சென்னையிலிருந்து மும்பாய்க்கு புஷ்பகவிமானத்தில் "விஷ்ஷ்ஷ்.”கிக் கடக்கும் நேரம் மும்பைக்குள்ளேயே இரண்டு கீக்கிடமான சிக்னல் தாண்டும் தரைவழிப் போக்குவரத்தில் ஸ்வாகா ஆகிவிடுகிறது. பம்பர் டு பம்பர் பம்பாய் ட்ராஃபிக் நிரம்பி வழிகிறது. இருநூறடி விட்டமுள்ள வட்டத்தில் எண்பது ஜீன்ஸ் பெண்டுகள் மற்றும் கோட்டு ஆடவர்கள் ஐம்பது பேர்.
சென்ற வாரத்தில் மும்பையில் அச்சுக்காரர்களுக்கான ஒரு அகில உலக மாநாடு. டிஜிடலும் கோர்த்துப் பேசினார்கள். வெற்றிக்கொடி நாட்டியவர்கள், புது முயற்சிகளைப் பரீக்ஷை செய்து பார்த்தவர்கள், பிரசுர வித்தைக் கற்றுக்கொடுப்பவர்கள், கோலோச்சுபவர்கள், இத்தொழில் துலங்க பல தினுசு இயந்திரம் விற்பவர்கள், மூலப்பொருட்கள் வியாபாரிகள், முக்காலமும் தேவைப்படும் பொருட்களின் வியாபாரிகள் என்று மூன்று நாட்கள் மைக் கட்டித் திணறத் திணற தொழில் நுட்பம் பேசினார்கள். வெளியே வரும் போது உள்வாங்கிய செய்திகள் போக மிச்சமிருப்பவை காதுரெண்டிலும் பாகாய்க் கசிந்துருகி தரையில் வெள்ளமாய் ஓடியது. பிடரியில் லேசாகத் தட்டினால் நாலு சங்கதிகளைக் கக்குமளவுக்கு உரு ஏறியிருக்கிறது.
சென்னை விமானநிலையத்தில் ஐம்பது ரூபாய்க்கு ஒரு காஃபி வாங்கி குடிக்குமளவிற்கு எனக்கு கொழுப்பு ஏறிப்போய்விட்டது. பொடியிட்லி என்கிற ஒரு பண்டத்தின் பாக்கெட்டைப் பார்த்தாலே இட்லி சாப்பிட்டு ஏப்பம் விட்ட திருப்தி. நூற்றைம்பது ரூபாயாம். ஐந்து நிமிஷம் முன்னாடியே வண்டியை எடுத்து பத்து நிமிஷத்திற்கு முன்னரே சேருமிடம் வந்தவரை வானத்தில் ஒரு சுருக்கு போடும் தண்டனை கொடுத்து மும்பையில் தரை இறக்கினார்கள். மும்பை உள்நாட்டு விமானமுனையத்திலிருந்து தடுக்கி விழுந்தால் முகரைப் பேந்துவிடும் தூரத்தில் சஹாரா ஸ்டார். பாலைவனமாக இல்லாமல் பசுமையாய் இருந்தது. இந்த விடுதியில் மூன்று நாட்களுக்கு ஜாகை.
தீவிரவாதிகள் வந்து சரமாரியாகச் சுட்டால் கூட தீபாவளிக்கு கேப் துப்பாக்கி வெடிக்கிறார்கள் என்று லாபி சொகுசு நாற்காலிகளில் முதுகைச் சரித்து புதைந்து கொண்டு பால் வேறுபாடின்றி எப்போதும் பத்து பேர் மொபைலையும் ஐபேடையும் சதா நோண்டிக்கொண்டேயிருந்தார்கள். அனைவருக்கும் ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா விரல்கள். கண்ணாடிக் கதவு திறந்துவிட்ட சர்தார்ஜி பீமாதிகள் போல இரண்டு பேரை கொசு போல தூக்கி வெளியில் போடும் ஆகிருதி. நம்மூர் வயிறு ஒட்டிய கழைக்கூத்தாடிப் பெண் நுழைந்து வெளிவரும் வளையத்தைக் அசால்ட்டாகக் கையில் ப்ரேஸ்லெட்டாகப் போட்டிருந்தார்.
பாத்ரூம் தரையில் முகம் பார்த்து தலைவாரிப் பொட்டிட்டுக் கொள்ளலாம். சுத்தம் ஸ்கொயர். பால்கனியில் வந்து நின்றால் வெளியே பல கனிகள் தெரிகிறது. பக்கத்துப் பால்கனியில் கோடுபோட்ட ட்ரௌஸரும் பனியனும் காயப்போட்ட மகானுபாவர் எங்க ஊர் ஆசாமியாக இருப்பார் என்று நண்பர் நமட்டுச் சிரிப்போடு சொன்னார். கந்தையானாலும் கசக்கிக்கட்டுபவர்கள் நாங்கள் என்ற பெருமிதத்தோடு ஒத்துக்கொண்டேன். லகூனில் நீர்நிலைகளுக்கு மத்தியில் சாப்பாடு. “வாட் இஸ் திஸ்?” என்று தென்னிந்திய உணவு வகையறாக்களை கண்ணால் சாப்பிடும் வெள்ளைக்காரி, எல்லாவற்றிலும் ஒன்று என்று பரப்பியிருக்கும் சைவ, அசைவ ஐட்டங்களில் ஒன்றாகத் தட்டை நிரப்பிப் போகும் மோட்டா பிரகிருதி, வெள்ளரியும் கேரட்டும் மட்டும் தின்று முயல் போல வாழும் கொடி போன்ற அம்மணி ஒருத்தி என்று சாப்பாட்டுக்கூடம் அவியலாக இருந்தது.
அனுராதா கிருஷ்ணஸ்வாமி மேடம், ஏவி ராமன் சார், அச்சுதானந்தன் சார், சாந்தி மாரியப்பன், எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி என்று மும்பைக்கார்கள் அநேக ஸ்நேகிதர்கள். ஆனால் போக்குவரத்து நெரிசல் அக்கம்பக்கம் காலெடுத்து வைக்கவிடாமல் கட்டிப்போட்டது. அனைவரிடமும் அலைபேசி ஆஜர் தெரிவித்துக்கொண்டேன். மாநாடு நடக்குமிடத்திலிருந்து ஸ்டூல் போட்டு எட்டிப் பார்த்தால் வீட்டின் ஜன்னல் தெரியும் தூரத்தில் இருப்பவர் நம் சுதாஜிதான். கிடைத்த இரண்டரை மணி நேர கேப்பில் அவரை ரம்பம் போட தீர்மானித்தேன்.
மனுஷ்யர் வண்டி போட்டுக்கொண்டு எனது மாநாட்டுத் திடலுக்கு வந்தார். வழியில் “எங்கின பார்த்தாலும் துப்பியிருப்பாய்ங்க...” என்று சுதாகர்ஜி நெல்லைத் தமிழில் சொன்னதும் எனக்கு ஹன்ஸல் அண்ட் க்ரீட்டல் கதையில் காட்டு வழியில் தொலைந்து விடாமலிருக்க Pebble and Bread தூவிக்கொண்டு போன குழந்தைகளின் உத்தி போல என்று நினைத்துக்கொண்டேன். ஃபிலிம்சிட்டி திரும்பும் பாலத்துக்கடியில் முளைத்திருந்த பச்சைத் தாவரங்கள் சிவப்பில் குளித்திருந்தன.
”பக்கத்துலதான் சிவபெருமான் பார்வதியெல்லாம் குடியிருக்காங்க....” என்று அவரது வீட்டுப்பக்கம் வண்டியைத் திரும்பினார். தூரத்தில் மரங்களடர்ந்த கயிலாயம் போல மலை முகடு தெரிந்தது. வறண்டு போன ஐஃபோனை அவரது வீட்டு திண்ணையோரம் எனர்ஜிக்கு சொருகினேன். அவருடன் பேசினால் எனக்கு தெம்பு ஸ்திரப்படும். ஜன்னலின் அடிவாரங்களை கடப்பா கல் போட்டு ஜில்ஜில் திண்ணையாக்கியிருந்தது என்னைப் பிடித்து மன்னைக்கு இழுத்துச்சென்றது. ஒரு காலை மடக்கி இன்னொரு காலை ஆட்டியபடி பேசுவது ஸ்வர்க்கத்தில் அப்ஸரஸ்கள் சுற்றி நின்று சாமரம் வீசுவது போல சுகானுபவம்.
ஸ்ரீவரமங்கை மேடம் இரவு டிஃபன் முஸ்தீபுகளில் இறங்கினார். “சப்பாத்தியே சத்து” என்று என் கொள்கையை ஷுகர் யூனியன் லீடராய் முழங்கினேன். கஞ்சா, அபின் ஒளித்து வைப்பது போல மர ஷெல்ஃபெங்கும் புஸ்தகங்கள். கண்ணை மூடி உருவினால் ஒரு புஸ்தகம் கைக்கு வரும். ஆனால், வேண்டிய புஸ்தகம் வேண்டுமென்றால் வரமங்கை மேடத்தின் ஒத்தாசை தேவைப்படுகிறது.
ஜெயமோகன், சுஜாதா, பிஏகே என்று சரளமாகப் பேசத் துவங்கினார் சுதாகர்ஜி. புலிநகக்கொன்றை பக்கம் பேச்சு திரும்பியது. டைகர் க்ளா ட்ரீ பற்றி சிலாகித்த சுதாகர்ஜி அதில் வரும் லைப்ரேரியன் பிள்ளை விங்க்ளருக்குக் கொடுக்காமல் ஸ்டூடண்ட்டுக்குக் கொடுத்த புது புஸ்தகம் பற்றிய பக்கத்தைப் பிரித்து படித்துக்காண்பித்து செவிக்கின்பம் அளித்தார். எழுத்தாளர் எழுத்தெழுத்தாகப் பிரித்து அக்கு வேறு ஆணி வேறாக விளக்கும் போது ஏற்படும் அனுபவமே அலாதிதான்.
அபிஜீத் கட்டிச் சமர்த்து. வீகேயெஸ்-வல்லபாவி ஹரிகிச்சு போல கேமாராவில் படம் பிடிக்கத் துவங்கியது. மேடம் ரொம்ப பிசி. என் ஐஃபோனில் அகப்பட்ட ஃபோட்டோக்களில் எல்லோரோடும் உட்கார்ந்து எடுத்த்துக்கொள்ளுமளவுக்கு எனக்கு தோணாதது என்னுடைய சமர்த்து லெவலைக் காட்டுகிறது. மின்னல் கிளை கிளையாய்ப் பிரிந்து இருண்ட வானத்தை வெட்டி “டமார்...” என்று ஒலியெழுப்ப தேவைப்படும் நேரமாக ஒரு இரண்டரை மணி நேரம் பளிச்சென்று ஓடிவிட்டது.
சப்பாத்தியும் ஒரு கை தயிர் சாதமும் தேவார்மிதமாக இறங்கியது. தவிக்கவிடாமல் நேரே கொண்டு வந்து சஹாராவில் இறக்கிவிட்டார் சுதாகர். மாலை மனம் மயக்கியது. வரும் வழியில் கதை எழுதும் உத்திகளை பகிர்ந்தார் மும்பையில் எனக்கு சிறுகதை ஒர்க்ஷாப்பும் கிடைத்தது என் புண்ணியமே.
பத்தரை மணிக்குக் கூட பெண் பிள்ளைகள் தெருவோரங்களில் லவலேசம் கூட பயமில்லாமல் தெகிரியமாக வலம் வருகிறார்கள். பப்புகளில் தோள் மேல் கைபோட்டுக்கொண்டு தாகசாந்தி செய்கிறார்கள். எங்களுக்கு மூன்று நாட்கள் வண்டி ஓட்டிய கோபால்ஜிக்கு சொந்த ஊர் ஆந்திரா பக்கமாம். அப்பாவே ஊரிலிருந்து மும்பைக்கு ஓடி வந்துவிட்டாராம். சும்மா இல்லை. சொத்து சுகத்தையெல்லாம் தனது தமையனார்களுக்கு தாரை வார்த்துவிட்டு வந்தாராம். ஒரு குஜராத்தி பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு மும்பைக்கராக வாழ்க்கை நகர்த்துகிறார் என்று அவரது காதல் கதை ஒரு டெம்ப்டிங் சிறுகதைக்கான கரு. கோபால்ஜியின் பசங்கள் இஞ்சினியரிங் படிக்கிறார்கள் என்பது உபரித் தகவல்.
இரண்டு வடாபாவ் (வடப்பாவ் என்று அழுத்தினால் திட்டுகிறார்கள். “ப்” கூடாதாம். ஒன்று ரூ. 15/-.) சாப்பிடுமளவிற்கு கையில் துட்டிருந்தால் ஒரு நாளை நகர்த்திவிடலாம் என்பது மும்பையில் ஜீவனம் செய்யும் அடிப்படை ஃபார்முலா. ஒரு உருளை போண்டாவை பட்டர் தடவிய பன்னுக்கு நடுவில் வைத்துக் கடிக்கக் கொடுக்கிறார்கள். மேற்கத்திய பர்கருக்கெல்லாம் இதுதான் பூர்வ பட்சணம். இங்கே எல்லோருக்குள்ளும் தொழில் தொடங்கும் ஆத்ம வீர்யம் நாடி நரம்பெல்லாம் சுரக்கிறது. இரண்டு பேர் சுற்றி நின்றால் பிசினெஸ் பேசிக் களிக்கிறார்கள். கேட்வே ஆஃப் இந்தியா செல்லும் வழியெங்கும் ஆர்.கே.லெக்ஷ்மணின் “காமன் மேன்” சிலையை ரோட்டோர பார்க்குகளில் காணமுடிகிறது. சமீபத்திய தீவிரவாதி கஸாப் அட்டாக்கின் போது உயிர் துறந்த கர்கரேவுக்கு சிலை வைத்திருப்பது போற்றத்தக்கது.
ஒன்பது மணிக்கு கலர் விளக்குகளின் ஒளியில் நனைந்து கொண்டிருந்த இந்தியாவின் நுழைவு வாயிலை வலம் வந்தோம். ஆளுக்கொரு மொபைல் கேமிராவில் திரியும் கோஷ்டிக்கு மத்தியில் ரெண்டு இளைஞர்கள் முப்பது ரூபாய்க்கு படம் எடுத்துத் தருவதாக தூண்டில் போட்டார்கள். தன் மொபைலே தனக்குதவி திட்டத்தில் ஒருவரும் அவர்களை சீண்டியதாகத் தெரியவில்லை. நுழை வாசலில் ஒரு அஸ்வம் பூட்டிய இரதங்களில் சீரியல் பல்பு கட்டி மாப்பிள்ளைகளை அழைப்புக்கு கூப்பிட்டார்கள். “பொண்ணு ரெடியா?” என்று தமிழில் நான் காதோடு காதாக நண்பர்களிடம் கலாய்த்தது அவர்கள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.
சித்திவிநாயகர், லக்ஷ்மி போன்றவர்களை தரிசிக்கும் வாய்ப்பில்லாத பாவியாகிவிட்டேன். ஏர்போர்ட் அருகில் இருக்கும் ஜுஹு இஸ்கான் கோவிலுக்கு சென்று திரும்பி ஃப்ளைட் ஏறினோம். போகும் வழியெங்கும் அமிதாப் வீடு, அஜய் தேவ்கன் வீடு என்று வயதான நடிகர்கள் வீட்டு வாசல்படி காண்பித்தார்கள். என்னைப் போன்ற சத்புத்ரர்களுக்கு நடிகையர் வீடு காண்பிப்பது அழகல்ல என்று கற்புத்திறன் போற்றியவர்க்கு மனமார்ந்த நன்றி. கோகுலாஷ்டமிக்கு முதல் தினமாதலால் பஜனை நடந்துகொண்டிருந்தது. பஜனை பாடியவர் அபங்க ஸ்பெஷலிஸ்ட் போலிருக்கிறது. காத்திரமான குரலில் ஒரு கண்ணாடி இளைஞனை கிருஷ்ணர் முன்னால் ஆட விட்டுக்கொண்டிருந்தார். திரௌபதி வஸ்திராபரணத்தின் போது கையிரண்டையும் மேலே தூக்கி ”கிருஷ்ணா! மாதவா! கேசவா” என்று கூச்சமில்லாமல் கூப்பிட்டது போல ஆடியவர் கண்கள் சொருகி அபிநயம் பிடித்துக்கொண்டிருந்தார். பிரகாரமெங்கும் கம்ச வதம், பழக்காரிக்கு பொன் நகைகள் கொடுத்தது, விஸ்வரூப தரிசனம் என்று பற்பல கிருஷ்ணாவதாரப் படங்கள். கிருஷ்ணரைப் பார்த்தாலே ஒரு ஆனந்தம். குதூகலம். மனசு மயங்குகிறது.
மும்பை ஏர்போர்ட் ஒரு குட்டி கோயம்பேடு. ஒருவர் மடியில் இன்னொருத்தர் உட்காருமளவிற்குதான் சீட் போட்டிருக்கிறார்கள். கண்ணை மூடி தியானத்தில் உட்கார்ந்தால் கூட பக்கத்து சீட்டில் ஆள் மாறுவது வாசனை (அ) நாற்றத்தில் தெரிகிற பத்து செ.மீ தூரம். ஃபோன் சார்ஜர்கள் இருந்த இடத்தில் மொபைலர்கள் பழியாய்க் கிடந்தார்கள். ஐந்து நிமிஷத்துக்கொருதரம் ஐட்டம் பிடிப்பவர்கள் போல “சென்னை.. பூனே.... கோயம்புத்தூர்... டெல்லி...” என்று வெப் செக்கின் செய்துவிட்டு ஊர் மேயப் போனவர்களை தேடி அலைந்த ஏர்வேஸ்காரர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. முப்பத்தைந்தாயிரம் அடியில் பறக்கும் வானவூர்தியில் கார் சார்ஜர் வாங்கிய மாமாவை எக்கிப் பார்த்தேன். கன்னம் சிவக்க வெட்கப்பட்டார். அதை விற்ற அந்த ஏர்ஹோஸ்டஸின் விற்பனைத் திறன் வியக்கவைத்தது. ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் பறக்கும் நேரம் முழுக்க உட்காராமல் வேலை செய்த அந்த விமானப் பணிப்பெண்களின் சுறுசுறுப்பு விமானத்தின் வேகத்தை விட அதிவேகம்.
பை பை மும்பை!
#இத்துடன் இணைத்திருக்கும் படத்தில் (மும்பை: பறவைப் பார்வை) விமான இறக்கையைப் பார்த்து ஏர்லைன்ஸ் கம்பெனி கண்டுபிடிப்பவர்கள்..... “பறக்கும் பிரபு (அ) பாவை” என்கிற பட்டத்தைப் பெறுகிறார்கள்.
0 comments:
Post a Comment