Friday, August 19, 2016

பஸ் பயணங்களில்....

பேருந்தில் எப்பொழுதும் எனக்கு "திருடர்கள் ஜாக்கிரதை" ஸ்டிக்கர் அறிவிப்புக்கு அடியிலேயே அமர இடம் கிடைக்கிறது. "மாற்றுத்திறனாளிகள், முதியோர்"க்குக் கீழ் திடகாத்திரமானவர்கள் தூங்குகிறார்கள். "சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டு கேட்டுப்பெறவும்"மை பார்த்துக்கொண்டே நூறு ருபாய் சலவைத்தாளை நீட்டும் கனவானொருவர். "படிகளில் பயணம் நொடிகளில் மரண"த்தின் கீழ் இரண்டு இளங்கன்றுகளின் அரட்டை. "மகளிர்" வரிசையில் ஆஜானுபாகுவான கொடுவா மீசை ஆம்பிளை.
ஆழமாகச் சிந்தித்தால் இவை அனைத்துமே பயண முரண்கள் அல்ல!

**
வெள்ளைத் தழும்பு குணமடைய வைத்தியர் N. ரமேஷ் நாயுடு என்கிற பேருந்து உள்கூடு விளம்பரத்தில் ரோஸய்யா நடுநாயகமாக நிற்கிறார். பக்கத்தில் டாக்டர் என்று நாம் சந்தேகப்படும் நபர் முகத்துக்கு வாஷர் போட்டு டிரைவர் சீட்டுக்குப் பின்னால் முடுக்கியிருக்கிறார்கள். புதிய ஆயுர்வேத மருந்தாம். 20 மணி நேரத்தில் நிறம் மாறுகிறதாம். அதெல்லாம் கிடக்கட்டும், விவரம் புரியாத எவரோ அடுத்த முறை ரோஸய்யாவை எங்காவது பார்க்க நேர்ந்தால் கையை நீட்டி மருந்து கேட்காமல் இருந்தால் சரி! 

**
பார்வையற்ற வயசன் ஒருவருக்கு சிற்றூந்தில் இடமளித்தபோது கூரையைப் பார்த்துக்கொண்டே "Thank you my dear" என்று உருகினார். அவரது கணீர்க் குரலில் பொங்கிய வாத்ஸல்யத்தில் சுட்டெரிக்கும் சூரியனும் குளிர் நிலவெனப் பொழிந்தான். இனிது இனிது உதவுதல் இனிது.

**

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிது இனிது உதவுதல் இனிது!

பாராட்டுகள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails