Friday, August 19, 2016

தெறி

“தெலுங்கு ஹீரோயிந்தானே” என்று பசங்களிடம் சீரியஸாகக் கேட்டேன்.
“யாரு தெலுங்கு?”
“ரோஸு கலர்ல... நெட்டையா... டீச்சரம்மாவா வருதாமே.. அது”
“ச்சே... அவ ஃபாரினர்பா... ’ஐ’ல வந்தாளே...”
“ஏமின்னுதானே பேரே ஆரம்பிக்குது? ஏமி.. எக்கட உந்தி... மீரு.. பீருன்னெல்லாம் வந்தாக்க சுந்தரத் தெலுங்குதானே... ”
“டாய்ய்ய்ய்ய்ய்....” என்று பட்டாக்கத்தியோடு பஜாரில் நேர்மையான ஒரு அப்பாவியைத் துரத்தும் ரௌடிக்கள் போல என்னை கார் பார்க்கிங்கிலேயே ஓட ஓட விரட்டினார்கள். விஜய்குமார் டி.சி காப்பாற்றுவார் என்று தப்பிப்போய் தியேட்டருக்குள் நுழைந்தேன்.
இரவு பத்தே முக்கால் ரெண்டாம் ஆட்டத்திற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது விஜய்யின் “தெறி”. வாத்தியாரிடம் குச்சி கொடுத்து அடி வாங்குவது என்பது நமக்கு பள்ளிக்கால பழக்கம். அதுபோல சொ.செ.சூ. பக்கத்தில் விஜயா மருத்துவமனை ஆம்புலன்ஸிலிருந்தெல்லாம் வந்து இறங்கி படத்துக்கு வந்தார்கள். ”போகும்போது ஆம்புலன்ஸ்தான்டி...” (உனக்கு சங்குதாண்டி என்கிற ஃபேமஸ் வசனம் போல படித்து இன்புறவும்) என்பது தெரியாமல்...
நாயகன் பெயர் போடும் போது தொண்டை வறள கத்தும் கலாசாரம் தமிழர்க்கே உரிமையானது என்பதை எம்மக்களும் நண்பர் ரவீந்திரன் மக்களும் விஜய் பெயர் டைட்டிலில் போட்ட போது அலறியபோது புரிந்தது. பின்னர் படம் பூரா நமக்கு அலறல்தான் என்பதை அறியாத பிஞ்சுகள்.
“இந்தக் கால டைரக்டர்ஸையெல்லாம் பாரட்டணும்ப்பா?”
“ஏன்?”
“குளிக்காம... அழுக்கா... கலர்க் கலர் ஜடாமுடியோட... கைலி கட்டிக்கிட்டு “த்தோ பார்ரா... சிலுத்திக்கிட்டு வந்துட்டான்.... இன்னாடா டோமரு...”ன்னு செ.செந்தமிழ்ல பேசிக்கிற பத்துப் பதினஞ்சு ஸ்டண்ட புதுமுகங்கள் ஒவ்வொரு படத்துக்கும் அறிமுகப்படுத்துறாங்களே...”
”போடாங்....” பார்வை என் மீது விழுந்தது. என் முகத்தில் குத்து விழும் அபாயம் இருந்ததால் சப்தநாடியும் அடங்கிப்போய் மீண்டும் திரையைப் பார்க்க ஆரம்பித்தேன்.
மரத்திற்கு பெயிண்ட் அடித்தல்... பச்ச.சேப்பு நீலம் என்று ஒரே காஜியான அடிக்கும் வர்ணப் பின்னணியில் நாயகநாயகியரை விலுக் விலுக்கென்று சுளுக்கெடுக்கும் அரை ஆடவிடுவது என்ற படமெடுக்கும் பாங்கில் ஷங்கரின் சிஷ்யன் அட்லீ என்பதும் அவர் குருஸ்மரணோடு இருக்கிறார் என்பதும் பளிச் பளிச் பாடல் காட்சிகளிலிருந்து கண்டுபிடிக்கமுடிகிறது.
கேரள பூமியை கேமிரா நன்காக விழுங்கியிருக்கிறது. பசேல் என்று இந்தக் கோடைக்கு கண்ணுக்கு குளிர்ச்சி.
“இதுக்கு தம்பி ஜிவி பிரகாசுதானே ம்யூஜிக்கு” என்று மறுபடியும் பக்கத்தில் நோண்ட ஆரம்பித்தேன்.
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”
“இல்ல... இந்தப் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷா?”
“ஆமா.. இது அம்பதாவது படமாம். இப்ப என்ன திடீர்னு கேட்டாறது?’
“இப்போ சைந்தவி குரல் மாதிரி கேட்குது.. அதுவும் யாரோ இவன்..யாரோ இவன் பாட்டு ஹிட் ஆனத்துக்கப்புறம் தன்னோட இசையில சைந்தவி பாடற எல்லாப் பாட்டையும் அப்படியே அடித்தொண்டையில பாட விட்டு அவரோட குரலுக்கு சுளுக்கெடுக்கிறாரே... பாவமா இல்லே...”
“ஹஸ்கி வாய்ஸாம்.. இப்ப என்ன அதுக்கு?”
“வாய்ஸ் பாங்க் அப்டீன்னு ஒண்ணு இருக்காமே... அதுல கொண்டு போய் சைந்தவியோட குரல டெபாஸிட் பண்ணிட்டு... ஜிவிகிட்டேயிருந்து நிரந்தரமாக் காப்பாத்த முடியுமான்னு பார்க்கணும்ப்பா...” என்றேன் பரிதாபமாக.
”ஒழுங்கா படம் பார்க்க முடியாதா?’
“படம் ஒழுங்கா இருந்தா.. நான் ஏன் பக்கத்துல சொறியறேன்...”
விஜய் தேகம் இளைத்து பூவே உனக்காக இரண்டாவது பார்ட் எடுப்பதற்கு தயாராக இளைமை சொட்ட இருக்கிறார். சமந்தா சிரிக்கும் போது ஐம்பதே வயது முதிர்கன்னியாகவும் வாய் மூடி அடக்கமாகத் தோன்றும் போது “பரவாயில்லை.. பார்க்கலாம்பா.. மிரளாத....கண்ணைத் தொற...” போலவும் தெரிகிறார். கால்வாசி படம் ஓடியவுடனேயே ”அஜீத்தோட என்னை அறிந்தால் மாதிரிதாம்பா இது...” என்றார் என் தர்மபத்னி. திரிஷாவுக்கு ஏன் இன்னும் மார்க்கெட் இறங்கவில்லை என்பதன் சூட்சுமம் புரிகிறது. அனுஷ்காவின் பக்தர்கள் ஏன் அவருக்குப் பால் காவடி எடுக்கிறார்கள் என்பதும் நயன் தாராவின் வெறியர்கள் அவருக்காக மண் சோறு சாப்பிடும் மகத்துமும் நமக்கே விளங்குகிறது.
எனக்கென்னமோ அட்லீ “காவல்துறைப் படங்களின் சிற்பி” கௌ.வா.மேனனிடம் நுட்பப் பயிற்சி எடுத்து, முழு காக்கியில் கழுத்தளவு தண்ணீரில் நின்று அசுர சாதகம் செய்தால் போலீஸ் யூனிஃபார்ம் படங்களை எப்படியாவது நம்மைப் பார்க்கவைக்கும் சூட்சுமத்தை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அன்னிய நாட்டு முதலீடு பல்வேறு துறைகளில் பல்கிப் பெருகுவது போல கோலிவுட் நடிப்புத்துறையிலும் அமோகமாக பெருகி வருகிறது. ஏமி ஜாக்ஸன் ( பார்க்கும்போதெல்லாம் “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?” என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது) மற்றும் ஷிர்க் போன்ற மாமிசமலையாக ஒரு வெள்ளைக்காரர். முன்பெல்லாம் ரஜினி படங்களில் வருவாரே ஒருத்தர்.. “இந்த பீடி அணையறத்துக்குள்ளே உன்னை முடிக்கறேன்...” என்று கையில் அகப்பட்ட ஃபுட்பால் மாதிரி ரஜினி உருட்டி உருட்டி விளையாடுவாரே... அது மாதிரி ஒருத்தர்..
ஏமி ஜாக்சனை மலையாள மொழிக்காக வாயசைக்க வைத்திருக்கிறார்கள். அவரது லிப்ஸ்டிக்கும் குவிந்த அதரங்களும் கண்ணை இழுத்ததால் அவர் சூயிங்கம்மிற்குதான் வாயசைத்தார் என்பது யாருக்கும் புரியாமல் போவது போல படமெடுத்த அட்லீ இயக்குனர்களில் சிகரமாக... ஐயய்யோ.. அது வேற ஒருத்தரா... இமயமாக.... ஐயய்யோ... அதுவும் சொல்லக்கூடாதே.... ஆல்ப்ஸ் மலையாக உயர்ந்து நிற்கிறார்.
ஹாங்... ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். “ரஜினி அங்கிள்....” என்று கூவி குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் பெண் லீட் ரோலில் நடித்திருக்கிறது. “பேபி..பேபி...” என்று பேசும் அந்தப் பேபிதான் படத்தின் டாப் கேரெக்டர். மழலை கொஞ்சும் குரலில் அற்புதமான நடிப்பு. சினிமாக் குழந்தைகளின் “அதிகப்பிரசங்கி” பேச்சு தர்மத்தை இதுவும் கடைபிடித்தது.
“அவரு ரொம்ப சிகரெட் பிடிப்பாராப்பா?”ன்னு கேட்டாள் மானஸா.
“எவரு?”
“விஜய் ஃபேமிலியை பழிவாங்கறாரே... அவரு...”
மகேந்திரனைக் கேட்டாள். அவருக்கு நடிக்க இன்னும் நல்ல தீனி போட்டிருக்கலாம். டைரக்டராகப் பார்த்தவரை கடைசி சீனில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். நியாயமாகப் பார்த்தால் விஜய் ரசிகர்கள் அட்லீயை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடவேண்டும். அட்லீயின் ராஜா ராணி திரைப்படம் தொய்வில்லாமல் இருந்தது. பாராட்டப்பட வேண்டிய படம். இது அவ்வளவு சுகமில்லை.
நமது தமிழ்க் கலாசார சாமுத்ரிகா லக்ஷணமில்லாதவர்களை ரசிக்கும் மனோபாவம் இளைஞர்களிடம் பரவிவருவதன் தாக்கம் ஒரு வரிசை முழுக்க அமர்ந்திருந்த இளைஞர்கள் ஜொள் வடிய ஏமி ஜாக்சன் குவித்த வாயோடு இடுப்பசைத்தக் கடைசிப் பாடலைப் பார்த்தபோது தெரிந்தது. கண்றாவி.
நல்ல வலுவான கதையம்சமிக்க படங்கள் எதுவும் திரைக்கு வராததாலும், தோழா ஓடி அயர்ந்துவிட்டதாலும், கோடை விடுமுறையில் பசங்கள் தொந்தரவினால் பெற்றோர் சினிமாவுக்கு வருவதாலும் தெறி பிழைத்துக் கொண்டது. அப்படியும் சினிமா விட்டதும் எல்லோரும் தெறித்து ஓடிவந்தோம்.
உதிரியாய் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் செல்லும் சாலையிலே, படம் பார்த்த சோர்வில் சேப்பாயியை உருட்டிக்கொண்டு வரும் போது கடைசியாய்க் கேட்ட பாடல் மட்டும் நினைவுக்கு வந்தது. "உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே....” என்ற பாடலோடு படத்துக்கு சுபம் போட்டிருந்தார்கள்.
அப்பாடல் ஒரு குறியீடு என்ற நினைக்கிறேன். நான் இப்படிப் பார்ப்பதால் நீ கெட்டாய்... நீ இப்படி நடித்தே என்னைக் கெடுத்தாய்.... உன்னால நான் கெட்டேன்.. .என்னால நீ கெட்டே...உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்டே... தூக்கம் வராமல் படுத்தியது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails