Friday, August 19, 2016

அன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..

மணி இரவு பத்தேகால். அம்பத்தூர் தொ.பேயிலிருந்து அலுத்துச் சலித்து வேளச்சேரி புகுந்த வண்டியிலிருந்து இறங்கி எங்கள் பேட்டைக்கு அடுத்த பஸ் பிடிக்க சிக்னல் தாண்டி ஓடினேன். அந்தப் பக்கம் ஷேர் ஆட்டோக்களின் சாம்ராஜ்யம். அரசுப் பேருந்துகள் அத்தனை மணிக்குப் பிறகு குறைவுதான்.
"மடிப்பாக்.மடிப்பாக்..." என்று மைசூர்பாக் போல குரலெழுப்பிய ஆட்டோவுக்குள் நூறு சதம் நிரம்பியிருந்தது. கடைசியாக வந்த ஒரு மேடத்துக்காக "நீங்க முன்னாடி வாங்கன்னு" ஒரு தேசலான பையனை தனது மடியில் குழந்தையில் போல உட்காரவைத்துக்கொண்டு அந்த அம்மணிக்கும் இடம் கொடுத்து ஆட்கொண்டார் ஆட்டோக்கார். "இடமில்லையா" என்ற ஏக்கத்துடன் பார்த்த என்னைக் கண்டால் இரக்கம் வந்துத்தொலைக்குமென்று பாராமுகமாக வண்டியை எடுத்துவிட்டார். சரி. இடமில்லை. ஒதுங்கினேன். வயிறு "பாவி! சீக்கிரம் எதாவது கொடுடா?" என்று தீவிர போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது.
அடுத்த "மடிப்பாக்.. மடிப்பாக்..." சத்தம் பின்னால் கேட்டது. இன்னொருவர் தனது பரந்த ஆட்டோவை ஷ்டார்ட் செய்து கிளம்பத் தயாரானார். ஷேர் ஆட்டோவின் பின் வரிசைக் கொலுப்படி சிக்கல்கள் எனக்கு அத்துப்படியானதால் அவரோடு பல்லிப் போல ஒட்டிக்கொண்டு முன்னால் அமர்ந்தேன். ஆக்ஸ் அல்லது அது போல மேனிக்கு செயற்கை சுகந்தமூட்டும் வஸ்து தெளித்துக்கொண்டு கமகமக்கும் மைனர்வாசனையோடு இருந்தார். இரவு பத்து மணிக்கு எனர்ஜி ததும்பியது.
இரண்டுமுறை சம்பந்தி உபசாரமாக வீதியில் இறங்கி அழைத்தார். சிலர் விரோதமாகத் திரும்பிக்கொண்டார்கள். சிலர் தூரத்திற்கு பார்வையைத் துரத்தி வராத பஸ்ஸுக்கு வாக்கப்பட காத்திருந்தார்கள். இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும்.
"சார்... எறங்குங்க...." என்றார் பரபரப்பாக.
"ஏன்?"
கையைப் பிடித்து கீழே இறக்கிவிடும் தோரணையில் "பின்னாடி நம்ம ஏரியா பஸ்ஸு வந்திருக்கு. இறங்குங்க..." என்றார்.
தனது சவாரியை இறக்கிவிடும் ஆட்டோகாரரா? மெய்மறந்து அந்த தியாகியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"சார்.,...போங்க.. சீக்கிரம்.. பொன்னியம்மன் கோயில்தானே கேட்டீங்க... பத்து நிமிசத்துல போயிரலாம்.. எனக்கு இனிமே சவாரி ஏற கால் அவருக்கு மேலே ஆவும். அதுக்குள்ளே நீங்க வீட்டுக்கே போயிடுவீங்க... ம்.. இறங்குங்க..."
இறங்கி ஓடிப்போய் பஸ்ஸில் தொற்றிக்கொண்டேன். கீழ்க்கட்டளை தாண்டி தாம்பரம் செல்லும் பேருந்து. புதுசாக பளபளவென்று இருந்தது. அழுதுவடியாத பளிச் விளக்குகள். காலுக்கடியில் நறநறவென்று குப்பையில்லை. வேளச்சேரி பாலம் ஏறும்போது அந்த ஆட்டோ தியாகசீலர் கண்ணுக்குள் வந்தார். இரண்டு நாட்களுக்குள் நான் பார்க்கும் இன்னொரு அன்பொழுகும் ஆட்டோ!
உள்ளே பஸ் கண்டக்டர் வாலிப வயசு.
"பொன்னியம்மன் கோயில் ஓண்ணு"
சில்லறை தா என்றெல்லாம் அடாவடி செய்யவில்லை. சாவுகிராக்கி போன்ற வசவுகள் இல்லை. பயணச்சீட்டுக்காக கைகள் நீட்டும் பத்து ரூபாய்த் தாள்களுக்கு மிச்சமாக ஒரு ரூபாய் நாணயங்களை கையில் பொத்தி வைத்திருந்தார். டிக்கெட்டும் சில்லறையும் சேர்த்துச் சேர்த்து வாரிவிட்டார். நல்ல துடிப்பான இளைஞர்.
அவர் முன்னால் நகர அந்த நடத்துனர் இருக்கையில் சங்கோஜத்துடன் அமர்ந்தேன். ஓட்டுனர் இருக்கைக்கு அருகிலிருந்து ஆரம்பித்து நின்று உட்கார்ந்து வளைந்து ஒடிந்து இருப்பவர்களுக்கெல்லாம் மின்னல் வேகத்தில் ப.சீட்டு வழங்கிவிட்டு பின்னுக்கு பறந்து வந்தார். எனக்கு நாற்காலி ஆசை என்றைக்கும் கிடையாது. அவர் அருகில் வந்ததும் எழுந்திருக்க எத்தனித்தேன். எனது தோளைப் பிடித்து அழுத்தி....
“உக்காருங்க சார்.. பரவாயில்லை...” என்று சிரித்தார் மாணிக்கமாய்.
ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் வெளியே பார்த்து விசில் அடித்து டிக்கெட் கொடுத்து பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தார். என்னுடைய நிறுத்தம் வந்தது. எழுந்தேன். பின் படிக்கட்டருகில் ரஜினி போல காந்தமாய் நின்றிருந்தார். அவரது தோளைச்சுற்றிக் கையைப் போட்டு “Thank you my dear" என்றேன். காதோடு காதாக. உடனே குபீரென்று வாய்கொள்ளாச் சிரிப்பு. வேறெதுவும் வாய்வார்த்தையாகச் சொல்லவில்லை.
இறங்கி வீட்டுக்கு நடக்கும் போது ஞாபகம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் இதே “Thank you my dear"யை என்னிடம் ஒரு பார்வையற்றக் கிழவர் ஸ்மால் பஸ்ஸில் இடம் கொடுத்தபோது நா தழதழக்கச் சொன்னார். அதுவே மறுபடியும் என்னிடமிருந்து இயல்பாய்க் கிளம்பியிருக்கிறது.
சவாரியென்றும் பாராமல் பஸ்ஸேற்றி விட்ட ஷேர் ஆட்டோகாரர், தான் ஓய்ந்து போனாலும் அலைந்து திரிந்து வந்த ஒருவனுக்கு இடமளித்த இந்த பஸ் கண்டக்டர் என்று அனைவருக்கும் பிரதானமாக அடி நெஞ்சில் அன்பு ஊற்று இருக்கிறது. விரும்பாத சூழ்நிலைகள் சில நெருக்கித் தள்ள வெறுப்படைகிறார்கள். சூழ்நிலைக் கைதிகளாய்ச் சில சமயங்களில் சுள்ளென்று எரிந்து விழுகிறார்கள். உலகமே மாயையாய்த் தெரியும் போது விரக்தியில் உள்ளம் மரத்து விடுகிறது. நீ யார் அவன் யார் என்றெல்லாம் பேதமில்லாமல் வெறுக்கத்தோன்றுகிறது. மற்றபடி இது.............
அன்பு சூழ் உலகு!

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

பொங்கி வழியட்டும் அன்பு ஊற்று.....

அன்பு சூழ் உலகு... அதுவே ஒவ்வொருக்கும் இருக்க வேண்டிய நினைவு....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails