Friday, August 19, 2016

மாடி ஏறும் படி

காலையில் கோயம்பேடு மெட்ரோவில் இறங்கி ஓடி வந்துகொண்டிருந்தேன். அடுத்த பஸ் பிடித்தால் பதினைந்து நிமிடத்தில் அம்பத்தூர் எஸ்டேட். இரண்டாவது மாடியிலிருந்து இரண்டிரண்டு படியாகத் தாவி டாபர் ச்யவன்ப்ராஷ் இளைஞனாகத் துள்ளி இறங்கிவிட்டேன். டோக்கனைப் போட்டதும் இரண்டு பக்க ப்ளாஸ்டிக் கத்திகளும் திறந்து ராஜமரியாதையாக வழிவிட்டது.
“ஏய்... நில்லு... டாய்...” என்று தரைதளத்திலிருந்து ஒரே சத்தம். ஆயுதமேந்திய காவலர்கள் இருந்தும் இங்கே கரைச்சலா என்று ஆர்வம் பொங்கிட இடது திரும்பி பார்த்தேன். மாடி அசையாமல் இருக்க படிகள் மட்டும் வரிசையாக மேலே ஏறிக்கொண்டிருந்தது. திமிறிய ஒரு பெரியவரை எஸ்கலேட்டரில் ஏற்றுவதற்காக இருவர் மல்லுகட்டிக்கொண்டிருந்தனர்.
“நீ சும்மா கால வைய்யீ.. அது மேலெ கொண்டு போயிரும்..”
“அட... ஒண்ணுமாவாது.. வைய்யீ... இல்லாட்டா இங்கினயே நிக்கணும்...”
மருண்ட கண்களுடன் மதுரை வீரன் மீசைக்கார பெரியவர், கேவலம் இந்த மாடியேறுவதற்காக நம் வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டுமா என்று ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு படியாக இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இறங்கிக்கொண்டிருந்தேன். வழக்கமாகவே பஸ்ஸுக்கு ஓடிப்போய் ஏறுவேன். ரயிலியோ பஸ்ஸிலோ போகும்போது வழியோர கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீச ஓடிவருபவரைப் பார்த்து அது விக்கெட்டா? ஃபோரா? சிக்ஸா என்று எக்கிப் பார்க்கும் ஒரு குபீர் ஆசை பொத்துக்கொண்டு வருமே அந்த பேரார்வத்தில் ஏறுவாரா? மாட்டாரா? என்பதைக் கண்ட பின்புதான் நகர வேண்டும் என்று மெதுவாக ஸ்லோமோஷனில் இறங்கினேன்.
“மாடிக்குப் படியேறிப் போனது அந்தக்காலம்... படி மாடியேறுது இந்தக் காலத்துல..” என்றெல்லாம் தீர நெஞ்சத்துடன் டயலாக் விட்டுப் பார்த்தார். யாரும் மசிவதாயில்லை.
“ம்.. ஏறுங்க?” பக்கத்தில் நின்ற இளைஞன் அவரை அதில் ஏற்றி அழகு பார்க்காமல் விடமாட்டேன் என்று சங்கல்பம் செய்துவிட்டு வந்திருக்கிறான். தர்ணா போராட்ட புரட்சியாளர்களை அப்புறப்படுத்துவது போல தோளைப் பிடித்துத் தூக்குகிறான். குளிர்காலத்தில் மன்னை ஹரித்ராநதியில் குளிக்க வருபவர்கள் நுனிக்காலால் தண்ணீரைத் தொட்டுப் பார்த்துவிட்டு ”அப்படியாவது குளித்துவிட்டு புறஅழுக்கைப் போக்கிக்கொள்ளத்தான் வேண்டுமா?” என்று அதிருப்தியுடன் கரையிலேயே காத்திருப்பார்கள். அதுபோல இந்தப் பெரியவரும் காலைத் தூக்கி ஓடும் படியில் வைப்பதும் ஷாக் அடித்ததுபோல திரும்ப பின்னால் எடுத்து சுற்றிப் பார்த்து சிரிப்பதுமாக எல்லோருக்கும் லந்து காட்டிக்கொண்டிருந்தார்.
கூச்சநாச்சமில்லாமல் மோடிமஸ்தான் வித்தை பார்ப்பது போல அவர்கள் பின்னாடி போய் நின்றுவிட்டேன். கூட்டம் கூடி மானம் போய்விடுமோ என்று பெரியவர் ஒரு கணம் அஞ்சினார். மெட்ராவில் நான் இறங்கியதற்கப்புறம் ஒரு நாய் கூட இறங்காது என்று அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு தார்க்குச்சி போட்ட இளைஞன் பின்னாலிலிருந்து குண்டுக்கட்டாக அவரைத் தள்ளி அவரது ஒரு காலை மேலேரும் படியின் மேல் வைத்தான். பின்னர் அவரை ”வளையோசை கலகலகல....” படிக்கட்டு கமல் அமலாவை அணைப்பது மாதிரி அவனும் கட்டிக்கொண்டு ஏறிவிட்டான்.
மெட்ரோவின் எஸ்கலேட்டர்கள் பழனி வின்ச்சில் பயணிப்பது போன்றது. படி வைத்து உங்களை புர்ஜ் கலிஃபா உச்சிக்கு அழைத்துப்போகும் உத்தி. இரண்டு காலையும் ஒரே படியில் வைத்துக்கொண்டு சிறிது தள்ளாட்டத்திற்குப் பிறகு ஸ்டடியாகிவிட்டார். முன்னால் பார்க்காமல் பக்கவாட்டில் திரும்பி நின்று கொண்டு இவ்வுலகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே மேலேறினார். அவர் கண்களில் வெற்றிக்கனியைச் சுவைத்த பெருமிதம். நிம்மதியாக வெளியே வந்தேன்.
அம்பத்தூர் தொ.பே பேருந்தில் ஏறி ஒரு சீட்டில் அடைக்கலமானேன். ஆளில்லாப் பேருந்து. நான் உட்கார்ந்த இருக்கை, நடத்துனர் மற்றும் ஓட்டுனரைத் தவிர்த்து இன்னுமிரண்டு இருக்கைகளில் தொத்தலாக இருவர் உட்கார்ந்திருந்தனர். சின்னச் சின்ன பள்ளத்திலெல்லாம் மொத்த பஸ்ஸும் கிடுகிடுத்தது. நரைகூடிய முதியவரின் வாயிலிருக்கும் பல்லெல்லாம் உதிர்ந்துவிடுவது மாதிரி சீட்டெல்லாம் கீழே கொட்டிவிடுமோ என்று ஒருவிதமான பயம் கவ்வியது.
“ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்...” என்ற அறிமுக ஒலியோடு சற்று முன்னர் எஸ்கலேட்டரில் முதற்பயணம் மேற்கொண்ட ம.வீரன் மீசைக்கார பெரியவர் முப்பத்திரண்டையும் காட்டி வெள்ளையாச் சிரித்தார். அவரது முகத்தில் ஜொலித்த வீரஜோதியில் நான் அமைதியானேன்.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

இந்த எஸ்கலேட்டர் இப்போதும் பலருக்கும் பிடிபடாத விஷயம். தில்லி மெட்ரோவில் இப்படி நிறைய பார்த்ததுண்டு.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails