திருமாலின் தசாவதாரங்கள் பல கதை வடிவங்களாகப் பக்தஜனப் புழக்கத்தில் உள்ளன. பிரவசனக்காரர்களின் வித்வத்தும் பகவத்குணம் கேட்கக் குழுமியவர்களின் ஞானத்தையும் பொறுத்து இதிகாசக் கதைகளின் புரிதல் ஏற்படும். பத்து அவதாரங்களில் பரசுராமர் அவதாரம் பல்வேறாக பல ஊர் மேடைகளில் சொற்பொழிவாற்றப்பட்டது. கையில் பரசு என்னும் கோடாலியுடன் பல்லாயிரம் க்ஷத்திரியர்களை சம்ஹாரம் செய்தர். அதற்கும் மேலே தன்னைப் பெற்ற தாயின் சிரசைக் கொய்தவர் பரசுராமர். எப்படி? ஏன்? எதற்காக? என்பதை தெளிவாகச் சொல்லி தெய்வீகத் தன்மையை விளக்கியவர்கள் சொற்பம். முதல் நான்கு அவதராங்கள் திவ்ய புருஷர்கள் இல்லை. ஐந்தாவது வாமன ரூபம். ஆறாவதான பரசுராமரே முழு சொரூபத்துடன் கூடிய அவதாரம்.
நாயனா தசாதவதாரங்களின் பெருமையையும் அவற்றின் அவதார மாண்பான மனிதகுல ரக்ஷணத்தையும் பற்றித் தீவிரமாக ஆராய்ந்தார். அவர் தற்போது தஞ்சமடைந்திருக்கும் ரேணுகா தேவியோடு தெய்வத் தொடர்புடைய ஆறாவது அவதாரமாகிய பரசுராமர் பற்றி புஷ்டியான பல தகவல்கள் தந்தார். அவரது ஆராய்ச்சியின் முடிவில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.
ஜமதக்னி, வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரர் போன்ற மகரிஷிகள் லோக க்ஷேமார்த்தத்தைக் கருத்தில் கொண்டு விஷ்ணு இம்மண்ணில் அவதாரமெடுப்பதற்கு ஒத்தாசையாக இருந்தார்கள். பரசுராமரின் பராக்கிரமங்களோடு ஒட்டிப் பிறந்தது ராமாவதாரம். இதை வசிஷ்டர் ராமனுக்கு அருளியிருந்தார். பரசுராமரின் அஸ்திர வித்தையை விஸ்வாமித்ரர் ராமனுக்கு பயிற்றுவித்தார். ராமரே முழு தெய்வீக திவ்ய அவதாரமாக போற்றப்படுகிறார்.
யது குலத் தோன்றல் கார்த்தவீர்யன். பாரதத்தின் மேற்கு பிரதேசங்களான மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பிரதேசங்களை மாஹிஷ்மதியை தலைநகராக நிர்மாணித்து ஹேஹய மன்னர்கள் ராஜ்யபரிபாலனம் செய்து வந்தார்கள். கார்த்தவீர்யன் ராஜாதி ராஜன். அக்குல அரசர்களிடையே பலதாரமணம் வெகு சகஜம். சிற்றரசர்கள் பலர் அவர்களது நாட்டு இளவரசிகளை கார்த்தவீர்யனுக்கு மணம் முடித்துவைத்தார்கள். அதில் பிரஸனஜித் என்னும் மன்னனுடைய மூத்த மகள் சத்யாவை கார்த்தவீர்யனுக்கும் இரண்டாவது மகள் ரேணுகாவை ஜமதக்னிக்கு திருமணம் நடத்தி வைத்தார்கள்.
பரசுராமர் ஜமதக்னி ரேணுகா தம்பதியர்க்கு கடைசி பிள்ளையாகப் பிறந்தார். பரசுராமரின் பால்ய பருவங்களில் கார்த்தவீர்யன் தொடர் அழிச்சாட்டியங்கள் பல செய்து வந்தான். அநேக ரிஷிகள் தங்களது பத்னிகளுடன் வானபிரஸ்தம் சென்றுவிட்டார்கள்.
ஒரு நாள் கார்த்தவீர்யன் தன்னுடைய மகாராணிகளுடன், சத்யா உள்பட, வேட்டைக்குப் புறப்பட்டான். அடர்ந்த காட்டில் நீண்ட தூரம் பயணித்தார்கள். கையிலிருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டது. களைத்து குதிரைகளில் தொங்கிக்கொண்டு திரிந்தபோது ஜமதக்னியின் ஆசிரமம் கண்ணில்பட்டது. ஆஹா.... இது ரேணுகாவின் இல்லமாயிற்றே. அவளைப் பார்க்கவேண்டுமே என்ற ஆவல் சத்யாவின் மனதில் எழுந்தது.
”ரேணுகா” என்று சத்யா அந்த ஆசிரமத்தின் வாயிலில் கால் வைத்தபோது ஜமதக்னி முனிவர் உள்ளே இல்லை. எட்டிப் பார்த்த ரேணுகாவுக்கு அக்கா சத்தியாவைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி. ராஜாவுடன் வந்திருந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றாள். பசியோடு களைத்திருப்பதை தெரிந்துகொண்டு உணவுக்கு உபசரித்தாள்.
“ரேணுகா... இத்தனை பெரிய சைனியத்திற்கு உன்னால் எப்படி உணவளிக்க முடியும். பார்த்தும்மா... உன்னை வருத்திக்கொள்ளாதே..” என்றாள் சத்யா கரிசனத்துடன்.
“இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் அக்கா... இப்போது பாருங்களேன்...” என்று ஆசிரமத்திற்கு உள்ளே சென்றாள். ரேணுகா வெளியில் வரும்போது கையில் கமண்டலம் இருந்தது. பசியோடு இருந்த கார்த்தவீர்யன் சத்யாவோடு ரேணுகாவையும் சாப்பிடுவது போல ஆசிரமத்தின் வெளியேயிருந்த அரசமர நிழலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆசிரமத்தின் வெளியே இருந்த திண்ணையில் அந்தக் கமண்டல நீரைத் தெளித்தவுடன் பல பாத்திரங்களில் வகைவகையான ராஜ உணவு மணத்தோடு ஆவி பறக்க அங்கே தோன்றியது. கார்த்தவீர்யனுக்கு ரேணுகாவின் மீது சொல்லவொண்ணாக் காதல் கிளம்பியது. அவளது அழகும் அசராமல் பெரிய சேனைக்கே உணவு வழங்கிய பேராற்றலும் சேர்த்து அவளை உடனே அடைய வேண்டும் என்று விபரீத ஆசைப்பட்டான் கார்த்தவீர்யன்.
அனைவரும் உணவு உண்டு முடித்து கை அலம்பும் வேளையில் ஜமதக்னி ஆசிரமத்திற்குள் நுழைந்தார். சிரித்தார். வரவேற்றார். விஷயம் அறிந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு துர்சம்பவம் அங்கே நடந்தது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ”யே... இங்கே வா....” என்ற கூக்குரலுடன் பலவந்தமாக ரேணுகாவைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு கார்த்தவீர்யன் காட்டினுள் விரைந்து மறைந்து போனான். படைவீரர்கள் பலர் கார்த்தவீர்யனைப் பின் தொடர்ந்தார்கள். சத்தியா தவித்தாள். ரிஷிபுங்கவரின் கோபத்திற்கு ஆளாக நேருமோ என்று நடுங்கினாள்.
ஜமதக்னி பர்ணசாலையின் வாசலில் மௌனமாக அமர்ந்திருந்தார். உலகில் நடக்கும் எந்தவொரு சம்பவத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று உறுதியாக நம்பினார். வெளியே சென்றிருந்த அவரது புத்திரர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பினர். இறுதியாக வீட்டிற்குள் நுழைந்த இளைய மகன் பரசுராமரிடம் ஜமதக்னி நடந்தவைகளைச் சொல்லி அன்னையை மீட்டு வரச்சொன்னார். ஜமதக்னியின் தபோபலம் பரசுராமரின் நாடி நரம்பினுள் விறுவிறுவென்று ஏறியது. கோபத்தில் முகம் சிவக்க ஆவேசமாக வெளியேறினார்.
தனியொரு ஆளாக ஹேஹயர்களுடன் போரிட்டு அனைவரையும் கொன்று குவித்தார். வெற்றியோடு அன்னையை மீட்டுக் கொண்டு திரும்பினார். அவளது அழகும் ஆற்றலும்தானே கார்த்தவீர்யனுக்கு அவள் மேல் மோகம் கொள்ளச் செய்தது என்று ஜமதக்னி கணநேரம் சிந்தித்தார். கார்த்தவீர்யன் கவர்ந்து சென்று சிறிது நேரமே அவனுடன் ரேணுகா இருந்தாலும் அவளது பரிசுத்ததிற்கு பங்கம் வந்துவிட்டதாக எண்ணி பரசுராமரிடம் “உன் அன்னையின் தலையைக் கொய்துவிடு” என்று கட்டளையிட்டார்.
அடுத்த கணம் பரசுராமரின் கோடாலி அன்னையின் கழுத்தில் பச்சென்று விழுந்தது. தலை தரையில் உருண்டு சுவரோரம் ஒதுங்கியது. ஜமதக்னி அசைவற்று வீற்றிருந்தார். மயான அமைதி. எஞ்சிய பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார்கள். ஆனால் அப்போது அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. ரேணுகாவின் கற்பு அபாரமானது. பரசுராமரால் தலை கொய்யப்பட்டும் ரேணுகாவின் உயிர் பிரி்யவில்லை. தலைக்கு கீழ் உள்ள மேனி தரையில் விழாமல் அசைவுடன் நின்றது. அது ஜமதக்னியைப் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்நிகழ்ச்சியை யோகிகள் சித்தபுருஷர்கள் சுலபத்தில் புரிந்துகொள்வார்கள். கார்த்த்வீர்யன் என்கிற ராஜாதான் “அறியாமை”. அவன் “ரேணுகா” என்கிற அறிவுச்சுடர் வெளிச்சத்தைக் கவர்ந்து சென்றான். மற்றொரு ”அறிவு” வெளிச்சத்தை மீட்டு வந்து அதன் மூலத்தோடு சேர்த்தது. இத்தகைய தொடர்செயல்களால் கிரந்தி என்று கபாலத்தில் இருக்கும் முடிச்சானது வேரறுக்கப்பட்டு லோகசக்தியோடு இணைக்கப்பட்டது என்று அர்த்தம் செய்துகொள்ளவேண்டும்.
தனது பிதா ஜமதக்னி அர்த்தப்பூர்வமாக இதை தன் அன்னையைக் கொண்டு விளக்கியுள்ளார் என்று பரசுராமர் சந்தோஷப்பட்டார். சர்வாலங்காரபூஷணியான சின்னமஸ்தா என்கிற தலையில்லா தேவியின் அவதாரம் படிப்பவர்கள் இதை இலகுவாகப் புரிந்துகொள்வார்கள்.
“நான் யார்?” என்று தேடலில் இறங்கச் சொன்னார் ஸ்ரீரமணர். இப்படி தலையைக் கொய்வது ”நான் யார் தெரியுமா? என்னை விட இதைச் செய்ய இங்கே யாருளர்?” போன்ற அகங்காரங்களையும் திமிர்த்தனத்தையும் அடியோடு கொய்வதற்கு ஒப்பாகும்.
இப்படி ரேணுகாதேவியின் சிரசைக் கொய்த பரசுராமரின் கதையை சின்னமஸ்தாவுடன் பிணைத்து நாயனா எழுதிக்கொண்டிருந்தது மே 1908ல். அப்போது அவருக்கு வேலூரிலிருந்து ஒரு தகவல் வந்தது. சுபச் செய்திதான். மகள் பிறந்திருந்தாள். செய்திகேட்டு வேலூருக்கு விரைந்தார் நாயனா.
குழந்தைக்கு வஜ்ரேஸ்வரி என்கிற ரேணுகாவின் பல திருநாமங்களில் ஒன்றை சூட்டினார். படைவீடு ரேணுகாவின் சம்ரக்ஷணமும் அருளும் கிடைத்துக்கொண்டிருந்த தருணத்தில் பெண் மகவு பிறந்தமையால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. திருவண்ணாமலையிலிருந்து திரும்பிய நாராயணன் “உமா சகஸ்ரத்தை திருப்புதல் செய்யும் பணி என்னவாயிற்று என்று ரமணர் கேட்டார்” என்று விசாரித்தார். பின்னாலேயே கல்யாணராமன் வந்து “இம்முறை ரேணுகாவின் சன்னிதியில் ஒரு மண்டலமாவது நீங்கள் தவமியற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இரண்டுமே மனசுக்கு சந்துஷ்டி தரும் செயல்கள். எதை முதலில் செய்வது?
நாயனா முதலில் திருவண்ணாமலைக்கு விரைந்தார். ஸ்ரீரமணரிடம் படைவீடு ரேணுகாதேவி ஆலயத்தில் தவமியற்றப் போவதாகவும் அதற்கு அவருடைய ஆசிகளையும் வேண்டி நின்றார். ஆசி கிடைத்தது.
படைவீடு தவத்திற்கு உகந்த ஸ்தலம். நிசப்தமான இடம். இடையூறுகள் அறவே இருக்காது. நிதமும் இரவில் மட்டும் ஒரு கிண்ணம் பால் மட்டுமே அருந்தித் தவமியிற்றினார். நாற்பது நாள் பொழுது தவமாகக் கடந்தது. கடைசிநாள். நள்ளிரவு... அப்போது......
0 comments:
Post a Comment