கார்த்திக் சுப்ரமணியனுக்கு புத்தகம்னா உசுரு. சித்தமெல்லாம் புத்தகமயமாக ஒரு யோகீஸ்வரனைப் போல தவவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சுஜாதா தனது படைப்புகளில் சிபாரிசு செய்த (அ) மேற்கோள் காட்டிய புத்தகங்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்ட மகானுபாவர்.
பெங்களூருவிலிருந்து ”என்ன பாஸு.. எப்படியிருக்கீங்க?” என்று அபூர்வமாக அலைபேசுவார். வாயிலேயே நுழையாத ஆங்கில எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லி அவர்களின் படைப்புகளை ”பாஸு.... சான்ஸே இல்ல...” என்று சொடக்குப் போட்டுச் சிலாகிப்பார். இன்று காதை அவரிடம் கொடுத்துவிட்டு சேப்பாயியை அதனிஷ்டம் போல ஆட்டோ மோடில் செலுத்திக்கொண்டிருந்தேன்.
“இண்டலிஜெண்ட்டை நம்பலாம். இண்டெலிஜெண்டா இல்லாதவனையும் நம்பலாம். ஆனா நாந்தான் இண்டலிஜெண்ட்டுன்னு சொல்லிக்கிட்டுத் திரியறான் பாருங்க.... அவனை மட்டும் நம்பிடக்கூடாது...” என்பது போன்ற அறியாமை இருளகற்றும் புரட்சிகர வசனங்கள் பேசினார். மெய் சிலிர்த்தது.
பல திசைகளில் திரும்பியது பேச்சு. சுஜாதா, புத்தகங்கள், அரசியல் என்று சர்வாலசலில் ஈடுபட்டோம். சிக்னல் தாண்டும் ஒரு ஐந்து விநாடிகள் மௌனத்தில் “நிலாக் காயுது....” ஜானகியாக எதிர்முனையில் முணகினார். முதலில் புரியவில்லை.
“என்ன பாஸு.. எதாவது அடிகிடி பட்டுக்கிட்டீங்களா?” என்று உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையப் பதறினேன்.
“ஏன்?”
“ஏதோ.. வலியில முணகினா மாதிரி இருந்தது”
“நக்கலு?”
பாத்ரூம் சிங்கர் போல பைக் சிங்கர் போலிருக்கிறது என்று பின்னர் உரைத்தது.
“என்ன பாஸு.. நீங்க சிங்கரா?” என்று ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை அடித்துப்போட்டது.
“என்ன கேட்டீங்க?”
“இல்ல.. நீங்க சிங்கரான்னு கேட்டேன்...”
“இல்ல பாஸு.... நானு ஹம்மர்...”
“அப்டீன்னா?”
“வாயைத் தொறந்து பாடினா சிங்கர்... மூடிக்கிட்டே ஹம் பண்ணினா ஹம்மர்தானே”
பெங்களூரு ஏன் போக்குவரத்து நெரிசலினால் சபிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் இன்று விளங்கியது.
0 comments:
Post a Comment