ஆன்மிக சாகரத்தில் மூழ்கி அதன் பக்தி ரஸத்தை அனுபவிக்கத் துடிப்பவர்களுக்கு குருவின் வழிகாட்டுதல் அவசியம் தேவை. அந்தத் தவப்பாதையைத் தருபவரின் சொந்த அனுபவமாக அது இருப்பின் அதுவே அதிஉன்னதம். ருசிக்கும். வேத வேதாந்தங்களிலிருந்து அறியப்பட்ட அந்த உயரிய ஞானமானது பண்டிதர்களிடம் குடிகொண்டிருக்கிறது. ஆன்மிக வழித் தேடலுக்கு இந்த ஞான சாதகம் அவசியமா அல்லது மந்திர உச்சாடன சாதகமே போதுமானதா என்பதின் புரிதலில் பொதுவாக சிக்கல் இருக்கிறது.
இதை அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்ட சில பரப்புரையாளர்கள் சுலபத்தில் வீழ்பவர்களைப் புத்தி பேதலிக்கச் செய்தார்கள். இத்தகைய கர்மபலன் கோட்பாடுகளில் மட்டும் பிடிப்பு இருப்பவர்கள் பண்பு சாயமற்ற, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரம்மத்தின் மீது மட்டும் பற்றுகொள்ள ஊக்குவித்தார்கள். இறுதியில் இது ஒன்றுமில்லாத மிகைப்படுத்தப்பட்ட அலங்காரப் பேச்சாகவே முடிந்தது.
ஆன்மிக சாதகமோ பட்டறிவோ இல்லாத சில ஜீவன்கள் அவரவர்களின் புரிதலுக்கேற்ப அத்தகையச் சிந்தனைகளுக்கு லோகாதாய வாழ்வியலின் விளக்கங்களைக் கொடுத்து ஜனங்களைக் கலங்கடித்தார்கள். புனிதம் நிரம்பிய புராதன ஏடுகளுக்கு எண்ணிலடங்கா அறிவுசார் பொழிப்புரைகள் பண்டிதர்களுக்காகச் சந்தையில் கிடைத்தன. பொதுமேடைகளில் எழுச்சியுரையாற்றும் அறிவார்ந்த கணவான்களுக்கும் வலுக்கட்டாயமாக மதம் விலக்கிப் பேசும் அரசியல்வாதிகளுக்கும் ஜீவனோபாயமாக பகவத் கீதை பயன்படத் தொடங்கியது.
இந்தக் காலக்கட்டத்தில் உபாசனையும் சாதனையும் ஆன்மிக முன்னேற்றத்தின் இன்றியமையாத சாதனங்கள் என்றும் வெறும் வாய்ஜாலங்கள் செல்லுபடியாகாது என்றும் ஸ்ரீரமண மகரிஷி அறிவுறுத்தினார். ஆத்மவிசாரத்தின் முதல் படியானது கடவுளை நோக்கிய தவமாக இருக்க வேண்டும். நான் யார் என்பதில் தேடுதல் வேண்டும். உள்ளுக்குள் மூழ்க வேண்டும். அலைபாயும் மனத்தை அடக்கி தனித்திருத்தல் அவசியம். இவைகளை தொடர்சாதகம் செய்பவர்கள் பாச பந்தங்களிலிருந்து விடுபட்டு சத்தியம் எதுவென்று புரிந்துகொண்டு “நான்” எனும் தெய்வீக அனுபவத்தில் உறைவர். இதுவே உண்மையான தவம். இதுவே ஓசையற்ற மன அமைதி!
இத்தகைய தேடுதலுக்கு உபாயமாக மந்திர சாஸ்திரங்களில் ஆன்மிக சாதக “வித்யா”க்கள் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதற்கான பொழிப்புரைகள் சமுத்திரம் போன்றது. ரமண கீதை தொகுக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் நாயனாவின் சிஷ்யர்கள் “வித்யா”க்களைப் பற்றி எழுதப் பணித்தார்கள். எளிய மொழியில் நாயனா அதற்கான சூத்திரங்களை எழுதினார். அதில் விரிவாகவும் தியான முறையிலும் தவமியற்றும் வித்தையைப் பற்றி விளக்கினார்.
இவ்வேளையில், ஸ்ரீ ரமணானந்த நிலையத்தின் வருடாந்திர கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதில் கணபதி முனி தசமஹா வித்யாக்களைப் பற்றிய அருட்சொற்பொழிவு ஆற்றினார்.
அது ஒரு அரிய சொற்பொழிவு. ஜேஜேயென மக்கள் திரள தொடர்ந்து பத்து நாட்கள் விமரிசையாக நடந்தது. விசேஷம் என்னவென்றால் தனது ஆசிரமத்தை விட்டு வெளியே கால் வைக்காமல் ஏகாந்தமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் அனுதினமும் முதல் வரிசையில் அமர்ந்து ஆர்வமாகக் கேட்டார். சொற்பொழிவு பூர்த்தியாகும் தருணத்தில் கணபதி முனியின் வித்வத்தை வாயாரப் புகழ்ந்து ஆசீர்வதித்தார்.
செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் சிஷ்யர்களின் கேள்விகளையும் அதற்கான ஸ்ரீரமணரின் பதில்களையும் சம்ஸ்க்ருதத்தில் தொகுத்திருந்தார் நாயனா. உமா சகஸ்ரம், அமரத்துவம் பெற்ற சில ஸ்லோகங்கள் மற்றும் தனது குருவின் மீதான தனது மரியாதை மற்றும் அளவுகடந்த பக்தியின் வெளிப்பாடாக எழுதிய ”ரமண கீதை” முதலியவை அவரை அந்தக்கால ரிஷிகளின் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியிருந்தது.
ரமண கீதையில் முந்நூறு ஸ்லோகங்கள். தனது குருவைப் பற்றிய மெய்கீர்த்திகளோடு அவரது ஆன்மிக சாதனைகளை விளக்கும் பொருட்டு ரமணர் ஆற்றிய அறிவுரை கலந்த பேச்சுக்களும் அதில் பொக்கிஷமாக அடங்கியது.
ரமண கீதை வேலைகள் முடிவடைந்தவுடன் தன்னந்தனியாக தொந்தரவில்லாத இடத்தில் தவமியற்ற விரும்பினார் நாயனா. விசாலாக்ஷியும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஏங்கியிருந்தார். இச்சந்தர்பத்தில் ஒரு வினோத வழக்கோடு தேவவிரதன் தனது குருவான நாயனாவிடம் வந்தார்.
“தேவவிரதா முகத்தில் குழப்பக்களைச் சொட்டுகிறதே.. ஏதேனும்...” என்று சிரித்தார் நாயனா.
“ஆமாம் குருவே! எப்போதெல்லாம் நான் ரமணர் முன் அமர்ந்து ஒருமுகப்பட்ட தியானத்தில் ஈடுபடுகிறோனோ அப்போதெல்லாம் எனது சிந்தையில் ஒன்றுமில்லாத ஒரு வெற்றிடம் உருவாவதை உணர்கிறேன். நேரம் செல்லச் செல்ல அந்த வெற்றிடம் விரிந்து பரந்து ஆகாசத்தை விட பெரியதாக விரிகிறது. விசித்திரமான அனுபவம். அவர் முன்பு தியானம் பிடிகொடுக்கவில்லை. தயைகூர்ந்து எனக்கு அருள வேண்டும்”
“ரமணர் முன்பு தியானத்தில் ஈடுபட நிறைய ஆன்மிகத் திராணி தேவைப்படும். அதற்கு ஏராளமான அருட் சாதகங்கள் வேண்டும் தேவவிரதா...” என்று அறிவுரை கூறினார்.
”நான் அதற்கு என்ன செய்யவேண்டும்?” என்கிற முனைப்போடு நின்றார் தேவவிரதன். மூவரும் படைவீடு ரேணுகாதேவி கோவிலுக்குச் சென்றனர்.
விசாலாக்ஷி நாற்பது நாட்கள் தவமியற்றினார். நாயனாவும் தேவவிரதனும் அக்டோபர் 1917லிருந்து பிப்ரவரி 1918 வரை தங்குதடையில்லாமல் தியானத்தில் ஈடுபட்டனர்.
நாயனாவின் பிறப்பிடமான கலுவராயிக்கு சமீபத்திலிருக்கும் கிராமம் சங்க்கி. அங்கிருந்த வந்த விஸ்வநாத ராம சோமயஜுலு தனது சகோதரி ராஜேஸ்வரியை கணபதி முனியின் குமாரன் மஹாதேவனுக்கு மணமுடித்து வைக்கப் பிரியப்பட்டார். முனியும் அந்த வேண்டுகோளை ஏற்று அவர்களது திருமணம் 1918ம் வருடம் மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் நாயனா திருவண்ணாமலைக்கு திரும்பினார். அங்கு ஸ்ரீரமணரின் சகோதரர் நாகசுந்தரம் ஓடி வந்து நாயனாவை நமஸ்கரித்து ஆசி பெற்றார். அவரோடு நாராயண பிரம்மாச்சரியும் உடனிருந்தார். அவ்விருவரையும் “நிரஞ்சனானந்தா” என்றும் ”அமிர்தானந்தா” என்றும் பட்டம் சூட்டி அவர்களது சந்நியாசாஸ்ரம வாழ்விற்கு வித்திட்டார்.
மஹாதேவனின் திருமணம் இனிதே முடிந்தது. நாயனா குடும்பப் பொறுப்புகளிலிருந்தும் சொத்துபத்துகளிடமிருந்தும் நிரந்தரமாக விடுபட விரும்பினார். தனது பூர்விக சொத்துகளை உறவினர்களிடமும் சகோதரர்களிடமும் பிரித்துக்கொடுத்துவிட்டு தனது பாகத்தை மகனுக்கு பகிர்ந்தளித்தார்.
அரசவல்லி ஸ்ரீ சூரியநாராயண ஸ்வாமியின் அருட்கடாக்ஷத்தால் பிறந்தவர் வாஷிட்ட கணபதி. இதுவரையில் அரசவல்லி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததில்லை. இப்போது குடும்ப பாரங்களிலிருந்து விடுபட்ட வானபிரஸ்தாஸ்ரமவாசியாக இருந்தார் நாயனா. அரசவல்லி சூரியநாராயணர் கோயிலில் மூன்று நாட்கள் தங்கி தவமியற்றினார். ஸ்ரீசூரியநாராயணரை இடைவிடாமல் தியானம் செய்தார். அப்போது அவர் இயற்றியது சூரிய கீதம். (இப்பாடல் கீதா மாலாவில் இணைக்கப்பட்டிருக்கிறது)
அப்புவுடன் கொஞ்ச காலம் வசிப்பதற்காக நாயனாவும் விசாலாக்ஷியும் செகந்திராபாத் சென்றனர். எங்கிருந்தாலும் நாயனா தியானத்திலும் வேதங்களின் ஹிருதயங்களிலும் மூழ்கித் திளைத்திருந்தார். சிறிது நாட்கள் கழித்து திரும்பவும் கலுவராயிக்குச் சென்று உமாசகஸ்ரத்தை திருத்தியமைக்கும் பணியில் ஈடுபட்டார். 1920ம் வருடம் மார்ச் மாதம் ராம சோமையாஜுலு கலுவராயிக்கு அருகிலிருக்கும் கிருஷ்ணராயபுரத்தில் பண்டிதர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் நாயனா வேதங்களிலிருக்கும் சமூக பிரச்சனைகளும் அதை கையாள்வதற்கான நெறிமுறைகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். இவைகள் அவரது ”சதாச்சார போதினி” என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.
நாயனாவும் விசாலாக்ஷியும் செகந்திராபாத்தில் அப்புவுடனேயே 1922 மார்ச் மாதம் வரை இருந்தனர். ஆனால் 1920ம் வருஷம் டிசம்பர் மாதம் அவருக்கு ஒரு விநோத நோய் வந்தது. பதினைந்து நாட்களுக்கும் மேலாக தாங்கமுடியாத தலைவலிக்கு ஆளானார். யோக நிலையில் தவமும் தியானமும் தீவிரமாகத் தொடர்ந்ததால் ஏற்பட்ட விளைவு இது என்று அந்த ஞானிக்கு எளிதில் புரிந்தது. அவரது தலைவலி நீங்கிய பின்னர் விசாலாக்ஷி.......
0 comments:
Post a Comment