரூடராய்க் (வித்தவுட் நந்தி) காட்சியளித்தார். கிஷோர் மஹாதேவன் சாந்தமான ஸ்நேகப் புன்னகையில் மயக்கினார். சிஷ்யர் கோபுவைப் பார்த்தவண்ணம் பாலு சார் முன்னே அமர்ந்திருந்தார். பியெஸ்ஸென்னல் வைத்தியநாதன் சார் கோபுவையே பார்த்துக்கொண்டு தவமாய் அமர்ந்திருக்க... கோபு ஆஸ்தான சேரில் புரொஜெக்ட்டரை தாஜா செய்துகொண்டிருந்தார். all set to go....

***

இளையராஜாவுக்கு முதல் ரெக்கார்டிங்கில் மின்தடங்கலாம். அன்னக்கிளி அமோகமாக வந்தது ஊரறிந்த வரலாறு. அதுமாதிரி வரப்போகும் ஒரு அற்புதமான நிகழ்வுக்கு ப்ரொஜெக்டர் மக்கர் பண்ணியது. எல்லா எலெக்ட்ரானிக் உபகரணங்களின் International Technology யான அணைத்துவிட்டு மீண்டும் உயிர்த்தெழவைக்கும் முயற்சியெல்லாம் எடுபடவில்லை. விளக்கேற்றி முகத்தோடு முகம் பார்த்து பேச ஆரம்பித்தார். இதுவரையில் தான் தக்கர் பாபாவில் ஆற்றிய புத்தக சொற்பொழிவுகளைப் பற்றி முதலில் பேசினார் கோபு. அதில் ஹாரிபாட்டர் பற்றியதும் டார்வின்ஸ் ஆர்மடாவும் சூப்பர் ஹிட் முக்காபுலா.
புத்தகத்தை உயர்த்திப் பிடித்து அட்டை காண்பித்து ”1600ம் வருடங்களிலிருந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்..”. என்ற கோபுவைப் புத்தகாசிரியர் நரசய்யா முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார்.
நரசய்யா சென்னையின் முக்கிய நிகழ்வுகளை Index பண்ணியது பற்றி சிலாகித்தார். அந்தப் புத்தகத்தின் முன்னுரையை எழுதிய எஸ். முத்தையா சென்னையைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியிருக்கிறார் என்றும் இந்த புத்தகத்திற்கான முன்னுரையையும் ஆங்கிலத்திலே எழுதியிருக்கிறார் என்றும் தமிழர் எஸ். முத்தைய்யா பற்றி அங்கதமாய்ச் சொன்னது ரசிக்க வைத்தது.
இந்த சொற்பொழிவில் எனக்குத் தெரியாதவை பல விஷயங்கள். கோபு அதைக் கோர்வையாக பல உதாரணங்களுடன் சொன்னது நிறைவாக இருந்தது. தினுசுதினுசான ஜாதிமதங்களுக்கிடையில் ஜாதிகளுக்குள்ளேவே வலங்கை இடங்கை என்று வலதுசாரி இடதுசாரிகள் போல உட்பிரிவுகள் இருந்ததாம். அவைகளுக்குள் சண்டையிட்டுக்கொண்டார்களாம். வெள்ளையர்கள் மிரண்டு போனார்களாம்.
சமஸ்க்ருதமும் பாரசீக மொழியும் சகஜமாகப் புழங்கிய காலகட்டமாம். மோதிலால் நேரு பாரசீகப் பண்டிதர் என்பது வியப்பான விஷயமாகும். சமஸ்க்ருதம் போலவே ஆளுமையுடன் பாரசீகம் விளங்கியது என்றார்.
சைனாவும் தமிழகமும் மட்டும்தான் பேசும் மொழியாலேயே அழைக்கப்படும் சிறப்புப்பெற்ற பிராந்தியங்களாம். சிலிர்ப்பாயிருந்தது.
ப்ரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் போல ஆர்மேனியர்களும் வியாபாரம் செய்ய சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே! அவர்கள் வந்து புழங்கியதுதான் ஆர்மினியன் ஸ்ட்ரீர்.. அரண்மனைக்காரத் தெரு என்று பேச்சுவழக்கில் மாறிய தெரு... அங்கிருக்கும் சர்ச்சுக்கும் அந்த வயசுதானாம்...சாந்தோமே சர்ச்சும் அதைச் சுற்றி ஒரு கோட்டையும் இருந்ததாம். போர்ச்சுகீஸியர்கள் கட்டியது என்று சொன்னதாக நினைவு.
கோர்ட் பக்கம் பேச்சு திரும்பியது. சென்னகேசவப் பெருமாள் கோயில்... சத்ரபதி சிவாஜி வந்து வணங்கிய காளிகாம்பாள்.... என்று பாரிமுனையின் பல்வேறு கோணங்கள்.... ஒரு புத்தக மதிப்புரையாக இல்லாமல் மதராஸை பயாஸ்கோப் மாதிரி காண்பித்தது அத்புதம். மேல் கோர்ட்டு கீழ்க் கோர்ட்டெல்லாமில்லாமல் தீர்ப்பு வழங்கிய காதைகளைச் சொன்னார். மனுஸ்மிருதியின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டது என்கிற வழமையான வாதங்களை நிராகரித்தார். மனுஸ்மிருதி போன்று நிறைய நீதிசதகங்கள் உண்டென்பது அவரது வாதம்.
ஆங்கிலேய துரைகள் காலத்தில் துபாஷிகள் வலுவாக இருந்தார்கள். பாரீஸ்கார்னரில் இருக்கும் முக்கால் வாசித் தெருப்பெயர்கள் துபாஷிகளின் பெயர்கள் தாம்... சுங்குராம செட்டித் தெரு...போன்று. பச்சையப்பாஸ் காலேஜ் பச்சையப்ப முதலியார் பெரிய துபாஷிதானாம். துய்ப்ளேயிடம் துபாஷியாயிருந்த புதுச்சேரி அனந்தரங்கம்பிள்ளை ஞாபகம் வந்தது. (நாட்குறிப்புகள் எழுதிவைத்த மகானுபாவர்)
வங்காள விரிகுடாவில் இயற்கைத் துறைமுகம் ஈஸ்ட் பக்கம் அமையவே முடியாது..இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை படகில் கடலுக்குள் சென்று சரக்குகளையும் பயணிகளையும் கரைக்கு கொண்டுவருவார்களாம். நானூறு ஐநூறு மீட்டர் வரை கடலுக்குள் செல்லவேண்டுமாம். எனக்கு எழுத்தாளர் EraMurukan Ramasamiயின் ’விஸ்வரூப’ கிட்டாவைய்யன் நினைவுக்கு வந்தான். லண்டனிலிருந்து கப்பலில் தாய்நாடு திரும்பும்போது படகில் கரையேறுவான். விசாகப்பட்டினம் தவிர்த்து எதுவுமே இயற்கைத் துறைமுகமில்லை. ப்ரெஞ்சுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த ஊர் பேரத்தில்... ப்ரெஞ்சுக்காரர்கள் சென்னையை விட்டுக் கொடுத்து Quebec வாங்கியது எவ்வளவு முட்டாள்தனமான காரியம்!!
நரசய்யா கப்பலில் பணி புரிந்தவர். ஆகையால் இந்த கடல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சமுத்திரமாக சரித்திரப்பின்னணிகளைக் கொடுத்திருக்கிறார். துறைமுக போக்குவரத்தானது நதிமுகங்களில்தான் நடக்குமாம். அதாவது பௌர்ணமி அமாவாசைக் காலங்களில் எழும் நீள் அலைகளில் கப்பல் பயணித்து நதிமுகத்திற்கு வந்துவிடுமாம். சரக்குகளை இறக்கிய பிறகு அடுத்தடுத்த நாட்களில் அலைகளும் அடங்கிய பிறகு மீண்டும் கடலுக்குள் பிரயாணப்பட சென்றுவிடும் போன்ற குறிப்புகள் என்போன்ற கடல்சாரா தற்குறிகளுக்கு தரப்பட்ட தகவல் பிரசாதம்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியானது மூன்றுவிதமான காலக்கட்டத்தில் நடந்தது. ஒன்று கிழக்கிந்திய கம்பெனியாக, இரண்டாவது இன்னும் கொஞ்சம் கால் ஊன்றிய அதிகாரத்தோடு நடந்ததாகவும் மூன்றாவதாக அரசாங்கமே அமைத்த ஜோரில் நடந்த ஆட்சியையும் பிரித்துச் சொன்னார்.
ஆங்கிலேயர்கள் காலத்திலும் பஞ்சத்தில் மதராஸ் அடிப்பட்டது. சுயமாக உணவு சம்பாதிக்க தெரியாதவர்கள் அடிமைகளாக விலைபோக தலைப்பட்டார்களாம். அப்போது ஒரு அடிமை விலை எட்டணாவாம். அடிமை நோஞ்சானாக இருந்தால் கிண்டல் செய்வார்கள் என்பதை விளக்கும் போது கோபுவின் குரலில் பதபதைப்பு இருந்ததை ஸ்பீக்கர் வழி உணர முடிந்தது. இந்த அடிமைக் கதைகள் சொல்லும் போது சத்திய சந்தனாக இருந்த அரிச்சந்திரன் தனது மனைவி மக்களை அடிமையாக விட்டது ஞாபகம் வந்தது. ஆனால் கோபு மஹராஜ்ஜுக்கு எது ஞாபகம் வந்தது தெரியுமா? சுந்தரமூர்த்தி நாயனாரும்... தடுத்தாட்கொண்ட புராணமும்... அரண்டு விட்டேன். சீட்டை விட்டு எழுந்து கை தட்டி விசிலடிக்க எத்தனித்து அறிஞர்கள் நிரம்பிய சபையாதலால் அடக்கிக்கொண்டேன். ஆனாலும் சுற்றி உட்கார்ந்திருந்த ஸ்நேகித வட்டத்திடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனேன். “எப்படி ஐயா உமக்கு உதாரணம் வருகிறது?”
ஹரிகிச்சு வீகேயெஸ் இடத்தை நிரப்பினான். வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்தான். “அங்கிள்...அவருக்கு லோக்கல் க்ளோபல்ன்னு நிறையா டேட்டாபேஸ் மூளைக்குள்ளே இருக்கே...” என்று அதையும் IT-யுடன் வீகேயெஸ் போலவே சேர்த்துத் தொட்டுக்காட்டினான். சமர்த்து!!
”கோட்டையாளப் போகிறோம்...” என்கிற தேர்தல் கோஷங்கள் வானை முட்டும் நேரமிது. ஆனால் ஜார்ஜ் கோட்டை என்பது அரசாங்கக் கோட்டையன்று ஒரு வணிகக் கோட்டை என்று போட்டுடைத்தார். துணிகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் அங்கே கிடத்தியிருப்பார்கள் என்கிற அரிய தகவலுடன் ஆங்கிலேயர்கள் லினன் துணி இறக்குமதி செய்து காட்டன் துணிகளை ஏற்றுமதி செய்யும் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய இடம் ஜார்ஜ் கோட்டையென்றார்.
ஸ்விட்ச் போர்டில் ஒட்டியிருந்த ரமணர் இழுத்ததால் இந்தக் கதை எதற்கு சொல்ல ஆரம்பித்தார் என்பதை கவனிக்க முடியவில்லை. ஆனால் புத்தர் பற்றிய அபாரமான கதை.
விவசாயி உழுது கொண்டிருக்கும் நிலத்தில் ஏதோ பொட்டி தட்டுப்பட்டது. அந்த வழியாக சென்ற புத்தர் ”ஆனந்தா பாம்பிருக்கு... ஆனந்தா பாம்பிருக்கு...” என்று சொல்லிக்கொண்டே சென்றார். அந்த விவசாயிக்குப் புரியவில்லை. கிடைத்த பெட்டியை திறந்து பார்த்தால் தங்கமும் வைர வைடூர்யங்கள் இருக்கும் பெட்டி. வாயைப் பிளந்து அதிசயப்படும் போது அரசாங்க வீரர்கள் வந்து பார்த்துவிட்டு.. இது அரசரிடம் திருடுபோன பெட்டி.. நட அரண்மனைக்கு என்று அழைத்துக்கொண்டு போய் ராஜா முன்னர் நிறுத்துகிறார்கள். அரசன் அவனை சிறையிலடைக்க உத்தரவிடுகிறார். சிறையில் அவன் “ஆனந்தா.. .பாம்பிருக்கு..” என்று முனகிக்கொண்டிருக்கிறான். இதில் ஏதோ அர்த்தம் இருக்கும் போலிருக்கிறதே என்று அவர்கள் விழித்துக்கொண்டு சொன்னவரை தேட ஆரம்பிப்பதாக கதை போகிறது....
சரியாக ஒரு மணி நேரத்தில் எண்ட் கார்டு போட்டார் கோபு. பின்னர் நண்பர்கள் அனைவரும் படமெடுத்துக்கொண்டு எங்கள் குழுத்தொழிலான அரட்டையில் சிறிது நேரம் ஈடுபட்டு சிரித்துக்கொண்டோம். வைத்தியாதன் சாருடன் வீடு திரும்புகையில் அவரது கல்பாக்கம் டெலிஃபோன் எக்ஸேஞ்ச் அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரே பேட்டையில் வசிப்பவர். தெருமுனையில் இறக்கிவிட்டுவிட்டு வீடு சேர்ந்தேன்.
இரவு உணவு முடித்து பால்கனியில் வந்து நின்றபொழுது கறுப்பு-வெள்ளையில் சென்னை மதராஸாகத் தெரிந்தது. தெருவிளக்கின் அடியில் கும்பலாக நிற்கும் நண்பர்களுக்கு மத்தியில் கோபு கதை சொல்வது போன்ற பிரமை.
இதன் முதல் பகுதி முதல் கமெண்ட்டாக கீழே!
பட உதவி: வல்லபா ஸ்ரீநிவாசன்

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails