முருகன் சீன் 1:
”முத்துக்குமரா... ஸுப்ரம்மண்யோம்... ஸுப்ரம்மண்யோம்..” என்று பாயில் உட்கார்ந்துகொண்டு இருகைகளையும் குவித்து மனமுருக முருகனைப் பிரார்த்தித்துக் கட்டையைச் சாய்ப்பாள் சாரதா பாட்டி. நெற்றியில் ஒரு கீற்று விபூதி. ரேழியிலிருந்து சமையல் உள்ளுக்குச் செல்லும் பாதை நிலைவாசப்படியடியில் சிம்னி விளக்கு மங்கலாய் எரிந்து சுவற்றில் மாட்டியிருக்கும் அபயஹஸ்த முருகனை தேவலோகத்திலிருப்பது போல காண்பிக்கும்.
முருகன் சீன் 2:
கிருத்திகைக்கு கிருத்திகை பொழுது விடியாத மன்னையிலிருந்து முதல் பஸ் பிடித்து கும்மோணம்.... அங்கிருந்து ஸ்வாமிமலை டவுன் பஸ் பிடித்து.. முருகனுக்கு அர்ச்சனை செய்து தரிசிப்பது எனது மாதாபிதாவின் வழக்கம். அம்மாவின் ஷண்முகப் பிரேமையினால் அக்காவுக்கு “கிருத்திகா”வும் எனக்கு “கார்த்தி”யும் சூட்டி அழகு பார்த்த கௌமாரக் குடும்பம். தரிசனம் முடிந்து திரும்பும் போது கோயில் முனையில் வாங்கிச் சாப்பிட்ட கொய்யாப்பழத்தின் ருசி இப்போது நினைத்தாலும் நாக்கு மேலன்னத்தோடு ஒட்டிக்கொள்கிறது.
முருகன் சீன் 3:
நீலா சித்திக்கு தமிழ்க் கடவுள் மேல் அளவுகடந்த பக்தி. தோளில் வேல் சாய்த்த குட்டிக் குமரனுக்கு தினமும் கொல்லையிலிருந்து பளீர்ச் சிவப்பில் அன்றலர்ந்த செம்பருத்திப் பூப் போட்டு சஷ்டி கவசம் பாடுவாள். படிப்பாள். பாடுவாள்.... ஃபேன் காற்றில் சுவரிலிருக்கும் முருகன் அசைந்தால் அவளுக்கு அருள் கிடைத்து விட்டதாக அர்த்தம். சந்தோஷப்படுவாள். இன்றைக்கு படுத்தபடுக்கையாகக் கிடந்தாலும் அவளது படுக்கையருகே ஜன்னலில் முருகன் சிரிக்கிறார். அவர் அசைவது தெரிந்தாலும் தனக்கு அருள் புரிகிறாரா? என்று சந்தேகப்படுவதற்குக்கூட அவளுக்கு திராணியில்லை.
முருகன் சீன் 4:
கோடியக்கரை குழகர் கோயில் அஞ்சனாக்ஷி சமேத அமிர்தகடேஸ்வரர். கொட்டைப்பாக்களவு லிங்கம். அசால்ட்டாக பார்த்துக்கொண்டு பிரதக்ஷணம் வருவீர்கள். சிவன் சன்னிதிக்கு நேர் பின்னால் லிங்கோத்பவர். அவரைப் பார்த்துக்கொண்டு இடதுப் பக்கம் பட்டென்று திரும்பினால் பக்கென்று மூச்சடைத்துப் போய்விடுவீர்கள். ஆறடிக்கு ஆறுமுகன் புல்லட்டில் அமர்ந்து வருவது போல மயில்வாகனத்தில் அமர்ந்திருப்பார். ஒரு முகமும் பன்னிருகைகளுமாய் ஆஜானுபாகுவானத் தோற்றம். ஒரு கரத்தில் அமுதகலசம் ஏந்தியிருப்பது சிறப்பு. முழு விபூதியலங்காரத்தில்.... வெள்ளையும் சொள்ளையுமாக... நீங்கள் அந்த இடத்தை விட்டு நகரவே மாட்டீர்கள்... பக்கத்தில் மண்ணிலிருந்து விண்ணளக்கும் பிரம்மாண்ட வெள்ளி வேல்... ஊஹும்.. அந்த அழகை நான் சொல்லி மாளாது.. நேரே போய் தரிசனம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment