Friday, August 19, 2016

ஹீப்ரு பேசும் நாய்

அமெரிக்காவின் மொன்ரானா அதிகம் கவனிக்கப்படாத இயற்கை எழில்கொஞ்சும் மாநிலம். சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் இடம். இந்த மாநில போலீஸுக்கு வெடிகுண்டு மோப்பம் பிடிக்கும் நாய் ஒன்று தேவைப்படுகிறது. பயிற்சி பெற்ற ஒரு நாயின் விலை 20,000 டாலர்கள். இஸ்ரேல்காரர்கள் ஒரு நாயை இலவசமாகத் தருகிறார்கள். போலீஸ் அதை வாங்கிவிட்டது. ஆனால் அந்த நாய்க்கு ஆங்கிலம் தெரியாது. ஹீப்ரு மொழியில் ஆணையிட்டால்தான் வேலை செய்யும். ஒரு போலீஸ்காரர் ஹீப்ரு கற்றுக்கொண்டு ஆணையிட்டார். ஆனால் நாய் திரும்பவில்லை. ஆகாயத்தைப் பார்த்து முகத்தை வைத்துக்கொண்டு துக்கமாக உட்கார்ந்திருந்தது.
மொன்ரானாவில் யூதர்கள் மிக மிகக் குறைவு. அதிர்ஷ்டவசமாக ஒரு யூத பாதிரியாரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஹீப்ருவில் கட்டளைகள் கொடுக்க நாய் துள்ளி விளையாடி நிறைவேற்றியது. போலீஸுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிறன்றும் போலீஸ்காரர் பாதிரியாரிடம் ஹீப்ரு பயிற்சி பெற்று மூன்று மாதங்களில் நாய் போலீஸ்காரரின் ஆணைகளை பட்பட்டென்று நிறைவேற்றியது.
மொன்ரானா மக்களுக்கு தங்கள் மாநிலத்துக்கு ஒரு வெடிகுண்டு நாய் கிடைத்ததில் சந்தோசம். போலீஸ்காரருக்கு கட்டளைகள் கொடுப்பதில் சந்தோசம். நாய்க்கு கட்டகளை நிறைவேற்றுவதில் சந்தோசம்.
இந்த விவகாரத்தில் ஆகச் சந்தோசப்பட்டது யூத பாதிரியார்தான். அந்தப் பெரிய மாநிலத்திலே இவ்வளவு நாளும் பாதிரியாருக்கு ஹீப்ரு பேசுவதற்கு ஒரு நாயும் இருக்கவில்லை. இப்போது இருந்தது.
**
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் கட்டுரைகள் வாய்விட்டு சிரிக்கவைப்பவை. “உண்மை கலந்த நாட்குறிப்புகள்”தான் முதலில் படித்தேன். இப்போது “அமெரிக்க உளவாளி” படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் இடம்பெற்ற “வெடிகுண்டு நாய்” என்ற கட்டுரையை சுருக்கித் தந்திருக்கிறேன். தரமான நகைச்சுவைக்கு உத்திரவாதமான எழுத்து.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails