Friday, March 18, 2016

நத்தம் - அணைக்கட்டு



பரமேஸ்வரமங்கல தரிசனம் முடிந்து கிளம்பும் போது குருக்கள் மாமாவையும் சேப்பாயியில் ஏற்றிக்கொண்டு நத்தம் பயணித்தோம். வானம் நீலம் பூசியிருக்க இருபுறமும் பச்சைப் பசேரென்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகள் தெரிய நிர்ஜனமான குட்டி சாலைகள். அவை ஸ்வர்க்கத்தை அடையும் ஓடு பாதைகள்.
"நந்தம் ஜெம்பகேஸ்வரரை தர்சனம் பண்ணிடலாம்... அப்புறமா நீங்க உங்க பிரயாண திட்டப்படி மேலே போகலாம்..."

"அணைக்கட்டு சிவன் கோயிலுக்குப் போய்ட்டு வரும்போது நத்தம் வரலாமே மாமா..." என்று அக்கௌன்ட்ஸ் வெங்கட்ராமன் சார் பின் வரிசையிலிருந்து குருக்கள் மாமாவுக்குக் குரல் கொடுத்தார்.
சௌம்ய தாமோதரப் பெருமாள் கோயில் இன்னும் திறக்கவில்லை. வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சேப்பாயி சுகமாக சென்றது.
"அதென்ன கோயில்?"
"கிராமதேவதைக் கோயில்.... "
கீழே அசுரனைப் போட்டு மிதித்து சூலமேந்திய திருக்கரத்துடன் உக்கிர காளி ரூபத்தில் கோயில் முகப்பில் சுதைச் சிற்பமும் வாசலில் இருந்த விண்ணை முட்டும் அரச மரமும் எந்த கிராமத்தின் காவல் தெய்வத்திற்கும் சாஸ்வதம். பாசி மண்டிய அல்லிக்குளமொன்று கோயிலிலிருந்து புறப்பட்ட ஒரு ஒத்தையடிப் பாதையில் ஐம்பது தப்படியில் அலையடிக்காமல் அசையாமல் அடக்கமாக இருந்தது. அந்த அரசமரத்தடி அருகே அனாதரவாகத் தரையில் கிடத்தியிருந்த சைக்கிளும் அங்கிருந்து பக்கத்துத் தோப்பிற்குக் கிளம்பிய ஒரு பாதையும்... அசந்தால் ஒரு மர்மச் சிறுகதை எழுதிவிடும் அபாயமான நிலை.
ஐந்தாறு இடதுவலது வளைவிற்குப் பின்னர் ஊரைப் பார்க்க இருந்த ஆஜானுபாகுவான நந்தியிருக்கும் கோபுரமில்லாத கோயில் ஒன்று தென்பட்டது. "அதான் ஜெம்பகேஸ்வரர் கோயில்..." சிரித்தார் குருக்கள். அமைப்பிலேயே புராதனக் கோயில் என்று தெரிந்தது.


"இதான் எங்காம். இறங்குங்கோ.... ஒரு வா காஃபி சாப்ட்டுட்டு போகலாம்..." என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட்டார். சூரிய பகவான் வேக வேகமாக மேற்கில் இறங்கிக்கொண்டிருந்தார். வாசலில் ஊஞ்சலாடியது. வயல்காட்டு வேளை முடிந்து அரையாடைப் பெரியவர் பெடலுக்கு எண்ணெய் போடாத சைக்கிளில் க்ரீச்..க்ரீச்சி கடந்து சென்றார்.
"மாமா... அணைக்கட்டு சிவன் கோயிலுக்குப் போய்ட்டு வந்துடலாம். இருட்டிடப்போறது..." மீண்டும் பின்னாலிலிருந்து குச்சி போட்டார் அக்கௌன்ட்ஸ் வெங்கட்ராமன் சார். "ம்.. சரி" என்று கு.மா மசிந்தார்.
அணைக்கட்டு போகும் வழியெங்கும் நிலக்கடலை, கரும்பு, நெல் என்று பரவலாகப் பயிரிட்டிருந்தார்கள். கண்களில் பச்சை ஒட்டிக்கொண்டது. வெய்யில் தெரியாமல் நெஞ்சுக்கு ஜிலீர்.
"எல்லோரும் போர் தண்ணிய நம்பிதானே விவசாயம் செய்யறாங்க? இல்ல வானம் பார்த்த பூமியா?" என்றேன் குருக்களிடம்.
"இங்க ஒரு பெரிய ஏரி இருக்கு. அணைக்கட்டு தாண்டி. இப்போல்லாம் தண்ணியில்லை.. சாகுபடிக்காகதான் அணைக்கட்டு. இப்ப "அணைக்கட்டு"ங்கிறது ஊர்ப் பேரோடு நின்னு போச்சு..."
அணைக்கட்டு ஊருக்குள் சக்கரம் நுழைவதற்குள் ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ இருந்தது. அதன் பெயர்ப்பலகை முகவரியில் பஜார் வீதி. பக்கத்தில் ஒரு துணிக்கடை. எதிர்புறம் சேவு போட்டுக்கொண்டிருந்த ஒரு பலகாரக் கடை. மன்னையிலிருந்து கோட்டூருக்கு அம்மாவை டூவீலரில் கொண்டு போய் விட்டபோது எதிர்வரும் கிராமங்கள் வரிசையாக கண்முன்னே சுழன்றது.
"இங்க ஒரு கிராமக் கோயில் இருக்கு.. பிடாரின்னு போட்ருக்கு..." என்றேன்.
"திருவிழாவுல வள்ளித் திருமணம்... திரௌபதி சபதம்னு... ஒரு வாரம் கூத்து தொடர்ந்து நடக்கும்... கூட்டம் ஜேஜேன்னு இருக்கும்... இதுதானே எங்க்களுக்கு பொழுதுபோக்கு..." மீண்டும் என்னுள்ளிருந்த கிராமத்தான் மன்னைக்கு மானசீகமாக சென்று வந்தான். மனசுக்குள்ளே அரிச்சந்திரா கூத்து ஈஸ்ட்மேன் கலரில் ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ஓடியது. சேப்பாயி ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்த போது நினைவுலகத்திற்கு வந்தேன்.
ம். இதோ கோயில் வந்துவிட்டது. கோபுரமில்லை. மதிலில்லை. பெரிய திருச்சுற்று இல்லை. ஆனால் கோயிலில் ஏதோ ஒரு ஈர்ப்பு மட்டும் இருந்தது. மன்னை டி.டி.பி ரோடு மாரியம்மன் கோயில் சுற்றளவு இருந்தது. ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனி கோயில் போன்ற குட்டிக் குட்டிச் சன்னிதிகள். அம்மன் சன்னிதி கோபுரத்தில் கோலூன்றிய ஒரு கிழவரின் சுதைச் சிற்பம் இருந்தது. என் கண் போன திக்கைப் பார்த்து குருக்கள் மாமா "இவர் தான் இந்தக் கோயிலைக் கட்டினவர்... அவர் ஞாபகார்த்தமா ஒரு சுதை.." . சிரித்தார்.
ஸ்வாமி முன் பெரிய நந்தி. இறைவன் அறம்வளர்த்த நாயகர். இறைவி அறம்வளர்த்த நாயகி. "தர்மசம்வர்த்தினி... நம்ம திருவையாத்து அம்மன் நாமகரணம்..." என்றார் அந்த அக்மார்க் காவேரிக்கரைக்காரரான வெங்கட்ராமன். சட்டென்று க்ஷண நேரம் ஐயாரப்பனையும் தர்மசம்வர்த்தினியையும் அந்த பிரம்மாண்ட கோயிலுக்கும் மனம் சுற்றி வந்தது.
ஸ்வாமி சன்னிதி அருகே முளைத்திருந்த எலுமிச்ச மரம் காய்த்துத் தள்ளியிருந்தது. மானஸா ரெண்டு காய் பொறுக்கி கைக்குள் அடக்கிக்கொண்டாள். "ஊஹும்... கீழப் போடு.. சிவசொத்து குல நாசம்..." என்றேன். "இந்தக் கோயிலுக்குன்னு நிலமெல்லாம் எழுதி வச்சுருக்கா.. யாரு படியளக்கிறா? ரெண்டு எலுமிச்சங்கா குல நாசமாக்கும்.." என்றார் அசுவாரஸ்யமாய்.
பத்து நிமிடங்களில் தரிசனம் முடிந்து நத்தம் புறப்பட்டோம். அணைக்கட்டு சிவன் கோயில் எதிர்ப்புறமும் நூறு வயசு கண்ட ஒரு பிரம்மாண்ட அரசமரம். எல் நினோ மழை பெய்தாலும் வேரில் நின்று கொண்டால் சொட்டுத் தண்ணீர் தலையில் விழாதபடி கான்க்ரீட் கூரை போல பருத்த கிளைகள். க்ளிக். ஒரு படமெடுத்துக்கொண்டேன்.
திரும்பும் வழியில் குருக்கள் மாமாவிடம் இன்னும் கொஞ்சம் பேச்சுக்கொடுத்தேன்.
"மாமாவுக்கு நிலமெல்லாம் இருக்கோ?"
"அதெல்லாமில்லை சார். இப்ப எனக்கு என்ன வயசு இருக்கும்ங்கிறேள்?"
"எழுபது?"
"எழுபத்து மூணு. ஐம்பது வருஷமா இதே வேலைதான். சுத்துப்பட்டு கிராமங்கள்ல மூணு நாலு கோயில் பார்த்துக்கிறேன். அறநிலையத்துறை சம்பளம் எப்படி வரும்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். மத்தபடி கோயிலுக்கு வர்ற சேவார்த்திகள் கொடுக்கிற தக்ஷிணைதான்."
"போதுமா? வாய்க்கும் கைக்கும் சரியா இருக்கா?"
"அவனுக்கு கைங்கர்யம் பண்றவாளை அம்போன்னு விட்டுடுவானா? தட்டுல வருமானம் குறைஞ்சுபோச்சுன்னாக்க வேற கோயில் அபிஷேகம் அலங்காரம் கும்பாபிஷேகம்னு கூப்பிட்டு அனுப்புவான் கைலாசம்..." என்றார் நெருங்கிய தோஸ்த் போல ஈஸ்வரனை.
நத்தம் வந்தடைந்தோம்.
திருமகள் சிவபெருமானை நோக்கித் தவமியற்ற இந்த செண்பகவனத்துக்கு வந்தாள். பல வருடங்கள் இடைவிடாத தவம். மனம் குளிர்ந்த சிவபெருமான் அங்கு ரிஷபத்துடன் எழுந்தருளினார். லக்ஷ்மியின் தவத்தை மெச்சினார். நந்தி தேவர் லக்ஷ்மிக்கும் சிவபெருமானுக்கும் பாதுகாப்பாக வெளியே வனம் பார்த்துக்கொண்டு அமர்ந்தார். சக்தியும் அங்கு வரவே "திருமகளே! உன்னுடைய தவத்தினால் சந்தோஷமடைந்தேன். இத்திருத்தலதிற்கு எழுந்தருளிய சௌந்திர நாயகியும் தனது கரங்களில் பாசாங்குசத்திற்குப் பதிலாக தாமரையும் நீலோத்பலத்தையும் ஏந்தி காட்சிதருவாள்" என்று திருவாய் மலர்ந்தார்.
இச்சமயத்தில் ஈசன் திடீரென்று கிளம்பிச் சென்று பாலாற்றிலிருக்கும் ஒரு சிறு குன்றுக்குப் போய் லிங்காவாய் யோகத்தில் அமர்ந்தார். நெடுநேரமாகியும் சிவனார் திரும்பாததால் உமையம்மை அவரைத் தேடி சென்றாள். அங்கே ஒரு பாம்பு அவருக்குக் குடை பிடிக்க பசு ஒன்று பால் சொரிவதைக் கண்டு மகிழ்ந்தாள். அந்த சிறுகுன்றே பரமேஸ்வரமங்கலம்.
சென்ற இரு பாராக்கள் குருக்கள் மாமா நிதானமாகச் சொன்ன ஸ்தல புராணம். நேரம் கருதி உங்களுக்காக இரு பாராக்களில் அடைத்துள்ளேன். அவர் விவரித்த விதம் படு ஜோர். ”கேட்டீங்கன்னா.. ம்.. பார்த்தோம்னா... ஹேஹ்ஹே...அப்டியே......” போன்ற பதங்களைப் போட்டுப் பேசினார். பாட்டி மடியில் படுத்துக்கொண்டு புராணம் கேட்ட சுகம்.
நத்தம் கோயில் அர்த்தமண்டபத்துள் நுழையும் போது யாரோ உள்ளூர்க்காரர் கைலியுடன் சனீஸ்வர பகவானுக்கு தீபம் போட்டுக்கொண்டிருந்தார். அழகிய சிவலிங்கத் திருமேனி. சொக்கி மனமுருகி தரிசித்துக்கொண்டிருக்கும் போது வாசலிலிருந்து "இங்க வாங்கோ..." என்று தீபாராதனைத் தட்டோடு குருக்கள் கூப்பிட்டார்.
"இங்க அம்பாளுக்குதான் முதல் மரியாதை. அர்ச்சனை அபிஷேகமெல்லாம் அம்பாளுக்குப் பண்ணிட்டுதான் சர்வேஸ்வரனுக்கு..."
"திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில்ல கூட இதே வழிபாட்டு முறைதான்..." என்றேன்.
மடிசாரில் சௌந்தர்ய நாயகி அம்மன் திவ்ய சௌந்தர்யத்துடன் காட்சியளித்தாள். தீபாராதனையில் மஞ்சள் பட்டில் ஜொலித்தாள். பக்கத்தில் சுப்ரமண்யர் சன்னிதி. ஆறுமுகனாக அழகுமயில் ஏறியிருந்தான். பின்னர் கடைசியில் ஜெம்பகேஸ்வர ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து தீபாராதனையும் காண்பித்தார். கருவறைக்கு முன்னமிருந்த மண்டபத்தில் உற்சவர்களாக ஸோமாஸ்கந்தர், ஆடலரசன், கணபதி என்று திவ்யரூபமாக பஞ்சலோகத்தில் இருந்தார்கள்.
அர்த்தமண்டபத்தில் அழகிய சீதா லக்ஷ்மண ராமச்சந்திர மூர்த்தியும் அருள்பாலித்தார். "ராமர் எங்கே இங்கே.." என்று கேட்க மனம் வரவில்லை. லக்ஷ்மி சிவனை பூஜை செய்ய வந்திருக்கும் போது ராமன் வந்தால் தப்பா என்ன?
வெளியே இருள் பரவத் தொடங்கியிருந்தது. வாசலுக்கு வந்த பின்னர் கோயிலைத் திரும்பிப் பார்த்தேன். கர்ப்பக்கிரஹத்தில் தொங்கு விளக்கு எரிய திருவாசிக்குப் பின்னர் ஏற்றிய விளக்கு வட்டமாக பல பிம்பமாகி அங்கே ஈஸ்வரன் பிரசன்னமாகியிருந்தார்.
குருக்கள் வீட்டிற்கு சென்று அந்த ஒரு வா காஃபி சாப்பிட்டோம். யத்கிஞ்சிதம் தக்ஷிணை கொடுத்து நமஸ்கரித்தோம். "திருப்பணி நடக்கிறது. எதாவது கொஞ்சம் விளம்பரப்படுத்த முடியுமான்னு பாருங்கோ.. அதுவே பெரிய உபகாரம்..."
"ம்.. நிச்சயமா.. நமஸ்காரம் மாமா... வரேன்.."
சேப்பாயி கிராமத்து சாலைகளில் வளைந்து நெளிந்து ஈஸியாரைப் பிடித்தாள். குறுக்கும் நெடுக்குமாக சில இருசக்கரர்கள் சர்க்கஸ் காண்பித்தார்கள். "பாம்....."மென்று அலறிக்கொண்டே லாரி ஒன்று கடந்து போய் மறைந்தது. யார் மீது மோதுவதற்கு இவ்வளவு வேகம்?
"பாண்டுரெங்கனையும் பார்த்துட்டுப் போடுவோம்..." என்று அக்கௌன்ட்ஸ் வெங்கட்ராமன் சார் சொன்னபோது மணி முன்னிரவு 7:15.
"ஆனா கோயில் ஏழரை வரைத்தான் நடை தொறந்திருக்கும்...." அவரே இதையும் சொன்னார்.
"என்ன பண்ணலாம்? நேரே ஆத்துக்கு...."
"வண்டியை விட்டலாபுரத்துக்கே விடுங்கோ.. எத்தன மணிக்கு நடை சாத்துவான்னு பாகவதருக்குப் ஃபோன் பண்ணிக் கேட்கறேன்.."
இப்போது நாம் விட்டலாபுரம் நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails