வேலூர் சிஷ்யர்களுக்கு அடித்தது பக்தி யோகம். ரேணுகாதேவியின் அருளால் நவநவ மந்திரோபதேசங்களை அவர்களுக்கு உபதேசித்து அருளினார் கணபதி. இந்தப் புதிய தீட்சைகளின் மந்திராமூர்த்தி தேவர் தலைவன் இந்திரன். ஆகையால் உபதேசம் பெற்ற சிலர் தங்களது குழுவை “:இந்திர சங்கம்” என்று அழைப்பது உகந்ததாகவும் உவப்பாகவும் இருக்கும் என்று எண்ணினர்.
இதற்கிடையில், சித்தூர் இன்ஸ்பெக்டர் சின்னஸ்வாமிக்கு நாயனா பொதுஜனங்களிடம் பிரபலமடைவது எரிச்சலாக இருந்தது. சித்தூரிலிருக்கும் அவரது அதிகாரபலம் வேலூரில் செல்லுபடியாகாது என்று தெரிந்து “வேலூருக்கு மாற்றலாகிச் சென்று காவ்யகண்டரை ஒரு கை பார்க்கிறேன்” என்று எதிரில் பார்ப்பவர்களிடமெல்லாம் கறுவி சவால் விட்டார் சின்னஸ்வாமி.
சின்னஸ்வாமிக்கு வேலூருக்கு பணிமாற்றமும் வந்தது. உமாமகேஸ்வரரின் மனைவி சுந்தரி கணபதியின் தர்மபத்னி விசாலாக்ஷியிடம் ஓடிப்போய் “நாயனாவை இங்கிருந்து எங்கயாவது கண்காணாத இடத்துக்குப் போகச் சொல்லுங்கோ... இல்லேன்னா போலீஸ்ட்ட மாட்டிப்பார்...”. மன்றாடினார். எல்லோரும் கலவரமடைந்தார்கள். நாயனாவும் தன் பங்குக்கு ஒரு முறை சின்னஸ்வாமியை சந்தித்து சமரசத்தில் ஈடுபட்டார். நாயனாவின் அபூர்வ தெய்வீகசக்திகள் மீது அவரது சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் அசாத்திய நம்பிக்கை இருந்தாலும் ஏதோ இனம் புரியாத ஒரு பயம் அவர்களைக் கவ்வியது. அவர்மீது பக்தியும் பாசமும் வைத்திருக்கும் பெண்டுகள் சோகத்தில் கண்ணீர் சிந்தினர்.
அப்போது அவர்களின் மனம் குளிர கணபதி துர்க்கையம்மனைத் துதித்து ஒரு ஸ்லோகம் இயற்றினார்.
வைரிதல நிர்தலன கட்கவரபாணே
வாஸஸி பாதோர்ததஸன வாஸஸி ச ஸோனே
நேத்ரமிஷ பாவக விஷேஷித லலாடே
பாபம் அகிலம் ஜஹி ம்ருகாதிபதி கோடே
அர்த்தம்: கையில் நீண்ட வாள், சிவப்பு வஸ்திரம், சிவந்த பாதம், சிவப்பான அதரங்கள் - மூன்றாவது கண்ணாக நெற்றியில் தீச்சுடருடன் சிம்மவாஹினியாக காட்சியளிக்கும் தாயே! நீ எனது பாவங்களைக் களைந்து அருள்புரிவாயாக!!
இந்த ஸ்லோகம் பின்னர் “உமாசகஸ்ரம்” நூலில் சேர்க்கப்பட்டது.
இந்தப் பாராயணத்திற்குப் பிறகு அம்மனின் பரிபூர்ண அருளால் அங்கு ஒருவிதமான சாந்தி ஏற்பட்டது. சிஷ்யர்கள் சகஜநிலைக்கு திரும்ப யத்தனித்தனர்.
இருந்தாலும் தன்னுடைய அத்யந்தர்களின் தொடர் வற்புறுத்தலால் வேலூரிலிருந்து சிலகாலம் வெளியே தங்க ஒத்துக்கொண்டார். அன்றிரவே ஹம்பிக்கு ரயிலேறினார். ஏதோ ஒரு உந்துதலில் குண்டக்கல் நிலையத்தில் இன்னொரு ரயிலுக்கு மாறினார். அவரது இருக்கைக்குப் பக்கத்தில் தாடியும் காவியுமாக ஒரு சாதுவும் அதில் பிராயணம் செய்துகொண்டிருந்தார். சிறிது நேர சம்பிரதாய சம்பாஷனைக்குப் பிறகு
“கணபதி.. ஹோஸ்பேட் ரயில்வே ஸ்டேஷன் எதிரேயிருக்கும் சத்திரத்தில் இன்றிரவு தங்கி.. பின்னர் ஜட்கா வண்டியில் ஹம்பிக்கு போகலாமே” என்று விசித்திர ஆலோசனை சொன்னார். பின்னர் அந்த சாது எழுந்து வேறு பெட்டிக்குச் சென்று விட்டார்.
அகால வேளையில் ரயில் ஹோஸ்பெட்டை அடைந்தது. கணபதி அங்கே இறங்கிவிட தீர்மானம் செய்தார். ரயில் நிலையத்தில் நின்ற சில போலீஸார் சற்று முன்னர் கணபதியிடம் பேசிய சாதுவைப் பற்றி விசாரித்தனர். ஏதும் தெரியாதென சொல்லிவிட்டு அந்த சாது சொன்ன சத்திரத்தை நோக்கி நடந்தார் கணபதி. நடுநிசி தாண்டியிருந்தது. தெருவோர நாய்களைத் தவிர ஆளரவமற்ற வீதிகள். ”என்ன நடக்கிறது? ஏன் இங்கு இறங்கினோம்? எதற்காக இந்த பிரயாணம்? யாரந்த சாது?” என்கிற பல கேள்வி முடிச்சுகளில் சிக்கித் தீவிர சிந்தனையில் தூங்காமல் இருந்தார் கணபதி. இரவு மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.
சத்திரத்தின் கதவு படாரென்று திறந்தது. அந்த சாது சிரித்தமுகத்துடன் உள்ளே பிரவேசித்தார். நீண்ட நாட்கள் பழகிய நண்பர் போல கணபதியிடம் நெருங்கி உட்கார்ந்து சகஜமாகப் பேச ஆரம்பித்தார். கணபதியும் குழப்பமாகவே தனது உரையாடலைத் தொடர்ந்தார். அப்போது அங்கு தடாலடியாக நுழைந்த ஐந்தாறு போலீசார் இருவரையும் கட்டிப் பிடித்து கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் காவல் நிலைய பெஞ்சில் காவலில் வைக்கப்பட்டார்கள். மறுநாள் காலை அந்த நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வந்தார். காவ்யகண்டரை அங்கே பார்த்ததும் பதறினார். “இந்தக் கிரிமினலுடன் காவ்யகண்டரையும் ஏன் அரெஸ்ட் செய்தீர்கள்?” என்று காவலர்களைக் கடிந்துகொண்டார். கணபதிக்கு மரியாதை செய்து அனுப்பிவைத்தார்.
சில நாட்கள் ஹோஸ்பெட்டில் உருண்டன. ஒரு நாள் காலை உமாமகேஸ்வரர் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றார் கணபதி. ஓயாமல் தொல்லைக் கொடுத்த வேலூர் இன்ஸ்பெக்டர் சின்னஸ்வாமி திடுமென இறந்துவிட்டதாகவும் கணபதியை சந்தேகித்தற்காகவும் இடையூறுகள் விளைவித்ததற்காகவும் அவ்வூர் போலீஸார் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும் எழுதியிருந்தார். நாயனாவுக்கு இதெல்லாம் பெரிதல்ல. சாதாரணமாக எடுத்துக்கொண்டு அடுத்ததாக எங்கு தவமியற்றலாம் என்கிற சிந்தனையில் இறங்கினார்.
அவருடைய புதிய சிஷ்யரான ஹோஸ்பேட் இன்ஸ்பெக்டருடன் ஹம்பியை அடைந்தார். ஹம்பியில் தவமியற்ற அவருக்கு உத்தரவாகவில்லை. ஹம்பியைச் சுற்றியிருந்த வரலாற்று சிறப்புடைய பல இடங்களில் மனம்போன போக்கில் சுற்றினார். கடைசியில் மாவுலி என்கிற சிறிய கிராமத்தை வந்தடைந்தார். அதன் இயற்கை எழிலும் பறவைகளின் கீச்..கீச்சுகளும் கால்வாய் நீரின் சலசலப்புகளைத் தவிர வேறெந்த சப்தமும் இல்லாத அமைதியான சூழலும் கணபதியை அங்கேயே தங்கித் தவமியற்ற இழுத்தது.
ஊர்க்கோடியில் இருந்த ஒரு பழமையான சிறிய ஆலயத்தின் வாசல் மண்டபத்தில் தவத்தை ஆரம்பித்தார். அவரின் தேஜோன்மயமான உருவத்தைக் கண்டு அவர் சாதாரண ஆளில்லை என்று அறிந்துகொண்ட உள்ளூர் பொதுமக்கள் அவருக்கு தினமும் உணவளித்து ஆதரிக்க ஆர்வமாய் முண்டியடித்தனர். தினமும் இரவு ஏழெட்டு மணி வாக்கில் கிண்ணம் பசும் பால் மட்டுமே அருந்தி “நான் யார்?” என்கிற ஆத்மவிசாரத் தவத்தை இருபது நாட்களுக்கு செய்ய சங்கல்பம் செய்துகொண்டார். பதினெட்டாம்நாள் இரவு தன்னை மீறி அடித்துப்போட்டத் தூக்கத்தால் ஆத்மவிசாரம் பட்டென்று விடுபட்டது. ஆகையால் வைராக்கியமாக இன்னொரு இருபது நாள் தவத்தை உடனே தொடங்கினார்.
இம்முறை தவவேள்வியின் பதினைந்தாம் நாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அது....
0 comments:
Post a Comment