சீர்காழியிலிருந்து சவுன்ட் சர்வீஸ் மூலம் "சௌக்கியமா?” கேட்கும் தூரத்தில் இருப்பது புள்ளிருக்குவேளூர் என்ற புராதன பெயர் கொண்ட வைதீஸ்வரன் கோயில். புள்+இருக்கு+வேள்+ஊர்=ஜடாயு+ரிக் வேதம்+முருகன்+சூரியன் வழிபட்ட ஸ்தலம். அங்கு செல்லும் வழியில், கோயில்தோறும் கைகொட்டி பாடல்கள் பாடிய ஞானபாலகன் ஞானசம்பந்தனுக்கு, கைவலி தீர்க்க, தங்கத் தாளம் கொடுத்த சப்தபுரீஸ்வரரும் அதில் ஓசை வரும்படி செய்த ஓசை கொடுத்த நாயகியும் எழுந்தருளியிருக்கும் திருக்கோலக்கா தலம் இருக்கிறது. அற்புதமான கோயில். "கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே" என்று பதிகம் பாடி பக்தியால் உருகுகிறார் சம்பந்தர்.
சிறு பிராயத்தில் குழந்தைகளுக்கு திக்குவாயாகி பேச்சு சரியாக வரவில்லையென்றால் இன்னமும் இக்கோயில் ஸ்வயம்பு மூர்த்தியைத் தரிசித்து பேச வைக்கிறார்கள். நமக்கு ஏற்கனவே பேச்சு ஜாஸ்தி என்பதாலும் முன்னரே தரிசித்தவரை மனதாலே துதித்துக்கொண்டு நேரே வை.கோயிலுக்கு விட்டேன் சவாரியை.
கமண்டலத்துடன் குட்டையான அகஸ்தியர் படம் ஆங்காங்கே தொங்கு போர்டில் தெரிய நாடி ஜோதிடத் திண்ணைகள் தென்பட ஆரம்பித்தால் வைதீஸ்வரன்கோயிலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தம். இங்கே கடைவிரித்திருக்கும் அனைவருக்கும் சுவடி கிடைத்த ரகஸ்யம் என்ன? ஒரு சுவடியை நகலெடுத்து பிம்பச் சுவடி எடுக்கமுடியுமா? ஒரு கட்டுச் சுவடியில் குறிப்புகள் தெரிந்து புட்டுப்புட்டு வைப்பது சுலபமா? எல்லோருக்கும் அந்த ஜோஸ்யம் செல்லுபடியாகிறதா? நாடி ஜோஸ்யம் பத்தி நமக்குத் தெரிந்ததை தனியாக ஒரு போஸ்ட் எழுதுவோம். இப்போது கோயிலுக்குள் சென்று வணங்குவோம்.
எங்களுக்கு மூன்றாம் மொட்டை அங்கேதான். திருப்பதி வெங்கடாஜலபதி-புன்னை நல்லூர் மாரியம்மன்-வைதீஸ்வரன் என்ற வரிசையில் குழந்தைகளுக்கு மும்மொட்டை ஸ்தலங்களுள் ஒன்று வைதீஸ்வரன்கோயில்.
எப்போதும் அம்மன் சன்னிதி வழியாகத்தான் கோயிலுக்குள் செல்வது வழக்கம். குளக்கரைக்கு முன்னர் விஸ்வா லாட்ஜ் செல்வராஜ் வீற்றிருந்தார். "சார்! நல்லா இருக்கீங்களா?" என்று சம்பிரதாயமாக இல்லாமல் மனசாரக் கேட்டார். "ம்.. பிசினெஸ் எப்படிப் போகுது..."க்குப் பின்னர் ஐந்து சன்னிதிகளுக்கும் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு அமைதியாயிருந்த பச்சைக்குளத்தைப் பார்த்துக்கொண்டே... வைதீஸ்வர தரிசனத்துக்கு நடந்தோம். அது சித்தாமிர்த தீர்த்தம். ஒரு முங்கு முங்கி எழுந்தால் எப்பிணியும் தீர்க்கும் சர்வ வல்லமை வாய்ந்த குளம்.
வலஞ்சுழி விநாயகர், அங்காரகன், தையல்நாயகி, முத்துக்குமாரஸ்வாமி, வைதீஸ்வர ஸ்வாமி என்று ஐவருக்கும் அருச்சனை செய்து வழிபடுவது மரபு. குளக்கரை ஸுப்ரமண்யரைச் சுற்றி கறுப்புக் கோடுகள் போட்ட கறுப்பு ஆடுகள் யார்? பிரதோஷகால சிவன் கோயில் போலவே அன்று தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பக்தர்கள் இல்லை. ஒரு முதியவர் அம்மன் சன்னிதி எதிரில் உள்ள படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ”உப்பு... மிளகு உள்ளே கொட்டுங்க... குளத்துல எதையும் கரைக்காதீங்க...” என்று படியைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தார்.
வலஞ்சுழி விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்கத்திலேயே அங்காரகன் உற்சவருக்கும் செய்துகொண்டோம். அதற்கு முன்னர் பிரகார விநாயகருக்கு ஒரு சிதறுகாய் உடைத்தேன். பின்னர் தையல்நாயகிக்கும் முத்துக்குமார ஸ்வாமிக்கும். கடைசியாக வைதீஸ்வரன். பிரதோஷ புறப்பாடுக்கு வெள்ளி நந்திவாகனம் ஸ்வாமி சன்னிதிக்கு நேரில் தயாராக இருந்தது. அதன் காதைக் கடித்துக்கொண்டிருந்த பெரியவருக்கு அறுபது வயசுக்கு மேலிருக்கும். நந்தி காதில் ப்ரார்த்தனையைச் சொல்ல வேண்டும் என்று யார் சொன்னது? நந்திகேஸ்வரர் சண்டிகேஸ்வரர் போன்ற ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் எப்போதும் சிவசிந்தனையில் இருப்பவர்கள் என்று பாட்டி சொல்வாள். அவர்களை கைதட்டியோ சொடுக்கியோ இம்சை செய்யக் கூடாது என்பாள். காதோடு காதாக ரகஸ்யம் பேசலாமோ?
ஸ்வயம்பு மூர்த்தி. திவ்யமான தரிசனம். பின்னால் ஒரு மாமி உட்கார்ந்து கொண்டு "ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய” என்று வைத்யநாதஷ்டகம் பாடிக்கொண்டிருந்தார்கள். தீபாராதனைக்கு "வைத்யநாதாய நமசிவாய:" ஔவைப் பாட்டி போல நம்மை நேரே ஜீவனோடு கைலாயத்துக்குக் கொண்டு சென்றது.
சித்தமெல்லாம் சிவமயமாக, நெற்றி முழுக்க விபூதியுடன் வேஷ்டி சட்டையணிந்த அகோரியாக வெளியே வந்தேன். ஸ்வாமி சன்னிதிக்குப் பின்னால் நவக்ரஹங்கள். எல்லா சிவத்தலங்களிலும் முன்னால் இருக்கும் நவக்கிரஹம் இங்கே பின்னால். ஆதிகாலத்தில் சிவன்கோயில்களில் நவக்ரஹ வழிபாடு இல்லை என்று படித்திருக்கிறேன். இங்கே வைத்யநாதருக்குக் கட்டுப்பட்டு பின்னால் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். வெளிப்பிரகார பிரதக்ஷிணத்தில் பட்டமொளகாவை ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு புளிசாதம் சாப்பிடும் "பிரகாரச் சாப்பாடு" பக்தர்களைக் கூட காணோம்.
வடவண்டை பிரகாரம் ’ஓ’வென்று இருந்தது. பிரதிவருஷம் ஒருநாள் வைதீஸ்வர தரிசனத்துக்கு வரும்போது பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு சமர்த்தாய் நடந்த ட்ராயர் ஆர்.வி.எஸ், என் முன்னே நிழலாய்ச் செல்ல பின்னால் என் மகள் வினயா மொபைலைப் பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். தெற்கு தெருவில் வைத்யநாதக் குருக்கள் ஆத்தில் வந்திறங்கி... "வைதீஸ்வரா.. தையல்நாயகி... முத்துக்குமாரா..." என்று பாட்டி சக ஸ்நானர்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ள... அந்தக் குளத்தில் குளிப்போம்... "பயப்டாதேடா தம்பி... இந்த கொளத்துல சர்ப்பமெல்லாம் கிடையாது..." என்று தலையை தண்ணீருக்குள் போடச் சொல்வாள்.
தையல்நாயகிக்கு மாவிளக்குமா போட்டு... ஐந்து சன்னிதி அர்ச்சனை முடித்து... வைத்யநாத குருக்களிடம் விபூதிப் பிரசாதம் (மருந்து உருண்டை*யோடு) வாங்கிக்கொண்டு கும்மோணம் பஸ் ஏறுவோம். கும்மோணத்திலிருந்து மன்னைக்கு இன்னொரு பஸ். "குருக்களாத்துலேர்ந்து ஒரு மணிக்காணும் கெளம்பிடுவோம்டி பவானி. சாயரக்ஷைக்கு ஆத்துக்குப் போயிடலாம்..." என்று மடிசாரை இழுத்துவிட்டுக்கொண்டு வேகுவேகென்று நடந்த சாரதாம்பாளை நினைத்துக்கொண்டேன். வீட்டு வாசல்படி இறங்கிய பின்னர் வெளியிலிருந்து பச்சைத்தண்ணி கூட பாட்டி பல்லில் படாது. சின்ன மூடி போட்ட சொம்பில் டிகாக்ஷனும்... “பாலுக்கு தோஷமில்லை...” என்று கிடைக்கிற இடத்தில் சூடாய்ப் பாலும் வாங்கி இன்ஸ்டெண்ட் காஃபி குடிப்பாள்.
"இன்னிக்கி கார்த்தாலே குளிக்கமாட்டேன்னு அடம்பிடிச்சியே.. அந்த கொளத்துல சதானந்தர் ஒரு முனிவர் தபஸ் பண்ணிண்டிருந்தாராம். அவர்க்கு முன்னாடியும் நிறைய சித்தபுருஷாள்ளாம் அமிர்தத்துனால வைத்ய நாதருக்கு அபிஷேகம் பண்ணி... அந்த கொளத்துல தபஸ் பண்ணி.. அவருக்கு நமஸ்காரம் பண்ணியிருக்கா.. அதான் அந்த சித்தாமிர்த கொளம். அப்படி சதானந்தர் ஒருநா தபஸ் பண்ணிண்டிருக்கும்போது உஸ்,.உஸ்ஸுன்னு பக்கத்துல ஒரே சத்தம்... கண்ணத் தொறந்து பார்த்தாக்கா ஒரு பெரிய சர்ப்பம்... தவளையைப் பிடிக்க சீறிண்டிருந்தது... தபஸ் கலைஞ்சதுல அவருக்கு கோவம் வந்துடுத்து.. ஒடனே இந்தக் கொளத்துல சர்ப்பமோ... தவளையோ வந்தா செத்துப்போகட்டும்னு சபிச்சுட்டார்.. அதுலேர்ந்து அந்தக் கொளத்துல தவளை... சர்ப்பமெல்லாம் கிடையாது..." என்று மாயூரம் பஸ்ஸிலேயோ கும்மோணம் பஸ்ஸிலேயோ ஜன்னலோரமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு கதை அவளிடமிருந்துக் கிடைக்கும்.
கிழக்கு கோபுரவாசல் பக்கம் ஆதி வைத்யநாதர் சன்னிதி உண்டு. அங்கு வேப்பமரக் கொழுந்து பறித்து வாயில் போட்டுக்கொள்வது என் பாட்டிக் காலத்துப் பழக்கம். “தீராத வியாதியெல்லாம் சொஸ்தமாயிடும்...” என்று ஐந்தாறு இலைகளை கசப்பால் என் முகம் சுளிக்கத் தின்பாள் பாட்டி அந்த மரம் க்ருத யுகத்தில் கதம்ப வனம், த்ரேதா யுகத்தில் வில்வ வனம், துவாபர யுகதில் வகுள வனம், யுகம்யுகமாய் வெவ்வேறு மரமாக இருந்தது என்றும் கலியுகத்தில் வேம்பு வனம் என்றும் ஒரு போர்டு வைத்திருப்பார்கள்.
நவக்ரஹங்களில் இது செவ்வாய் ஸ்தலம். அங்காரகன் மூலவர் தனியாய் இருந்தார். சாயரட்சையில் யாரோ மொட்டையடித்துக்கொண்டு கையில் அகல் விளக்கோடு அங்காரகனைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். தரிசனம் முடித்து கொடிமரத்தடியில் நமஸ்கரித்தோம். எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் யானையைக் காணவில்லை.
சேப்பாயியைக் கிளப்பும்போது "மன்னைக்குத்தானே" என்று அது கேட்டதுபோல இருந்தது. "ஆமாம்..." என்று மனசோடு சொல்லிக்கொண்டு முன் விளக்கு இரண்டும் ஒளி பாய்ச்சி வழிகாட்ட மாயூரம் சாலையில் விரைந்தேன்.
*மருந்து உருண்டை: அபிஷேகம் செய்த தீர்த்தம், சந்தனம், விபூதியோடு வேப்ப இலை மற்றும் புற்று மண்ணால் தயாரிக்கப்படும் திருச்சாந்து உருண்டை. சர்வரோக நிவாரணி.
0 comments:
Post a Comment