நாயனாவின் தலைவலி சொஸ்தமானதற்குப் பிறகு விசாலாக்ஷிக்கு வியாதி பிடித்துக்கொண்டது. எந்த மருந்தினாலும் கட்டுப்படுத்த முடியாத கடும் வயிற்றுப்போக்கு. பதினைந்து நாட்கள் படாதபாடு பட்ட பிறகு அவரும் மீண்டார். பின்பு நாயனாவிற்கு கை கால் முதுகு வயிறு என்று மேனியெங்கும் கோலிக் குண்டுகளாய் வீக்கம் தோன்றியது. இடைவிடாத தனது யோக தியான ஆன்மிக பயிற்சிகளின் விளைவாகக் கிளர்ந்தெழுந்த சூட்சும சக்தியானது தேகத்திலிருக்கும் அசுத்தங்களை களைய ஆரம்பித்திருக்கிறது என்று புரிந்துகொண்டார்.
உடம்புக்குள்ளே அரூபமாக இருக்கும் பல முடிச்சுகள் தெய்வீக சக்தியின் ஓட்டத்திற்கு தடையாக இருப்பதால் இத்தகைய வலிகள் ஏற்பட்டு தன்னைப் படாதபாடு படுத்துவதாக நாயனா ஆசுவாசப்படுத்திக்கொண்டார். சிவபெருமானின் மூன்றாவது கண்ணிருக்கும் பிரதேசமான, கடைசி முடிச்சு, ருத்ர க்ரந்தி பழுத்து வெடிக்கும் போது தாங்கமுடியாத தலைவலியும் ரத்தநாளங்களில் ஏற்படும் அபார அழுத்த விறுவிறுப்பினால் வலியும், மூலாதாரமான ப்ரம்ம க்ரந்தி அவிழும் நேரத்தில் சிறுநீரகங்கள் மற்றும் செரிமானப் பகுதிகளில் பாதிப்படைகிறது என்று தெளிவடைந்தார். ஞானிக்கு இதெல்லாம் தூசு!!
இத்தகைய அசாதாரண அனுபவங்கள் அவர்களது ஸ்தூல சரீரத்தில் சூட்சுமமான பல மாற்றங்களை ஏற்படுத்தியது. 1921ம் வருட வாக்கில் நாயனா தனது குருவிடம் ஆசி பெற திருவண்ணாமலைக்கு விஜயம் செய்தார். சென்னை வேலூர் பகுதி சிஷ்யர்கள் விவரம் அறிந்து திருவண்ணாமலைக்கு வருவதற்குள் அவர் செகந்திராபாத் திரும்பிவிட்டார். நான்கு வருடங்களாக அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. நெஞ்சம் கனத்தது.
சுதான்வாவும் கபாலியும் நாயனாவை திருவண்ணாமலைக்கு நிரந்தரமாக அழைத்து வரும் சபதத்தோடு செகந்திராபாத்துக்கு ரயிலேறினர். நாயனா தனக்கு உடல் உபாதை போன்று ஏற்பட்ட சில அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.
“இப்போது இந்த ஸ்தூல சரீரப் பிடிப்பு என்னைவிட்டு முக்கால்வாசி விலகிவிட்டது. கடைசியாக அடையவேண்டிய முக்திக்கு இன்னும் சில சிறு தடைகள் உள்ளது.”
மௌனமாக சில நிமிஷங்கள் கடந்தது. மூவரும் வெறுமனே அமர்ந்திருந்தனர். அப்போது நாயனா தனது அறியாமை இருட்டை விலக்கி மோட்சப் பாதை தெரிய கடவுளின் அனுக்ரஹம் வேண்டி நான்கு ஸ்லோகங்கள் பிரவாஹமாகப் பாடினார். இருளும் மௌனமும் விலகியது.
இதில் இன்பமுற்ற கபாலிக்கும் சுதான்வாவுக்கும் வேறொரு பெருத்த ஏமாற்றம். நாயனா தங்களுடன் அண்ணாமலைக்கு வரவில்லை என்ற வருத்தம் இருந்தது. அவர்கள் இருவரையும் கணபதி முனி சமாதானப்படுத்தினார்.
“கூடிய விரைவில் நான் அருணாசலம் வருவேன். நண்பர்களிடம் தெரிவியுங்கள்...” என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தார்.
ஆனால் எட்டு மாதங்களுக்கும் மேலாக அவரால் செகந்திராபாத்திலிருந்து கிளம்ப முடியவில்லை. நாயனாவின் சிஷ்யர்களால் அமைதி காக்க முடியவில்லை. பொறுமையிழந்து அப்புவுக்கு காரசாரமாக கடிதம் எழுதினார்கள். குருவைச் செகந்திராபாத்தில் நிரந்தர சிறை வைத்துவிட்டீர்கள் என்று அப்புவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினர். ஏகத்தும் குற்றம் சாட்டினர். இந்த அவதூறு கடிதங்களை அப்பு நாயனா முன் அமைதியாக சமர்ப்பித்தார்.
நாயனாவின் சிஷ்யர்கள் மாமரக் குகையை மராமத்துப் பணிகள் செய்துவிட்டு மீண்டும் திருவண்ணாமலை வரவேண்டும் என்று பணித்தார்கள். தொடர் வற்புறுத்தலால் நாயனா சென்னைக்கு வந்து சுதான்வாவுடன் இரண்டு மாதங்கள் தங்கினார். சுதான்வா சென்னையின் மிகப்பெரிய வக்கீல் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தார். சென்னை சிஷ்யர்கள் அனுதினமும் நாயனாவைத் தரிசித்து ஆசீர்வாதம் பெற்றனர். பிரச்சினைகளுக்கு ஆலோசனைக் கேட்டு நாயனாவின் அறிவுரைப்படி நடந்தனர்.
சிஷ்யர்களுடனான இது போன்ற சந்திப்புகளில் ஆன்மிகத்தின் பல்வேறு படிநிலைகளைப் பற்றி விஸ்தரித்தார். அவைகளைச் சூத்திரங்களாக்கி அதற்கு ராஜயோகசார சூத்திரங்கள் என்று பெயரிடப்பட்டு தொகுக்கப்பட்டன. அவரது ஒருநிலைப்பட்ட தபோ பலத்தினாலும் குருவான ஸ்ரீரமணரின் பூரண ஆசியினாலும் பல்வகைப்பட்ட யோக ரகஸியங்கள் நாயனாவுக்கு ஸ்வயமாகவே அத்துப்படியாகிருந்தன.
பின்னர் நாயனா திருவண்ணாமலை வந்தடைந்தார். மாமரக் குகை முழுமையாக செப்பனிடப்படவில்லை. இருந்தாலும் அங்கேயே தங்கினார். குகைக்கு முன்னால் சிறு மண்டபமிருந்தால் வரும் பக்தர்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அந்த மண்டபம் எழுப்பும் வேலை நடந்துகொண்டிருக்கும் போதே ஏழாவது முறையாக உமாசகஸ்ரத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஏப்ரல் மாதத்தில் அதை நிறைவும் செய்தார். அப்போது அந்த மண்டபமும் சிஷ்யர்கள் அமர்ந்து சத்சங்கத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக நிறைவடைந்திருந்தது.
விசாலாக்ஷியும் நாயனாவும் தங்களது தவத்தைத் தொடர்ந்தனர். ஒருநாள் சூரியன் அப்போதுதான் மறைந்திருந்தான். தொடுவானத்தில் சன்னமான வெளிச்சம் பூசியிருந்த வேளை. நிர்மலமான வானம். திடீரென்று எங்கிருந்தோ பளிச்சென்று மின்னல் வெட்டியது. அமர்ந்திருந்த பக்தர் ஒருவருக்கு “நாயனா தேவனைப் போல இருக்கிறார்” என்ற அசரீரிக் குரல் கேட்டது.
தெய்வவாக்காக அதை எடுத்துக்கொண்டார் நாயனா. இந்திராணியைத் துதித்து எழுநூறு ஸ்லோகங்கள் எழுத சித்தம் கொண்டார். ஒரு நாளைக்கு இருபத்தைந்து (ஸ்தபகம்) ஸ்லோகங்கள் வீதம் இருபத்தெட்டு நாட்களில் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்ற முனைப்போடு அமர்ந்தார்.
ஒவ்வொரு ஸ்தபக ஆரம்பமும் தேவியின் மந்தகாச புன்னகையை வர்ணித்தும், இரண்டாவது ஸ்லோகத்தில் தாய்நாட்டின் பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டியும் இருபத்து நான்காவதில் “தேவீ..... இவைகளைக் களைய எங்களுக்கு தைர்யமும் தெம்பும் அருள்வாய்...” என்று அமையும் படியும் எழுத ஆரம்பித்தார். ஸ்தபகங்கள் விரைவாய் வளர்ந்தது.
ஒரு நாள் இரவு நாயனாவின் தலைக்குள் ஆயிரமாயிரம் கரையான்கள் அரிப்பது போன்ற உணர்வு. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து படார்.. படார்... என்று கோடாலி எடுத்து கபாலத்தில் போடுவது மாதிரி இருந்தது. இத்தனை வலியில் சித்த ஸ்வாதீனம் இல்லாமல் போவிடுமா? அவரால் வாயைத் திறக்க முடியவில்லை. ஆகாரம் இறங்கவில்லை. தலையை எங்கும் சாய்க்கமுடியவில்லை. ஆடாமல் அசையாமல் கண்கள் மூடி மாமரக் குகையில் அமர்ந்து பிரார்த்திக்கொண்டிருந்தார். கொண்டைய்யா அவருக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு சிஷ்ருஷை செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.....
“பட்”டென்று உச்சி சிரஸ் திறந்துகொண்டது. கபால பேதா என்று யோக சாஸ்திரங்கள் சொல்லும். நாயனாவின் ஸ்தூல உடல் அசையாமல் யோகநித்திரையில் இருக்கிறது. லேசான புகை போல ஏதோ அதன் வழியாகக் கசிந்தது. குகையிலிருந்து சமீபத்தில் இருந்த முனியின் பெண்ணும் தர்மபத்னியும் இதைக் கண்டார்கள். கொண்டைய்யா ஆச்சரியத்தில் வாய் பிளந்திருந்தார்.
ஆகாசத்திலிருந்து பிளந்திருந்த ப்ரம்மரந்த்ரா வழியாக தண்டுவடத்தில் இறங்கிய மின்னல் மூலாதாரத்தை அடைந்திருக்கும். இச்சம்பவத்திற்குப் பிறகு தேகபந்தத்திலிருந்து கணபதி முனி முற்றிலும் விடுபட்டார். சன்னியாசி இறக்கும் பொழுது தலையில் தேங்காயைச் சிதற அடித்து கபால பேதம் அடையைச் செய்வது மரபு. ஆனால் ஜீவன் உள்ள பொழுதே இதை அடைவது சாலச் சிறந்தது. ”வியாபோஹ்யா சீர்ஷா கபாலே....” என்று தைத்ரீய உபநிஷத் சொல்வது போல கபால எலும்புகளை பிரித்து எடுக்கும் செயல்.
நாயனா இந்த யோக சாதனையை தனது உமா சகஸ்ரத்திலும் இந்திராணி சப்தசதியிலும் நுணுக்கமாகவும் நுட்பமாகவும் எழுதியுள்ளார். தேவியானவள் தன்னைச் சரணடைந்த பக்தனின் உடலை தனது இருப்பிடமாக அமைத்துக்கொள்ள எவ்விதம் திருவிளையாடல்கள் புரிகிறாள் என்பதை அழகாக விளக்கியுள்ளார்.
உமா சகஸ்ரத்தை ஏழாவது முறையாக திருத்தியமைக்கும் பணியில் ஈடுபட்டபோது கணபதி முனிக்கு கபால பேதா அடையும் பாக்கியம் கிடைத்தது.
அடுத்தது ரமணாஸ்ரம ஸ்தாபிதம்...
0 comments:
Post a Comment