Thursday, October 15, 2015

கணபதி முனி - பாகம் 32: சிஷ்யர் ஹம்ஃப்ரேஸ்

பகவான் ஸ்ரீரமணருடன் கிரிவலம் செல்வது ரம்மியமான அனுபவம். விருபாக்ஷி குகையிலிருந்து ரமணர் இறங்குவதற்கு முன்னர் அவருடைய பக்தர்கள் மலையிலிருந்து விடுவிடுவென்று இறங்கி கிரி பிரதக்ஷிணத்திற்குத் தயாராய் இருந்தனர். அவர் நேரே மாமரக் குகைக்குச் சென்றார். உள்ளே கணபதியும் விசாலாக்ஷியும் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். குகைக்கு வெளியே இருந்த ஒரு கற்பாறையில் ரமணர் அமைதியின் திருவுருவாக சிவனேன்னு அமர்ந்திருந்தார். கணபதி குகையிலிருந்து வந்தவுடன்

"நாயனா...” என்று பரிவோடு அழைத்தார் ரமணர்.
“ஸ்வாமி....”. பவ்யமாகக் குனிந்தார்.
“உனது தலைக்கு பின்னே நட்சத்திர மண்டலங்கள் நகர்வதைப் பார்க்கிறேனப்பா...”
நாயனா பரவசமடைந்தார். தனது ஞானகுருவாகிய ரமணர் முன்னால் அதர்வண வேதத்திலிருந்து ஸ்கந்த சூக்தத்தை எடுத்துப் பாடினார். அவரை நான் ஸ்கந்தனாகப் பார்க்கிறேன் என்று ஆனந்தப்பட்டார். பக்தியால் சிறிதுநேரம் கட்டுண்ட பிறகு அனைவரும் கிரிவலம் புறப்பட்டார்கள்.
ரமணரோடு கிரிவலம் வருவது பக்தர்கள் செய்த புனர்ஜென்ம புண்ணியம். ஒவ்வொருவரும் தங்களது ஆன்மிக புரிதலுக்கு ஏற்ப இதனால் பயனடைவார்கள. கிரிவலப்பாதையெங்கும் இருக்கும் கோயில்களும் புனித இடங்களையும் ரமணரோடு கடப்பது வாழ்க்கையின் வரமாக பக்தர்கள் எண்ணுவர். ஒவ்வொரு இடத்திலும் நின்று அதன் சான்னித்தியத்தை உணர வைப்பார்.
ஒரு மாதம் கடந்தது. நாயனாவும் விசாலாக்ஷியும் சென்னை சென்றார்கள். அப்புவும் கல்யாணராமனும் பின்னர் சென்னை சென்று கணபதி தம்பதியரோடு சேர்ந்துகொண்டார்கள். கல்யாணராமனுக்கு வங்கி உத்யோகம் கிடைத்தது. அப்பு வாழ்நாள் முழுவதும் நாயனாவுக்கு சிஷ்ருஷை செய்து அவர் பக்தனாகவே உயிர் துறக்க ஆசைப்பட்டார்.
ஜெகத்தோரின் க்ஷேமத்திற்காக இறைவன் இங்கே திருஅவதாரம் செய்வான் என்று அக்காலத்தில் பிரம்மஞானிகள் பூரணமாக நம்பினார்கள். டாக்டர் அன்னி பெஸண்ட் அம்மையார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியே அப்படிப்பட்ட இறைவனின் அவதாரம்தான் என்று உறுதியாகச் சொன்னார். 1911ம் வருடம் ஜனவரி மாதம் ஃப்ராங்க் ஹம்ஃப்ரேஸ் என்ற ஆங்கிலேயர் மும்பை வந்திறங்கினார். அவர் ஒரு ஞானி. தனது சூட்சும சரீரத்தால் லோகமெங்கும் சஞ்சரித்து ஞானக்குருமார்களை எளிதில் அடைபவர். அவர் இந்தியாவுக்கு காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பொறுப்பேற்க வந்தார். வேலூரில் பயிற்சி. ஆனால் மும்பையில் கால் வைத்ததிலிருந்து அவருக்கு தாங்க முடியாத ஜுரம் அடித்தது.
ஜுரத்தின் உக்கிரம் அதிகரிக்கவே அவரைப் பக்கத்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு படுக்கையிலிருந்தவாரே அவர் பணியில் சேருமிடமான வேலூருக்கு சூட்சுமமாகச் சென்று சர்வபள்ளி நரசிம்மைய்யாவைப் பார்த்தார். அப்போது காவலர் பயிற்சி மையத்தில் முன்ஷியும் அவருடன் இருந்தார். நரசிம்மையா கணபதியின் பிரதான சிஷ்யர். மார்ச் மாதக் கடைசியில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஹம்ஃப்ரேஸ் வேலூருக்கு வந்திறங்கினார்.
அன்றிரவே ஹம்ஃப்ரேஸ் கனவில் கணபதி பிரசன்னமானார். அவருடைய தேகபலவீனங்கள் சொற்ப நேரத்தில் விலகின. மலை ஏறும் வகையில் தெம்பானார். கணபதியே இனி தனது குரு என்று மானசீக சரணாகதியடைந்தார். அவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலில் துடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவிதமாக மீண்டும் ஜுரத்தில் வீழ்ந்தார் ஹம்ஃப்ரேஸ். இம்முறையும் சொப்பனம் கண்டார். அதில் ஆடையில்லாத மேனியில் கௌபீனம் மட்டுமே கட்டியிருக்கும் ஒருவர் உலகமே அதிசயிக்கும் வண்ணம் கடும் பிணிகளைப் போக்குவதைப் புகை போலப் பார்த்தார்.
ஒருநாள் ஹம்ஃப்ரேஸ் தன் கனவில் கண்ட அருளாளர்கள் இருவரது புகைப்படத்தையும் வேலூரில் ஒரு ஊர்வலத்தில் கண்டார். அந்த ஊர்வலத்திற்கு தலைமை வகித்துச் சென்றவர் நரசிம்மையா. ஓடிச்சென்று தன்னை இந்தக் குருமார்களிடம் அழைத்துச்செல்லுமாறு அவரை வேண்டிக்கொண்டார் ஹம்ஃப்ரேஸ்,
நரசிம்மைய்யாவும் ஹம்ஃப்ரேஸும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நாயனா அருணாசலம் செல்வதற்கு வேலூர் ரயில் நிலையம் அடைந்திருந்தார். நாயனாவை அங்கே பிடித்துவிட வேண்டும் என்று இருவரும் விரைந்தனர். ரயில் தாமதம். தெய்வ சங்கல்பம். நாயனா ப்ளாட்ஃபாரத்தின் பெஞ்சில் ஞானசூரியனாக அமர்ந்திருந்தார். நரசிம்மய்யா ஹம்ஃப்ரேஸை அறிமுகப்படுத்தினார். ஹம்ஃப்ரேஸ் தலைதாழ்த்தி கணபதிக்கு வணக்கம் சொன்னார். கணபதி ஆசீர்வாதம் செய்து “கூடிய விரைவில் உங்களை பகவான் ஸ்ரீரமணரிடமும் அழைத்துச் செல்கிறேன்” என்று வாக்களித்தார். தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை தனது வாழ்நாளின் அதிர்ஷ்டமாக எண்ணினார் ஹம்ஃப்ரேஸ்.
பிரம்மஞானிகளின் மாநாடு ஒன்று நவம்பர் 1911 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்றது. ஹம்ஃப்ரேஸ் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார். நரசிம்மைய்யாவும் அங்கே இருந்தார். நரசிம்மய்யாவின் உதவியில் ஹம்ஃப்ரேஸ் நாயனாவைச் சந்தித்தார். நாயனாவும் தான் வாக்களித்தபடியே ஸ்ரீரமணரிடம் அழைத்துச் சென்றார்.
ஸ்ரீரமணரைப் பார்த்த ஹம்ஃப்ரேஸ் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் சொப்பனத்தில் பார்த்த கௌபீன உடையணிந்த அதே மனிதர் அங்கே ஞானஸ்வரூபமாய் அமர்ந்திருந்தார். அந்த இடத்தின் புனிதத்தை சொல்ல வார்த்தைகளில்லை. சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். பின்னர் அவர் எதிரே யோக நிலையில் அமர்ந்தார். அப்போது நான் நீ என்பதிலிருந்து விடுபட்டு அனைத்து லௌகீக விசாரங்களையும் மறந்து ஆகாயத்தில் பஞ்சாய்ப் பறந்தார் ஹம்ஃப்ரேஸ்.
சில மணிகள் கடந்து மெதுவாக ஸ்ரீரமணரிடம் பேச்சுக் கொடுத்தார் ஹம்ஃப்ரேஸ்.
“என்னால் இந்த உலகிற்குப் பயனேதும் உண்டா?”
பகவான் அவரையே தீர்க்கமாகப் பார்த்தார். வாய் திறக்காமல் கட்டுண்டு கிடந்தார் ஹம்ஃப்ரேஸ். பின்னர் மெதுவாக...
“உனக்கு நீ பயன்படுகிறாயா? உனக்கு நீ பயனாக இரு. அப்படி இருப்பதினால் உலகத்திற்கு பயன்படுவாய்”
ஹம்ஃப்ரேஸுக்கு மெல்லப் புரிந்தது. ஆமாம். அவரும் இவ்வுலகில் தானே இருக்கிறார். ஆகையால் தனக்குத் தானே பயனுறும் வகையில் இருப்பது உலகிற்கு பயனளிப்பது தானே!
ஹம்ஃப்ரேஸ் அந்தக் கேள்வியோடு நிறுத்தவில்லை. அடுத்ததாக ஒரு பெரிய கேள்வி கேட்டார்.
“ஸ்ரீகிருஷ்ணர்... இயேசு போன்ற கடவுளர்கள் செய்த அதிசயங்களைப் போன்று நானும் இப்பூவுலகில் நிகழ்த்திக்காட்டுவேனா?”
ரமணர் வாய்விட்டுச் சிரித்தார். ஹம்ஃப்ரேஸும் சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களும் ஸ்ரீரமணர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வமுடன் காத்திருந்தார்கள். சிறிய இடைவெளிக்குப் பின்னர்....
“அவர்கள் அத்தகைய அதிசயங்களைப் பண்ணும் போது தான் பெரிய அதிசயங்களைச் செய்கிறோம் என்று நினைத்தார்களா?”
ரமணரின் எதிர் கேள்வி ஹம்ஃப்ரேஸை வாயடைக்கச் செய்தது. குருவின் முன் அமைதியாக அமர்ந்திருந்தார். ஹம்ஃப்ரேஸுக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது. நமது கடமையைச் செய்யவேண்டும். சர்வேஸ்வரன் அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து உலகிற்குப் பல அதிசயங்கள் செய்யப் பண்ணுவான்.
“உன்னுள்ளே இருக்கும் தெய்வீகத்தை உணர். அதை இடைவிடாமல் பயிற்சி செய். நல்லவைகளும் நீ நினைப்பதும் நிச்சயமாய் நடக்கும்” என்று போதித்தார் ஸ்ரீரமணர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் ஸ்ரீரமணரே பிரம்மஞானி, சத்யஸ்வரூபன் என்று ஊராரிடம் சிலாகித்தார் ஹம்ஃப்ரேஸ். நினைத்த போதெல்லாம் திருவண்ணாமலைக்கு விஜயம் செய்தார். “நான் யார்?” என்கிற ஆத்மவிசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். கடைசியில் ஒரு பாதிரியாராகி அவர்களது குருமார்களின் போதனைகளைப் பரப்பினார். இந்த ஹம்ஃப்ரேஸே ஸ்ரீரமணரின் முதல் மேலைநாட்டு சிஷ்யர்.
கர்னல் ஆல்காட் என்று அறியப்பட்ட பத்ரகா எப்படி மேலைநாட்டவரிடம் தெய்வ பக்தியைப் பரப்பினார் என்று ரமணர் அருகிலேயே நின்று ஹம்ஃப்ரேஸ் அத்தியாயத்தைப் பார்த்த நாயனா இப்போது புரிந்துகொண்டார். ”நான் யார்?” என்ற ஆத்மவித்தையை மேலை நாட்டவர்களுக்கு தெரிய வைத்து அவர்களை நல்வழிப்படுத்தியவர் பத்ரகா.
முக்திநிலை அடைய குருமார்களை அடைந்து வாழ்வின் சூட்சுமத்தையும் நான் யார் என்கிற ஆத்மவித்தையையும் அறிந்து கொண்டு அதை தன் வழியில் பரப்பிய ஹம்ஃப்ரேஸும் ஒரு ஞானியே!
*
மே 1910லிருந்து ஜனவரி 1912வரை நாயனா சென்னையில் ஜாகையிருந்தார். அவருக்கு நகர வாழ்க்கையில் துளிக்கூட சுவாரஸ்யமில்லை. சிலருக்கு ஏதாவது நோய் என்றால் உடனே பலர் உடல்நலத்தில் அளவுக்கதிகமான சிரத்தை எடுத்துக்கொண்டு ஊரையே பயமுறுத்துகிறார்கள். ஓயாத சத்தம். நவீன வாழ்வுமுறையில் சிக்கியவர்கள் இயற்கைக்கு எதிராக வாழ்ந்தார்கள். 
பஞ்சாபகேச சாஸ்திரி, ராமஸ்வாமி ஐயர், சங்கர சாஸ்திரி, கல்யாணராமா மற்றும் சுதன்வா போன்றவர்கள் தங்களது குருவிற்கு வேண்டிய சௌகர்யங்களைச் செய்து கொடுத்து அவரை திருப்தியாக வைத்துக்கொண்டாலும் நாயனாவிற்கு தான் இவ்வூரில் ஒரு வேற்றுக்கிரவாசிதான் என்ற எண்ணம் இருந்தது.

நாயனா அடிக்கடி திருவண்ணாமலை சென்று வந்தார். அப்படிச் செல்வது அவரது மனசுக்கு சாந்தியளித்தது. சென்னையின் தள்ளுமுள்ளு வாழ்க்கையிலிருந்து ஒரு சுதந்திரம் கிடைத்தது.
அவ்வேளையில்...

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails