Thursday, October 15, 2015

ஞானரசம்

ஞானரசம்
=========
”லஸ் சிக்னல்லேர்ந்து பிள்ளையார் கோயில் தாண்டினப்புறம் ஒரு பெட்ரோல் பங்க் வருமே... ஆமா... அது பக்கத்துல ஒரு குட்டி சந்து வரும்.... அப்டியா... நா பார்த்ததில்லையே வீகேயெஸ்... சின்னோன்டு சந்து..... நா ஸ்டேஜ் அரேஞ்ச் பண்ணிண்டிருக்கேன்.. உள்ள வந்துடுங்கோ.. .” தொல்லைத்( 
smile emoticon
 ) தொடர்பைத் துண்டித்து ’கண்ணன் என் தோழன்’ போல வீகேயெஸ் ஞானரத வேலைக்குள் நுழைந்துவிட்டார்.



எங்கே அது? ஆங்! அது சின்னோண்டு சந்து இல்லை. ஸ்லேட் எழுத குச்சி கேட்டால் ”ந்தாடா...” என்று புழுக்கோண்டு உடைத்து மடியில் விட்டெறிவான்களே... அந்தக்காலத்து ஒண்ணாவது ரெண்டாவது பசங்கள்.. அத்துனூண்டு முட்டு சந்து. கலாரசிகர்கள் மொய்க்கும் வாசலிலேயே வித்யா சுப்ரமண்யம் மேடத்தை ஏற்றிக்கொண்டு சேப்பாயி கனகம்பீரமாக உள்ளே நுழைந்தது. சேப்பாயி மூக்கை உள்ளே நுழைக்க நிறைய தலைகள் தெரிந்தன. அவையெல்லாம் தெரிந்த தலைகள். பரிச்சயமான முகங்கள். ஒருவர் கால் மேல் மற்றவர் கால் வைத்து முண்டியடித்துக்கொண்டு நடக்குமளவுக்கு பரபரப்பாக இருக்கும் லஸ் கார்னருக்கருகே லஸ்ஸி குடிக்கக் தோதாக ஒதுங்கும்படியாக இப்படியொரு ஜில்ஜில் இடமா? Ambiance அமர்க்களம்.
ஜம்மென்று நான்கு தூண்களோடு இருக்கும் லஸ் ஹௌஸ் தலைவாசலை கலைக்கென்றே ஒழித்துக்கொடுத்திருக்கிறார்கள். மெட்ராஸ் டேயில் அங்கே பாரதியை ரசிக்கக் கூடிய ரசிகமகா ஜனங்கள். ஒவ்வொருத்தர் முகத்திலும் முகமூடியாய் ஒட்ட வைத்த மீசை பாரதி. அது என்ன ஓரங்க நாடகமாங்க? பிரவசனமோ? சோஷியல் பட்டிமன்றமா? இல்லை.. இல்லவே இல்லை.. "டான்ஸோ-பாட்-நடிப்-பேச்சோ-பேச்" என்கிற பார்த்தால் மனசுக்குள் பச்சென்று நெருக்கமாக ஒட்டிக்கொள்ளும் ஒரு புது தினுசு ப்ரோக்ராம். பாரதியின் பாடல்களை திஸ்ர ஜதியில் பாடுவார்கள். அதற்கு ஆடுவார்கள். அப்புறம் ஆடுபவர்களுக்குக் கொஞ்சம் ரெஸ்ட். திருவல்லிக்கேணி என்று பேட்டை பெயரில் ஹரீஸ் நடிப்பார். வல்லபா, அனன்யா, ஆர்வி மூவரும் நடித்துக்கொண்டே பேசுவார்கள். பேசிக்கொண்டே நடிப்பார்கள். நடித்துக்கொண்டே... சரி இத்தோடு நிறுத்திப்போம். இதுவே டா.பா.ந.பே.பே.
உள்ளே நுழைந்தால் ஜேஜேயென்று தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம். எங்கெங்கு காணினும் தெரிந்த முகங்களடா! முகப்புத்தகம் அளித்த நட்புகளடா!! என்றும் நமக்கு உறுதுணையடா.. (ச்சும்மா மூடுடா) என்று புரட்சி வாசகங்கள் மனோகுரல்களாகக் கத்தித் தீட்ட கவித...கவித... முளைத்துவிடும் அபாயம் இருந்ததால் மேடையின் பின்பக்கமாக சென்று சமர்த்தாக திவாகரர் அருகில் கைகட்டி அமர்ந்துகொண்டேன். அணுக்கமான நண்பர்கள் ’மெட்ராஸ் டே’வில் நிகழ்ச்சி நடத்தப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டதிலிருந்து ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி என்னைத் தொற்றிக்கொண்டது. முதலில் பார்த்த லக்ஷ்மி ஸ்ரீராம் அவர்களுக்கு ஒரு வணக்கம் சொன்னேன். மாலா மாதவன் பக்கத்தில் அவரைவிட நான்கடி பெரியதாக இருந்த அவர் பையனைப் பார்த்துக்கொண்டே மா.மாவுக்கும் ஒரு மா. வணக்கம்.
கீதா சுதர்ஸன் நிகழ்ச்சி துவங்காதா என்று கலையார்வத்துடன் உட்கார்ந்திருந்தபோது க்ரீன் ரூமிலிருந்து தேவராட்டமாட தேவராட்டம் வந்து கொண்டிருந்த விசியைப் பார்த்து அசந்துபோனேன். சாக்ஷாத் சிவபெருமானே காலில் சலங்கை கட்டிக்கொண்டு மேலேயிருந்து கீழே ஆட வந்தது போல ஒரு தோற்றம். அவரைப் பார்க்க ஓடிப்போனவனைக் கட்டிப் பிடித்து “வாங்கோ...” சொன்னார். அவர் கட்டிப்பிடித்தபோது என்னை வெளியே சிலர் தேடியிருக்கக்கூடும். அவரது அணைப்பில் இந்த ச்சோட்டூ காணாமல் போயிருந்தேன். திரும்பி வந்த போது என்னைப் பார்த்து “சௌக்கியமா?” என்று கேட்டு நடந்து வந்துகொண்டிருந்தவரை “தேவி ராஜன்?” என்று கேள்வியாகவும் பதிலாகவும் கேட்டு “ஆமாம்” பதில் வாங்கி கைகுலுக்கினேன்.
”முந்தி முந்தி விநாயகரே.... ” கரகாட்டக்காரன் பாடல்... “சந்தைக்கு வந்த கிளி...” தர்மதுரை பாடல் போன்றவற்றின் லயத்தை மேளம் முழங்க, விசி கைகால்களை விசிறி விசிறி ஆடியது கண்ணுக்கு விருந்து. அவருடன் ஆடிய அவரது மனைவியும் மற்றொருவரும் தங்களது பங்கை சிறப்பாகச் செய்தனர். நடுவில் விசியின் சுழற்றிவிட்ட பம்பரமான ஆட்டத்துக்கு அவரது மனைவியின் சிரித்த முகபாவம் தேவராட்டத்தை தெய்வீக ஆட்டமாக்கியது. “ஓம் சக்தி..ஓம். சக்தி.. ஓம்.. பராசக்தி.. ஓம்... சக்தி.. ஓம்”மில் மொத்த கூடாரமும் மெய்மறந்து ரசித்தது. ஸ்வர்ணமால்யா கணேஷ் அவர்கள் தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டு முதல் வரிசையில் உட்கார்ந்து தேவராட்டத்தையும் ரசித்தார்.
இரண்டாம்-மூன்றாம் வரிசையில் உட்கார்ந்திருந்த ராதிகா பார்த்தசாரதி மேடம் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த திருவாளர். பார்த்தசாரதியின் தலைக்கு மேலே படமெடுத்த நாகமாய் தனது மொபைலைப் பிடித்து படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்.
விசியின் ஆட்டத்திற்கு நடுவில் மேடையை முதலில் அலங்கரித்தனர் வல்லபாவும் அனன்யாவும். நெட்ரு பண்ணி டயத்தை வேஸ்ட் பண்ணாமல் ஸ்க்ரிப்ட்டுக்கு உயிரூட்டி அதைக் கையிலெடுத்து மைக்கை முழுங்கி பேசிக்கொண்டிருந்தார்கள். திருவல்லிக்கேணி என்று ஒரு வார்த்தை வந்ததும் மேடை அதிர சிறு குழந்தைகள் ட்ராயரை ஈரம் பண்ணும் அளவுக்கு ஹரீஷ் குரல் விட்டார். நான் தூக்கிவாரிப்போட்டு திவாகரரைத் தஞ்சமடைந்தேன். கைலியும் கழுத்தில் கர்ச்சீப்புமாய் புள்ளையாண்டன் ஒரே அசத்தல். இப்பவே நான்கு ப்ரொட்யூஸர்கள் வாசலில் கால்ஷீட்டுக்கு நிற்பதாகக் கேள்வி. கழுத்துக் கட்டுடன் வந்த பையனுக்கு கூடிய சீக்கிரம் கால்கட்டாம். எல்லோரும் கிசுகிசுவென பேசிக்கொண்டார்கள்.
ஆர்வியை நாங்கள் மௌன குரு என்று அழைப்போம். மனுஷ்யர் பரம சாது. புத்திமான் பலவான். திருவல்லிக்கேணியில் பாரதி குடியிருந்த கதையை அவரே நகைச்சுவைக் கட்டுரையாக்கி எழுதியதை பாந்தமாகப் படித்துக்காட்டி ரசிகப்பெருமக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்து பின்னர் இன்பப் படகேற்றினார். மூழ்கியவர்கள் எடுத்ததெல்லாம் மகிழ்ச்சி முத்துகள், ஆனந்த பவிழங்கள்.
வல்லபா ஸக்ரிப்ட். இது போன்று இன்னும் மூன்று நான்கு வெர்ஷன் தயார் செய்யும் சரக்கு அப்பட்டமாக தெரிகிறது. அபார உழைப்புக்குச் சொந்தக்காரர். மேடையின் ஒரு பக்கம் வல்லபாவினால் பிரகாசித்தது. அவரது தந்தையின் சிரத்தை என்னை பிரமிக்க வைத்தது.
அனன்யா ஏற்கனவே குரல் ரூபமாக குந்தவியாகவும், குந்தவையாகவும் ஹீரோயின் அந்தஸ்தில் நடித்திருந்ததால் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல குரலின் ஏற்ற இறங்களால் கிறங்கடித்தார். கதை சொல்லும் பாங்கு அவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. பாம்பே கண்ணன் சார் ட்ரெயினிங். ஒவ்வொரு முறையும் அனன்யாவின் கிரீஸ் தடவிய குரல் வசனங்களை வளப்படுத்தியது.
ஆஹா.. வசனமாய் பாரதியின் சரித்திரத்தைப் பேசிக்கொண்டேயிருக்கிறார்களே.. அற்புதம் என்று நினைத்து கசிந்துருகிப் பார்த்துக்கொண்டேயிருந்தால்.. “செந்தமிழ் நாடெனும் போதினிலே....” என்று விசி குழுவினர் மறுபடியும் ஆட வந்துவிட்டார்கள். அந்த மேளக்காரரையும் அனைத்துப் பாடல்களையும் பாடிய அந்த மாஸ்டரையும் எத்தனை பாராட்டினாலும் தகும். அவர்களது குரலில் வீரியமும் கிராமத்து வாசனையும் பலமாக இருக்கிறது. அந்த கிராமத்து வாசனையே தேவராட்டத்தின் வேர். “நிறைய மாணவர்களுக்கு ஆட்டம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். விசி போன்று குடும்பத்திற்கே தேவராட்டம் சொல்லிக்கொடுப்பது இதுவே முதன் முறை..அவர்களுடைய ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது” என்று பேசினார்.
சுந்தரராமன் சிந்தாமணி எட்டிப் பார்த்தார் என்று நினைக்கிறேன். கையைக்கட்டிக்கொண்டு ஆட்ட நுணுக்கங்களை அவரது இசை நுட்பத்தோடு கலந்து பார்த்துக்கொண்டிருந்தார். பாரதமாதா சிலை பற்றிய ஒரு செய்தியை அனன்யாவும் வல்லபாவும் பகிர்ந்துகொண்டிருந்த போது எங்கள் குருஜி பாரதி பாலு சார் சில அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவரது எனர்ஜி எங்களுக்கெல்லாம் பூஸ்ட். பாரதி பற்றிய பல சுவையான புதிய செய்திகளை பகிர்வதற்கு அடுத்த மெட்ராஸ் டே அவருக்கு ஒரு தனி மேடையளிக்கும் என்று நம்புவோம்.
”அச்சச்சோ.. முடிஞ்சுட்டுதே...” என்று ப்ரோக்ராம் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போது “சார்.. என் பேர் அனந்தராமன்.. உங்களோட எல்லா பதிவும் படிப்பேன்... என்னைச் சொன்னா உங்களுக்குத் தெரியாது.. கோமதி அனந்தராமன்னு சொன்ன புரியுமா?..” என்று கைகுலுக்கியவர்க்குப் பின்னால் கோமதி மேடமும் வந்தார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
நடுவில் கால் முடியாமல் கஷ்டப்பட்ட சேதுராமன் சாரை தி.நகர் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தும் காலசக்கரம் விடாமல் என்னைத் துரத்தியதால் அந்த பாக்கியம் இல்லாமல் இருந்தேன். கடைசியில் இங்கே சந்தித்தேன். “இப்போதான் மொதல்மொதலா வெளிலே வரேன்...” என்றார். “உங்க ஊருதான்...” என்று தனது மனைவியையும் அறிமுகப்படுத்தினார்.
ஏழுகடல் ஏழுமலை தாண்டி ரேவதி வெங்கட் வந்திருந்தார். சமீப காலமாக விருத்தங்களை எழுதிக் குவிக்கிறார். திவாகரர் கொடுக்கும் தைரியமும் தன்னுடைய சுயபுலமையும் கைகோர்க்க பிரித்து மேய்கிறார். செல்வி ஷங்கர், திரு.ஷங்கரை அறிமுகப்படுத்தினார். ப்ரொஃபைல் படத்தில் தெரியும் அதே கள்ளமில்லாச் சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தார்.
முகத்தில் மருவில்லாமல், ’விஷ்ணு சகஸ்ரநாமம்” கோட் வேர்ட் சொல்லாமல் ரங்கநாதன் கணேஷ் சார். மனுஷ்யர் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார். ஐந்து வார்த்தை பேசினால் ஐந்து நிமிஷம் சிரிப்போம். பத்து வார்த்தை பேசினால் பத்து மணி நேரம் சிரிக்கலாம் என்று எக்ஸ்பொனென்ஷியல் நகைச்சுவையாகப் பேசி தோரணம் கட்டுகிறார். பல் டாக்டரிடம் பல் காட்டாதவர்கள் கூட இவரிடம் காட்டியே ஆகவேண்டும். அவ்ளோ சிரிப்பு மூட்டுகிறார்.
வீகேயெஸ் பரோபகாரி. எங்களது எந்த நிகழ்ச்சிக்கும் ஆஸ்தான ஃபோட்டோகிராஃபர். கேமிராவை மெஷின் கன்னாகப் பாவித்துச் சுற்றிச் சுற்றி சுட்டுத்தள்ளினார். “மொத்தம் எண்ணூறு ஃபோட்டோ...” என்று சொன்னார். மெமரி கார்ட் வெடித்திருக்கவேண்டும். ஹரிகிச்சு பவர்பாயிண்ட் இன்ச்சார்ஜ். கோணலும் மாணலுமாக வந்ததையெல்லாம் தட்டி நிமிர்த்தி நேராக்கித் தெரியவைத்த டெக்கி.
ஜிப்பாவில் கடைசியாக வந்த ரங்கரத்னம் கோபுவிற்கு நமஸ்காரம் சொல்லி விடைபெற்ற போது ஆர்ஜி சார், ரேவதி வெங்கட்டோடு ராமகிருஷ்ணன் கிருஷ்ணமூர்த்தியையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். ரொம்ப நேரம் ரீவைண்டில் நிகழ்ச்சி சுற்றி சுற்றி ரிப்பீட் மோடில் விளையாடியது. எப்போது தூங்கினேன்?
காலையில் எழுந்து கண் விழித்த போது படுக்கையறைச் சுவரில் விசி அனாயாசமாகத் தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்தார். எழுந்து நடந்த போது கதவில் அனன்யா, வல்லபா, ஆர்வி, ஹரீஷ் நடித்துக்கொண்டிருந்தார்கள். “செந்தமிழ் நாடெனும் போதினிலே...” காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க பல் துலக்கினேன். ”ஓம்.. சக்தி..ஓம்... சக்தி ..ஓம்..” அசரீரியாய்க் கேட்க யோகா செய்தேன். பின்னர்.... பின்னர்.. இதோ இப்போது இந்த கடைசிவரியை தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அந்த நிகழ்ச்சி பார்க்கும் இடமெல்லாம் வந்து வந்து போகிறது. மொத்தத்தில் இந்த ஞானரதம் ஒரு ஞானரசம்! (அப்பாடா! டைட்டிலைக் கொண்டு வந்தாச்சு)
வாழ்க! வாழ்க!!
படங்கள் உதவி: அண்ணல் வீகேயெஸ்!
பின் குறிப்பு: தேவராட்டம் பற்றிய டெக்கினிகல் சங்கதிகளையும் பாரதி பற்றி அவர்கள் பகிர்ந்துகொண்டதையும் பலரும் சல்லடையால் சலிக்க சலிக்க எழுதிவிட்டதால் என்னாலான இந்த குறுங் கமெண்ட்டரியோடு நிறுத்திக்கொண்டேன். நன்றி.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails