எஸ்டேட் பே.நியில் துள்ளிக் குதித்து பஸ்ஸேறியவர் கையில் பச்சைக் கலர் அழுக்கு ப்ளாஸ்டிக் வாளி. அதில் மஞ்சள் சிப்பிகள் போல சமோசாக்கள் ரொம்பி வழிந்துகொண்டிருந்தது. அதைத் தன் புழுதி படிந்த ஆடுசதையில் இடித்துக்கொண்டே “ரெண்டு ரூவா சமோசா.. சமோசா ரெண்டு ரூவா” என்று அந்தாதி பாடி விற்றார். ஓரிருவர் வாங்கி வாயில் தள்ளினார்கள். அவர் முன்பக்க படியில் இறங்க பின்பக்கமாக “அஞ்சு ரூபா பாப்கார்ன்” ஏறினார். ரொம்பவும் டீசண்டாக பேண்ட்டும் டக்கின் செய்த சட்டையுமாக இருந்தார். பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் போல அடிக்குரலில் சாந்தசொரூபியாகப் பேசி விற்றார்.
இரு தீனி வியாபாரிகளும் இறங்கியபின்னர் “ஆமா... அவ பெரிய கைகாரி.. மாட்னே உன்னிய மிக்ஸில அரைச்சு குடிச்சுடுவா...” என்று சீரியல்களில் தூபம் போடும் கொலைமிரட்டல் வில்லியாக அலைபேசிக்கொண்டே ஏறினார் ஒரு சீமாட்டி. அவருடைய குரலை மீறி கடலை வண்டியின் “டன்..டின்..டட்டடின்..ட்ட்டிட்டின்....” கேட்டது. நடுவிரல் நீளமும் ஒரு கடலை மேல் இன்னொருகடலை உட்காருமளவிற்கு அகலத்திலும் விசேஷ கூம்பு செய்து, பாக்கெட்டுக்குப் பத்து ரூபாய் பண்ணிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு பஸ் ரிவர்ஸ் எடுக்கிறார்கள். ”வரலாம் வா.. வரலாம் வா.. வரலாம் வா...” என்பதற்கு விசிலால் ஒலிவடிவம் கொடுத்து கடைசியில் ”நிறுத்து போதும்” என்பதற்கு ஒரு லாங் விசில் கொடுத்து நிறுத்தினார்.
நானேறிய பஸ் கிளம்புவதற்கு முன்னர் இரண்டு ”டி எழுபதுகள்” டர்புர்ரென்று சீறி, உறுமி, புகை கக்கி அந்த தேவலோகப் புகை அடங்கும் முன் மறைந்துபோனது. நமக்கு என்றைக்கு திருநாளோ என்று தேவுடு காத்திருக்கும் போது, பஸ்ஸோடு கடத்திக்கொண்டு போவது போல முன்னால் ட்ரைவரும் பின்னால் நடத்துனரும் ஓடிவந்து குதித்து ஏறி விரட்டினார்கள். கொஞ்ச தூரத்தில் எதிர்ப்பட்ட முதல் நிறுத்தத்தில் இருவர் ஏறினார்கள். அதிகபட்சமாக இருபது விநாடிகள் ஆகியிருக்கலாம். அதற்குள் பின்னால் இருசக்கரத்தில் வந்தவர் லூஸ் மோஷன் வந்தவன் கொல்லைக்குப் போகும் அவசரத்தில் இருப்பது போல ஒலியெழுப்பினார்.
ட்ரைவர் அதைச் சட்டை செய்யவே இல்லை. கொஞ்சம் நகர்ந்தபின் பஸ்ஸை வலம் வந்து ட்ரைவர் அருகில் வந்ததும் இன்னொரு முறை ஆத்திரம் தீர ஒலியெழுப்பி தனது எதிர்ப்பைக் காண்பித்துக் கடந்தார் அந்த ஹெல்மெட்காரர். அவருக்கும் சீக்கிரமே பிறரால் ஹார்ன் சப்த ப்ராப்திரஸ்து.
களேபரங்கள் அடங்கியது போல தெரிந்தது. திடீரென்று பேருந்தே முறிந்து விழுவது போவது போல பெரிய சப்தம். இரா. முருகனின் (EraMurukan Ramasami) “அச்சுதம் கேசவம்” படித்துக்கொண்டிருந்த எனக்கு கிலி பிடித்துத் தூக்கிவாரிப் போட்டது. எதாவது விபத்தா? யாரையாவது தூக்கிட்டாங்களா? சக்கரத்துக்கு அடியிலே போயிட்டானா? என்றெல்லாம் விபரீத எண்ணங்கள் ஓடியது. என்னைத் தவிர யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பேருந்து சீரான வேகத்தில் முன்னேறியது. அமைதியானேன்.
இன்னும் கடந்தோம். திரும்பவும் மடேர் மடேரென்று சப்தம். ஒரு தேர்ந்த துப்பறிவாளன் போல கவனத்தைக் குவித்துப் பார்த்தேன். அது ஒன்றுமில்லை. இந்தப் பேருந்திற்கு முன்னும் பின்னும் இரு தானியங்கி நிலைவாசல்கதவுகள் இருக்கிறது. பஸ்ஸிலிருந்து யாரேனும் தப்பித்து குதித்தோட முடியாதபடி அதை பட்டன் அழுத்தி அடைக்கும் போது எழும் சப்தம்தான் அது. பல்லாண்டு காத்திருந்தவன் முதலிரவு அறைக்குள் நுழைந்து அவசரத்தில் தாழ்ப்பாள் போடும் கதியில் அந்த கதவுகளை சார்த்திக்கொண்டிருந்தார் ஓட்டுனர்.
எங்கிருந்தோ வந்து சரேலென்று பஸ் முன்பு ஒரு முறை படுத்தெழுந்து தொழுது டர்ர்ர்ர்ரிக்கொண்டு ஒரு வாலிபன் சென்றான். தெருவோர அஜீத்.ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சறுக்கினாலோ நாய் குறுக்க்கே சென்றாலோ நாய்க்கு நாலு எலும்பு கூட மிஞ்சாது.
ஐந்தாறு நிறுத்தங்கள் சமாதானமாக கடந்து போயிற்று. பாரதப் போரில் பகவான் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதுவது போல ஒரு சங்கொலி எழுந்து காதை “ஞொய்.....”யென்று அடைத்தது. அவர் ஒரு டாடா 407. சரக்கு லாரி. மாநகரப் போக்குவரத்தில் எரிச்சலுற்று க்ளட்ச் கியர் போடும் வேலையெல்லாம் விட்டுவிட்டு ஹார்ன் அடிப்பதையே பிரதானத் தொழிலாகக் கொண்டு நின்றிருந்தார். எங்கள் பஸ்ஸின் ஓட்டுனர் காதில் பஞ்சடைத்திருக்கிறாரா அல்லது அதற்கு அவசியமில்லாத காதா என்று தெரியவில்லை. ”என் கடன் பஸ்ஸோட்டிக் கிடப்பதே” என்று தேமேன்னு உருட்டினார்.
முன் ஜென்மத்தில் இசைவாணராக இருந்த ஒருவர் ஆம்னி பஸ் ட்ரைவராக பிறந்திருக்கிறார். பஸ் ஓட்டும் போது அவரே பின்னணி இசையாக ஹார்னை ஹார்மோனியமாக வாசிக்கிறார். அவர் ஒரு முறை அழுத்தினால் “ட்ர்ரிர்ரீரீரீஈய்ய்ங்.” என்று ராகம் பாடி ஓய்கிறது. வடபழனி தாண்டியதிலிருந்து அவருடைய ராஜாங்கம்தான். ஸ்டியரிங் இடது ஒடித்தால் ஒரு “பாம்...” வலது ஒடித்தால் “பாம்..பாம்”. கை அசரமால் ஹார்ன் அடிக்கும் அவருக்கு ”பாரத் ஹார்னா” விருது கொடுத்து கௌரவிக்கலாம்.
நானாவித ஒலிகளைக் கேட்டு அசந்த காதோடு வேளச்சேரி இறங்கிவிட்டேன். நிதானமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது எங்கள் பகுதிக்குச் செல்லும் ஸ்மால் பஸ் வந்தது. கூட்டமில்லை. நல்ல காற்றோட்டமாக இருந்தது. “அந்த பிள்ளையார் கோயில்கிட்டே நிறுத்துவீங்களா?” என்று உத்திரவாதம் வாங்கிக்கொண்டு டிக்கெட் எடுத்தேன். ஏதோ டியெம்மெஸ் குரலில் பாட்டு ஒலிப்பது போன்ற பிரமை. பஸ்ஸுன் கூரையைப் பார்த்தேன். அது ஒண்ணும் எங்க ஊரு கணேசா மாதிரி டேப் வச்ச வண்டியில்லை.
என்னுடைய நிறுத்தம் நெருங்க நெருங்க பாட்டுச் சத்தம் நன்றாகக் கேட்டது. இப்போது வரிகள் கூட காதில் விழுகிறது. திரும்பிப் பார்த்தேன். படியைத் தாண்டி கடைசி வரிசையில் வெள்ளை வேஷ்டி சட்டையில் இருப்பவரிடமிருந்துதான் பாட்டு வருகிறது என்று கண்டுபிடித்துவிட்டேன். இரண்டு பள்ளங்களில் பஸ் குதித்து எழுந்தது. பார்வையை அவர் பக்கம் திருப்பினேன். அவரது வெள்ளைச் சட்டைப் பாக்கெட்டில் குட்டியாக சிகப்பில் ரேடியோ போன்ற வஸ்து தெரிந்தது. பிள்ளையார் கோயில் வந்துவிட்டது. படியில் நின்று கொண்டிருந்தேன். இதோ இறங்கப்போகிறேன். அப்போது காதில் விழுந்த பாட்டு....
“புதிய வானம்..... புதிய பூமி... எங்கும்.....”
மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன். தெரு நிசப்தமாக இருந்தது
1 comments:
பேருந்து அனுபங்கள்... சுகம்!
பேருந்து கதவைச் சாற்றுவதற்குத் தந்த ஒப்பீடு - கலக்கல்! :)
Post a Comment