"நான் சொன்னா மாதிரி நடந்துக்கிட்டா உனக்கு ஒரு ராஜயோகம் அடிக்கும்” நூத்தி ஒண்ணாவது தடவையாகச் சொன்னான் சுப்பு. கோயிந்துக்கு அவன் மேல் ஏகக் கடுப்பு. பின்னே... அரை மணி நேரமா இதையே சொல்லி.... அவனிடம் காஃபி சமோசா அதுக்கு மேலே சிக்கு ஜூஸ் என்று கண்டதையும் அவன் காசில் வாங்கித் தின்று ஏப்பம் விட்டுவிட்டான்.
இனிமேல் பொறுத்துப் பிரயோஜனமில்லை என்று அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துவிட்டான் கோயிந்து.
“கழுத்தை விடு சொல்றேன்...” என்று திமிறி தன்னை விடுவித்துக்கொண்டு ஒரு மணி நேர பீடிகைக்குப் பின்னர் தொடர்ந்தான்.
”நேத்திக்கு பஸ்ல போனேன்..”
“அதே புராணம்ந்தானே அரை மணி நேரமா சொல்லிக்கிட்டிருக்கே...மேலே போடா...”
“பஸ்ல ஒரே கூட்டம். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்ப முடியலை... இந்தப் பக்கம் திரும்பினா ரெண்டு முட்டியும் கழண்டு போறா மாதிரி இடிக்கிறது.. அந்தப் பக்கம் திரும்பினா ரெண்டு பேர் பையோட ஜிப்பு சதையைக் கிழிக்கிறது.... கிட்டத்தட்ட பஸ்ஸுக்குள்ளயே நகரமுடியாத ஜெயில்.. அதாவது மொபைல் ஜெயில்....”
பூர்வ பீடிகை முடிந்து இன்னும் விஷயத்துக்கு வராமால் ஜவ்வாக இழுத்தவனை பிடித்து கீழே தள்ளி நாலு சாத்து சாத்தவேண்டும் என்று வெறி எழுந்தது கோயிந்துவுக்கு. சொன்னவன் தூரத்து உறவினன் வேறு. அவனுடைய சாதுவான அப்பாவுக்காக மன்னித்து விட்டான்.
“ .. இதுக்கும் ராஜயோகத்துக்கும் என்ன சம்பந்தம்...”
“இல்ல... அப்படியிருக்கும் போது என் காலுக்கருகிலே இருந்த சீட் காலியானது. யாரும் நகர்ந்து உட்காருவதற்குள் என்னோட பையை த்ரோ பாலாகப் போட்டுவிட்டு அதன் மேல் ஜம்மென்று விழுந்து உட்கார்ந்துவிட்டேன்... ம்யூசிக்கல் சேரில் நான் உட்காராத போது பின்னால் ஓடி வந்து குனிபவனுக்கு சேரை இழுத்துவிடும் குறும்புத்தனம் என்னிடம் உண்டு. தொபகடீர் என்று குதித்து நான் உட்கார்ந்ததும் ஜன்னலோர மாமா முகத்தை சுளித்துக்கொண்டு ரோடோர சாக்கடையைப் பார்த்து திருப்தியானார்.”
கோபாலகிருஷ்ண பஜனை மடத்தில் ஒரு வருஷமாக விஸ்தாரமாக நடக்கும் இராமாயண பிரவசனம் முடிந்துவிடும் போலிருந்தாலும் இவனது இந்த அமட்டலான பஸ் புராணம் ஓயாது போலிருக்கிறது. எல்லாம் விதிப்பயன் என்று நொந்துகொண்டு....
“சரிடா.. இன்னும் என்னைக் கொல்றியே... மேலே சொல்லு..”
”ஒரு ஸ்டாப் தாண்டியிருக்கும். ஒரு வயசானவர்.. காதுல செவிட்டு மெஷினும்... கையில ரெண்டு துணிமணி மூட்டையுமா ஏறினார். பாவமா இருந்தது.. உடனே என்னோட பிறவி தயாள குணம் எட்டிப் பார்க்க.. நீங்க உட்காருங்கன்னு சடார்னு எழுந்துட்டேன்”
“அடடே.. பரோபகாரமா? பேஷ்.. பேஷ்.. அப்புறம்?”
“இன்னும் ரெண்டு ஸ்டாப்ல அவர் எழுந்துட்டார். நானும் உட்கார்ந்தேன். என் பக்கம் ஜன்னல்லே இருந்தவர் அடுத்த ஸ்டாப்ல எழுந்துண்டார். அந்தப் பக்கம் நகர்ந்தேன். எங்கியோ இருந்த ஒரு செவசெவ மாது... ஜிங்குன்னு வந்து என் பக்கத்துலே உட்கார்ந்தா... பூனைக் கண்ணு... கட்டியிருந்த புடவையில அவளோட வீட்டு கஜானா சைஸ் தெரிஞ்சுது... நா இறங்கறவரை ஜிலுஜிலுன்னு கூடவே... இதைவிட ராஜயோகம் ஒண்ணு இருக்கோ?.” கேள்வி கேட்ட சுப்பு இன்னொரு தடவை அதை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்து அனுபவிப்பது போல இருந்தது.
“ம்... இன்னிக்கி நீயே ஒரு மாத்து சிவந்திருக்கியே...உரசின வெக்கமா? இல்லே அந்தக் கலர் ஒட்டிக்கிச்சா?” என்று கோயிந்து அவனுக்கு லாஹிரி ஏற்றிவிட்டான். அப்படியே சொக்கிப்போயி உட்கார்ந்திருந்த சுப்பு “இதுலேர்ந்து உனக்கு என்ன புரிஞ்சுது?”
“என்ன புரிஞ்சுது? பஸ்ல... பக்கதுல... யாராவது இந்த மாதிரி வந்து உட்கார்ந்தா.. அன்னிக்கு சாயங்காலம் ஓசியிலே காஃபி சமோஸா ஜூஸெல்லாம் வகைதொகையில்லாமல் கிடைக்கும்னு புரிஞ்சுது”
”ச்சே.. படுவாப் பயலே.. புரியாதமாதிரி நடிக்கிறியே”
அவனை எரித்துவிடுவது போல பார்த்துக்கொண்டு “சுத்தமா புரியலேடா சொல்லித்தொலை..” என்றான் சம்மதமாக கோடாரிக்கு தலையைக் கொடுப்பது போல கோயிந்து.
”ச்சே. இப்படி அடி முட்டாளா இருக்கியேடா.. யாராவது வயசானவருக்கு இடம் கொடுத்தா.. உம் பக்கத்துல ஒரு ரூபவதி உட்காருவா... இதுதான் ஆண்டவன் கட்டளை... இயற்கையின் விதி.."
மறுநாள் காலை ஒன்பது மணி.சுப்பு பஸ்ஸின் முன் படிக்கட்டுப் பக்கம். கோயிந்து பின் படிப்பக்கட்டுப் பக்கம் ஏறினார்கள். ஒரு வயதான் ஆள் கிடைக்கமாட்டானா அவனுக்கு இடம் கொடுத்து நமது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க பொன்னான நேரம் வாய்க்காதா என்று நாக்கைத் தொங்கப்போட்டு காத்திருந்தான் கோயிந்து.
சுப்புவுக்கு நடந்த அதே மங்களகரமான நிகழ்ச்சி அவனுக்கும் நடந்தது. ஒரு வயதானவர் அதே லக்ஷணங்களோடு ஏறினார். கோயிந்து இடம் கொடுத்தான். அடுத்த ஸ்டாப்பில் இறங்கினார். திரும்பவும் உட்கார்ந்தான். ஜன்னல் பக்கத்திலிருந்தவரும் அதற்கு அடுத்த ஸ்டாப்பில் இறங்கினார். ஜன்னலோரம் நகர்ந்து உட்கார்ந்துகொண்டான். செவசெவ என்று ஒரு ரூபவதி பக்கத்தில் வந்து உட்கார்ந்து பல் தெரியாமல் அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
கோயிந்துக்கு ஜிலேபி சாப்பிட்ட மாதிரி ஆனது. கிர்ரென்று உச்சந்தலைக்கு ஷாக் அடித்தது போல ஏறியது. தலைகால் புரியவில்லை. முன் படிக்கட்டில் ஏறிய சுப்பு பொதுப்பரீட்சை மதிப்பெண்கள் பார்ப்பது மாதிரி பின்னால் பார்த்துக்கொண்டிருந்தான். நேற்று நடந்தேறிய அனைத்து காட்சிகளும் சுபமாக முடிந்தது.
இருவரும் இறங்கவேண்டிய இடம் வந்தது.சுப்பு கோயிந்துவிடம் அவசராவசரமாக ஓடிப்போயி....
”என்னடா? சொன்னது நடந்ததுதா?”
“ம்.. ராஜயோகம்தாண்டா... “
“இன்னும் கொஞ்சம் பொறு. அதுவும் சரிதானான்னு பார்த்துடலாம்”
“எதுவும் சரிதானா?”
“இன்னிக்கி நாந்தான் உனக்கு காஃபி வாங்கித்தரணுமான்னு பார்ப்போம்” என்று கள்ளத்தனமாக சிரித்தான்.
“ஏன்?”
“உன் கிட்ட பர்ஸ் இருக்கா பாரு?” என்று சுப்பு கேட்டு கோயிந்து பரபரவென்று பாண்ட் சட்டையெல்லாம் தடவிப் பார்த்து கிடைக்கவில்லை. “டேய்..... அயோக்கியப்பயலே... நீ பரீட்சை பண்ணிப் பார்க்க நாந்தான் கிடைச்சேனா? “ என்று சுப்புவை அடிக்கக் கிளம்பும்போது அவன் அங்கிருந்து மாயமாய் மறைந்துவிட்டான். அன்றிலிருந்து இதுபோல ராஜயோகங்களை கோயிந்து அறவே நம்புவதேயில்லை.
1 comments:
ஹாஹா.. பர்ஸ் போச்சா... :)
தில்லி மெட்ரோவில் நிறைய பிக் பாக்கெட்ஸ்... அதில் 90% பெண்கள் தான் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என ஒரு தகவல்! :)
Post a Comment