Friday, August 19, 2016

அலாரத்தை எழுப்புங்கள்

”நல்ல கணவராய் நலமுடன் வாழ்வது எப்படி?”
“பத்தே நாட்களில் நீங்களும் கோடீஸ்வரனாகலாம்”
“சுலபமாய்க் காதலிக்க பத்து எளிய யோசனைகள்”
இது போன்ற புத்தி புகட்டும் புத்தகங்கள் படித்துத் தேறிவிடலாம் என்று நினைப்பது துர்லபம். எனக்கு இந்த வகையறாக்களில் ஒரு சொட்டுக் கூட இஷ்டமில்லை. ஆனால் சதா பாரதியின் இத்தகைய புத்தகங்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக பழமொழிகள், புதுமொழிகள், தெனாலிராமன் கதை, சிலப்பதிகார வரிகள் என்று பல்வேறு இடத்திலிருந்து சம்பவங்களைத் தொட்டுக்காட்டி படிப்பின்பம் தருகிறது. இந்த சமூகத்தை எப்பாடுபட்டேனும் நம்பிக்கைப்பால் ஊட்டி புஷ்டியாக்கிவிடவேண்டும் என்கிற வெறி கொண்ட இளைஞராக தொடர்ந்து இந்த தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ்த் துறையில் முனைவராகப் பணிபுரியும் சதா பாரதியின் புத்தகங்கள் அனைத்திலும் வெற்றிக்கு வித்திடும் கட்டுரைகள் நிரம்பியுள்ளது.
அவருடைய ”அலாரத்தை எழுப்புங்கள்” என்கிற புத்தகத்திலிருந்து......
ஊருக்குள்ளே ஒரு முரட்டுப்பயல். எல்லோரும் நெருங்கவே நடுங்குகிறார்கள். போவோர் வருவோரையெல்லாம் வம்பிழுத்துச் சண்டை போடுகிறான். மிரள்கிறார்கள். ஊரே அரண்டுபோகிறது. இந்த சமயத்தில் ஒரு சாமியார் தனது சீடர்களோடு அந்த ஊரில் கொட்டாய் போடுகிறார் . வழக்கம்போல அவன் சாமியார்க் கூடாரத்துக்கு முன்பும் வந்து ”உள்ளே யாரு?” என்று முண்டு தட்டுகிறான். “என்ன சாமியாரே.... குஸ்திக்கு வர்றீங்களா?” என்று வம்புச் சண்டைக்கு தூண்டில் போடுகிறான்..
”இன்னிக்கி இல்லைப்பா... நாளைக்கு வாயேன்...ஊர் மக்கள் திரள.. அவர்கள் முன்னே போடலாம்”.
தாடிக்குள்ளிருந்து சிரிக்கிறார். சீடர்களுக்கு ஆச்சரியம். 
“ஸ்வாமி... உங்களுக்கு மல்யுத்தம் தெரியுமா?” 
“நாளைக்குப் பாரேன்”

மறுநாள் பொழுது விடிந்தது. மேலுக்குச் சட்டையில்லாமல் சண்டைக்கு வந்துவிட்டான் அந்த முரடன். சாமியார் நிதானமாக தேநீர் அருந்திக்கொண்டிருக்கிறார். முரட்டுப்பயலுக்கு சந்தேகம். துளிக்கூட பயமில்லாமல் சாமியார் சாந்தமாக தேநீர்அருந்திக்கொண்டிருக்கிறார். வித்தை தெரிந்த ஆள் போலிருக்கிறது என்று பீதியடைகிறான். நேரம் செல்லச் செல்ல மேலும் கலவரமடைந்த அந்த முரடன் அவர் காலடியில் விழுந்து “மன்னித்து விடுங்கள். என்னுடைய அகங்காரத்தை அடக்கிவிட்டீர்கள். நீங்களே ஜெயித்ததாக ஒத்துக்கொள்கிறேன்” என்று ஓடிவிட்டான்.
சீடர்களுக்கு ஆச்சரியம். “எப்படி அவன் பயந்து ஓடினான்?” என்று விசாரித்தார்கள்.
“மனதை சஞ்சலமில்லாமல் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்கும் வித்தை தெரியும். பதட்டமில்லாமல் நிதானமாக இருப்பதே உண்மையான தைரியம். அதுவே அவனை விரட்டியது” என்று சிரித்தார் சாமியார்.
மேற்கண்ட சாமியார் கதையை விரிவாக எழுதியிருந்தார். இது என்னுடைய மொழியில் சுறுக்கப்பட்டது. இதுபோல கிருஷ்ணதேவராயர் சில துஷ்ட ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு ”நாளைக் காலையில் என் கண்ணில் படுபவையெல்லாம் பச்சையாகத் தெரியவேண்டும்” என்கிற கட்டளையிடும் கதைக்கு தெனாலிராமனின் பதிலை வைத்து விரிவாக எழுதிய கட்டுரையும் உண்டு.
விஜயா பதிப்பகம், முனைவர் நா. சங்கரராமன், அலாரத்தை எழுப்புங்கள்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails