முதலாம் ரெங்கராஜர்.
===================
மழவராயநல்லூர் ஹெட்மாஸ்டர் ரெங்கராஜனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதற்கு மன்னார்குடி ஹரித்ராநதிக் கரையில் ஒரு வருஷமேனும் எண்பது தொன்னூறுகளில் ஜாகை இருந்திருக்கவேண்டும். கையில் குடையோடு வேஷ்டியில் பொடிநடையாய் பள்ளிக்குச் சென்று வீடு திரும்புபவரை மறித்து ஒரு “குட் மார்னிங்..”, “குட் ஈவினிங்”காவது சொல்லியிருக்க வேண்டும். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் திரிகாலமும் ஸ்ரீசூர்ணத்தோடு இருந்தார். எங்களது சகாக்கள் கோபால் ஸ்ரீராம் இருவரின் பிதா. அமைதியின் திருவுரு. சாந்தசொரூபி. கோபமறியாக் கோமகன்.
“என்னடா இந்த பாழாப் போன கிரிக்கெட்ல போய் இப்படி விழுந்துட்டேளே.... நன்னாப் படிக்கணும்டா...” என்று அட்வைஸ் திலகமாகத்தான் எங்கள் வளையத்துக்குள் நுழைந்தார். நானும் கோபாலும் ஸ்ரீராமும் தினமும் கிரிக்கெட் பற்றி சதா சர்வகாலமும் உருப்போட்டதில் “என்னடா ஸ்கோர்?” என்று ஒரு படி ஏறினார். பின்னர் அடாசு டெஸ்ட் மேட்சுக்கெல்லாம் ஆறு நாட்கள் (நடுவில் ஓய்வு நாள் உட்பட) ட்ரான்ஸிஸ்டரைக் காதோடு வைத்துத் தைத்துக்கொண்டு சாப்பிட்டும், நடந்தும், பேசியும், தூங்கியும் காலம் கழித்தார். பளபள அட்டையோடு வரும் ஸ்போர்ட் ஸ்டாரை புத்தம்புதுசாக காசு கொடுத்து வாங்கி கிரிக்கெட் படங்களைக் கிழித்து நானும் கோபாலும் கோடில்லா நோட்டுகளில் ஒட்டிச் செய்த அல்ப ஆல்பங்களை ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் திண்ணையில் உட்கார்ந்து புரட்டிய மஹா ரசிகர். Rajagopalan Rengarajan கவனத்திற்கு.
இரண்டாம் ரெங்கராஜர்
=====================
வாலி என்றழைக்கப்படும் பாட்டுக்கார ரெங்கராஜன் அவதார புருஷனாலும் பாண்டவர் பூமியாலும் ராமானுஜ காவியத்தினாலும் “நகரு.. நகரு... வருது. .வருது.. தஞ்சாவூர்த் தேரு...” போன்று எழுதிய பாட்டுக்கறைகளை நீக்கிக் கொண்டவர். முன்வரியையும் பின்வரியையும் கோர்த்துக் கோர்த்துப் பாமாலைகளை தொடுத்தவர். நேரில் பேசிப் பழகாவிட்டாலும் பாடல்களினால் பேசிக்கொண்டோம். எளிமையான சொற்களில் கவித்தோரணம் கட்டியவர்.
மூன்றாம் ரெங்கராஜர்
=====================
எழுத்தரசன். தமிழிலோ ஆங்கிலத்திலோ புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை இளைய சமுதாயத்தினரிடம் குச்சிப் போட்டு நெம்பியவர். மர்மக் கதைகளினால் மந்திரம் போட்டவர். காவலர்களை மாமா என்று அழைப்பவர்கள் மத்தியில் காலனையே “தருமு மாமா” என்று கதைக்கு தலைப்பிட்டு அழைத்து கெத்து காண்பித்தவர். நாம் காகிதத்தில் படிக்கும் கணேஷ் - வசந்த்தின் எழுத்துப்பூர்வ தந்தை. என்னைப் போன்ற அரைகுறை தமிழ் தெரிந்தவர்களுக்குக் கூட இலகுவாக புரியும்படி எழுதி விஞ்ஞானம் வளர்த்த பிரான். மொழி இலக்கணங்களைக் கட்டறுத்தாலும் தமிழின் சுவையை தன் எழுத்துகளால் பருகக் கொடுத்தவர். இன்னும் பல...
சரி.. வைஷ்ணவர்கள் என்கிறதைத் தவிர்த்து இந்த மூன்று ரெங்கராஜர்களுக்கும் என்ன உறவு?
முதலாமவர் பள்ளிக் கூட வாத்தியார்.
இரண்டாமவர் வாத்தியாருக்கே பாடல்கள் எழுதிய பாட்டு வாத்தியார்.
மூன்றாமவர் வாத்தியார்களுக்கெல்லாம் வாத்தியார்.
இவர்களை இந்த வரிசைக்கிரமாகத்தான் படிக்கவேண்டும் என்றில்லை. எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் படிக்கலாம். குத்தமில்லை!! ரா.கி.ரா பற்றித் தனியாக....
0 comments:
Post a Comment