Saturday, August 20, 2016

வாழ்த்துக்கு நன்றி

டைட்டில் கார்டு: பாராதிராஜா பட கைகூப்பி வணங்குதல்.
ஒவ்வொரு வாழ்த்தும் ஒருவித நறுமணம். தித்திக்கும் கல்கண்டு. ஒரு சுகானுபவம். பிறந்தநாள் வாழ்த்து வெள்ளத்தில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்டு திக்குமுக்காடிப்போனேன். இன்றுதான் கரை ஒதுங்கினேன். நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது. இங்கிவர்களை யான் பெறவே என்ன தவம் நான் செய்துவிட்டேன்!!
இந்த நண்பர் குழாம் என் பூர்வஜென்ம புண்ணியப்பலன். இந்த ஜென்மத்து பூஜாபலன். அகாலவேளைகளில் நேரம் கிடைக்கும் போது, கால் முளைத்தக் குழந்தை தத்தக்காபித்தக்கா என்று நடப்பது போல எழுதுகிறேன். கூடத்தில் (ஃபேஸ்புக்கில்) சுற்றி அமர்ந்திருக்கும் உற்றார் உறவினர்கள் இரசித்து... லயித்து... "ஆஹா.. குட்டீ.. அழக்....கா இருக்கே. ஓடிவா... த்தோ... வாடா.... கண்ணா.." என்று இருகரம் நீட்டிக் கொஞ்சுவது போல இணைய நண்பர்கள் ஊக்கமளித்து இன்னும் தீவிரமாக இயங்க உசுப்பேற்றுகிறார்கள். சகலருக்கும் நமஸ்காரங்கள். ஏதோ கோணங்கித்தனத்தால் கொணஷ்டையினால் எவரையாது எவ்வகையிலாவது இம்சித்திருந்தால் இந்தப் பாவியை மன்னியுங்கள். மன்னிப்பவர் தேவர். மறப்பவர் தேவாதிதேவர்.
மன்னையையும் ராஜகோபாலஸ்வாமியையும் நினைக்காமலும் இணைக்காமலும் வாழ்த்துகள் இல்லை என்பது தனி விசேஷம். திரையில் முகம் பார்த்து அகம் நுழைந்த நட்புகளின் பாசம், மன்னார்குடி மாடு மேய்க்கும் மாயவன் கோபாலனை புன்னை மரத்தடியில் நேரே பார்த்த பக்தன் போல பிரமிக்கவைக்கிறது. எழுத்து விற்பன்னர்கள் சாகசம்காட்டும் இந்த ஃபேஸ்புக்கில் நான் அடாசு ரகம். என்னைக் கவர்ந்த விஷயங்களையும், நான் விளையாடித் திரிந்த ஊர் பற்றியும், சொக்கிப்போன இசைபற்றியும், சக ஸ்நேகிதங்களுடன் கொட்டமடித்ததையும், எப்பவாவது (சிறு)கதையும், (கவிதை எழுதினால் வீடு தேடி வந்து கையை ஒடித்துவிடுவார்கள். எனக்கு இடது கையால் ஷவரம் செய்துகொள்ளத் தெரியும்!  ), அப்பப்போ ஏனோதானோ கட்டுரைகளும் எழுதுகிறேன். இலக்கியக் கம்பு சுழற்றி சிலம்பாட்டம் ஆடி சோனிகளுக்கு சாந்து பொட்டும் சந்தன பொட்டும் வைப்பவர்களிடமும் , அரசியல் சர்ச்சைகளிலும் மூக்கை நுழைக்காமலிருக்கிறேன்.
"இன்னும் ஒரு கரண்டி ஊத்துங்கோ..." என்று ஒரு வாய் இழுத்து மறுவாய்க்கு உள்ளங்கை குழித்துக் கேட்க வைக்கிற, உரைக்காத, தக்காளி ரசம் போல எழுத ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன். ருஜியின் தரம் இரசிக்கும் நீவிர் அறிவீர். தி பெட்டர்இந்தியா என்றொரு வலைத்தளமுண்டு. இந்தியாவைப் பற்றி சுவாரஸ்யமான, ஒழுக்கமான, ஸ்ரேயஸ்ஸான, பரம பாவனமான சங்கதிகளை மட்டும் பிரசுரம் செய்து நல்லபிள்ளை என்று பெயரெடுக்கிறார்கள். (கூகிள் அறிவியல் கண்காட்சியில் இறுதிச் சுற்றுக்கு வந்த பதினாறு இளம் விஞ்ஞானிகளில் ஆறு பேர் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என்ற ஆக்கப்பூர்வமான நேர்மறையான செய்தியே லேட்டஸ்ட்.)
ஆகஸ்டு பதினாறில் பிறந்த என்னை என்றும் பதினாறாக நினைக்க வைத்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!
நன்றியும் மகிழ்ச்சியும் வெறும் வார்த்தையில் வாரா! சங்கிலித்தொடர் வாழ்த்துகளால் ஆயிரம் இதழ் கொண்டு மலர்ந்த இதயத்தாமரையின் துடிப்பிற்கு இடையில் இடையறாது அனைவருக்கும் கீழே எழுதியிருப்பதை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.
"ந.'லப்'.ன்.'டப்'.றி.'லப்'.ந.'டப்'.ன்.'லப்'.றி.'டப்'.ந.'லப்'.ன்.றி.'டப்'"
(முடிந்தவரை எல்லோருக்கும் பிரத்யேகமாக நன்றி நவில முயற்சிக்கிறேன்)

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

நான்கு நாட்கள் அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தார். அட்வான்ஸ் கட்டி அட்டண்டர் நாற்காலியில் அலர்ட்டாக அமர்ந்திருந்தோம். “ராமமூர்த்தி அட்டெண்ட்டர்...” என்று சந்தனக் கீற்று நர்ஸ் சேச்சி குரல் கொடுக்கும் போது பெடிக்ரீக்கு பாயும் டாமி போல ஓடவேண்டும். பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து வேயுறு தோளி பங்கன்.. படிப்பவர்களும் சஷ்டி கவசம் தியானம் செய்பவர்களும் சடுதியில் நெருக்கமாகிவிடுகிறார்கள்.
“எப்படி இருக்கு? பரவாயில்லையா? ஒண்ணும் ஆகாது.. இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ்ஜுன்னு டாக்டர் சொல்லிடுவார் பாருங்க.. பயப்படாதீங்கோ.. அவன் மேலே பாரத்தைப் போடுங்கோ.. அவன் பார்த்துப்பான்.... ” என்று பரஸ்பர ஆறுதல்களும் க்ஷேம விஜாரிப்புகளும் அன்பு பொழியும் உலகத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்கின்றன. ”என் வீட்டு வாசல்ல ஏன் வண்டி நிறுத்தறே.. எடுய்யா..” என்று பாய்பவர்கள் கூட “அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்று ஆதூரத்துடன் கை பிடிப்பார்கள்.
சோகங்களும், இடர்களும் மனிதர்களை ஒன்று சேர்க்கின்றன. “நான் போய் வாங்கிட்டு வரேன்.. நீங்க அப்பாவைப் பாருங்க...” என்று மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு ஃபார்மஸிக்கு ஓடுகிறார்கள். “இட்லிதான்.. பசிக்கும்.. ஒண்ணே ஒண்ணு...” என்று சிரித்துக்கொண்டே நீட்டுகிறார்கள். கையில் வைத்திருக்கும் மாலை மலரின் உள் ஷீட்டை கையில் கொடுத்து “படிங்க...” என்று நட்பாகச் சிரிக்கிறார்கள். உள்ளே படுக்கையில் இருக்கும் ஆசாமியின் நலம்தான் பிரதானம் என்று வீற்றிருக்கும் போது அந்தக் கவலையில் நொந்துபோகக்கூடாது என்கிற கவனமும் அக்கறையும் அபாரம்.
வெள்ளத்தில் சென்னை மிதந்தால் உடனே படை திரட்டிக்கொண்டு உதவி புரிய ஓடுகிறோம். சிசியூவுக்கு வெளியே காத்திருக்கும்போது கைகுலுக்கி நட்பாகி சோகத்தைப் பங்குப்போட்டு நிம்மதி அடைகிறோம். வாய்வார்த்தையான ஆறுதலில் ஆனந்தமடைகிறோம். மகிழ்ச்சியில் மமதையடையும் மனித இனம் சோகத்தில் சொந்தபந்தங்களைத் தேடுகிறது. சோகத்திலும் வருத்தத்திலும் கைகோர்க்க ஆளில்லாத மனிதனே செல்வமில்லாத சொத்தையாகிறான் என்பது புரிகிறது.
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து

என்று பட்டினத்தார் புட்டுப்புட்டு வைத்து காயம் பொய், அநித்யம் என்று தெரிந்தும், பிறப்பெடுத்து வாழ்க்கையெனும் பாழும் கிணற்றில் விழுந்து பல கஷ்ட நஷ்டங்களில் அடி வாங்கினாலும், மனுஷ்ய ஜென்மத்தின் ஜீவன் மீதுள்ள தீரா ஆசை விந்தையிலும் விந்தையே!
“ஒண்ணுமில்லை.. ஹி இஸ் ஆல்ரைட்டுன்னு டாக்டர் சொல்லிட்டார்..” என்று முப்பத்திரண்டையும் காட்டிச் சிரிக்கும் போது வாழ்க்கையின் பிடிமானம் உறுதியாக வெளியில் தெரிகிறது. சேற்றுப் பாதையைக் கடக்க முயலும் புழுவிற்குக் கூட குதிரையின் குளம்புகளுக்குள் சிக்காமல் அதன் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடுவதைப் பற்றி மகாபாரதத்தில் வரும் கட்டம் சாஸ்வதமான உண்மை.

குமுட்டி நினைவுகள்

"கார்த்தீ.... சாம்ப்ராணிக்கு தணல் வேணும்...."
அம்மா வரலக்ஷ்மி பூஜையின் நடுவில் குரல் கொடுத்தாள்.
" ....ம்ம்ம்... சங்கல்பம் முடிஞ்சவொன்னே பேசுங்கோ மாமி.. நமோஸ்துதே.." என்று மந்திரங்களுக்கு இடையில் அம்மாவைக் கண்டித்து அடுத்த மந்திரத்துக்குத் தாவினார் வெங்கடேச சாஸ்திரிகள் . அம்மாவை வரலக்ஷ்மி கோச்சுக்கமாட்டா. எழுபத்து ஐந்து வருஷ உழைப்பு. பொறந்தாம் புக்காம் எல்லோருக்கும் நேரங்காலம் பார்க்காமல் அசராத உழைப்பு. அர்ப்பணிப்பு.
"பின்னாடி கொல்லை ஷெட்டு லாஃப்ட்ல குமுட்டி இருக்குடா தம்பி.. அத எடு.." பவானி சித்தி கொக்கியாய்க் கூன் விழுந்த முதுகை நிமிர்த்திக் கேட்டாள்.
எக்கிக் குமுட்டியை எடுக்கும் போதே சாரதா பாட்டியின் நினைவுகள் என்னை மொய்க்க ஆரம்பித்தன. அண்ட்ராயர் வயசிலிருந்து பாண்ட் போடும் வரை என்னை வளர்த்துப் பெரிய ஆளாக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தவள்.
"பக்கத்து ப்ளாஸ்டிக் வாளில கரி இருக்கு பாரு.. அதையும் எடுத்து குமுட்டி ஜல்லடைல போடு... நா உரிமட்டை நார் கொண்டு வரேன்...சித்த நாழில சீக்கிரம் பிடிச்சுக்கும்.." என்று பவானி சித்தி விலகிய நொடியில் குமுட்டியை இறக்குவதற்குள் மனசு மன்னையில் தஞ்சமடைந்திருந்தது.
மதனகோபால்நாயுடு கடையில் ஒரு மனு விறகும், உர சாக்குப் பையில் ரெண்டு கிலோ கரியும் வாங்கிக்கொண்டு பவானி சித்திக்கு ஒத்தாசையாகத் தூக்கிக்கொண்டு ஜெயலக்ஷ்மி விலாஸ் ஸ்கூல் தாண்டியது கண்ணுக்குள் வந்து போனது. பின்னால் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வருவாள். பாவம் தம்பிக்கு கை வலிக்குமே என்று யாராவது தெரிந்தவர்கள் சைக்கிளில் கடந்தால் "தம்பி.. இவனைக் கொஞ்சம் கீழ்கரையில இறக்கிவிட்டுடேன்.." என்று கெஞ்சி ஏற்றிவிடுவாள்.
"ம்... விசிறு.." என்று எரியும் கசங்கிய காகிதத்தை குமுட்டி வாயில் சொருகினாள். வேஷ்டியைக் கால்களுக்கிடையில் சொருகிக்கொண்டு சந்தியாவந்தனம் பண்ணுவது போல உட்கார்ந்து கொண்டேன். ப்ளாஸ்டிக் விசிறியால் “பட்..பட்..பட்”டென்று விசிற ஆரம்பித்தேன். குமுட்டியின் மேலிருந்து குபுகுபுவென்று புகை சுழன்று வரவர அதற்குள் கறுப்பு-வெள்ளையில் காட்சிகள் ஓட ஆரம்பித்தது.
புளி போட்டுத் தேய்த்த, டாலடிக்கும், வெண்கலப்பானையில் தான் பாட்டி அரிசி உப்புமா செய்வாள்.
"பசிக்கிறது.. என்ன டிஃபன்?" என்று பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் பரபரப்போடு அடுக்களைக்கும் நுழையும் போது "சித்த குமுட்டியை விசிறுடா... ஒருதடவை குழப்பிட்டு எடுத்துண்டு வரேன்" என்று பனைமட்டை விசிறியைக் கையில் கொடுத்துவிட்டு வெண்கலப்பானையோடு கொல்லைப்பக்கம் கிணத்தடிக்கு விரைவாள். பாட்டி பளபள வெண்கலப்பானையோடு வருவதற்குள் குமுட்டியில் தணல் பிடித்திருக்கவேண்டும்.
எல்லாம் முடிந்து சாப்பிடுவதற்குள் பசி போய்விடாமல் இருக்க "இந்தாடா... " என்று ஒரு பிடி வேர்க்கடலையைக் கையில் திணிப்பாள். குனிந்து குன்று போல உட்கார்ந்து கொண்டு... எல்லாம் முடிந்து இறக்கும்போது.. பின்னால் தட்டோடு நான் நிற்பேன். "சித்த உலப்பூறட்டும்டா..". என்றைக்காவது கத்ரிக்கா கொத்ஸு கிடைக்கும். தேவார்மிதம்.
"தம்பி... இன்னும் கொஞ்சம் பேப்பர் சொருகு... கரி ஈரமா இருக்கு போல்ருக்கு.. பிடிச்சுக்கலை.." குமுட்டி வாயில் பேப்பர் சொருகி வேகமாக விசிறினேன்.
விரத நாட்களில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுட்டுச் சாப்பிடுவதற்கும்.. "இன்னிக்கி பயத்தம் தூத்தம் வெச்சுடறேன்.." என்று கிருத்திகைக்குப் பயத்தம்பருப்புப் பாயஸமும் குமுட்டியில்தான் வைப்பாள். "என்னயிருந்தாலும் குமுட்டிதான் மடி.. நீங்க என்ன சொல்றேள் அக்கா?..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியை துணைக்குக் கூப்பிடுவாள்.
"கத்திரிக்கா தொகயல் பண்ணிடுடீ பவானி..." என்று கரிமேல் போட்டு கையாலேயே சுட்டுத் தருவாள். தோல் வழுமூண்டு போயி வெந்த கத்தரிக்கா பந்திக்கு அழைக்கும்.
"இன்னுமா புடிச்சுக்கலை... பூஜையே முடிஞ்சுடும் போல்ருக்கே..." என்று பின்புறத்திலிருந்து பவானி சித்தியின் குரல் கேட்டது. விசிறிய கையையும் கடந்த காலத்தில் கொக்கி போட்டிருந்த மனசையும் நிறுத்திவிட்டு குமுட்டி அடுப்பைப் பார்த்தேன். மேலே கறுப்பாய் இருந்த கரி அடிபாகத்தில் பிறந்த குழந்தையின் பாதம் போல சிவப்பாக இருந்தது.
"இந்த தணல் போறும்டா..." என்ற குரலுக்குக் குமுட்டிப் புகையிலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்குள் நுழைந்தேன். தணல் தூபக்காலில் இடப்பட்டு சாம்பிராணி புகை பூஜையறையெங்கும் படர்ந்தது. புகையை மீறி தூபக்காலில் பார்த்த கரியின் ஜிவ்வென்ற அக்னியில் எனது மன்னை நினைவுகள் கனன்றுகொண்டிருந்தது.

ஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016

வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் கிடையாது. நுழைவுச் சீட்டு தள்ளுமுள்ளு வரிசை கிடையாது. முக்கியஸ்தர்கள் அமுக்கியஸ்தர்கள் என்ற பேதம் கிடையாது. செல்வந்தர் ஏழை பாகுபாடு கிடையாது. ஒரு ஆன்மிக தரிசனத்திற்கு தயார்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தால் பூரா மனசும் நிறைந்து புத்துணர்ச்சியோடு வெளியே வரலாம். குறைந்தது சுமார் இரண்டு மணி நேரம் கிடைத்தால் இந்து மதக் கடவுளர் அனைவரையும் ஒரு எட்டு பார்த்துவிடலாம். சாவகாசமாக பார்க்கவேண்டுமென்றால் நான்கு மணி நேரம் அங்கே நங்கூரம் பாய்ச்ச வேண்டும்.


வேற்றுமையில் ஒற்றுமையே நமது தேசத்தின் மாண்பு. அதுவே இந்துமதத்தின் பெருமையும் கூட. மீனம்ப்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் நடைபெறும் எட்டாவது இந்து ஆன்மிக கண்காட்சிக்கு குடும்பத்துடன் சென்றுவந்தேன். வருடாவருடம் இதை மெய்யுணர்வுடன் கடைபிடிக்கிறேன். இந்தக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஊன்றுகோலாக இருக்கும் ஸ்ரீ. குருமூர்த்தி Gurumurthy Swaminathan அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ப்ரணாம்ஸ் நமஸ்தே ஜி! அவருக்கு உறுதுணையாக நிற்கும் சாஸ்த்ரா Vaidhyasubramaniam Sethuraman அவர்களுக்கும் மற்றும் பல எண்ணற்ற முகமறியாத் தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும், வந்தனங்களும்.
உள்ளே நுழையும் போதே ஊர்க்காரரும் ஃபேஸ்புக் நண்பருமான Rajagopalan Ram கைகுலுக்கினார். ஆறுமணிக்குள் திரும்பவேண்டும் என்று அலாரம் வைத்துக்கொண்டு வந்ததால் நின்று பேசமுடியவில்லை. நகர்ந்தோம்.
ஸ்ரீ. குருமூர்த்தியும் ஸ்ரீ வைத்தியசுப்ரமணியனும் கண்ணில் தென்பட்டார்கள். அவர்களை முன்னும் பின்னும் ஃபோட்டோ பிடித்தவரை கோடியில் ஒருவராக நின்றாலும் கண்டுபிடித்துவிடுமளவிற்கு நெருக்கமான ஸ்நேகிதம். சர்வவியாபி ஆர்.வி Rajagopalan Venkatraman. அனைவருடனும் சிறிது நேரம் மனசாரப் பேச வாய்ப்புக் கிடைத்தது. வைத்தியசுப்ரமணியத்தின் ”அவார்ட் பாலிடிக்ஸ்” பற்றிய குறு சொற்பொழிவு அபாரம். மேலும், ஹிந்து ஆன்மிகக் கண்காட்சியில் விவேகானந்தர், ஔவையார், பாரதி போன்று வேடமிட்டு கலந்துகொள்ளும் சிறார்களுக்கு சாஸ்த்ராவின் பரிசுப் போட்டி பற்றி விவரித்தார். கலாசாரம் வளர்வதைக் கேட்க இனிமை.
வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு. நாகசாமி சாருடைய தமிழ் மாலை, சொல்மாலை, பொய்யிலி மாலை என்ற மூன்று புத்தகங்களும் அக்ரஹாரம் என்கிற வீடியோ ஸிடியும் வாங்கினேன். நேரிலேயே உட்கார்ந்திருந்த அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவேண்டுமென்று இந்த மண்டுவுக்குத் தெரியாமல் நகர்ந்துவிட்டேன். தருமை ஆதீனம் ஸ்டாலில் ரூ. 12. 50 மதிப்புள்ள இந்துமத பாலபாடம் பத்து ரூபாய்க்கு கொடுத்தார்கள். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் மையத்தில் ஆலய வழிபாடு ஒரு ரூபாய்க்கு மேஜையெங்கும் காயின் விழ விநியோகித்தார்கள். ஒவ்வொரு ஸ்டாலிலும் ஒவ்வொரு ரசம். ஒவ்வொரு நற்சிந்தனை. ஒவ்வொரு நல்ல பழக்கம். ஒவ்வொரு படிப்பினை. ஒவ்வொரு இந்து மரபின் மார்க்கம். ஒவ்வொரு சேவை. ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு மடம்.
உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஞானப்பிரகாச ஸ்வாமிகளின் தமிழ்ச்சொற் பிற்ப்பாராய்ச்சியும் பரிதிமாற் கலைஞரின் தமிழ் மொழியின் வரலாறும் வாங்கினேன், இருபது சதம் கழிவு. சைவசித்தாந்த முதுகலைப் படிப்பு விண்ணப்பப் படிவத்தை இலவசமாக கையில் கொடுத்து மொபைல் நம்பர் வாங்கிக்கொண்டார்கள். சம்ஸ்க்ருதம் நடக்கும் இடங்கள், வேதபாடசாலைகளின் விவரங்கள், அம்மன், மீசை வைத்த பார்த்தசாரதி என்று சன்னிதிகளும் இதில் அடக்கம். பதஞ்சலியில் சல்லிசாக பிஸ்கெட், பழரச பானங்கள் விற்கிறார்கள். ஏற்கனவே தினமும் வீட்டில் பருப்பு சாதத்திற்கு இடும் ஒரு முட்டை நெய் அவருடைய தயாரிப்புதான். சுவையும் விலையும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. பாபா ராம்தேவ் யோகாவிலும் வியாபாரத்திலும் சாதித்துக்காட்டியிருக்கிறார்.
ஹிந்து மிஷன் ஸ்டாலில் பெருசு சிறுசு வித்யாசமில்லாமல் கூட்டம் அம்மியது. ஷுகர், பிபி மற்றும் போன் டென்ஸிட்டி இலவசமாக பரிசோதனை செய்தார்கள்.
தசாப்தங்களுக்கு முன் ரெட்ஹேட் லைனக்ஸ் ப்ரமோ வீடியோ ஒன்றில் உலக வழக்கில் எல்லாம் ஒன்று போலவே இருந்தால் எவ்வளவு அயர்ச்சியாக இருக்கும் என்று ஒரே சீருடை, ஒரே சானல் டிவி, ஒரே.. ஒரே... என்று ஒரேடியாகக் காட்டியிருப்பார்கள். வெவ்வேறு ரசத்துடன் வெவ்வேறு பாவத்துடன் வெவ்வேறு கலைகளை அருளும் கடவுளர்கள், தேவாதி தேவர்கள், நல்வழிகாட்டும் குருமார்கள், அவர்களது மடங்கள் என்று அந்த இடமே தேவலோகம் போலக் காட்சியளிக்கிறது. தீனிகளுக்குத் தனி கொட்டகை. பானி பூரியிலிருந்து சோளா பூரிவரை எல்லாம் உண்டு.
வெளியே வரும் போது Girijaa Guru அவர்களைச் சந்தித்தேன். “நான் படிச்சுட்டு அவருக்கு படிச்சு சொல்வேன்” என்று கணவரைக் காட்டினார்கள். “இவங்க திட்றாங்க”ன்னு Sangeetha Seshasayee ஐப் போட்டுக்கொடுத்தேன். “மேடம்! நல்லா எழுதறாரு.. உட்ருங்க..” என்று வக்காலத்து வாங்கினார். கிறுக்குபவனுக்கு கிரீடமா? என்று மகிழ்ச்சியாக இருந்தது.
நாளை இக்கண்காட்சியின் கடைசி நாள். இதுவரைக் கண்டு களிக்காதவர்கள்... ப்ளீஸ்.. உடனே... கிளம்புங்கள்... இல்லையேல் தெய்வமே வந்து கதவைத் தட்டும்.

வித்தை


"அறிவு... உன்னோட ஆம்பீஷன் என்ன?"
"இந்த நாட்டுலயே பெரிய கார்டியாலிஜிஸ்ட்டா ஆகணும் சார்..."
"ஏன்?"
"இருதயமே இல்லாதவங்களுக்கு ஆபரேஷன் பண்ணி இருதயம் ஃபிக்ஸ் பண்ணனும்.. இருதயம் பலகீனமா இருக்கறவங்களைத் தேத்தணும்..இருத... "
"போதும்.. போதும்.. இருதயமே இல்லாம பேசினா பரவாயில்லை.. மூளையும் இல்லாம பேசறே... எனக்கு இருதயம் அடைக்குது.... உட்காருப்பா..."
"விகாஸ்... நீ என்னவாகணும்னு ஆசைப்படற?"
"அரசியல்வாதியாகிச் சாக்கடையைச் சுத்தம் செய்யணும் ஐயா"
"அதுக்கு எதுக்கு அரசியல்வாதியாகணும்.. கையில குச்சி ஃபினாயில் எடுத்துக்கிட்டு கோமணத்தோட மேன் ஹோலைத் தெறந்து உள்ள இறங்கினா சுத்தம் பண்ணிடலாமே.... "
" நான் அரசியல் சாக்கடையைச் சொன்னேன் சார்..."
"யப்பாடீ... மணக்குது... சரி..சரி.. உட்காரு... ஏம்பா ரஞ்சித்! உன்னோட வாழ்நாள் குறிக்கோள் என்ன?"
ரஞ்சித் சொன்ன பதிலில் மொத்த வகுப்பறையும் உறைந்துபோனது. "ஏன்டா கேட்டோம்" என்று ஒடிந்து போய் நாற்காலியில் சரிந்த சற்குணம் சார் அப்புறம் அடுத்த மாணவனைக் கேட்கவேயில்லை. பத்தாம் வகுப்பிலேயே இப்படியும் ஒரு பையனா? அவருக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பீரியட் முடிந்தவுடன் வகுப்பறை வாசலுக்கு அழைத்துச்சென்று ஆதூரத்துடன் தோளில் கைபோட்டுக் கேட்டார்...
"நீ சாமியாராகி என்ன பண்ணப் போறே ரஞ்சித்?"
சிறிது நேர மௌனத்தில் காரிடாரில் அவர் ஷுவும் அவன் ஷுவும் டக்கி டக்கி எதிரொலித்தது.
"காசு பண்ணப்போறேன்.."
"டேய்... ரொம்ப பேசாதடா..."
"சார்... கார்டியாலஜிஸ்ட் கிட்டே அப்பாயின்ட்மெண்ட்டுக்கு நிக்காம ஆபரேஷன் பண்ணிக்கலாம், படகு மாதிரி ஏசி கார் வச்சுக்கலாம், பீச்சாங்கரையோரமா ஜிலுஜிலுன்னு ஆசிரம பங்களா கட்டிக்கலாம், உள்ளூர் பக்தைகள் கூட வெளிநாட்டுக்கும்... வெளி நாட்டு சிஷ்யைகளோட உள்ளூருக்கும் டூர் அடிச்சு கத பண்ணலாம்.. இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு.. அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுன்னு அரசியல் பண்ணலாம்.. ஸ்கூல் நடத்தலாம்.. மெடிகல் காலேஜ் வைக்கலாம்.. மகளிரெல்லாம் ஒன்று திரட்டி...."
"சிவ சிவா.." என்று காதிரண்டையும் பொத்திக்கொண்டார் சற்குணம் சார். "ஆஹா... வாத்தியாரையே காதைப் பொத்த வச்சுட்டோம்.. வெற்றி.. வெற்றி.." என்று உள்ளூர சிரித்தான் ரஞ்சித். சற்குணம் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற்று நிரந்தர வீட்டுவாசி ஆகிவிட்டார். ரேஷன், ஈபி பில், பால் கார்டு என்று வாத்தியார் வேலையைக் காட்டிலும் தீவிரமாக வீட்டு வேலை. வருடங்கள் உருண்டன என்கிற க்ளிஷேவை விடமுடியவில்லை. வருடங்கள் உருண்டன.
**
பர்கர்... பீட்ஸா.. பிக்கினி... புழங்கும் அமெரிக்கா. ஒரு இத்தாலியன் ஜெலட்டீரியா ஐஸ்க்ரீம் கடை வாசலில் ஜன சந்தடியான மம்பும் மந்தாரமுமான மத்தியான்ன நேரம். விஷமம் கண்களில் கொப்பளிக்கும் ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு ஒரு பெரியவர் அங்கே வருகிறார். எழுபத்தைந்து வயதில், அகன்ற தோள்களுடன்... திடகாத்திரமாகத்தான் இருக்கிறார். நூறு மீட்டர் ஓடினால் முப்பது செகண்ட் பிடிக்கும்.
“க்ராண்ட்பா... கமான் லெட்ஸ் ஹாவ் ஜெலட்டோ..” என்று கடையைக் காட்டி இழுக்கிறான். ஆனால் அவர் நகராமல் தரையில் நங்கூரம் தட்டி நிற்கிறார். “ப்ளீஸ்.. கமான்..” என்று மேலும் இழுக்கிறான். “வெயிட் ஃபார் சம் டைம். வில் கோ...” என்று சமாதானப்படுத்திவிட்டு விடுவிடுவென்று அங்கே வருகிறார்.
காவியுடையில் இரண்டு சாமியார்கள். இருவருமே முண்டாசு அணிந்திருக்கிறார்கள். கீழே உட்கார்ந்திருக்கும் சாமியார் வலதுகையில் மூங்கில் கம்பைப் பிடித்திருக்கிறார். அதன் மேல் சம்மணமிட்டு இன்னொரு சாமியார் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். சாதாரணமாக இல்லை. மூங்கில் மேலே உட்கார்ந்திருப்பவரின் வலது பக்கம் மட்டுமே மூங்கிலின் மேல் இருக்கிறது. அதுவும் எப்படி? வலது முட்டி மட்டும் அந்தக் கம்பின் மேல்.... போவோர் வருவோரெல்லாம் அதிசயத்துப் பார்த்து டாலர் போடுகிறார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் யாருப்பா?” நிதானமாக நெருங்கித் தமிழில் விஜாரிக்கிறார் அந்தப் பெரியவர்.
அந்நிய தேசத்தில் காது குளிரத் தாய்மொழி. இருவரும் தலையை நிமிர்த்திக் கண் திறந்து பார்த்தார்கள். பின்னர்....
“யோகிகள்” கோரஸாகப் பேசினார்கள்.
“வித்தை காட்டுபவர்கள் மாதிரி தெரியுது” என்றார். இருவருக்கும் சட்டென்று முகம் தொங்கியது.
“இது என்ன ட்ரிக்? எங்கே கத்துக்கிட்டீங்க?”
“ஐயா.. எங்களது குருநாதர் விலாவாரியாகச் சொல்வார்.. வாங்களேன்..”
“அட்ரெஸ் குடுங்க.. நாளை வருகிறேன்.. இது என்னுடைய கார்டு...” என்று அவரது முகவரி அட்டையை எடுத்து நீட்டினார்.
ஜெலட்டோ சாப்பிடும்போது அந்தக் கடையின் ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். தேசம் கடந்து வந்து... ஹும்... குச்சி ஐஸ் உருகி கை மணிக்கட்டு வரை வழிந்து ஜில்லிட்டதும் சுதாரித்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினார்.
**
ஊர் எல்லையில் சிறு குன்று. பனிமலை போல பாறைகளால் வெள்ளையாய் இருந்தது. அதன் பின்பக்கம் பர்ணசாலை போன்றதொரு குடில்.மயான அமைதி. அதைக் கிழிப்பது போல எங்கிருந்தோ “க்யூங்...க்யூங்..”. பறவையொலி. உள்ளே நுழைகிறார் இந்தப் பெரியவர். காவலுக்குக் கூட யாருமில்லை. அறை பளிச்சென்று இருக்கிறது. சுவரில் பெரிய சம்ஸ்க்ருத ஓம் போட்ட பதாகைகள் சீன ஷாலின் படங்களில் வருவது போலத் தொங்குகிறது.
"ஐயா...” குரல் கொடுக்கிறார்.
திரைச்சீலைகளுக்குப் பின்னே நெடியதொரு உருவம் நிழலாய்த் தெரிகிறது. திரை விலக நேரே வந்து நின்று கைகூப்புகிறது.
“சற்குணம் சார்.. என்னைத் தெரியுதா?”
கண்கள் சுருக்கிப் பார்க்கிறார்.
“யாருப்பா? தெரியலையே”
“கே.கே.எம் மெட்ரிக் ஸ்கூல். சைதாப்பேட்டை.. பத்தாம் வகுப்பு “ஈ” பிரிவு. ரஞ்சித்...”
“யே.. ரஞ்சித்து?”
“இப்ப நான் வெறும் ரஞ்சித் இல்லே.. ரஞ்சிதானந்தா”
“அடப்பாவி.. சொன்னா மாதிரி நெசம்மாவே சாமியாராயிட்டியா?”
“ம்..” அவரின் கண்களை நேரே பார்க்க ரஞ்சித்துக்கு.. சாரி.. ரஞ்சிதானந்தாவுக்கு குறுகுறுத்தது.
“பெரிய பெரிய மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பாரதம். அதுல பொறந்துட்டு ஏண்டா இப்படி ஊரை அடிச்சுப் பொழைக்கிறீங்க? உங்களுக்கே வெக்கமா இல்லே...” அவரது கூச்சலில் அந்த குடில் தரைமட்டமாகிவிடும் போல அதிர்ந்தது.
“சார்.. உங்கப்பா வாத்தியார். உங்க தாத்தா ஜமீந்தார். வசதியான குடும்பத்துல சகல சௌகர்யங்களோட வாழ்ந்தீங்க.. எனக்கு அப்படியில்லே... குடிகார அப்பன்... ஓடிப்போக.. வாசல்ல யாரையோ பார்த்துக்கிட்டே இருக்கிற அக்கா.. டுபாக்கூர் குடும்பம்.. ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு பிச்சை எடுத்தாங்க.. பத்தாவதுல தொன்னூத்தஞ்சு பர்ஸண்டேஜ்.”.
பக்கத்திலிருந்த ”டீச்சர்ஸ்..” பாட்டிலை ஒரு க்ளாஸுக்குள் ப்ளக்..பளக்கென்று கவிழ்த்து ஐஸ்க்யூப்ஸ் போட்டு மணிக்கட்டை ஆட்டி ஒரு மிடறு குடித்தான். அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் சற்குணம் டீச்சர். “ஹா...” என்ற பெருமூச்சுக்குப் பிறகு தொடர்ந்தான்.
“என்ன புண்ணியம்? பதினொன்னு கூட சேர முடியல.. கோயிலுக்குப் போடா... பாவமெல்லாம் கழுவிக்கலாம்னு அம்மா.. பேச்சியம்மன் கோயிலுக்கு தொரத்திவிட்டாங்க... அங்கதான் முனியப்பன் பழக்கம் ஏற்பட்டுச்சு... “. நிப்பாட்டினான். சிரித்தான். “முனியப்பன் யாருன்னு நீங்க கேட்கமாட்டீங்கல்ல.. நானே சொல்றேன்..”
“முனியப்பன் அமாவாசைக்கு அந்தக் கோயில்ல குறி சொல்ற ஆளு. வளமான கற்பனை உண்டு. நகை திருட்டுப்போனது... புருசன் கள்ளத்தொடர்பு.. பொண்டாட்டி ஏமாத்தறான்னு.... வகைவகையா பொய் சொல்லுவாரு.. அப்படி சொல்லிக்கிட்டே.. ஹேய்... ஊய்.... ஆத்தா...ன்னு உடம்பை உதறி கத்திட்டு.. கையை உதறினாக்கா... அப்படியே விபூதி கொட்டும்.. பௌர்ணமி பூஜையப்போ... வாயிலேர்ந்து ஸ்படிக் லிங்கம் எடுப்பாரு.. மொத்த சனமும் மெய்சிலித்துக்கிட்டுக் கன்னத்துல போட்டுக்கும்....”
இன்னொரு ஸ்மால் ஊற்றிக்கொண்டு தொடர்ந்தான் ரஞ்சித்..ச்சே.. தொடர்ந்தார்.. ரஞ்சிதானந்தா..
“பக்கத்துலேர்ந்து எல்லாம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. ஒரு நா அவரோட குறி ஷோ முடிஞ்சப்புறம் தனியாப் போயி.. முனி சாமி எனக்கும் சொல்லித்தர்றீங்களா?ன்னு கையைக் கட்டிப் பவ்யமாக் கேட்டேன்.. பீடிய வாயிலேர்ந்து எடுத்துட்டு.. ச்சீ போடா நாதாரி..ன்னு திட்டி அனுப்பினாரு... அவரு விபூதி எடுக்கிற ட்ரிக் எங்க கத்துக்கிட்டார்னு தெரியும்...அங்க போயி....”
இதற்கு மேல் சற்குணம் சாருக்கு பொறுமையில்லை. “ச்சே..ச்சே.. என்னோட ஸ்டூடண்ட்... நல்லாப் படிச்சு உத்தமமான மனுஷனா வருவேன்னு நினைச்சேன்.. ச்சீ..ச்சீ... உன்னோட சேர்ந்து....” என்று வசனத்தை முடிக்காமலே வாசலை நோக்கி நடந்தார்.
“டுமீல்”
சற்குணம் சார் அதிர்ச்சியோடு திரும்பினார்.
ரஞ்சிதானந்தா தரையில் குப்புறக் கிடந்தான். அவனைத் தாண்டி ரத்தம் தரையில் கோணல்மாணலாய்க் கோடு போட ஆரம்பித்திருந்தது. பின்னால் அரை நிஜார் போட்ட ஒருவன் துப்பாக்கியுடன் “ஹே... யூ.. மூவ்.. மூவ்...” என்று துப்பாக்கியை ஆட்டியாட்டி சற்குணம் சாரை விரட்டிக்கொண்டிருந்தான்.
“நீயா?” என்ற சற்குணம் சாரின் கண்ணில் தண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.
“அப்பா.. ரொம்ப நாளா நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே.. உன் கம்பெனி பேரென்ன கேட்பீங்க.. வந்த புதுசுல ஒரு க்ளாஸ் தயாரிப்புக் கம்பெனில இருந்தேன். இந்த ரஞ்சித்து சாமியாராயிட்டேன்னு எங்கிட்டே பேசிக்கிட்டிருந்தான். அப்போ.. விபூதி கொடுக்கிறது... லிங்கம் எடுக்கிறதெல்லாம் மக்கள் இப்போ நம்பறதில்லை.. புதுசா எதுவும் பண்ணினா கோடி கோடியா அள்ளிடலாம்ன்னு ஆசைக் காட்டினான். திக்னெஸ் கம்மியா இருந்தாலும்... வஜ்ஜிரம்போல உறுதியா க்ளாஸ் மெட்டீரியல் ஒண்ணு சோதனை முயற்சியில தயாரிச்சாங்க.. அதுல மூணு பக்கம் கால் வச்சு மேலே ஒரு க்ளாஸ் போட்ட முக்காலி ஒண்ணைத் தயாரிச்சோம்.. அதுக்கு மேலே ஒரு க்ளாஸ் ஷீட்டு.. அது மேலே ஒருத்தனை உட்கார வச்சு.. கீழே ஒருத்தனை ஒரு பக்கத்துல சும்மா கம்பு மாதிரி ஒண்ணைக் கொடுத்து பிடிக்க வச்சுக்கச் சொல்லி.. சோதனை முயற்சியா பார்க் ஓரத்துல உட்காரச்சொன்னோம்.. அன்னிக்க்கு மட்டும் இருநூறு டாலர் கிடைச்சுது.. “
“அடப்பாவி. உன்னை கெமிகல் இஞ்சினியரிங் படிக்கவச்சு அமெரிக்கா அனுப்பினா.. இதெல்லாமா பண்றே” அவருக்கு மனசு வலித்தது.
“ப்போ... மாசம் ஆறாயிரம் டாலர்... ஆளுக்குப் பாதி... எக்ஸ்ட்ரா மணி... ரெண்டு பேரு மட்டும் செஞ்சா ஆறாயிரம்.. இதுவே இருபது பேர் செஞ்சா. பத்து மடங்கு கூடுதலா பணம் கொட்டும்... டெக்னாலஜி என்னோடது.. உட்கார ஆள் பிடிக்க வேண்டியது அவன் வேலை.. மாத்தி மாத்தி செஞ்சோம்.. பணம் கொட்டுது... ஆனா நீ இப்படி இங்க வருவேன்னு நினைக்கலை.. ஓம் தொங்கற சுவத்துல நானும் இவனும் இந்த மாதிரி உட்கார்ந்திருந்த ஃபோட்டோவைப் பார்த்துட்டு உங்களோட அரிச்சந்திரன் மனசு போலீஸுக்கு ஃபோன் போடச் சொல்லும்.. சாரிப்பா....அடுத்த பிறவி...ச்சே.. வாட் எ யூஸ்லெஸ் டயலாக்..”
டுமீல்.
பின்குறிப்பு: அஷ்டமா சித்திகள் தெரிந்த ரஞ்சிதானந்தா மஹா யோக்கியர் என்று இதற்கு நல்லத்தனமான க்ளைமாக்ஸ் ஒன்றும் வைத்திருக்கிறேன். நேரமிருப்பின் எழுதுவேன்.

புது சேப்பாயீ...........

"அடி பட்டூ.. உம் புது மாட்டுப்பொண் எப்டியிருக்கா?" என்று குளக்கரையில் துணி துவைக்கும் போது விஜாரிப்பது போல எனது புதுக்காரைப் பற்றி போகுமிடமெல்லாம் நட்பும் சுற்றமும் அக்கறையாக விஜாரிக்கிறார்கள். ஒரு வ்யாசம் எழுதவேண்டும் போல கை அரித்தது.
*
பளபளக்கும் புதுக்காரை சென்னை வீதிகளில் ஓட்டுவதற்கு அசாத்திய நெஞ்சுரமும் அளப்பரிய அதிர்ஷ்டமும் பூர்வஜென்ம புண்ணியத்தின் பத்து சதவிகிதமாவது உங்கள் கணக்கில் சேமித்திருக்க வேண்டும். காந்தம் கண்ட இரும்பு ஊசியாகவும் தேங்காய்பத்தைக் கண்ட பெருச்சாளியாகவும்புதுக்காரைத் துரத்தும் துர்சக்திகள் அதிகம் உலவும்.

ஐந்து வருடங்களுக்கு முன் டிஸையர் ஒன்று எனக்குக் காராக வாக்கப்பட்டது. சேப்பாயி என்று பெயரிட்டு அதனுடன் நான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தது இந்த ஃபேஸ்புக் சமுதாயம் அறிந்ததே. ஒரு சுபயோக சுபதினத்தில் மாருதிகாரர்கள் ரிப்பன் வெட்டி காட்பரீஸ் கொடுத்து கையில் சாவியை ஒப்படைத்து "ஹாப்பி மோட்டாரிங் சார்.." என்று வீட்டுக்கனுப்பி சரியாக மூன்றாவது நாள். புதுகாரின் ரெக்ஸின் சீட்வாஸனை இன்னமும் குப்பென்று அடித்துக்கொண்டிருந்தது. என்னது? அடடா... இல்லையில்லை.. நீங்கள் நினைப்பது போல இல்லை. சீட்டின் மேல் அழுக்குப் படாமல் மாட்டிவிட்டிருந்த பாலீதீன் கவரெல்லாம் உடனே கழட்டிவிட்டேன்.
முதல் நாளிரவு நல்ல மழை. சாலையெங்கும் திடீர்க் குட்டைகள். குளங்கள், ஓரத்தில் ஆறுகள் என்று வழியெங்கும் நீர்வளம் மிகுந்து செழிப்பாகக் காணப்பட்டது. கத்திப்பாரா... காசி தியேட்டர்.. உதயம்... என்று யாருடனும் ஒட்டாமல் உரசாமல் புது வண்டியின் கற்பு கெடாமல் சர்வஜாக்கிரதையாக வந்துகொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையில் சங்கீதா. இளையராஜா இசை வண்டியுள் ஆக்ஸிஜனாய் நிரம்பியிருந்தது.
அஷோக் பில்லர் சிக்னல். சிவப்பிலிருந்து மாறி பச்சை ஒளிர்ந்து கிளப்பினேன். அங்கே இடதுபுறம் ஒரு சிவன் கோயில் இருக்கும். தெரியுமா? ஆமாம் அங்கே வரும் போது ஒரு பெரிய மூட்டை என் போனெட்டில் விழுந்தது. மூட்டையா அது? என்று நான் அசந்து பார்த்துக்கொண்டிருந்த போது அது துளிர்த்து இலையெல்லாம் முளைத்திருந்தது. ஓஹோ! அது மூட்டையில்லை மரக்கிளை என்று சுதாரித்துக்கொண்டேன். சங்கீதாவுக்கு அந்த மரம் விழுந்த அதிர்ச்சி. "நேத்திக்கு பெஞ்ச மழை எஃபெக்ட்" இது சங்கீதா. எனக்கு போனெட் என்னாச்சோ என்ற கொடுங்கவலை. கொத்தோடு கிளை போட்ட ஆண்டவன் ஒரு மூட்டை பொற்காசுகள் இந்த ஏழைக்கு அருளியிருக்கக்கூடாதா?
நான் இறங்கி சேப்பாயிக்கு என்ன சேதாரம் ஆயிற்று என்று பார்ப்பதற்குள் சங்கீதா இறங்கி ப்ளாட்ஃபார்ம் ஓரம் ஓடினாள். வண்டியின் பாகமெதுவும் தெரித்து விழுந்துவிட்டதோ என்று அச்சப்பட்டேன். ஓடியவள் திரும்பவும் வந்து "கர்ச்சீப் தாங்க.." என்று பிடுங்கிக்கொண்டு போனபோதுதான் கவனித்தேன். அங்கே ஒரு பாட்டியின் தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. "முறிஞ்சு விழுந்த கிளை பக்கத்து வண்டி பில்லியன்ல உக்கார்ந்திருந்த பாட்டி மண்டையிலயும் குத்தித்து" என்று கர்ச்சீப்பை வாட்டர் பாட்டிலைச் சரித்து தண்ணீரில் நனைத்து கட்டுப் போட்டுவிட்டுதான் சேப்பாயிக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க வந்தாள்.
இதிலிருந்து தெளிவது என்னவென்றால் விதியை மாற்ற யாராலும் முடியாது. ஆகாயத்திலிருந்து விழுவதற்கு என்ன பம்பர் போட்டு வண்டியைக் காப்பாற்ற முடியும்?
இரத்தக்காவு வாங்கினாலும் அதற்கப்புறமும் சேப்பாயியின் மேல் எண்ணெற்ற விழுப்புண்கள். ஆட்டோ, ட்ரை சைக்கிள், டூவீலர் என்று பேதமில்லாமல் மாதம் ஒரு முறை சீண்டிக் கோடு போடுவார்கள். "எல்லாம் மரத்துப்போச்சு.." என்று அரங்கேற்றம் பிரமீளா சொல்வது போல இவையெல்லாம் பழகப்பழக மரத்துப்போய்விட்டது. ஐந்து வருடங்கள் உழைத்துக் களைத்துப்போன வண்டியை மாற்றும் திட்டம் உதித்தது. புது சேப்பாயி வாங்குவது என்று முடிவாகி ஹோன்டா கம்பெனிக்காரர்களை அணுகினேன்.
சரவணபவனில் கையலம்பி உட்கார்ந்த பின்னர் ஆர்டர் எடுத்துதான் ஆனியன் ரவா ஊற்றுவது போல "புக் பண்ணிட்டீங்கன்னாதான் வண்டிய ரெடி பண்ணுவாங்க" என்றார்கள். "ஐயா.. பி ஆர் வி என்கிற வகையறாவில் உச்சபட்ச வசதிகள் இருக்கும் டீஸல் வண்டியில் மெட்டாலிக் சிகப்பு.. ஒண்ணு..." என்று தெண்டனிட்டுக் கேட்டுக்கொண்ட பின் "ஒரு மாசமாவது ஆகும்..." என்று ஒரு கிளாஸ் பச்சத் தண்ணீர் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். இரதமில்லாத ராஜா போல பொதுஜன போக்குவரத்தில் பயணமாகி பதிவுக்கு மேல் பதிவாக எழுதி.. உங்கள் எல்லோரையும்... நாயடி பேயடியாய்... சரி மீண்டும் அந்த நாட்களைப் பற்றி பேச வேண்டாம். உங்களுக்கு அது ஒரு கெட்ட கனவாகப் போகட்டும்.
மாருதியைக் காட்டிலும் ஹோன்டா சொகுசாக இருக்கிறது. புதுப்பொண்டாட்டி காஃபி போட்டுக்கொடுத்து “சொல்லுங்கோன்னா..” என்று அன்பொழுகக் கேட்பது போல சொல் பேச்சு கேட்கிறது. "துட்டு கூடப் போட்டாக்கா அப்படிதான் இருக்கும்" என்று ஒரு நண்பர் தோளில் தட்டினார். நான் காரோட்டக் கற்றுக்கொண்டதே எங்கள் வீட்டிலிருந்த டொயோட்டா குவாலிஸில்தான். ஆகையால் ஏழு பேர் அமரும் வண்டியாக இருந்தாலும் இலகுவாகத்தான் இருக்கிறது.
பின்பக்கம் விசிறி போல ஒரு வைப்பர் இருப்பதால் மழைத்தண்ணீரை வழித்துவிட்டு கவர்ச்சியாக பின்பக்கக் காட்சி காண்பிக்கிறது. “கொஞ்சம் அந்தப் பக்கம்.. கீழ.. இல்ல கொஞ்சம் மேலே.. இந்தப் பக்கம் திருப்பு....” என்றெல்லாம் பக்கத்து இருக்கைக்காரர்கள் கையை ஒடிக்கும்படி ரியர் வ்யூ கண்ணாடியைத் திருப்பச் சொல்ல வேண்டாம். ட்ரைவர் பக்கக் கதவில் ஸ்விட்ச் கொடுத்து இடது வலது பக்க கண்ணாடிகளை விரலசைப்பில் திருப்பிக்கொள்ளலாம். பல சௌகரியங்கள்... கார்வாலே சைட்டில் போட்டிருப்பார்கள்.
புது சேப்பாயியில் சர்வ ஜாக்கிரதையாக ஒரு வாரம் கடந்திருக்கிறேன். அதற்குள் தக்கோலம், ஜம்புகேஸ்வரர் அருள்பாலிக்கும் வட திருவானைக்கா மற்றும் ஒன்பது அடி உசரமுள்ள, மூலிகைகளால் வடிக்கப்பட்ட ஔஷத லலிதாம்பிகை, பாலா திரிபுரசுந்தரி, வாராகி என்று மூன்று அற்புதத் திருக்கோயில்கள் சென்று கடவுள் தரிசனம் ஆயிற்று. தொடர்ந்து எழுதுகிறேன்......

கபாலி


கபாலி திரைக்கு வந்தவுடனேயே போக வேண்டும் என்று பிள்ளைகள் ஒத்தைக்காலில் நின்றார்கள். “எல்லோரும் பார்த்துட்டாங்கப்பா..”. peer pressure. “நெருப்புடா...” டீஸரின் தாக்கம். ஆனால் நான் மசியவில்லை. இஷ்டமுமில்லை. ஆயிரம் ரூபாயோ...அல்லது முதல் காட்சியோ கஷ்டப்பட்டு ரிசர்வ் செய்து இதுபோன்ற கலைப்படங்களுக்கு அழைத்துப்போவது பெருங்குற்றம் என்று நெஞ்சு குறுகுறுத்ததால், ஊர் மக்கள் பார்த்து சாந்தியடைந்தபிறகு சாவகாசமாக நேற்று சென்றோம்.
“தையத்தக்கான்னு ஆட்டமில்லை... அரையும்குறையுமா யாருமே அவுத்துப்போடலை... கெக்கேபிக்கேன்னு சிரிச்சுண்டு ரெண்டு அர்த்தமா யாரும் பேசலை... பொட்டு பொட்டுன்னு ஒரே துப்பாக்கி சத்தம்... காதை அடைச்சுது.... பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை தெரையில ரத்த விளார்... கிட்டக்க காமிக்கும் போது ரஜினிக்கு வயசாயிடுத்துன்னு நன்னா தெரியறது.... ஆனா சிரிப்பும் நடையும் இன்னமும் அப்படியே இருக்கு...”
நேற்று இரண்டாம் ஆட்டம் முடிந்து வீடு திரும்பும் போது என்னுடைய எழுபது வயது சித்தி சொன்னதுதான் மேற்கண்ட இரத்தினச்சுருக்கமான விமர்சனம். நம்ம பாணியிலே தொடருவோம்...
கையைச் சுட்டுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளரின் ஜாக்கிரதாம்சத்தால் ரஜினியே “இமயமலைக்கு போய்டலாமா?” என்று எண்ணுமளவிற்கு அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட மலேசிய கேங்ஸ்டர்களின் கதை. தமிழ் மக்களுக்காக அந்நிய தேசத்தில் போராடும் ஒரு கேங்கின் தலைவனது வாழ்க்கை சூறையாடப்படுகிறது. அவன் மீண்டெழுந்து வருவதுதான் க்ளைமாக்ஸ். மகிழ்ச்சி.
வழக்கமாக இந்திய வில்லன்களை பந்தாடும் ரஜினி இந்தப் படத்தில் வெள்ளைக்கார வில்லனை எதிர்கொள்கிறார். அந்த வில்லன் டோனி லீ, மகிழ்ச்சியை மதுரைத் தமிளாக்காமல், நாக்கை சுளுக்கிக்கொள்ளாமல், “ழ்”ழை “ழ்”ழாகவே உச்சரித்தது மகிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ச்சி. மலேசிய இரவுகளில் நகரின் பருந்துப் பார்வையும் விடுதிகளின் பார்களும் பார்வையை குளுகுளு மற்றும் கிலுகிலுப்பாக்குகின்றன. ரஜினி என்கிற நாயகனை மட்டும் பிரதானமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. ஆகையால், இசை, பின்னணி, வசனங்கள், சுற்றி வரும் துணை நடிகர்கள் என்று அனைத்துக்குமே அவர்தான் மையப்புள்ளி.இதனாலேயே திரையைத் தவிர்த்துப் பாடல்கள் வெற்றியடவில்லை. மகிழ்ச்சி.
தென்றல் வந்து தீண்டும் போது.. என்கிற இளையராஜ இசையமைத்த அவதாரம் படப்பாடல் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. புயலுக்கு மத்தியில் தென்றலாய், இரைச்சலுக்கு நடுவில் இன்னிசையாய் மனசைச் சுண்டி இழுத்தது. ராஜா எங்கும் வாழ்கிறார். அதே மெட்டின் தழுவலில்தான் ரஜினி-ராதிகா ஆப்தே பாண்டிச்சேரி சந்திப்பில் வரும் பாடல் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி.
சந்தோஷ் நாராயணனின் கிடாருக்கு நான் பரம ரசிகன். அட்டக்கத்தியில் பின்னணி முழுக்க ஆளை அசத்தும் ஸ்ட்ரம்மிங் வரும். இதில் இரண்டு மண்வெட்டி எடுத்து தார் ரோடில் கரண்டுவது போல ( கூடுதலாக கிடார், ட்ரம்ஸ்,) ரஜினி திரையில் தோன்றி சாகசம் செய்யும்போதெல்லாம் வருகிறது. ம்... கூடவே “நெருப்புடா...”. ட்ரைலரில் வரும் “மரு வச்சிக்கிட்டு.. .குமிஞ்சு.. சொல்லுங்க எஜமான்..” முதல் அரைமணியிலேயே வந்துவிடுகிறது. மகிழ்ச்சி.
ஆவேசமாக தொழிலாளர் நலம் பேசும் தமிழ்நேசன் கதாபாத்திரத்தில் நாசர். நடிப்பில் மிளிர்கிறார். ஒரு விடுதியில் ரஜினி உள்ளிட்ட கேங்க் மக்கள் அனைவருடனும் புரட்சி பொங்க பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய செவ்வகக் கண்ணாடியை தூக்கி விட்டுக்கொள்ளும் மானரிஸத்தில் அசந்துபோனேன். குறிப்பிட்ட இடைவெளியில் துல்லியமாக ஒவ்வொருமுறையும் அதேபோல செய்கிறார். உடல்மொழி புரட்சி பேசுகிறது. அப்போது வரும் சந்தோஷின் கிடாரிஸ பீட்ஸ் பின்னணி காட்சிக்கு பெரும்பலம். பார்க்கும் நமக்கே நரம்பு புடைக்கிறது. மகிழ்ச்சி.
அட்டகத்தி தினேஷுக்கு ஆர்வக்கோளாறு பாத்திரம். ரஜினியைச் சுற்றிச் சுற்றி வருகிறார். அவரை பாட்டில்களால் அடித்துக் கொல்வது கொடூரமான காட்சி. பசங்களுடன் சேர்ந்து நானும் பயந்தேன். வன்முறையின் உச்சக்கட்டம். தன்ஷிகா அளவோடு செய்திருக்கிறார். ஒன்றிரண்டு ப்டங்களாவது “தெகிரியமான..விஜயசாந்தி” டைப் படங்கள் எடுத்து அவரை வீரம் குன்றச் செய்து அப்புறம் ரொமாண்டிக் படம் பண்ணுவார்கள் என்பது என் துணிபு.
சிங்கப்பூர் சட்டை என்று எண்பதுகளில் எங்கூரில் விற்பார்கள். குருவியாகப் பறந்துவிட்டு வருபவர்களும் அதே சட்டையணிந்து அவர்கள் சிங்கப்பூர் சென்றுவந்தவர்கள் என்று ஊர்ஜிதப்படுத்துவார்கள். அந்த ஜிலுஜிலு சட்டைகளை என் அப்பா எனக்கு போட்டு அழகுபார்த்தார். படத்தில் வரும் ஆண்கள் அனைவரும் ஃப்ளாஷ்பேக்குகளில் பெருங்காலரும் பெரிய பெரிய பூப்போட்ட ஜிகுஜிகு சட்டையுமாக வருகிறார்கள். விதம்விதமான இலைகளும் பூக்களுமாகச் சட்டைகளில் வண்ணக்களஞ்சியமாக பூந்தோட்டங்கள் இருக்கும். மகிழ்ச்சி.
”லோகா” என்ற மாத்திரை ஓட்டும் தாதா ஒருவனை பென்ஸ் ஏற்றிக் கொள்ளும் காட்சியில் இரஞ்சித்-இரஜினி கூட்டணி தூள் கிளப்புகிறது. கோட் போடுவதற்கு சொல்லும் “அரசியல்” காரணமும், “கனவில் வரும் துன்பங்கள் எல்லாம் எழுந்ததும் விலகிவிடுவது போல நிஜத்திலும் இருக்காதா?” என்ற அர்த்தத்தில் வரும் வசனமும் ஜம்மென்று இருக்கிறது. இதுபோன்ற சில சுறுக் நறுக் திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. மகிழ்ச்சி.
My Father Balaiah* படித்துக்கொண்டு சிறைப்பறவையாய் இருந்த ரஜினி விடுதலையாகி வந்தவுடனே கையைக் காலை உதறிக்கொண்டு பொட்டு வைத்த மைக்கேல் ஜாக்ஸன் போல அரைகுறையாய் ஆடுகிறார்கள். ரஜினியின் திரையுலக வரலாற்றிலேயே இதுதான் சொத்தையான அறிமுகப்பாடல். ஒருவன் ஒருவன் முதலாளியை நினைத்துப்பார்க்கிறேன். “மகிழ்ச்சி”, கோபம், கருணை, வருத்தம், சந்தோஷம் என்று பலவிதமான ரசங்களுடன் அவ்வப்போது ரஜினியால் சொல்லப்படுகிறது. இரசிக்கும்படி இருக்கிறது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
இராதிகா ஆப்தேவின் நடிப்பு அபாரம். அலங்காரம் கூட மிகையாக இல்லை. கண்கள் பேசுகிறது. கண்டிப்பு காட்டுகிறது. பாசம் ஒழுகுகிறது. காதலில் மினுக்குகிறது. குறைந்த காட்சிகளே தோன்றினாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். மகிழ்ச்சி.
இறந்துவிட்டதாக அனைவராலும் நம்பப்பட்ட, ஆனால் ஜீவிக்கும் தன் மனைவியைக் காண பாண்டிச்சேரி வருகிறார். அருகில் தொழின்முறைக் கொலையாளிப் பெண் “யோகி”யுடன் (கர்மயோகி போல கொலையோகி?). எத்தனையோ தசாப்தங்கள் கடந்து சந்திக்கும் அந்த கணத்தில் இராதிகா ஆப்தேவின் நடிப்பில் நமது கண்கள் குளமாகின்றன. இதை விடுத்து இந்தக் காட்சிக்கு சற்று முன்னர் “அம்மா உயிரோட இருக்காங்க...” என்று தன் பெண் சொல்ல... பச்சை பசும்புல் தரையில் போய் மண்டி போட்டு.... திரைக்கு முதுகைக் காண்பித்து அமர்ந்து... ரஜினி இருமலில் குலுங்குவதை.. அருமையான நடிப்பு என்று சொல்பவர்களை... எனது குருநாதர் பாணியில் திட்டுவதென்றால்... அவர்களை பசித்த புலி தின்னட்டும்.
”அப்போ ரஜினி நடிக்கவேயில்லையா?” என்று நாக்கை மடித்து என்னை அடிக்க வராதீர்கள். படம் முழுக்க கண்களால் நடித்திருக்கிறார். பெண்ணிடம் பாசம் பொழியும் தகப்பனாக வரும் காட்சிகள் அருமை. ராதிகா ஆப்தேவுடன் வரும்போது நம்மையறியாமல் கண்கள் ரஜினியை விட்டு ஆப்தேவுடன் சென்றுவிடுகிறது. ரௌத்திரம் பொங்க பழிவாங்க கிளம்பும் இடங்ளில் உடல் பேசுகிறது. மகிழ்ச்சி.
கேங்ஸ்டர் படங்களில் இரண்டு குறியீடுகள் உண்டு. ஒன்று தொடை தெரிய ஆடையுடுத்திக்கொண்டு கைகளில் மதுக்கோப்பையுடன் கவர்ச்சியான அழகியொருத்தி வில்லன் தோளோடு ஒட்டிக்கொண்டே வருவாள். அந்தக் காலத்தில் சிலுக்கு அனுராதா போன்ற முதிர்கன்னிகள். சிலுக்கென்றால் பாதிக்கண் சொருக வருவார். அனுராதா என்றால் தங்கக்காசு போட்ட டிராயரோடு வருவார். விமர்சனம் திசை மாறுவதால் அடுத்த அடியாள்படக் குறியீட்டுக்குப் போகலாம். மகிழ்ச்சி.
இன்னொரு குறியீடு குளிர்க்கண்ணாடி. இதில் முதல் ஐட்டம் இப்படத்தில் இல்லை. இரண்டாவது எல்லோரும் கண்ணாடிப் போட்டுக்கொள்கிறார்கள். ஒரு காட்சியில் திரையில் அனைவருமே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டதைப் பார்த்தவுடனே குலுங்கிச் சிரித்துவிட்டேன். சம்பந்தமில்லாமல் சிரிக்கிறேன் என்று என் மனைவி புஜத்தில் இடித்து “இப்ப என்ன சிரிச்சாறது?” என்று ரகசியக் கண்டிப்பு மொழியில் காதோடு கேட்டார்கள். “இல்ல... திடீர்னு அம்புட்டு பேரும் கருப்புக் கண்ணாடில நின்னவுடனே.. சங்கர நேத்ராலயா ரிசப்ஷன்ல டாக்டர்ட செக்கப்புக்கு வந்தா மாதிரி தோணிச்சு...” என்று அடக்கிவாசித்தேன். மகிழ்ச்சி.
மலேசியா வீதிகளில் தீபாவளி கேப்பு வெடிப்பது போல சகஜமாக சுட்டுக்கொள்ளும் நிழலுக தாதாக்களை பொலீஸார் பிடிக்க வராதது ஆச்சரியம் என்று எனக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னேன். ”ரஜினி படத்தில் இதெல்லாம் பார்க்கக்கூடாது” என்று சட்டையைச் சொரிந்தார்கள் சங்கீதா மேடம்.  ”வில்லன் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி இருக்கான்ல..” என்று சகட்டுமேனிக்கு ஒரு பீட்டர் விட்டேன். “ச்சே..ச்சே...பாண்டுக்கு கண்ல குறும்புத்தனம் இருக்கும்.. இவனுக்கு ரௌடியிஸம் இருக்கு..” என்று அதையும் புறந்தள்ளி பல்ப் வாங்கவைத்தார்கள். மகிழ்ச்சி.
லிங்காவில் அடிபட்டதால் கபாலியைச் சரமாரியாகச் சந்தைப்படுத்தியிருக்கிறார்கள். ஏனைய நடிகர்கள் இதுபோன்ற கேங்க்ஸ்டர் படங்களில் நடித்தாலும் ரஜினிக்கு இதுபோன்ற படங்கள் எப்போதும் தோல்வியைத் தந்ததில்லை. இப்போதும் அவருக்கு வெற்றிதான். மகிழ்ச்சி.
(என்னது? இரஞ்சித்தைப் பற்றி விஸ்தாரமாச் சொல்லலையா? மெட்ராஸ்லயும் அட்டக்கத்தியிலயும் அவர்தான் டைரக்டர் எனக்குத் தெரியும். என்னது? இதுலயுமா?. மகிழ்ச்சி)
**
*நிலச்சுவான்தாரர்களுக்கும் கூலிவேலை செய்பவர்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கதை. இதை எழுதிய தெலுங்கானா ப்ரொஃபஸர் சத்தியநாராயணா, தனது தந்தை மற்றும் தாத்தாவின் கஷ்டங்களை விவரித்து நாவலாக்கினார் என்பது கூடுதல் தகவல்.
பின் குறிப்பு: பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு குழு மனப்பான்மை உண்டு. ஒரு போராளி “ச்சே.. படமா இது..... இழு..இழுன்னு இழுக்கறானுவ...” என்றால்...அடுத்த சில நிமிடங்களில் பல போராளிகள் ஃபேஸ்புக்கெங்கும் பிறப்பார்கள்.. “ஆமா..ஜவ்வா இழுக்கறானுங்க...” என்று கோரஸாக காயர் பாட ஆரம்பித்து கலாய்ப்பார்கள். இது சினிமா விமர்சனத்துக்கு மட்டுமல்ல என்று எல்லாமறிந்த ஃபேஸ்புக் ஞானிகள் பலர் அறிவார்கள்.
--சுபம்--

முருகன் சீன்ஸ்

முருகன் சீன் 1:
”முத்துக்குமரா... ஸுப்ரம்மண்யோம்... ஸுப்ரம்மண்யோம்..” என்று பாயில் உட்கார்ந்துகொண்டு இருகைகளையும் குவித்து மனமுருக முருகனைப் பிரார்த்தித்துக் கட்டையைச் சாய்ப்பாள் சாரதா பாட்டி. நெற்றியில் ஒரு கீற்று விபூதி. ரேழியிலிருந்து சமையல் உள்ளுக்குச் செல்லும் பாதை நிலைவாசப்படியடியில் சிம்னி விளக்கு மங்கலாய் எரிந்து சுவற்றில் மாட்டியிருக்கும் அபயஹஸ்த முருகனை தேவலோகத்திலிருப்பது போல காண்பிக்கும்.

முருகன் சீன் 2:
கிருத்திகைக்கு கிருத்திகை பொழுது விடியாத மன்னையிலிருந்து முதல் பஸ் பிடித்து கும்மோணம்.... அங்கிருந்து ஸ்வாமிமலை டவுன் பஸ் பிடித்து.. முருகனுக்கு அர்ச்சனை செய்து தரிசிப்பது எனது மாதாபிதாவின் வழக்கம். அம்மாவின் ஷண்முகப் பிரேமையினால் அக்காவுக்கு “கிருத்திகா”வும் எனக்கு “கார்த்தி”யும் சூட்டி அழகு பார்த்த கௌமாரக் குடும்பம். தரிசனம் முடிந்து திரும்பும் போது கோயில் முனையில் வாங்கிச் சாப்பிட்ட கொய்யாப்பழத்தின் ருசி இப்போது நினைத்தாலும் நாக்கு மேலன்னத்தோடு ஒட்டிக்கொள்கிறது.

முருகன் சீன் 3:
நீலா சித்திக்கு தமிழ்க் கடவுள் மேல் அளவுகடந்த பக்தி. தோளில் வேல் சாய்த்த குட்டிக் குமரனுக்கு தினமும் கொல்லையிலிருந்து பளீர்ச் சிவப்பில் அன்றலர்ந்த செம்பருத்திப் பூப் போட்டு சஷ்டி கவசம் பாடுவாள். படிப்பாள். பாடுவாள்.... ஃபேன் காற்றில் சுவரிலிருக்கும் முருகன் அசைந்தால் அவளுக்கு அருள் கிடைத்து விட்டதாக அர்த்தம். சந்தோஷப்படுவாள். இன்றைக்கு படுத்தபடுக்கையாகக் கிடந்தாலும் அவளது படுக்கையருகே ஜன்னலில் முருகன் சிரிக்கிறார். அவர் அசைவது தெரிந்தாலும் தனக்கு அருள் புரிகிறாரா? என்று சந்தேகப்படுவதற்குக்கூட அவளுக்கு திராணியில்லை.

முருகன் சீன் 4:
கோடியக்கரை குழகர் கோயில் அஞ்சனாக்ஷி சமேத அமிர்தகடேஸ்வரர். கொட்டைப்பாக்களவு லிங்கம். அசால்ட்டாக பார்த்துக்கொண்டு பிரதக்ஷணம் வருவீர்கள். சிவன் சன்னிதிக்கு நேர் பின்னால் லிங்கோத்பவர். அவரைப் பார்த்துக்கொண்டு இடதுப் பக்கம் பட்டென்று திரும்பினால் பக்கென்று மூச்சடைத்துப் போய்விடுவீர்கள். ஆறடிக்கு ஆறுமுகன் புல்லட்டில் அமர்ந்து வருவது போல மயில்வாகனத்தில் அமர்ந்திருப்பார். ஒரு முகமும் பன்னிருகைகளுமாய் ஆஜானுபாகுவானத் தோற்றம். ஒரு கரத்தில் அமுதகலசம் ஏந்தியிருப்பது சிறப்பு. முழு விபூதியலங்காரத்தில்.... வெள்ளையும் சொள்ளையுமாக... நீங்கள் அந்த இடத்தை விட்டு நகரவே மாட்டீர்கள்... பக்கத்தில் மண்ணிலிருந்து விண்ணளக்கும் பிரம்மாண்ட வெள்ளி வேல்... ஊஹும்.. அந்த அழகை நான் சொல்லி மாளாது.. நேரே போய் தரிசனம் செய்யுங்கள்.

கணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி

பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வு முடிந்தவுடன் தேவவிரதனைச் சந்திக்க நாயனா நேரே கோகர்ணம் சென்றார். மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் தேவவிரதனுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி ஷ்ரத்தா தேவி கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மூத்தோர்களின் உதவி தேவைப்பட்டது.
“விசாலாக்ஷி உங்களுக்கு உதவியாக இருப்பாள். நீங்கள் திருவண்ணாமலைக்குப் புறப்படுங்கள்” என்று நாயனா அவர்களை கிளப்பினார். அப்போது தேவவிரதனின் சிஷ்யரான பெரும் செல்வந்தர் மகன்லால் பம்பாய்க்கு அழைப்புவிடுத்தார். வசிஷ்ட கணபதி முனியின் கோகர்ண விஜயம் தெரிந்து ஓடோடி வந்திருந்து பம்பாய்க்கு பிடிவாதமாக அழைத்தார்.
கணபதி முனி, தேவவிரதன் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா தேவி மூவரும் மகன்லாலின் விருந்தினர்களாக ஒரு மாதம் பம்பாயில் தங்கியிருந்தனர். ஒரு நாள் மகன்லாலில் மனைவி ”ஷ்ரத்தா பிள்ளை பெற்றபின் நீங்கள் அனைவரும் கிளம்பலாம்.. அதுவரையில் இங்கே தங்கியிருக்கலாமே” என்று கெஞ்சினார்.
“அம்மா.. தங்கள் வாத்சல்யமான பாசத்திற்கு தலை வணங்குகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இந்தப் பேறு காலத்தில் எனக்கு திருவண்ணாமலை சென்று பகவானையும் விசாலாக்ஷி அம்மையாரையும் பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துள்ளது. மன்னிக்கவும்.. எங்களுக்கு சந்தோஷமாக விடையளியுங்கள்...” என்று கைக் கூப்பினார்.
ஷ்ரத்தாதேவி இன்றோ நாளையோ பிரசவம் என்றிருந்த நிலையிலும் நிறைமாத கர்ப்பஸ்த்ரீயாக திருவண்ணாமலைக்கு மூவரும் பயணப்பட்டார்கள். ஷ்ரத்தாதேவியின் பகவான் ரமணர் தரிசன வைரக்கியமே இதற்கு காரணம்.
திருவண்ணாமலை வந்தடைந்தார்கள். விசாலாக்ஷியைக் கண்ட மறுகணம் ஷ்ரத்தாதேவிக்கு தனது தாயைக் கண்ட மகிழ்ச்சியும் துள்ளலும் ஏற்பட்டது. ஆசிரமத்திற்குச் சென்று ஸ்ரீரமண தரிசனம் செய்தார்கள். ரமணரின் தெய்வீகத் தோற்றம் ஆண்டவனே மனித உருக்கொண்டு இப்பூவுலகில் நின்றது போன்று பரவசப்பட்டு ஷ்ரத்தாதேவியின் கண்களிலிலிருந்து நீர் தாரைதாரையாய்க் கொட்டியது.
நெடுந்தூரப்பயணத்தால் ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அனைவரும் சொல்லொணாத்துயரம் அடைந்தார்கள். தேவவிரதனும் ஷ்ரத்தா தேவியும் திருவண்ணாமலையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து பின்னர் கோகரணம் திரும்பினார்கள்.
கணபதி முனி மாமரக் குகையை விட்ட நகரவேயில்லை. முப்போதும் தவத்தில் இருந்தார். தவம் கலைந்த சில நேரங்களில் சூத்ர க்ரந்தங்கள் எழுதினார். வேத உபநிடத இரகஸியங்களை “விஸ்வ மீமாம்ஸா” என்ற பெயரில் அனைவரும் இரசிக்கும்படி எழுதினார்.
1925ம் வருடம் கொஞ்ச காலம் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இருந்தலும் விடாமல் தவமியற்றினார். விசாலாக்ஷியும் குடும்ப பாரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஸ்ரீவித்யா உபாசகியாக சாதகம் செய்துகொண்டிருந்தார்.
இச்சமயத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. போலியாக சீர்த்திருத்த கொள்கைகளை ஆரவாரமாய்க் கூக்குரலிடும் உண்மையற்றவர்களின் முகமூடியைக் கிழித்தெரியும் நிகழ்ச்சி.
தென் தமிழகத்தில் சேரன்மாதேவி என்கிற கிராமம். இங்கு வி.வி.எஸ் ஐயர் என்பவர் ஒரு கலாசாலை தொடங்கினார். அதன் பெயர் பாரத்வாஜ குருகுலம். விசேஷம் என்னவென்றால் உறைவிடமும் குருகுலத்தில் இணைந்திருந்தது. தேசப்பற்றோடு சகோதரத்துவத்தையும் அவர்களிடத்தில் விதைப்பதே இதன் பிரதான குறிக்கோள். ஒரு பிராமண சமையல்காரரை குருகுல சாப்பாட்டுக்காக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அப்பிராமண காங்கிரஸ்காரர்கள் சிலர், ஆஸ்ரமத்திற்கு கொடையளிப்பவர்கள், அப்பிராமண சமையல்காரரை பணிக்கமர்த்தும்படி வி.வி.எஸ் ஐயருக்கு நெருக்கடி தந்தார்கள். ஐயர் கணபதி முனியிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கலாம் என்றார். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள்.
சாதாரணமாக இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது என்று கணபதி முனிக்குப் புலப்பட்டது.
“சமையற்காரர் பணிக்கு நான் ஒரு ஹரிஜனைப் பரிந்துரைக்கிறேன்” என்று கணபதி முனி தீர்மானமாக சொன்னார். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அனைவரும் செய்வதறியாது திகைத்தார்கள். இச்சூழ்நிலையில் ஐயர் திடீரென்று உயிர்துறந்தார். இந்தச் சண்டையும் ஆஸ்ரமும் ஒன்றாக முடிவுக்கு வந்தது. கணபதி முனிக்கு வருத்தமாக இருந்தது. அப்போது கீழ்கண்ட ஸ்லோகம் வடித்தார்.
ராத்ரிர்கமிஷ்யதி பவிஷ்யதி சுப்ரபாதம்
பாஸ்வான் உதேஷ்யதி ஹஷிஷ்யதி பங்கஜாதம்
இத்தம் விசிந்தயதி கொசகதே த்விறேபே
ஹா ஹந்த ஹந்த நளிநீம் கஜ உஜ்ஜஹார

பொருள்: இரவு கவிந்த போது தாமரை மலரானது ஒரு வண்டினை அதன் இதழ்களுக்குள்ளேயே வைத்து மூடியது. உள்ளுக்குள் அகப்பட்ட வண்டானது “இரவு கடந்து பகலில் சூரியன் உதிக்கும்போது இத்தாமரையானது மலரும். அப்போது நான் தப்பித்து பறந்துவிடுவேன்” என்று நினைத்துக்கொண்டது. அந்த சமயத்தில் ஒரு யானை அந்த மலரைப் பறித்து தனது காலடியில் போட்டு நசுக்கும் போது உள்ளிருந்த வண்டையும் கொன்றுவிட்டது.
1925 நவம்பரில் கணபதி முனி மச்சிலிப்பட்டின சனாதன தர்ம சபா அழைப்பின் பேரில் சென்றார். அவரது சிஷ்யரான செருவு ராமகிருஷ்ணய்யாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
செவுரு கிருஷ்ணய்யாவின் தந்தை சைனுலு. பெரிய பண்டிதராக இருந்தாலும் அவர் ஒரு பழமைவாதி. அப்போதைய மத சடங்குகளைச் சாடி சமூக விடுதலை பற்றிய கணபதி முனியின் கொள்கைகளை அவர் வெறுத்தார். அப்படிப்பட்டவரை தனது வீட்டில் தங்கவைப்பது பெரும்பாவம் என்று கருதினார்.
”அப்பா... கணபதி முனி அவர்களை நம் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தயை கூர்ந்து அனுமதி தர வேண்டும்.”
”ஊஹும். புரட்சி என்ற பெயரில் பல புதிய மாற்றங்களை புகுத்த எண்ணும் அவன் எனது கிரஹத்தில் தங்குவது கூடாது. இதை நான் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன்” என்று ஒற்றைக்காலில் நின்றார் சைனுலு.
கிருஷ்ணைய்யா கெஞ்சிக் கூத்தாடி மன்றாடிப் பார்த்தார். எதற்கும் பயனில்லை. கடைசியாக
”இன்றொருநாள் அவரது சிஷ்யர்களுக்கு மதிய உணவளிக்கலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் இதற்காவது ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று கைகூப்பினார்.
”ம்.. சரி..” என்று அரைமனதாக ஒத்துக்கொண்டு கணபதி முனி வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறினார். 
கணபதி முனியும் அவரது சிஷ்யர்களும் உணவருந்திவிட்டு சென்றார்கள். அவர்கள் சென்று வெகுநேரம் ஆன பின்பு வீடு திரும்பினார் சைனுலு. வீட்டைப் புனிதப்படுத்துவதற்காக தீ மூட்டி ஹோமம் தொடங்கினார். அப்போது எழுந்த ஹோமத்தீயில் கணபதிமுனியின் உருவம் தெரிந்தது. அவருக்கு கைகால் நடுங்கியது. தான் காண்பது மெய்யா? அல்லது மாயத்தோற்றமா? என்று புரியாமல் தவித்தார். இல்லை. அங்கு தெரிவது கணபதி முனிதான் என்று தெளிந்தார்.

“ஆஹாஹா.... ஒரு தெய்வப் பிறவியை. மஹானை தவறாக எண்ணிவிட்டோமே” என்றெண்ணி அவரைப் பார்க்க ஓடினார்.
”ஸ்வாமி என்னை மன்னித்தருள்வீர். தங்களைத் தவறாக நினைத்த பாவி நான்” என்று அரற்றி நெடுஞ்சான்கிடையாக அவரது பாதங்களில் நமஸ்கரித்து சிஷ்யராகவும் பெரும் பக்தராகவும் மாறினார்.
**
மச்சிலிப்பட்டிணத்திலிருந்து நாயனா விஜயவாடா சென்றார். கோவிந்தராஜுலு வெங்கட சுப்பா ராவ் என்ற வழக்கறிஞர் அவரது சிஷ்யர். அவரது வீட்டில் தங்கினார். இருவரும் மங்கலகிரி என்ற க்ஷேத்திரத்திற்குச் என்றார்கள். அந்த இடம் சான்னித்தியம் மிக்கதாக கணபதிமுனி உணர்ந்தார்கள். வேதக்கடவுளான இந்திரனின் புனித இடம் அது.

அங்கிருந்த நாட்களில் அவரது பேச்சைக் கேட்ட சில பண்டிதர்கள் எகத்தாளமாகப் பேசினார்கள். அக்குழுவின் தலைவராக இருந்த பகாயஜி கணபதி முனியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் கட்டுரையை கணபதி முனி எழுத எண்ணிக்கொண்டிருக்கும் போதே தனது தவறை உணர்ந்த பகாயஜி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.
1925ம் வருடக் கடைசியில் நாயனா திருவண்ணாமலை வந்தடைந்தார். ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் அமைதிப்பூங்காவான நிலையை சில சம்பவங்கள் மாசுப்படுத்துவதை அறிந்தார். பக்தர்கள் கொடுக்கும் தட்சிணைகளை பையில் போட்டுக்கொள்ள, பக்த கேடி ஒருவர் மேனேஜராக அமர எத்தனித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்வாமி நிரஞ்சானந்தாவை ஆஸ்ரமத்தின் நிரந்தர மேனேஜராக அமர்த்தி இந்த சிறு குட்டையைக் குழப்பும் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடரும்...

கணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்

1923-ம் வருஷம் கடைசி முறையாக உமா சகஸ்ரத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டார்.
தனது சொந்த மண்ணான கலுவராயியில் அவரது மகன் மஹாதேவா ஜாகையிருப்பார் என்று கணபதி முனி எண்ணினார். ஆனால் விசாலாக்ஷிக்கு தேக அசௌகரியம் இருந்ததால் அவருக்குத் துணையாக மகனும் மருகளும் அருகிலிருக்க அவசியமானது. திருவண்ணாமலையில் வீடு பிடித்தார்கள். சிஷ்யர்களின் அடிக்கடி வந்து போனார்கள். வரும்போதெல்லாம் விசாலாக்ஷிக்கும் உதவி செய்தார்கள். ஆனால் கணபதி முனி திருவண்ணாமலை மாமரக் குகையிலேயே வசித்து வந்தார்.
1923ம் வருஷம் டிசம்பர் திங்கள் காகினாடா பிராந்திய இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு அதன் வரவேற்புக் கமிட்டி செயலாளர் சாம்பமூர்த்தி கணபதி முனிக்கு பேச அழைப்பு விடுத்தார். 1916ம் வருஷம் ஒருதரம் இதுபோன்ற காங்கிரஸ் மாநாட்டில் கணபதி முனி பேசினார். அப்போது சில முக்கிய பிரச்சனைகளுக்கு அவரது ஆலோசனையைக் கேட்டார்கள். இம்முறை பெண்களின் சுதந்திரமும் அவர்களது உரிமைகளைப் பற்றியும் பேச அழைத்திருந்தார்கள்.
மாநாட்டில் பேசிய ஏராளமானோர் பெண்களுக்கு சம உரிமை என்பது பற்றிப் பேசினர். ஆனால் கணபதி வேதங்களில் குறிப்பிட்டபடி ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஹோமம், யக்ஞம் மற்றும் சிரார்த்தம் போன்ற மதச் சடங்குகளில் சம உரிமை வேண்டும் என்று கோரினார். மேலும் வேத வேதாந்தங்களை அவர்களும் பாடம் செய்ய அனுமதி அளிக்கவேண்டும். நம்முடைய தேசத்தின் கருப்பு நாட்களில் பெண்களை இதுபோன்ற சடங்குகளிலிருந்து ஒதுக்கிவைத்தது வருந்தவேண்டிய விஷயமாகும்.
ஆன்மிக விஷயங்களில் அனைத்து உரிமைகளும் மறுக்கப்படாமல் பெண்களுக்கு வழங்கினால் எஞ்சியிருக்கும் அனைத்தும் அவர்களுக்கு சித்திக்கும். வேதவழியல்லாது பின்பற்றப்படும் அனைத்து மூடத்தனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அறிவொளிச்சுடர் வீசும் ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ரிஷிகள் வகுத்த பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கணபதி முனியின் இந்தப் பேச்சு எதிர்மறையாக எண்ணம் கொண்ட பலரை இத்திசைக்கு திருப்பியது. இதில் ஈர்க்கப்பட்ட ஆந்திரா காங்கிரஸ் பிரமுகர்கள் கணபதி முனியை பிரதான பேச்சாளாரக, ஹரிஜனங்களின் பிரச்சனையைப் பற்றி அலமுருவில் பேசுவார் என்று அறிவித்தது. ஆந்திராவின் பெருவாரியான பண்டிட்டுகள் இதில் கலந்துகொன்டார்கள். இவர்களில் பலர் இதற்கு முன்னர் கணபதி முனியைப் பார்த்தது கூட கிடையாது.
அவரது பெருமையை அறியாது அவரது பொருள் நிரம்பிய பல அறிவுரைகளை ஏற்க மறுத்தனர். ஆனால். முதன் முறையாக ஒரு மகாமுனியையும் அவரது முதன் பார்வையில் தெறித்த இறைமையும் அவர்களை இழுத்தது. அவரது தோற்றம் கடவுள் மனிதனாக அவதாரமெடுத்து வந்தது போலிருந்தது. சமூகத்தில் நிலவிவரும் சம்பிரதாயங்களையும் அவதானிக்கும் அன்றாட சடங்குகளையும் தர்மத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
காலத்துடன் இசைந்து செல்ல வேண்டிய அவசியத்தை உணரச்சொன்னார். தீண்டாமை தர்மமேயில்லை என்று முழங்கினார். மேலும், குடும்பமோ அல்லது தனியொருவரின் விருப்பு வெறுப்புகளை சமூக நீதியாக கொண்டு வரக்கூடாது என்று கண்டித்தார். முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்களிடம் புழ்ங்கும் போது இல்லாத தீண்டாமை இந்துக்களாகிய ஹரிஜனங்களிடம் பழகும் போது மட்டும் ஏன் அனாவசியமாகத் தலைதூக்குகிறது? என்று கேள்வி எழுப்பினார். உடனே இவ்வழக்கத்தையெல்லாம் விட்டொழிக்காவிடிலும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று அறிவுறுத்தினார்.
பண்டிட்டுகளில் சில விடாக்கொண்டர்கள் இருந்தார்கள். அவர்களைத் தவிர்த்து எஞ்சியவர்கள் சாஸ்வதமான தர்மத்தை கடைபிடிக்க கணபதிமுனியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸ்காரர்கள் கணபதிமுனி அரசியல் தலைமையேற்று வழிநடத்தவேண்டும் என்று விரும்பினார்கள்.
திருவண்ணாமலை திரும்பும் வழி நெடுக இதுபோன்று கூட்டங்களில் பேசினார். தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்கு இந்த உத்வேகப் பேச்சும் அதன் மொழியும் மிகவும் அவசியமாக இருந்தது. இதில் கலக்கமுற்ற அதிருப்தி பண்டிட்டுகள் சிலர் ராமக்ருஷ்ண சைனலு என்பார் தலைமையில் கணபதி முனியை வசைமாரிப் பொழிய அணி திரண்டனர்.
சைனலு கணபதிமுனியைக் கண்டனம் செய்து நிறைய கட்டுரைகள் எழுதினார். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கணபதி முனி தகுந்த பதிலெழுதியவுடன் அவர் அமைதியானார். கணபதிமுனியின் விவாதங்களும் அரிய தகவல்களும் காங்கிரஸ்காரர்களின் பேருதவியாக இருந்தது. அவரை ஆந்திரா காங்கிரஸில் உள்ளே இழுக்க எவ்வளவோ போராடியும் காங்கிரஸ்காரர்களால் முடியவில்லை. இவ்வகைப் பேச்சுக்களின் பயனற்றதன்மை அவருக்குத் தெரிந்திருந்தது. மேலும் தனது தவத்திற்கு இடையூறாக வரும் எதையும் அவர் விரும்பவில்லை.
ஆந்திரா காங்கிரஸ்காரர்களால் சாதிக்க முடியாமல் போனது தமிழக காங்கிரஸ்காரர்களால் முடிந்தது. ”வெறும் பெயரை மட்டும் போட்டுக்கொள்கிறோம் மற்றபடி காங்கிரஸின் இதர செயல்பாடுகளில் நீங்கள் முழுவீச்சுடன் செயல்படவேண்டாம்” என்று அவரை சேர்த்துக்கொண்டார்கள். 1924ம் வருடம் காங்கிரஸின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு; அதே வருடம் திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழக மண்டல காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புக் குழு சேர்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது வெளிப்படையான தைரியமான பேச்சு உலகமக்களைக் கவர்ந்தது. காந்திஜி தலைமையில் பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். இங்கே எழுதமுடியாத தீண்டாமை பற்றிய அவரது விளக்கத்தை காந்திஜி, டாக்டர் அன்னி பெஸண்ட் அம்மையார் மற்றும் மதன் மோகன் மாளவியா போன்றோரால் மனமாரப் பாராட்டுப்பெற்றது. சமஸ்கிருதத்தில் அவரது எளிமையான பேச்சும் தேவையான கருத்துகளைத் தக்க சமயத்தில் வெளியிடும் பாங்கையும் அனைவரும் சிலாகித்தார்கள்.
அடுத்த நாள் காந்திஜி ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்ற முடிவுசெய்தார். கணபதிமுனி சம்ஸ்க்ருதத்தை தேசிய மொழியாக்கவேண்டும் என்று இடைமறித்தார். இது ஒரு அரசியல் நகர்வு என்று காந்திஜி அதை மறுத்துவிட்டார். அரசியல் என்று நினைவுபடுத்தியத்திற்கு நன்றி தெரிவித்து தனது உறுப்பினர் பதவியை மீண்டும் புதுப்பிக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் 1929ம் ஆண்டு வரை சமூக சீர்திருத்தமான ஹரிஜன மேம்பாட்டிற்காகப் பாடுபட்டார். “ராஷ்ட்ர நிபந்தனம்” என்கிற அரசியல்வாதிகளுக்கான அறிவுரைக் கையேடு ஒன்றையும் எழுதினார்.
தொடரும்....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails