மகேந்திரகிரியில் தவமியற்ற
சித்தமாயிருந்தார் நாயனா. கொடும் விலங்குகள் அவர் மீது பாய்ந்தால் அவரை
எப்படிக் காப்பது? அவருக்கு அதற்கும் ஒரு துணை தேடி வந்தது. தேவவிரதன்
தைரியசாலி. தேகமும் வைரம் பாய்ந்த கட்டை. குருவிற்கு ஒத்தாசையாகவும்
விலங்குகளைத் துரத்தியும் சேவை புரிவான். இருந்தாலும் மந்தேசா ராஜா
நாயனாவிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று சித்தம் கலங்கினார்.
சிவராத்திரி தினத்தன்று ஊர் மக்கள் ஒன்று கூடி மலையேறும் நேரத்தில் நாயனா,
தேவவிரதன், விசாலாக்ஷி மற்றும் மந்தேசாவின் திவான் எல்லோரும் சேர்ந்து
மலையுச்சியை அடைந்தார்கள்.
கோகர்ணத்திலிருக்கும் கோகர்ணேஸ்வரரின்
சிலை பசுவின் காது போன்ற சாயலில் இருக்கும். மகேந்திரகிரியில் பசுவின் காது
என்பது உள்ளீடு. இதைக் கண்டு மகிழ்ந்த கணபதி அம்மூர்த்தியைப் போற்றி சில
பாடல்களை உடனே பாடினார். அந்த ஸ்லோகங்களில் “தஹர கோகர்ணேஸ்வரா” என்று
பதங்கள் போட்டு எழுதியிருந்தார். கோகர்ணேஸ்வரர் வடிவுடைய ஒரு பிரம்மாக
காட்சியளிப்பது போல தஹர கோகர்ணேஸ்வரர் வடிவில்லாத பிரம்மமாக
அருள்பாலித்தார்.
தஹர கோகர்ணேஸ்வரர் ஆலயத்தின் பக்கத்தில் ஒரு
விஷ்ணு ஆலயமும் உண்டு. பரசுராமர் கோவிலாக இருக்க வேண்டும் என்று
எண்ணிக்கொண்ட நாயனா இரு கோயிலுக்கும் நடுவில் இருக்கும் ஒரு மண்டபத்தைத்
தவமியிற்ற தேர்ந்தெடுத்தார். அப்போது அந்த மலையின் அமைப்பை ஒரு முறை
பார்த்தார். கீழே படுத்திருக்கும் பசுவின் ஒரு காது மட்டும்
தூக்கிக்கொண்டிருக்கும்படி அந்த மலை இருந்தது அவருக்கு ஆச்சரியத்தை
அளித்தது. அந்தக்கால ரிஷிகள் தவம் செய்யத் தகுந்த இடங்களைக் கண்டறிந்ததின்
மகத்துவத்தை எண்ணி பிரமித்தார்.
சில நாட்களில் மந்தேசாவின்
திவானுடன் விசாலாக்ஷி மலையிறங்கிவிட்டார். நாயனாவும் தேவவிரதனும் தவத்தை
தொடர்ந்தார்கள். மந்தேசா ராஜா மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாலும்
பூரிகளும் மேலே அனுப்பினார்.
இருபது நாட்களுக்கு நாயனா இடைவிடாமல்
தவமியற்றினார். தேவவிரதனுக்கு இந்நாட்கள் தேவப்பிரசாதம். தவமியற்றக்
கற்றுக்கொள்ளவும் குருவிற்கு சிஷ்ருஷைகள் செய்வதற்கும் ஆண்டவன் அளித்த
வரம். இருபதாம் நாள் இரவு நாயனா அந்த நிசப்தமான மலையில் கண்கள் திறந்து
அமர்ந்திருந்தார். அப்போது ஜடாமுடியும் தாடியுமாக ஒருவர் எதிரில்
தோன்றினார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று நினைவுகளைத் தட்டி
எழுப்பிப் பார்த்த நாயனாவுக்கு விடை கிடைத்தது. ஆம். அவரை படைவீடு
ரேணுகாதேவி ஆலயத்தில் சந்தித்திருக்கிறார்.
முனிசிரேஷ்டர் போல
இருந்த அவரை நாயனா பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து எழுந்த
ஜோதிர்மயமான ஏதோ ஒன்று நாயனாவை மின்சாரக் கம்பி போல சூழ்ந்துகொண்டது.
ஆச்சரியமடைந்த நாயனா கண்களை மூடிக்கொண்டார். அந்த தெய்வீக ஒளி சூட்சுமமாக
அவருக்குள் சென்று அடங்கியதை உணர்ந்தார். கண்களைத் திறந்த போது அந்த
ஜடாதாரி அங்கே இல்லை. அடுத்த நாள் காலையில் இருவரும் மலையிலிருந்து இறங்கி
மந்தேசா வந்தடைந்தனர்.
*
ஜூன் 1917ல் கணபதி முனி
திருவண்ணாமலை சென்றார். விசாலாக்ஷி, வஜ்ரேஸ்வரி மற்றும் தேவவிரதாவும்
அவருடன் இருந்தனர். அருணைக்குச் செல்லும் வழியில் விஜயவாடாவில் சங்கர
சாஸ்திரியுடனும் மதராஸில் சுதான்வாவுடனும் சில நாட்கள் தங்கினர். சுதான்வா
இப்போது ஊரில் பெரிய வக்கீலாகியிருந்தார்.
அருணகிரியில் மாமரக்
குகையில் தங்குவதாக நாயனா தீர்மானித்தார். குகை புழங்குவதற்கு ஏற்றதாக
இல்லை. சிஷ்யர்கள் அதைச் செப்பனிட ஆரம்பித்தார்கள். விசாலாக்ஷியும்
நாயனாவும் எச்சம்மாளுடன் தங்கினர்.
மாமரக் குகை ஸ்ரீரமணர் உறையும்
ஸ்கந்தாஸ்ரமத்திற்கு சற்றே கீழே இருந்தது. ஸ்ரீரமணரின் உபதேசங்கள் அடங்கிய
ஸ்ரீரமண கீதையை எழுத சரியான இடம் இதுவே என்று முடிவு செய்தார். ஹ்ருதய
குஹார மத்யே என்கிற ரமணரின் ஸ்லோகத்தையும் சேர்த்துவிட வேண்டும் என்று
விரும்பினார். ஸ்ரீரமணர் தனது நேரடி அனுபவத்தால் பரம்பொருள், பிரபஞ்சம்
மற்றும் ஜீவராசிகள் பற்றிய அவரது உபதேசங்கள் பல தளங்களைத் தொட்டு ஞானம்
ஊட்டியது.
கோடைக்காலம். தினமும் ஸ்காந்தஸ்ரமம் ஏறி இறங்குவது
நாயனாவுக்கு சிரமமாகயிருந்தது. இருந்தாலும் ஸ்ரீ ரமண கீதையை பூர்த்தி
செய்வதில் மும்முரமாக இறங்கினார். முதல் அத்தியாயத்தில் தனது கேள்விகளுக்கு
ரமணரின் பதில்களைத் தொகுத்தார். இரண்டாவதில் மகரிஷியின் ஹ்ருதய குஹர மத்யே
ஸ்லோகத்தின் பொழிப்புரை வழங்கினார். மூன்றாவது அத்தியாயத்தில் தேவவிரதரின்
கேள்விக்கு பகவான் அளித்த பதில்கள். நான்காவது அத்யாயத்தில் ஞானம் மற்றும்
விபூதி பற்றி நாயனா கேட்டதற்கு ஸ்ரீரமணரின் பதில்கள் இடம்பிடித்தன.
நாட்கள் செல்லச் செல்ல சிஷ்யர்கள் நிறைய பேர் குவிய ஆரம்பித்தனர்.
நாயனாவும் விசாலாக்ஷியும் விரூபாக்ஷிக் குகையில் தங்கினால்
சிஷ்யர்களுக்கும் தோதாக இருக்கும். மேலும் அனைவரும் ஸ்கந்தாஸ்ரமத்திற்கு
சமீபமாகவும் தங்கியிருப்பார்கள். கிரஹஸ்தாஸ்ரமக்காரர்கள் விரூபாக்ஷியில்
தங்கக்கூடாது என்பது எழுதப்படாத விதி. கணபதி வானப்ரஸ்தத்தில் இருந்தார்.
ஆகையால் விசாலாக்ஷியுடன் தங்கலாம் என்று எச்சம்மாள் மற்றும்
வஜ்ரேஸ்வரியுடன் விரூபாக்ஷிக்கு வந்தார்கள். குகை பூட்டியிருந்தது. பழனி
ஸ்வாமிகள் நாயனாவின் மகிமை தெரியாமல் தங்குவதற்கான ஏற்பாடு எதுவும்
செய்யாமல் விரூபாக்ஷிக்குள் அனுமதிக்கவில்லை.
நாயனா நேரே
ஸ்கந்தாஸ்ரமம் சென்றார். பகவான் ஸ்ரீ ரமணர் பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றிக்
கொண்டிருந்தார். நாயனாவைப் பார்த்தவுடன் அப்படியே நிறுத்திவிட்டு...
“கணபதி... பழனி ஸ்வாமிகள் குகையை தயார் செய்துவிட்டாரா?”
நாயனா பதிலுரைக்காமல் மகரிஷியை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
பழனி ஸ்வாமிகளும் அந்த பக்தர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். பகவான்
மீண்டும் கேட்ட பொழுது நாயனாவுடன் வந்தவர்கள் நடந்ததைக் கூறினார்கள்.
“பழனி.... ஏன் நீ விரூபாக்ஷிக் குகையை நாயனாவுக்காகத் தயார் செய்யவில்லை?” என்று கேட்டார் ரமணர்.
“நாம குடும்பிகளுக்கு குகை கொடுக்கறதில்லையே சாமி...” என்று எகத்தாளமாகப்
பதிலுரைத்தார் பழனி ஸ்வாமி. கணபதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே
கடகடவென்று ஒரு ஸ்லோகம் சொன்னார்.
அத்ய க்ரோதம் விமோக்ஷயாமி காண்டவேக்னிமிவர்ஜுன:
புவனே ப்ராணிபி: பூர்ணே பரிதோபி ச விஸ்த்ருதே
ஸைலம் க்ஷ்பதஸ்சாபி துன்வதஸ்சாபி பர்வதான்
யதஹேந்த்ரஸ்ய ததேஷஸ்ய புத்ரஸ்ய மம வை மஹ:
புவனே ப்ராணிபி: பூர்ணே பரிதோபி ச விஸ்த்ருதே
ஸைலம் க்ஷ்பதஸ்சாபி துன்வதஸ்சாபி பர்வதான்
யதஹேந்த்ரஸ்ய ததேஷஸ்ய புத்ரஸ்ய மம வை மஹ:
அர்த்தம்: காண்டீபத்தால் காண்டவ வனத்தை பொசுக்கிய அர்ஜுனனைப் போல எனது
கோபாக்கினியை பரவவிடுகிறேன். மலைகளையே உருட்டும் மழையை வர்ஷிக்கும் இந்திர
தேஜஸுடன் நான் ஒளிர்கிறேன், ஏனென்றால் நான் கடவுளின் புத்திரன்.
உடனே கணபதி முனி தன்னுடைய சிஷ்யர்களுடன் கடகடவென்று இறங்கி விரூபாக்ஷி
குகைக்கு சென்றுவிட்டார். குவை வாயிலில் இருக்கும் மரத்தடியில் யோக
நிலையில் அமர்ந்தார். கீழே பூமி வெப்பத்தால் காய்ந்துகொண்டிருந்தது. அவரது
மனசும் கொதித்தது. ரிக்வேதத்திலிருந்து இந்திரனை வரவழைக்க சில சூக்தங்களை
ஜெபித்தார். வறண்ட பூமியை மழை கொண்டு வருடச்செய்ய எத்தனத்தார்.
அன்றிரவு ஆகாயமெங்கும் பளீர் பளீரென்று மின்னல் வெட்ட பயங்கர இடியுடன் மழை
பொத்துக்கொண்டு கொட்டியது. நனைந்து கொண்டிருந்த கோயில் தேரில் சில பாகங்கள்
பொசுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமில்லை. ”நான் கடவுளின்
புத்திரன்...” என்று கணபதி முனி பழனி சுவாமிகளிடம் கர்ஜித்தது இப்போது
உங்கள் நினைவுக்கு வரலாம்....
அடுத்தது...... சேஷாத்ரி ஸ்வாமிகள் கண்டு ரசித்த நாயனாவின் தசமஹா வித்யா உபன்யாசங்கள்....
0 comments:
Post a Comment