சினிமாக்களில் நெகிழ்ச்சியோடு வரும் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு ஒத்தவை பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் வரும் பயணி ரூப வழித்துணைகள். அவர்களுக்கு பல விதங்களில் ஒத்தாசை செய்வார்கள்.
பரபரப்பான அலுவலக நேரக் காலை. பெரிய சிந்தால் கொள்ளுமளவுக்கு சோப்பு டப்பா போன்ற சிற்றுந்து அது. ஒரு பஸ்ஸுக்குள் இரண்டு பஸ்ஸில் ஏறவேண்டியவர்கள் பொட்டிப்பாம்பாக அடங்கி வந்துகொண்டிருந்தார்கள். இதற்கு முன்னர் வரவேண்டிய பஸ் வரவில்லை. “ரெண்டு நாளைக்கு ஒரு தபா வேணுமின்னே செட்டுக்கு கொண்டு போயிடறானுங்கப்பா...” என்று மூத்த பயணி ஒருவர் ஸ்வாதீனமாக ஏப்பம் விடுவது போல அங்கலாய்த்தார். பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கும் போது பயணிகளின் உடம்பின் ஷாக் அப்ஸார்பர்கள் பரிசோதிக்கப்பட்டன. கெட்டிச் சட்னி வைத்து பத்து இட்லி சாப்பிட்டுவிட்டு ஏறினாலும் இரண்டு கி.மீயில் ஜீரணம் ஆகிவிடும்.
கொஞ்சமும் எதிர்பார்க்காதபோது திடுமென்று குறுக்கச்சந்திலிருந்து பன்றி புறப்பட்டது போல படகுக் கார் ஒன்று மெயின் ரோடை எட்டிப் பார்த்தது. முன் படிக்கட்டருகே நின்றிருந்த வழித்துணைக்கு வந்ததே கோபம்.
“பரதேசி.. பரதேசி... பார்த்து வர்றானா பாருங்க.... பணம் இருந்தா போதுமா? படிச்சிருந்தா போதுமா? புத்தி வேணாம்...” என்று பிபி எகிறக் கையைக் காட்டித் திட்டினார். உயர்ரக கார் அது. அதுக்குண்டான கர்வத்தோடு பின்னால் நகராமல் நின்றது. பஸ் ஓட்டுனர் கட்டிளம் காளை. அநீதி கண்டு பொங்குபவர் என்று கண்களில் தெரிந்தது. அவரும் வண்டியை நகர்த்தவில்லை. இருவருக்கும் அங்கே மௌனமாக ஒரு துவந்த யுத்தம் தொடங்கியது. வழித்துணைகள் சில சமயங்களில் ட்ரைவரின் கைக்கூலிகளாகவும் செயல்படுவர்.
வண்டியிலிருந்து குதித்து இறங்கினார் அந்த ஓட்டுநர்களின் மித்ரன். ஏகத்துக்கு திட்டி அவனைக் கிழித்துவிடுவது என்று வைராக்கியமாகப் புறப்பட்டார். ஒத்தையாளாக போரிட்டு இந்த பஸ்ஸை மீட்பது அவரது சபதம். பஸ்ஸின் கடைசி சீட்டிலிருந்து அவர் என்ன செய்கிறார் என்று சரியாகத் தெரியவில்லை. வாய்வார்த்தையாக பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் பின்னங்கால் பிடறியில் அடிக்க முன்படியில் ஏறிக்கொண்டு.... “போலாம்ப்பா... கொஞ்சமா ரைட்டில் ஒடிச்சு முன்னாடி போயிரு....” என்று ட்ரைவருக்கு வழி காண்பித்து அழைத்துப்போனார். வீராவேசமாக வண்டியிலிருந்து இறங்கிய ஓடியவர் ஜீவகாருண்ய அகிம்சாவாதியாக திரும்பிய மர்மம் என்ன?
இறங்கும் வரை யாரிடமும் அவர் பேசவில்லை. வாயடைத்துப்போய் வந்தார். கடைசியாக நடத்துனர் காதோடு காதாக “யாரது?” என்று கிசுகிசுத்தபின்பு “அந்த வண்டியோட ஓனர்தான் என் கம்பெனியோட ஓனரு... காரு புதுசு போலிருக்கு.. எனக்கு அடையாளம் தெரியல்லே.” என்று பதிலளித்துவிட்டு விரோதமாக இறங்கி அடுத்த பஸ்ஸைப் பிடிக்க ஓடினார்.
1 comments:
பொட்டிப் பாம்பாக அடங்கியதன் காரணம் - பிழைப்பு தான்!
நல்ல அனுபவம்!
Post a Comment