சில வருடங்களுக்கு முன் கைலாஸம் போன என் பாட்டியின் சாயலில் இருந்த தொன்னூற்று நான்கு வயசுப் பாட்டிக்கு நமஸ்கரித்தது மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. கொலு விஸிட்டின் புண்ணியம். நெத்திக்கு ஒத்தை. மடிசார். மடி. ஆசாரம். கழுத்தில் பவிழம் கோர்த்த மாலை. அதே குட்டையான உயரம். எவரையும் சாய்க்கும் அமைதியான திருமுகம். காதுக்கு வலிக்காத மிக மென்மையான பேச்சு. சாரதா பாட்டியே சித்த நேரம் எதிரில் நடமாடியது போன்ற உணர்வு. ஸ்ரீ Srinivasan Gopalakrishna Iyer அவர்களின் மாமியார். அக்ஷதை போட்டு ஆசீர்வாதம் செய்தார்.
Saroja Ramanujam மேடத்தின் வீட்டில் ஸ்ரீகிருஷ்ணர் ஜாகையிருந்தார். கிருஷ்ணரின் அவதாரத்திலிருந்து அவரின் பால்ய லீலைகளை லக்ஷணமான திருமுகத்தோடு வடித்திருந்த பொம்மைகள் கொலுவெங்கும் அலங்கரித்தன. ”காதி கிராஃப்ட்... இல்லைன்னா எழிலகம்...” என்ற அவரைச் சுற்றி திசையெங்கும் ஸ்ரீகிருஷ்ணர் வியாபித்திருந்தார், அவரது ப்ரொஃபைல் படம் போலவே!
இன்னும் இருவர் வீடுகள் எனக்கு நெருங்கிய சொந்தக்காரர்கள். இன் லாக்கள். மழலை பேசி மனதை மயக்கும் குட்டிகள் தத்தக்காபித்தக்காவென்று நடமாடும் இடம். கய்மய்யென்று நாலு நாலு வார்த்தைகளில் கையைப் பிடித்து சொர்க்கம் கூட்டிக்கொண்டு காண்பிப்பவர்கள். தொடையில் உட்கார்ந்து தாவாங்கட்டை தடவி தோளுக்கு மேலே தூக்கும் போது தோளிரண்டிலும் தைய்யத்தக்காவென்று நடனமிடும் பால நடராஜர்கள்.
சென்ற வீடுதோறும் என் இரு செல்வங்களும் பாடின. “சாம கானப் ப்ரியே” பிரதான பாடல். அப்புறம் திருப்புகழில் ஒன்று. சில இடங்களில் “உம்பர் தரு....”வாக கணபதி வந்தார்.
நவராத்திரி போன்ற பண்டிகைகள் பக்தியோடு பாசத்தையும் மணக்கும் சந்தனமாய்க் கலந்து கொண்டு வருகிறது. அதையெடுத்துப் பூசிக்கொண்டு வீடு வந்து காய்ந்த சந்தனத்தில் மன்னையின் நினைவு காயாமல் துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதி படம் ஜோராக ஓடுகிறது. “அதோ.. மேல மொதோ படியில நிக்கிற லக்ஷ்மி... உங்கம்மா இத்துணூண்டு குழந்தையா இருக்கறச்சே வாங்கினது....இன்னமும் சாயம் போகாம...” பாட்டி லாப்டாப் திரையைக் கிழித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். கேட்டுவிட்டு பிறகு இங்கு வருகிறேன். குட் நைட்.
0 comments:
Post a Comment