Monday, October 26, 2015

கணபதி முனி - பாகம் 36: இருதய குகையின் மத்தியில்.....

செகந்திராபாத் செல்லும் வழியில் கும்தா என்ற ஊரை வந்தடைந்தார். அங்கிருந்த வேதபாடசாலையில் கோகர்ணத்திலிருந்தும் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்தும் வித்யார்த்திகள் பயின்று வந்தார்கள். ஊரே ஊர்வலமாகத் திரண்டு வந்து கெட்டிமேளத்தோடு நாயனாவுக்கு பூர்ணகும்ப மரியாதை தந்தார்கள்.

“கற்ற பாடத்திற்கு தக்கவாறு அவற்றின் வழி நிற்பது மிகவும் அவசியம். அடிப்படையில் ஒழுக்கமே உயர்வு தரும். கற்பதற்கு வயதும் காலமும் கிடையாது. ஆகையால் முப்பொழுதும் பயில்வதையே தொழிலாகக் கொண்டால் வாழ்வில் பல உன்னத நிலைகளை அடையலாம்" வித்யார்த்திகள் வேதவிற்பன்னர்கள் பண்டித சிரோன்மணிகள் என்று பெருங்கூட்டம் அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
“மந்திர ஜெபமே நமது தாய்நாட்டையும் தாய் மதத்தையும் தீயவர்களிடமிருந்து காப்பாற்றும். அனைவரும் பகவான் ஸ்ரீரமணரின் அருளுரைகளைப் படியுங்கள். சுபிட்சம் தானாகத் தேடி வரும்...” இப்படி கணபதி சொற்பொழிவாற்றிக்கொண்டிருக்கும் போது இரு மாணவர்கள், தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்ரா மற்றும் சுந்தர ராவ் பண்டிட் ஆகியோர் தீட்டிய செவியோடு கவனித்துக்கொண்டிருந்தனர். இவ்விருவரும் பின்னாளில் நாயனாவின் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கு வகித்தார்கள்.
செகந்திராபாத். ஸ்ரீரமணருக்கு அங்கு எண்ணற்ற பக்தர்கள் இருந்தார்கள். அவர்களில் பலர் உத்யோகத்தில் பெரும்பதவி வகிப்பவர்கள். நாயனாவுக்கு இது போன்ற அறிவார்ந்த சபையில் பேச மிகவும் ஊக்கமாயிருந்தது. கொண்டாட்டமான மனோநிலையில் அவகாசம் வாய்க்கும்போதெல்லாம், கூடிய மற்றும் கூட்டிய சந்திப்புகளிலெல்லாம் பகவான் ரமணரைப் பற்றி ஓயாமல் உபன்யாசம் செய்தார். பலருக்கு மந்திர ஜெப உபாசனை செய்து நற்கதியளிக்கும் மார்க்கத்திற்கு அழைத்து வந்தார்.
ஒரு சிலருக்கு காவ்யகண்டரின் அஷ்டாவதானம் பார்க்க ஆசையாயிருந்தது. தன்னுடைய இலக்கிய மற்றும் வேறு பல வித்தைகளை காண்பிப்பது நேரவிரயம் என்று முடிவு செய்திருந்தாலும் கேட்டவர்களைத் திருப்திப்படுத்த மாதிரிக்காக இரண்டு அவதானங்கள் செய்து காண்பித்தார் நாயனா. அவர் வெறும் மொழிக்காக இலக்கியவாதியல்ல, இலக்கியம் என்பது கடவுளின் கருணையைக் காட்டுவதற்கும் அந்தப் பரம்பொருளின் இறைப் பெருமையை பாடுவதற்கும் என்ற குறிக்கோள் கொண்ட தெய்வக் கவிஞர்.
*
திருப்பதி வேங்கடகவிகள் என்ற இரட்டையர்கள் ஆந்திராவிலிருந்து இலக்கியப் புரட்சி செய்துகொண்டிருந்தார்கள். ஒருவர் திருப்பதி சாஸ்திரி மற்றொருவர் வேங்கட சாஸ்திரி. அவர்கள் செகந்திராபாத்தில் சதாவதனம் செய்தார்கள். அதைக் காணத் திரண்ட பிரம்மாண்டமான கூட்டத்தில் காவ்யகண்டரும் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார். எங்கு அவதானம் நடந்தாலும் கூட்டம் நடுநடுங்கும்படி இருவரும் நிறைய சவால் விடுவார்கள். மெத்த படித்தவர்கள் கூட எழுந்திருக்க அச்சப்பட்டு கம்மென்று சென்றுவிடுவார்கள்.
வேங்கடகவிகள் வெற்றி...வெற்றியென்று கொக்கரிப்பார்கள். இம்முறையும் “எங்களைப் போல் எந்தத் தலைப்பிலும் கேட்டவுன் பாடல் வடிக்கும் திறன் கொண்டவர்கள் யாரேனும் இந்தக் கூட்டத்தில் உண்டா?” என்று உறுமினார்கள். அந்த மண்டபமே நிசப்தமானது. “அப்படி யாரேனும் வெற்றிபெற்றால் நாங்கள் எங்கள் மீசையை மழித்துவிட்டு வெற்றிபெற்றவர் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறோம்.” உறுமல் அதிகமானது.
"ஆசுகவிகள்... கூட்டத்தில்... யாராவது....” ஏலம் விட ஆரம்பித்தார்கள். நல்ல ஆகிருதியான ஒருவர் எழுந்திருந்தார். “ஓ.. நீர் கவிபாடப் போகிறீரா? பேஷ்...” என்று எக்காளமாகக் கேட்டனர். அவர் ஒன்றும் பேசாமல் விடுவிடுவென்று மேடை நோக்கிச் சென்றார். தலையசைத்து சமிக்ஞையால் இருவரையும் கூப்பிட்டார். வேங்கடகவி சிரசைச் சாய்த்தார். இங்கிருந்து சென்றவர் ஏதோ சில வார்த்தைகள் அவர் காதில் கூறினார். அடுத்த நொடி வேங்கடகவிகள் இருவரும் மேடையை விட்டிறங்கி அந்த நெடிய மனிதரின் பின்னால் பார்வையாளர்களுக்குள் சென்றனர்.
அவர் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து உட்கார்ந்திருந்த காவ்யகண்டரிடம் போய் நின்றார். அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். சிரம்தாழ்த்தி இருவரும் அப்படி சவால் விட்டதற்காக மன்னிப்பு கோரினர். நாயனா சிரித்துக்கொண்டே “நன்றாக செய்கிறீர்கள். வாழ்த்துகள். நிகழ்ச்சியை தொடருங்கள்..எனது ஆசீர்வாதங்கள்..” என்று மனப்பூர்வமாக ஆசி வழங்கினார்.
*
நாயனாவிற்கு எப்போதுமே சித்து விளையாட்டுகளில் இஷ்டமில்லை. சித்துகள் காண்பித்து மக்களை பித்தாக்க அவர் விரும்பவில்லை. சித்துவிளையாட்டுகள் காண்பிக்க ஆரம்பித்தால் அவரைச் சுற்றி எப்போதும் மக்கள் மொய்ப்பார்கள். அவரது சிஷ்யர்களுக்கும் இது தெரியும். ஆனால் எம்.பி. சுப்ரமண்ய ஐயரின் இரு புதல்விகளும் அம்மைநோயில் அவதியுற்ற போதும், ரெங்கசாமி ஐயங்காரின் மகன் தீவிர டைஃபாய்டில் படுக்கையில் கிடந்த போதும் நாயனாவின் அருள் வேண்டி நின்றார்கள். அவரது ஆசீர்வாதத்தால் அவர்கள் உயிர் பிழைத்தார்கள்.
எங்கிருந்தாலும் பகவான் ஸ்ரீரமணரின் பொன்மொழிகளை காண்போரிடம் உபதேசித்து வந்தார் வாசிஷ்ட கணபதி முனி. ரமணர் நாயனாவை அவரது ஜீவனின் குரலாக பாவித்தார். இந்த அருளும் நிறைவும் இருவரிடமும் இருந்தது. உடலால் அவர்கள் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் இத்தகைய பந்தங்களினால் எப்போதும் சேர்ந்தே இருந்தார்கள்.
நாயனாவும் விசாலாக்ஷியும் 1913ம் வருடத்தின் இறுதியில் பகவான் ஸ்ரீரமணரைத் திரும்பவும் தரிசித்தார்கள். பதபந்தேந்த்ஸ்வரம், கோகர்ணம் மற்றும் சன்னபேலாவில் நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சொன்னார் நாயனா. சுவாரஸ்யமான விஷயங்களை அதீத ஆர்வத்துடன் கேட்டு இரசித்தார் ரமணர். ”கண்ட சதக”த்தை திரும்ப நாயனா சொல்லும் போது அதை தன் கைப்பட எழுதி வைத்துக்கொண்டார் பகவான் ஸ்ரீரமணர்.
கணபதி முனி தன்னிடம் புலம்பிய பிறத்தியாரின் பிரச்சனைகளை ரமணர் முன் வைத்த போது அவர் அருளிய உபதேசங்களை ரமண கீதையின் முதல் அத்யாயத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
“வேதங்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதோ சத்திய அசத்தியங்களை பகுப்பாய்ந்து பார்க்கும் திறனோ நம்மை பூரணத்தும் அடையவிடாது. ஆன்மிக நெறியே சம்பூர்ணமான நிலைக்கு வழிவகுக்கும். உள்ளுக்குள் மூழ்கி “நான் யார்?” என்று தேடுவதே பெரிய உபாசனை. அதுவே நம் ஆன்மாவுக்கு திருப்தியளிக்கும். அதில் லயித்துவிடுபவனுக்குப் பெயர்தான் ஞானி! இந்த முறையே ஆத்மவிசாரத்திற்கான விதை. இதுவே நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் குறிக்கோள்களுக்கும் வெற்றி தரும் அடித்தளம். இதுவே பற்றற்ற நிலைக்கு ஒருவனை இட்டுச்செல்லும்”
எவ்வளவு சத்தியமான வரிகள்!!
*
விசாலாக்ஷிக்கு திருத்தல யாத்திரை செல்வதில் மிகவும் இஷ்டம். இம்முறை நாயனாவுடன் வடக்கே புவனேஷ்வரம் சென்றார். அங்கே நான்கு மாதங்கள் தவமியிற்றினார். ஆனால் நாயனா போல தனக்கு அற்புத அனுபவங்கள் ஏதும் ஏற்படவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.
“அம்மா விசாலாக்ஷி.... தவமியற்றுவதில் ஒருவருக்கு நடந்தது இன்னொருவருக்கு நடப்பதில்லை...” என்ற நாயனாவை திருப்தியில்லாமல் கேள்வியோடு பார்த்தார் விசாலாக்ஷி.
“உன்னுடைய தவம் நம்முடைய சிஷ்யர்களுக்கு ஆன்மிக பலம் அளித்தது. அதுவே புவனேஸ்வரியம்மனின் அருட் கடாக்ஷம். அடுப்பு மூட்டி நீ சமையல் பாத்திரங்களைத் தொட்ட மாத்திரத்தில் ருசியான பதார்த்தங்கள் சாப்பிடக் கிடைப்பதே லோகமாதாவின் அருட் செயல்தான்.” என்று நாயனா ஆறுதல் அளித்தார்.
மந்தேசா ராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க அங்கே ஒரு வருஷம் தங்கி தம்பதியாய் தவமியற்றினார்கள். வடக்கு நோக்கி யாத்திரை செல்வதை மறந்து தவக்கடலில் முங்கித் திளைத்தார்கள்.
ஸ்ரீரமணரின் பக்தர்களில் ஒருவர் ராமனாத பிரம்மச்சாரி. 1915ம் வருடத்தில் ஒரு நாள் காலையில் மந்தேசா வந்தார். நாயனா நித்யானுஷ்டங்களில் மூழ்கியிருந்தார். அவைகளை முடித்துவிட்டு வந்ததும்.....
“ரமணரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்லலாம் என்று விரும்புகிறேன்”
“ம்... ரமணரைப் பற்றிய எதுவும் எனக்கு பிரியமான விஷயம்.... மனசுக்கு இன்பமளிக்கும்...” என்று நிமிர்ந்தார் கணபதி.
“ஜகதீச சாஸ்திரி ஸ்ரீரமணரின் உபதேசங்களை வைத்து ஸ்லோகம் இயற்ற ஆரம்பித்தார். “ஹ்ரித்ய குஹர மத்யே” என்பது ஆரம்ப வரிகள்...”
“ஆஹா.. ’இருதய குகையின் மத்தியில்’ அற்புதமான ஆரம்பம்... அப்புறம்” மீதத்தைத் தெரிந்து கொள்ளத் துடித்தார் கணபதி.
“ஸ்ரீரமணரின் எதிரில் அமர்ந்திருந்த ஜகதீச சாஸ்திரியினால் அதற்கு மேல் தொடர முடியவில்லை. திணறினார். வார்த்தைகள் வரவில்லை.. சிறிது நேரம் பார்த்த ரமணர் அவரிடமிருந்த பேப்பரையும் பென்சிலையும் வாங்கிக்கொண்டார். சடசடவென்று எழுத ஆரம்பித்தார்...”
“அந்த ஸ்லோகம் என்ன?”
ஹ்ரித்ய குஹர மத்யே கேவலம் ப்ரஹ்மமாத்ரம் 
ஹ்யஹமஹமிதி ஸாக்ஷாத் ஆத்மரூபேணபாதி 
ஹ்ருதி விஸ மனஸாவம் சின்வதா மஜ்ஜதா வா 
பாவன சலன ரோதா ஆத்மநிஷ்டோபவ த்வம்

என்று எழுதி முடித்தார். ஜகதீச சாஸ்திரியின் கண்களில் ஜலம் கட்டிக்கொண்டு நின்றது. அப்படியே கண்ணும் கண்ணீருமாக எழுந்து பகவானை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்”
[அர்த்தம்: ஹ்ருதயத்தின் உள்ளேயிருக்கும் குகையில் பிரம்மம் ஆத்மாவாக ஒளிர்கிறது. ”நான் யார்... நான் யார்.. என்று ஹ்ருதயத்தின் உள்ளேயும் மனசு அதன் அடி ஆழத்தில் புகுந்து தேடத் தேடி நுழைந்தும்... பிராணனை அடக்கும் வித்தையறிந்தும் ஒருவர் ஆத்மாவுக்குள் வசிக்கலாம்]
இந்த ஸ்லோகம் நாயனாவை ஆனந்தத்தின் எல்லைக்குக் கொண்டு சென்றது. ஆன்மிகத்தின் வழியாக முக்தி அடைவதின் சூட்சுமத்தை மூன்று முக்கிய மார்க்கங்களாகக் காட்டியிருக்கிறார் பகவான். இதை தனது ரமண கீதையின் இரண்டாவது அத்தியாயக் கருவாக எடுத்துக்கொண்டார் நாயனா...
நாயனாவும் அவரது தர்மபத்னி விசாலாக்ஷியும் வெங்கட்ராமன் என்பவருடன் வடதிசை நோக்கி யாத்திரைக்கு கிளம்பினார்கள். காசி, கயா, அயோத்தியா, பிரயாகை என்று எல்லா இடமும் சென்று விட்டு கடைசியில் பிருந்தாவனத்தை வந்தடைந்தார்கள். அங்கு பாரத தேசத்தின் தலைசிறந்த பண்டிதர்களின் மாநாடு ஒன்று நடந்து கொண்டிருந்தது... 
அதில்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails