வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் கிடையாது. நுழைவுச் சீட்டு தள்ளுமுள்ளு வரிசை கிடையாது. முக்கியஸ்தர்கள் அமுக்கியஸ்தர்கள் என்ற பேதம் கிடையாது. செல்வந்தர் ஏழை பாகுபாடு கிடையாது. ஒரு ஆன்மிக தரிசனத்திற்கு தயார்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தால் பூரா மனசும் நிறைந்து புத்துணர்ச்சியோடு வெளியே வரலாம். குறைந்தது சுமார் இரண்டு மணி நேரம் கிடைத்தால் இந்து மதக் கடவுளர் அனைவரையும் ஒரு எட்டு பார்த்துவிடலாம். சாவகாசமாக பார்க்கவேண்டுமென்றால் நான்கு மணி நேரம் அங்கே நங்கூரம் பாய்ச்ச வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையே நமது தேசத்தின் மாண்பு. அதுவே இந்துமதத்தின் பெருமையும் கூட. மீனம்ப்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் நடைபெறும் எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சிக்கு குடும்பத்துடன் சென்றுவந்தேன். வருடாவருடம் இதை மெய்யுணர்வுடன் கடைபிடிக்கிறேன். இந்தக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஊன்றுகோலாக இருக்கும் ஸ்ரீ. குருமூர்த்தி Gurumurthy Swaminathan அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ப்ரணாம்ஸ் நமஸ்தே ஜி! அவருக்கு உறுதுணையாக நிற்கும் சாஸ்த்ரா Vaidhyasubramaniam Sethuraman அவர்களுக்கும் மற்றும் பல எண்ணற்ற முகமறியாத் தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும், வந்தனங்களும்.
உள்ளே நுழையும் போதே ஊர்க்காரரும் ஃபேஸ்புக் நண்பருமான Rajagopalan Ram கைகுலுக்கினார். ஆறுமணிக்குள் திரும்பவேண்டும் என்று அலாரம் வைத்துக்கொண்டு வந்ததால் நின்று பேசமுடியவில்லை. நகர்ந்தோம்.
ஸ்ரீ. குருமூர்த்தியும் ஸ்ரீ வைத்தியசுப்ரமணியனும் கண்ணில் தென்பட்டார்கள். அவர்களை முன்னும் பின்னும் ஃபோட்டோ பிடித்தவரை கோடியில் ஒருவராக நின்றாலும் கண்டுபிடித்துவிடுமளவிற்கு நெருக்கமான ஸ்நேகிதம். சர்வவியாபி ஆர்.வி Rajagopalan Venkatraman. அனைவருடனும் சிறிது நேரம் மனசாரப் பேச வாய்ப்புக் கிடைத்தது. வைத்தியசுப்ரமணியத்தின் ”அவார்ட் பாலிடிக்ஸ்” பற்றிய குறு சொற்பொழிவு அபாரம். மேலும், ஹிந்து ஆன்மிகக் கண்காட்சியில் விவேகானந்தர், ஔவையார், பாரதி போன்று வேடமிட்டு கலந்துகொள்ளும் சிறார்களுக்கு சாஸ்த்ராவின் பரிசுப் போட்டி பற்றி விவரித்தார். கலாசாரம் வளர்வதைக் கேட்க இனிமை.
வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு. நாகசாமி சாருடைய தமிழ் மாலை, சொல்மாலை, பொய்யிலி மாலை என்ற மூன்று புத்தகங்களும் அக்ரஹாரம் என்கிற வீடியோ ஸிடியும் வாங்கினேன். நேரிலேயே உட்கார்ந்திருந்த அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவேண்டுமென்று இந்த மண்டுவுக்குத் தெரியாமல் நகர்ந்துவிட்டேன். தருமை ஆதீனம் ஸ்டாலில் ரூ. 12. 50 மதிப்புள்ள இந்துமத பாலபாடம் பத்து ரூபாய்க்கு கொடுத்தார்கள். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் மையத்தில் ஆலய வழிபாடு ஒரு ரூபாய்க்கு மேஜையெங்கும் காயின் விழ விநியோகித்தார்கள். ஒவ்வொரு ஸ்டாலிலும் ஒவ்வொரு ரசம். ஒவ்வொரு நற்சிந்தனை. ஒவ்வொரு நல்ல பழக்கம். ஒவ்வொரு படிப்பினை. ஒவ்வொரு இந்து மரபின் மார்க்கம். ஒவ்வொரு சேவை. ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு மடம்.
உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஞானப்பிரகாச ஸ்வாமிகளின் தமிழ்ச்சொற் பிற்ப்பாராய்ச்சியும் பரிதிமாற் கலைஞரின் தமிழ் மொழியின் வரலாறும் வாங்கினேன், இருபது சதம் கழிவு. சைவசித்தாந்த முதுகலைப் படிப்பு விண்ணப்பப் படிவத்தை இலவசமாக கையில் கொடுத்து மொபைல் நம்பர் வாங்கிக்கொண்டார்கள். சம்ஸ்க்ருதம் நடக்கும் இடங்கள், வேதபாடசாலைகளின் விவரங்கள், அம்மன், மீசை வைத்த பார்த்தசாரதி என்று சன்னிதிகளும் இதில் அடக்கம். பதஞ்சலியில் சல்லிசாக பிஸ்கெட், பழரச பானங்கள் விற்கிறார்கள். ஏற்கனவே தினமும் வீட்டில் பருப்பு சாதத்திற்கு இடும் ஒரு முட்டை நெய் அவருடைய தயாரிப்புதான். சுவையும் விலையும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. பாபா ராம்தேவ் யோகாவிலும் வியாபாரத்திலும் சாதித்துக்காட்டியிருக்கிறார்.
ஹிந்து மிஷன் ஸ்டாலில் பெருசு சிறுசு வித்யாசமில்லாமல் கூட்டம் அம்மியது. ஷுகர், பிபி மற்றும் போன் டென்ஸிட்டி இலவசமாக பரிசோதனை செய்தார்கள்.
தசாப்தங்களுக்கு முன் ரெட்ஹேட் லைனக்ஸ் ப்ரமோ வீடியோ ஒன்றில் உலக வழக்கில் எல்லாம் ஒன்று போலவே இருந்தால் எவ்வளவு அயர்ச்சியாக இருக்கும் என்று ஒரே சீருடை, ஒரே சானல் டிவி, ஒரே.. ஒரே... என்று ஒரேடியாகக் காட்டியிருப்பார்கள். வெவ்வேறு ரசத்துடன் வெவ்வேறு பாவத்துடன் வெவ்வேறு கலைகளை அருளும் கடவுளர்கள், தேவாதி தேவர்கள், நல்வழிகாட்டும் குருமார்கள், அவர்களது மடங்கள் என்று அந்த இடமே தேவலோகம் போலக் காட்சியளிக்கிறது. தீனிகளுக்குத் தனி கொட்டகை. பானி பூரியிலிருந்து சோளா பூரிவரை எல்லாம் உண்டு.
வெளியே வரும் போது Girijaa Guru அவர்களைச் சந்தித்தேன். “நான் படிச்சுட்டு அவருக்கு படிச்சு சொல்வேன்” என்று கணவரைக் காட்டினார்கள். “இவங்க திட்றாங்க”ன்னு Sangeetha Seshasayee ஐப் போட்டுக்கொடுத்தேன். “மேடம்! நல்லா எழுதறாரு.. உட்ருங்க..” என்று வக்காலத்து வாங்கினார். கிறுக்குபவனுக்கு கிரீடமா? என்று மகிழ்ச்சியாக இருந்தது.
நாளை இக்கண்காட்சியின் கடைசி நாள். இதுவரைக் கண்டு களிக்காதவர்கள்... ப்ளீஸ்.. உடனே... கிளம்புங்கள்... இல்லையேல் தெய்வமே வந்து கதவைத் தட்டும்.
0 comments:
Post a Comment