இன்றைக்கு ரொம்ப விசேஷமான நாள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் கிருஷ்ண பரமாத்மாவும் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு அனுக்கிரகம் பண்ண அடியேன் கிரஹத்துக்கு எழுந்தருளியிருக்கிறார்கள். ஸ்ரீராமநவமியும் ஸ்ரீஜெயந்தியும் எங்கியாவது ஒண்ணா வருமோ? மஹாப்ரளயம் வந்தாக் கூட திரேதாயுகமும் துவாபரயுகமும் சேருமோ? சக்ரவர்த்தித் திருமகனும், மாடு மேய்க்கும் கோபாலனும் ஏககாலத்தில் யாரிடமாவது எழுந்தருளியிருக்கிறார்களா? மரியாதை புருஷோத்தமனும் லீலா புருஷோத்தமனும் யார் வீட்டு வாசல்படியாவது தாண்டி வீட்டிற்குள் பிரவேசித்திருக்கிறார்களா? ஆச்சரியமான ஆச்சரியம்.
மத்தியானமாக அம்மாதான் ஃபோன் பண்ணினாள்.
“கார்த்தி.... கூரியர் வந்துருக்குடா... பெரிய பார்ஸல்.. புக்ஸ் எதுவும் ஆர்டர் பண்ணினியா?”
“எங்கேயிருந்து வந்துருக்கும்மா?”
“சேலம்...”
“ஓ! வெரி குட். பிரிச்சுப் பாரு... நானும் வந்து அனுபவிக்கிறேன்...”
டொக்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆர்டர் பண்ணினேன். இன்று இரண்டு பேரும் பரிவார தேவதைகளோடு பறந்து வந்துவிட்டார்கள். புண்ணியம் செய்(த) மனமே.. மனமே... “ஸ்ரீராம ராம ராமேதி.. ரமே ராமே மனோரமே....” பாட்டி இராத்திரி பாயில் உட்கார்ந்து உரக்கச் சொல்லுவாள். பின்பு "ஹே ப்ரபோ"ன்னு முணுமுணுத்துக் கட்டையை நீட்டுவாள். “க்ருஷ்ண..க்ருஷ்ண...” என்று உத்தரணி தீர்த்தம் விடுவாள்.
ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் ”எங்கே..எங்கே”ன்னு பக்தி டோஸுக்குப் பரபரத்தேன். ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் உபன்யாசம் பண்ணிய ஸ்ரீ ராமாயணம் மற்றும் ஸ்ரீ மஹாபாராதம் இரண்டும் எம்பித்ரீ ஆடியோ சிடிக்களாக சோஃபாவில் வசித்தது. ஓடோடிப்போய் மூஞ்சி கைகால் அலம்பிவிட்டு நெத்திக்கு ஒத்தை இட்டுக்கொண்டு பேக்கைப் பிரித்துப்பார்த்தேன். சீதாலக்ஷமன ஹனுமன் சமேத பட்டாபிஷேக ராமர் படம் போட்ட இராமாயண பேக்கும், பார்த்தனுக்குச் சாரதியாய் பக்தனுக்கு சாரத்யம் பண்ணிக்கொண்டு பாஞ்ச சன்யம் ஊதும் கிருஷ்ணன் படம் போட்ட மூன்று மஹாபாரத பேக்கும் தரிசனம் ஆயிற்று. ராமாயணம் 28 ஸிடி, மஹாபாரதம் 78 ஸிடி. துளசி வாசனை. மகிழ்ச்சிக்கு எல்லையேது?
“போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருந்தாதான் பகவத் குணம் கேட்கணும்னு தோணுமாம்...” என்று ஸ்ரீமத் பாகவத சப்தாகத்தில் தீக்ஷிதர்வாள் அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். புண்ணியம் செய்திருக்கிறேன். டபுள் புண்ணியம். எப்படியென்றால் ஸ்ரீரமண சரிதம் ஆடியோ புஸ்தகம் பாம்பே கண்ணன் அனுப்பினார். இந்த உபன்யாசங்கள் முடியும் வரை சேப்பாயியில் பாட்டு, ஜோக்குகளுக்கு உபவாசம் இருக்கப்போகிறேன். ஐந்தாம் வேதத்தையும் நடையில் நின்றுயர் நாயகனைப் பற்றி பகவத் குணம் கேட்டும் சில நாட்கள் இம்மானுடப் பிறவியில் கழியட்டுமே!
0 comments:
Post a Comment