Thursday, October 15, 2015

மெட்ராஸ்

பதினாறாயிரத்து நூற்றைம்பதாவது முறையாக விஜய்யில் இன்று மெட்ராஸ். எப்போதும் முதல் பாதி மட்டும் பார்க்கும் வாய்ப்புதான் சித்திக்கும். இன்று அடுத்த பாதி சிக்கியது. ஆக்ரோஷமான முரட்டு வாலிபனாகக் கார்த்தி நன்றாக எடுபடுகிறார். பா. ரஞ்சித்தின் இயக்கம் வடசென்னையை திரைக்குள் கூட்டி வந்து தத்ரூபமாகக் காட்டியது. ’ஒரு சுவரின் கதை’ என்று யாராவது தத்துப்பித்து டைரக்டர் கையில் சிக்கிச் சின்னாபின்னமாகி அலங்கோலமாக எடுத்திருக்கப்படவேண்டிய கதை, அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துக்கொண்டது.
பட மசாலாவில் ஆக்‌ஷன் ஒரு கல் தூக்கல். ”கொல..கொல... நிறையா.. ரத்த சீன் ஜாஸ்தி” என்று எறும்புக்கும் தீங்கிழைக்காதவர்கள் படத்திற்கு வன்முறை சாயம் பூசலாம். ஆனால் கதைக் களன் அதற்குத் தக்க சமாதானம் சொல்கிறது. படம் முழுக்க ஒரு இனம்புரியாத படபடப்பும் அதனோடு பின்னப்பட்டிருந்த ஒரு மெல்லிய காதலும்....சபாஷ்.. அட்டக்கத்தியில் என்னை வசீகரித்த மெல்லிய கிடார் இசை கொடுத்த சந்தோஷ் நாராயணன் இதிலும் வெளுத்து வாங்குகிறார். பரபரப்பாக நகரும் காட்சிகள் இவரது பின்னணி இசையில் சீட்டின் நுனிக்கு இழுக்கிறது. பலே..
பா.ரஞ்சித்திற்கு கபாலி கிடைத்த வெற்றி ரகசியம் புரிந்தது. வாழ்த்துகள்!
[போகிற போக்கைப் பார்த்தா இந்தப் பய “சிவகவி”க்குக் கூட நாளைக்கு விமர்சனம் எழுதுவாம்ப்பா.. என்று வெறுப்பில் தலையில் அடித்துக்கொண்டு அலுத்துக்கொள்பவர்கள்.... மன்னிக்க.]

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails